அமாவாசையில் முழுமதி உத்ஸவம்!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில், திருக்கடையூரில் உள்ளது அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். பாற்கடல் அமிர்தமே இங்கு சிவலிங்க மாக இருப்பதால் ஈசனுக்கு அமிர்த கடேஸ்வரர் எனப்பெயர். எம பயத்தைக் கடக்க உதவும் ஊர் என்பதால் இத்தலம், ‘கடவூர்’ எனப் பெயர் பெற்றது.
திருக்கடையூர் என்றவுடனே, அமிர்த கடேஸ்வரரை அடுத்து அனைவரின் நினைவுக்கும் வருவது அன்னை அபிராமி. தன் பக்தனுக்காக அமாவாசை நாளில் முழு நிலவை வானில் தோன்றச் செய்து அன்னை அற்புதம் நிகழ்த்திய தலம். திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலய கணக்கர் அமிர்தலிங்கம். இவரது மகன் சுப்பிரமணியம் ஆலயத்தில் தினமும் பஞ்சாங்கம் படிக்கும் பணி செய்பவர். அம்மன் மீது கொண்டிருந்த பக்தியின் காரணமாக, பஞ்சாங்கம் படித்து முடித்ததும், அபிராமி சன்னிதி முன்புயோக நிஷ்டையில் அமர்ந்து விடுவார்.
தன் பக்தனின் பக்தியை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டாள் அன்னை. அன்றைய தினம் தை அமாவாசை. தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் திருக்கடையூர் அபிராமியை தரிசிக்க வந்தார். யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார் சுப்பிரமணியம். தம்மை மதியாமல் தியானத்தில் இருக்கும் அவரைக் கண்டு மன்னனின் கண்கள் கோபத்தில் சிவந்தன. யோக நிஷ்டையில் இருந்தவரிடம் மன்னர், இன்று என்ன திதி?" என்று கேட்டார். சுப்பிரமணியம், பௌர்ணமியை நிகர்க்கும் ஒளி பொருந்திய அபிராமி அம்மனின் திருமுக தரிசன நிலையில்லயித் திருந்ததால், இன்று பவுர்ணமி" என்று கூறி விட்டார்.
‘இன்று அமாவாசை, அதுவும் தை அமாவாசைதினம். ஆனால், பஞ்சாங்கம் வாசிக்கும் இவரோ, பௌர்ணமி என்று கூறுகிறாரே’ என்று கோபம் கொண்டார் மன்னர். அமாவாசையான இன்று உம்மால் பௌர்ணமி நிலவைக் காட்ட முடியுமா" என்று கேட்க, அதற்கு, முடியும்" என்றார். இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னர், இன்று இரவு பூரண சந்திரன் வானில் உதிக்காவிட்டால் உமக்கு மரண தண்டனை" என்று கூறிவிட்டுச் சென்றார்.
தன் நிலைக்குத் திரும்பிய சுப்பிரமணியத்திடம், அர்ச்சகர்கள் நடந்த தைக் கூற, அமாவாசையை, பௌர்ணமி என்று என்னைக் கூறவைத்தவள் அன்னை அபிராமி. எனவே, அவளே இதற்கும் பதில் சொல்வாள்" என்றார். ஆலயத்தின் வெளியில் அக்னி குண்டம் வளர்க் கப்பட்டு, அதற்கு மேல் நூறு கயிறுகள் தொங்கவிடப்பட்டன. அக்கயிறுகளின் மறு முனையில் பெரிய உறியைக் கட்டித் தொங்க விட்டார்கள். அதற்கு ‘அரிகண்டம்’ என்று பெயர். நூறு கயிறுகளும் அறுக்கப்பட்டால் உறியில் இருப்பவர் அக்னி குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பார்.
மாலை நேரம் வந்தது. உறியில் சுப்பிரமணியத்தை ஏற்றினர். அக்னி குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. அன்னை அபிராமியை வணங்கி, போற்றிப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் சுப்பிரமணியம். ஒவ்வொரு பாடல் நிறைவிலும், ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது. 78 பாடல்கள் பாடி முடித்தார். அமாவாசை வானில் நிலவு வந்தபாடில்லை.78வது பாடலின் நிறைவில் ‘துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே’ என்று உறுதிபட அபிராமியிடம் வேண்டினார்.
79வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு’ என்று பாடத் தொடங்கியதும், அன்னை அபிராமி சுப்பிரமணியத்துக்குக் காட்சி தந்து, தன் காதில் இருந்த தாடங்கம் (தோடு) ஒன்றைக் கழற்றி வானில் வீச, அது பூரண சந்திரனா பிரகாசத்துடன் ஒளி வீசியது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது. மன்னர் உள்பட, அங்கு கூடியிருந்த அனைவரும் அன்னை அபிராமியின் அருள்திறத்தையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெசிலிர்த்தனர். மன்னர், சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி, ‘அபிராமி பட்டர்’ எனும் பெயரையும் சூட்டினார்.
அப்போது வானில் எழுந்த அசரீரி, அன்பனே! நீ மன்னரிடம் கூறிய
சொல்லை மெப்பித்து விட்டோம். தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக" என்றது. அது அன்னை அபிராமியின் அமுதக் குரல். அதன்படி தொடர்ந்து நூறு பாடல்கள் பாடி, நூற்பயனாக ‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை’ என்னும் பாடலுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் அபிராமி பட்டர்.
இக்கோயிலில் தை அமாவாசை அன்று இரவு 9.30 மணிக்கு அபிராமி பட்டர் உத்ஸவம் நடைபெறுகிறது. அச்சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார். ஓதுவார்களும் பக்தர்களும் ஒவ்வொரு அந்தாதியையும் பாட, ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செயப்படும். 79வது பாடலின் போது ஆலய கொடிமரத்தின் அருகில் பௌர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும். இது வெறும் ஐதீகப் பெரு விழா மட்டுமன்று, பக்தர்கள் இறைவனிடம் நம்பிக்கையுடன் இருந்தால் அதற்கான பலன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கும் விழா. இந்த வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று திரள்வர்.
நீண்ட ஆயுளைப் பெற இந்தத் தலம் வந்து வழிபட்டுப் பலன் பெறலாம். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்கு நூற்றுக்கணக்கில் நடைபெறுகின்றன. இதய நோய் உள்ளவர்கள் பலர் இத்தலம் வந்து வழிபட்டு பலன் அடைந்திருக்கிறார்கள். இவர் பாடிய, ‘கலையாத கல்வியும்’ எனத் துவங்கும் பதிகத்தில் அபிராமியை முறைப்படி வழிபட, பதினாறு வகை பேறுகளும் நம் வாழ்வில் கிட்டும் என்கிறார். எனவே, தொடர்ந்து 11 அமாவாசை நாட்களில் இத்தலம் வந்து அன்னை அபிராமியை தரிசித்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வாழ்வில் எண்ணியதைத் திண்ணமாக அடையலாம்.


 

Comments