கண்டிப்பா கருணையா

கடவுள் கண்டிப்பானவர்’, ‘உலகில் ஒழுங்குகளை நிலைநாட்டும் கட்டுப்பாடான காவல் துறை, ராணுவம் போன்றவற்றைக் கட்டிக் காக்கும் கடுமையான தலைவர்’, ‘கண்டிப்பான தந்தை’, ‘குற்றங்களைக் கண்டறிந்து தண்டனையும் விடுதலையும் வழங்கும் நேர்மையான நீதிபதி’ - இப்படிக் கடவுள் பற்றிய பிம்பங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கின்றன. பாவ, புண்ணியக் கணக்கின் பாதுகாவலராக அவர் பல மதங்களிலும் சித்திரிக்கப்படுகிறார்.
இதற்கு நேர் எதிராக அவர் தயாள குணம் உடைய கருணாமூர்த்தி... இரக்கம், கனிவு மிக்க தாயன்பு உடையவர்... பிழை பொறுப்பவர்... அடியார் துயருக்கு இரங்கி மன்னித்து அருள் செய்யும் மகத்தான பண்பு மிக்கவர் என்கிற பிம்பங்களும் மறைநூல்களில் சகல மதங்களிலும் உள்ளன.
‘நீதி பெரிதா... கருணை பெரிதா?’ என்கிற விவாதங்களும் நடந்து, நீதியை விட கருணைதான் பெரிது என்றும் முடிவு கண்டு, கடவுள் ஆரம்பத்தில் நீதிபதி... நெருங்க நெருங்க கருணையாளர் என்கிற சமரசமும் பேசப்பட்டுள்ளது. அதனால்தான் நீதி பதியை விட, ஜனாதிபதி பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். ஆம்... நீதிபதி சட்டப்படி தண்டிக்கிறார்.
ஜனாதிபதி தண்டனையைக் குறைக்கிறார் அல்லது கருணை மனு பெற்று, மரண தண்டனையை ரத்து செய்கிறார். மந்திரி சபையின் முடிவின்படி என்பது மரபானாலும் ஜனாதிபதி மனது வைத்தால் மரபை நகர்த்தி வைக்க முடியும்.
எனவே கடவுள், ஒழுங்கை நிலைநாட்டும் காவல் துறைத் தலைவர், நீதிபதி, கருணை காட்டும் ஜனாதி பதி என்கிற பன்முக உபாசனைகளுக்கு உரியவராகவே இருக்கிறார்.
வளைக்க முடியாத இரும்புத் தன்மையைக் கடவுள் மீது சில மதப் பிரிவுகள் சுமத்தினாலும் பக்தனின் தவறுகளைப் பெரிதுபடுத்த மாட்டார், கண்டு கொள்ள மாட்டார் என்கிற சலுகைகளும் அவர் மீது சுமத்தப் பட்டன. இன்னும் ஒரு படி மேலே போய், ‘என் தவறுகளுக்கு அவர் உடந்தை’ என்றே சுந்தரர் தேவாரத்தில் சொல்கிறார். ‘தோழனுமாய்யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி’ என்பது தேவாரம்.
அருச்சுனன் கண்ணன் தோழமையைச் சிலாகித்த மகாகவி பாரதி, அருச்சுனனின் ஆசாபாசங்களை (ஆபாசங்களை அல்ல) நிறைவேற்ற கண்ணன் உதவுகிறான் என்றே பாடினார். கண்ணபெருமான் தங்கை சுபத்ராவை அருச்சுனன் அடைய விவரமாக உதவுகிறான். ‘பொன்னவீர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே என்ன உபாயம் என்றி டில் இருகணத்தே உரைப்பான்’ என்கிறது பாரதி பாடல். ஆக, தப்புதான்... ஆனால், தப்பில்லை என்று கடவுள் கைகோத்துக் கொள்வான் என்றும் ஒரு கருத்துரு சமய உலகில் இருக்கத்தான் செய்கிறது.
கடவுள், ‘கண்டிப்பான தந்தை’ Vs ‘கருணை மிக்க தாய்’ என்கிற தகராறுகளைக் கடந்து தந்தையும் தாயும் கலந்த மாதிரி காட்சி தரும் அற்புத உறவான தாய்மாமன் உறவாக ஏன் பார்க்கக் கூடாது என்று ஓஷோ கேள்வி எழுப்புகிறார். இது நல்ல அணுகுமுறைதான். தகப்பனுடைய கோபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற தாய்க்கு உதவும் ஆண் மகன் அவளது சகோதரன். குழந்தைக்குத் தாய்மாமன். குடும்பங்களிலே, அதிலும் இந்தியத் தமிழ்க் குடும்பங்களில் தாய் மாமன் ஆளுமை மிக மிக சுக மானது; சுவையானது. ஒரு குழந்தையின் பாதுகாப்புக்குத் தந்தையின் பங்களிப்பு குறைகிறபோது அல்லது இல்லாமல் போகிறபோது மிக கௌரவமாகத் தாய்மாமனே அதனை நிரப்புகிறான். சித்தப்பன் நிரப்ப முற்பட்டால் ஊர் அவலத்திலிருந்து தாய் மீள முடியாது துன்புறுவாள்.
எனவே, தாய்மையும் தந்தைமையும் இணைந்த இனிய உயர்ந்த உறவு தாய்மாமன் உறவு. அது கருதியே சகல குடும்ப வைபவங்களிலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடவுளைத் தாய்மாமனாகச் சித்திரிக்கக் கூடாதா என்று ஓஷோ கேள்வி எழுப்புகிறார்.
தமிழில் திருநாவுக்கரசர் கடவுளை, ‘அன்புடைய மாமனும், மாமியும் நீ’ என்று பாடியதை ஓஷோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பன் நீ... அம்மை நீ என்று பாடிய திருநாவுக்கரசர் மாமனைச் சுட்டும் போது, ‘அன்புடைய மாமனும் மாமியும் நீ’ என்று பாடி அன்பும், ஆண்மையும் விரவிய அற்புதத்தை வரிகளில் வடிவமைத்தார். திருநாவுக்கரசரை ஓஷோ படித்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இப்படிப் பேசுகிறார்.
'Father' என்ற சொல்லை விட, மிகப் பழைமையானது uncle என்ற சொல். முதலில் 'uncle' இருந்தது. பின்னால் தோன்றியது ’'Father.' இதை நீ கவனித்த துண்டா? uncleகள் உடனான உறவு சிநேகம் உள்ள தாக இருக்கும். father உடன் அந்த அளவுக்கு அன்பான உறவு இருக்க முடியாது. uncleகளுடன் குழந்தை களுக்கு நண்பன் உறவு முறை இருக்கும். அது, இனிமையானதாக இருக்கும். தந்தையைப் போன்றே, uncle அக்கறை கொண்டாலும் சொந்தம் கொண்டாடும் இறுக்கம் அதில் இல்லை. கட்டளை இடுவதில்லை. எனவே, தந்தை என்ற சொல் மறைந்து விடும் என்றால் இறைவன் uncle என்று அழைக்கப்படுவார். இதுவரை யாரும் அழைத்ததில்லை. ஆனால், நிலைமை மாறும் என்கிறார் ஓஷோ. ஓஷோவுக்குத் தமிழ் தெரியாமல்போனது ஒரு வகை நஷ்டமே.
கண்டிப்பான தந்தை என்கிற பிம்பத்துக்கும் கனிவான தாய்மாமன் என்ற பிம்பத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு மிக மிக முக்கியமான ஒன்று. மனிதர்களின் தவறுகள் கண்டிக்கத்தக்கன. அதேசமயம் ஏன் தவறு நிகழ்கிறது? தவறு காரணமாக நிரந்தர அழிவு ஒருவருக்கு ஏற்பட வேண்டுமா? அதிலிருந்து மீட்டெடுக்க கடவுள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்? என்பவை எல்லாம் மிக ஆழமான கேள்விகள். அது புரிந்தால் மட்டுமே மன்னிப்பு என்கிற மகத்தான தீர்வு முக்கியம் என்பதும் புரியும். கடவுள் மன்னிப்பாரா... மாட்டாரா என்பதில் சமயத்தின் உயிர் ஒட்டி இருக்கிறது.
பாவமன்னிப்பை முன்வைத்த இயேசுபிரான், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று ஒருமுறை அல்ல, பலமுறை பலரை மன்னித்த வரலாறுகள் இருக்கின்றன. மன்னிக்கும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்பது வலுவான கேள்வி. மன்னிக்கும் மனம்தான் அவர் தெய்வாம்சம் பொருந்திய தேவகுமாரன் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது என்பேன். மக்தலேனா என்கிற விலைமகள் கண்ணீரால் இயேசுவின் கால்களைக் கழுவியபோது, ‘உனது விசுவாசம் உன்னை மீட்டது. சமாதானமாகப் போ’ என்றும், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றும் இயேசு அறிவித்தார். அவரெப்படி மன்னிக்க முடியும்? உண்மையில் மன்னிக்கும் தருணத்தில் அவர் அவராக இல்லை. சொந்த ஆணவம் துடைத்தெறியப் பட்டு கடவுளில் நிரம்பியவராக இருந்திருக்க வேண்டும். சரியாகச் சொன்னால் அவர் மூலம் கடவுள் மன்னிக்கிறான். அங்கு இயேசு மறைந்து விடுகிறார். கடவுள் நிறைந்து விடுகிறார். ரோஜாவில் இறைவன் ரோஜாவாக இருப்பதுபோல் இயேசுவில் இறைவன் கிறிஸ்துவாக வெளிப்பட்ட தருணம் இது.
மனிதனுடைய பாவங்களையும், தண்டனைகளையுமே பெரிதாக மதங்கள் பேசியபோது மன்னிப்பையே பெரிதாகப் பேசியவர் இயேசு. ஓர் உவமானம் சொல்கிறார். அதிகப்பாவம் செய்தவர்கள் கடவுளின் அதிக அன்பைப் பெறுகிறவர்கள் என்று நெகிழ்ந்து போகிறார். சிக்கலான முரண் இது. கடன் பெற்ற இருவர் தம் முதலாளிக்குத் தர வேண்டியதைத் திருப்பித் தர வில்லை. முதலாளி மன்னிக்கிறார். ஐம்பது வெள்ளிக் காசு தராதவன் ஒருவன். ஐநூறு வெள்ளிக் காசு தராதவன் மற்றவன். உண்மையில் ஐநூறு வெள்ளிக் காசு தராதவனே அதிகமாக முதலாளிக்குச் சிரமம் தருகிறான். அதை மன்னிக்கிற போது அவன் மீது கூடுதல் கருணை செலுத்துகிறார் முதலாளி என்றொரு வாதத்தை இயேசு முன்வைக்கிறார். அதிக பாவம் செய்தவன் அதிகக் கருணை பெறுகிறான் என்கிறார். ஆச்சர்யமான அணுகுமுறை இது. இரண்டு பிள்ளைகள் பெற்ற தகப்பன் கெட்டிக்கார முதல் பிள்ளையை விட, ஊதாரியான, வாழத்தெரியாத இரண்டாவது பிள்ளை மீது பாசத்தால் துடிப்பது போல எனப் புரியவைக்கிறார். மதத்தின் உச்ச கட்ட நிலை மன்னிப்பு என்பதே.
இப்படிப் பாவத்தைப் பொருட்படுத்தாத தாயின் அன்பைத்தான் மாணிக்கவாசகரும் கடவுளிடம் எதிர்பார்க்கிறார். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ பாவியேனுடைய’ என்று கண்ணீர் விடுகிறார். பாவத்தைப் பொருட்படுத்தாத பக்குவம் தாயின் கூடுதல் பண்பாடு அல்ல. சிறப்புத் தகுதி அன்று. உயிர்க்குணம் அடிப்படை இயல்பு. இயற்கைத் தன்மை. எனவே, கடவுளும் மன்னிக்கக் கடமைப் பட்டவர் என்கிறார் மாணிக்கவாசகர்.
ஒரு சூஃபி ஞானி மளிகைக் கடை வைத்திருந்தார். விசித்திரமான குணம் அவருடையது. யார் எந்தப் பொருளைக் கொண்டு வந்து திருப்பிக் கொடுத்து, ‘உங்கள் கடையில் வாங்கியது... கெட்டுப்போய் விட்டது’ என்றாலும் உண்மையா பொய்யா என்று ஆராய மாட்டார். வேறு பொருள் மாற்றிக் கொடுப்பார். மக்கள், இவரை ஏமாளி என்று முத்திரை குத்தி வேறு கடையில் வாங்கிய பொருளைக் கொடுத்து மாற்றித் தரும்படி ஏமாற்றினாலும், முகம் சுளிக்காது கொடுப்பார். அவர்கள் தருகிற நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்று சொதிக்காமலேயே வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொள்ளுவார். பைத்தியம் என்று ஊரே பரிகசித்தது. செல்லாத காசுகளை அவர் தலையில் மக்கள் கட்டி விடுவார்கள். அவர் மரணத்தை நெருங்கிய போது கடவுளிடம் சொன்னார். ‘இதோ பார்... எவர் என்னிடம் கொடுத்த நாணயத்தையும் செல்லுமா செல்லாதா என்று நான் சொதித்தது இல்லை. இதோ உன்னிடம் வரும் என்னையும் செல்லுமா செல்லாக் காசா என்று பரிசொதிக்கக் கூடாது. நான் கள்ள நாணய மாகவே இருப்பினும் என்னை நீ ஏற்கவே வேண்டும்’ என்றபடி உயிர் விட்டார். அவர் பிறரிடம் எப்படி நடந்து கொண்டாரோ, அப்படியே கடவுளும் அவரிடம் நடந்து கொண்டார்.
குற்றங்குறைகள் மனிதர்கள் இயற்கை. அதைக் கடவுள் பெரிதுபடுத்தக் கூடாது. தாய், குழந்தையின் மீதுள்ள கருணையால் அதன் குற்றங்களையே சிறப்புகளாகக் கொள்வாள் அல்லவா... அப்படி. இறைவா,
‘குன்றே அனைய குற்றங்கள்
குணம் ஆம் என்றே நீ
கொண்டால்
என்தான் கெட்டது
இரங்கிடாய்
எண்தோள் முக்கண்
எம்மானே’
என்று பாடுகிறார் மாணிக்க வாசகர். யார் பிறரது குற்றங்களைப் பார்ப்பதில்லையோ அவர்களது குற்றங்களைக் கடவுளும் பார்ப்பதில்லை போலும்.

Comments