வழிபாட்டுக்குக் காத்திருக்கும் வருண தேவர்!

பாகிஸ்தானில் பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு அவற்றின் இடிபாடுகள், இந்துக்களின் கலாசாரம் மற்றும் வைபவங்களுக்கு வரலாற்றுச் சான்றுகளாக, உயிருள்ள சாட்சிகளாக நின்றுள்ளன. அப்படிப்பட்டவற்றுள் ஒன்றுதான் கராச்சி நகர், சிந்து பகுதி மனோரா தீவில் அமைந்துள்ள ஸ்ரீ வருண தேவர் ஆலயம். சிறந்த சிற்பக் கலையோடு, சிதைந்த நிலையில் இந்த ஆலயம் காட்சி அளிக்கின்றது. முகலாய ஆட்சியாளர்களின் அநீதிக்கும் இந்துக்களை அடக்கியாண்டதற்கும் அடையாளச் சின்னமாக விளங்கும் இந்த ஆலயத்தின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
நெதர்லாந்தில் பிறந்த, ‘ரீமா அப்பாஸி’ என்ற பாகிஸ்தான் வரலாற்றுப் பெண் ஆராய்ச்சியாளர் தன், ‘ஹிஸ்டாரிக் டெம்புள்ஸ் இன் பாகிஸ்தான்’ என்ற ஆராய்ச்சி நூலில் இந்த ஆலயச் சிறப்புகளை வர்ணித்துள்ளார். ஆலய பிராகாரத்தில் தேவநாகரி எழுத்தில் வருண தேவரின் பூஜைக்கான மந்திரங்கள், சுலோகங் கள் வடிக்கப்பட்டிருந்ததாக இந்த ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். ஆலயம் சிறியதாக இருந்தாலும்,
சிற்பக் கலைச் சிறப்புப் பெற்று விளங்கியதென்று தெரிகிறது. ஆலய வளாகத்தில் உள்ள சிறிய கிணற்றின் நீர் இனிப்பாக இருக்குமாம். கடலுக்குச் சமீபத்தில் உள்ள இக்கிணற்று நீர் இத்தனை இனிப்பாக இருப்பதன் காரணம் வருண தேவரின் அருளே என்ற பாவனையுடன் அதனைக் குடிப்பதற்கு உபயோகித்து வந்தனர்.
‘அக்னி குல க்ஷத்ரியர்கள்’ என்று அழைக்கப்படும் இந்து வலைஞர்கள் பத்தாவது நூற்றாண்டில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளனர். அங்குக் காணப்படும் தேவநாகரி லிபியில் காணப்படும் கல்வெட்டு, ‘ஓம் வருண் தேவ் மந்திர்’ என்று இவ்வாலயத்தைக் குறிப்பிடுகிறது. ஆலய முகத்துவாரத்தில் சிந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ‘பரியாவைச் சேர்ந்த சேத் ஹர்சந்த்மால் தயாள் தாஸின் புனித நினைவாக அவர் மகன்களால் அர்ப்பணிக்கப்பட்டது’ என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. ‘பரியா’ என்பது சிந்து பிரதேசத்தில் ‘கைர்பூர்’ பகுதியில் உள்ள ஒரு நகரம்.
நதி, கடல், மழை இவற்றுக்கு அதிஷ்டான தேவதை வருண பகவான் என்ற நம்பிக்கை இந்த மீன் பிடிக்கும் வம்சத்தினருக்குப் பலமாக இருந்தது. வருண தேவரின் வழிபாட்டை இவர்கள் சிறப்பாகச் செய்து வந்தார்கள். சமுத்திரத்தில் மீன் வேட்டையாடு வது இவர்கள் தொழில். கடலில் மீன் பிடிக்கையில் புயல் வராமலிருக்க பிரார்த்திப்பதும், கரை வந்தடைந்த பின் இந்த ஆலயத்தில் பூஜைகள் நிறைவேற்றுவதும் இவர்கள் வழக்கம்.
இந்தக் கோயில் மதத் தீவிரவாதிகளால் பத்து முறை இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட ஒவ் வொரு முறையும் உடனுக்குடன் மீண்டெழுந்து புனர் நிர்மாணம் செய்து வந்துள்ளனர் பக்தர்கள். ஆயினும், முதன் முதலில் கட்டும்போது இருந்த சிற்பக் கலைச் சிறப்பினைக் காலப்போக்கில் மீட்டெடுக்க முடியாமல் போனது.
தற்போதைய நிர்மாணம் 16வது நூற்றாண்டில், ‘போஜோமால் நான்சி பாட்டியா’ என்ற இந்து மாலுமியால் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்பொழுது இக்கோயில் இடிபாடுகளோடு கூடியதாய், கடலிலிருந்து வீசும் ஈரக்காற்று இதன் உயர்ந்த சிற்ப வேலைப்பாடோடு கூடிய கட்டட அமைப்பையும் சுவர்களையும் அரித்துத்தின்று வரும் நிலையில் கவனிப்பாரின்றி பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. தூரத்திலிருந்து பார்க்கையில் கம்பீரமாகத் தோன்றும் இந்த ஆலயம் நாசக்காரர்களின் கைவரிசைக்குப் பின்னும் மீதியுள்ள கல் தளங்களாலும் கைவேலைப் பாட்டு சிற்பங்களாலும் இதன் உன்னதமான கடந்த காலத்தை நினைவூட்டி நிற்கிறது.
1917-18களின் அதிக அளவில் மராமத்துகள் செய்து ஆலயத்தைப் புனரமைத்துள்ளனர். 1950 வரை இந்த ஆலயத்தில் நித்திய தூப தீப நைவேத்தியங்கள் நடை பெற்று வந்துள்ளன. அதற்குப் பின் உள்நாட்டு அரசியலாலும், மதத் தீவிரவாதச் செயல்களாலும் சிறிது
சிறிதாக கோயில் மூடப்பட்டது. அதன்பின் உள்ளூர் இந்துக்கள் ஆலயத்தைப் புனரமைப்பதற்கு எத்த னையோ முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தினை நல்ல நிலையில் காப்பாற்றிப் பாதுகாப்பதற்காக பலமுறை இந்துக்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தும் பலனில்லாமல் போனது. தற்சமயம் இக்கோயிலில் எந்த வழிபாடோ, பூஜையோ நடப்பதில்லை.
இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்துக்கள் தீவிரமாக எதிர்த்து வந்ததன் பலனாக சீர்குலைந்த நிலையிலும் அப்படியே இருக்கட்டும் என்று காப் பாற்றி வந்துள்ளார்கள். ‘மனோரா’ கண்டோன் மெண்டு போர்டுக்கும் (MCB),பாகிஸ்தான் கடற்படைக்கும் விவாதம் நடப்பதாகச் சொல்லி அரசாங் கம் சாக்கு போக்கு காட்டி வருகிறது. ஆயினும், இந்துக்கள் பிடிவாதமாக அழுத்தம் கொண்டு வந்து 2007ல் ‘ஹிந்து கௌன்சில் ஆப்பாகிஸ்தான்’ என்ற அமைப்பின் கீழ் இந்த ஆலயத்தைக் கொண்டு வந்தார்கள். இந்தக் கோயில் புனர் நிர்மாணத்துக்காக சென்ற ஆறேழு ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் திடீரென்று இக்கோயிலுக்குச் சுற்றுச் சுவர் கட்டும் வேலைகள் தொடங்கப்பட்டு, ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. ஆராய்ச்சி நூல்களின் ஆதாரமாக சாஸ்திரீய முறையில் பூர்வ கட்டட அமைப்பை அப்படியே புனர் நிர்மாணித்தால் உள்ளூர் இந்துக்களின் இதயம் பூரித்துப்போகும் என்பதில் ஐயமில்லை. பராமரிப்பற்று, சிதைந்து நிற்கும் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த இந்த இந்துக் கோயில், பூஜைக்காகவும், மீண்டும் பழைய வைபவங்களைக் காணவும் ஏங்கிக் காத்திருக்கிறது.

 

Comments