தர்ம மித்திரர் ஆக்குவோம்!

கஞ்சி மகாபெரியவர் நூறு வயது வரை வாழ்ந்தார். 101வது வயதில்தான் அவர் சித்தி அடைந்தார். ‘வேத நூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரே லும்’ என்று ஆழ்வாரின் பாடல் உள்ளது. வேதங்கள் சொல்வதுபோல் மனிதரின் பிராயம் நூறு என்பார்கள். ‘உனக்கு ஆயுசு நூறு’ என்று பேச்சுவழக்கில் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் 80 வயது வரும்போதே நாம் கொண்டாட தடபுடலாக ஏற்பாடு செய்கிறோம். குறிப்பாக, 81 வயது கடக்கும் போதுதான், ‘ஆயிரம் பிறைகளைக் கண்டவர்’ எனும் சிறப்பில் சாந்தி பரிகாரங்களைச் செய்து கொள்வார்கள். தான, தர்மங்களைச் செய்து, தர்மத்தை, கர்மத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும். அதுவே, அந்தந்த வயதில் வரும் கண்டங்களுக்கு சரியான சாந்தியாக அமையும்" என்றார் தம் சொற்பொழிவில் நாவல்பாக்கம் உ.வே.ரங்கநாதாச்சாரியார் ஸ்வாமி.
அவரது சொற்பொழிவில் இருந்து... தானத்தின் பெருமை அளவிடற்கரியது. ‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி’ என்று, ஆண்டாள் ஒரு பாசுரத்தில் சொல்கிறார். ஐயம் என்றால் தெரியும், ஈதல்; உணவிடுதல்! ‘ஐயம் இட்டு உண்’ என்று ஔவை சொன்னாள் அல்லவா! பிட்சை, பிக்ஷா என்று சொல்கிறோம் அல்லவா! அதன் திரிபுதான் பிச்சை! இன்றைக்கு, ‘பிக்ஷா வந்தனம்’ என்றெல்லாம் நடத்துகிறார்களே! சன்யாசிகளுக்கு, ஆசார்யர்களுக்கு பலர் சேர்ந்து அவர்களின் உணவுக்கு தானியம் அளித்தல்; திரவியம் அளித்தல். அதை பிக்ஷா வந்தனம் என்கிறோம். இப்படி அன்னம் தேவைப்படுவோருக்கு தானம் அளிக்கும் ஐயம் என்பதும், பிக்ஷை வேண்டி நிற்போருக்கு அளிக்கும் பிட்சை இடுதல் என்பதும் போக, ஆண்டாள் அடுத்து கைகாட்டி என்று ஒரு சொல்லையும் பாசுரத்தில் மொழிகிறார். இந்தச் சொல்லின் பொருளை வெகு சிலிர்ப்புடன் பெரியோர் அனுபவித்துள்ளனர். இதை விளக்க ஒரு சிறு கதையைச் சொன்னால் புரிந்து கொள்ளலாம்.
பூவுலகில் தனது வாழ்நாள் முடிந்ததும் மேலே சென்றார் ஒருவர். எமனின் தர்பாரில் அவர்பேரில் விசாரணை நடந்தது. எமதர்ம ராஜன் அவரின் புண்ணிய, பாவக் கணக்குகளை குறித்துக் கேட்கிறான். சித்திர குப்தன் அவரின் கணக்குகளைச் சொல்லி வருகிறான். அவருக்கோ, சொர்க்கத்துக்குப் போய் அதைப் பார்த்து அனுபவிக்க ஆசை. ஆனால், அவர் பேரிலோ பாவக் கணக்கே மிகுந்திருந்தது.
அதனால் சித்திரகுப்தனிடம், ‘ஏதாவது ஒரு நல்ல விஷயம், ஏதேனும் ஒரு தர்மம் இந்த ஜீவன் தாம் வாழும் காலத்தே செய்ததா, நன்றாகப் பார்’ என்று கேட்கிறான் எமதர்மன். அதற்கு சித்திரகுப்தன், ‘ஆமாம். இவர் தான, தர்மங்களைச் செய்யாவிட்டாலும், பசித்து வந்த சிலருக்கு எங்கே அன்னதானம் செகிறார்கள் என இடத்தைச் சுட்டிக்காட்டி வழிப் படுத்தியிருக்கிறார்’ என்று கூறினான். அதனால், மகிழ்ந்த எமதர்மன், ‘இந்த ஒரு தர்ம காரியத்துக்காக, அடுத்த பிறவியில் உன் ஆள்காட்டி விரல் தங்கமாகட்டும்’ என்று கூறி அனுப்பிவைத்தானாம்.
இந்த அனுபவத்துடன் பூலோகத்தில் மீண்டும் பிறந்த அவர், நாம் அன்னதானம் செய்யும் இடத்தை ஆள்காட்டி விரல் மூலம் காட்டியதற்கே இந்த விரல் தங்கமானதே, நம் உடம்பே தங்கமானால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, பசித்து வந்த வர்க்கெல்லாம் தன் உடலாலேயே சைகை செய்து வழிகாட்டினாராம்! இது ஒரு நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும், தான் பெற்ற அனுபவத்தால் தான, தர்மங்களைச் செய்து உய்வு பெறுவோம் என்ற நினைப்பு வராமல், வெறும் சைகை காட்டியே ஒரு பலனைப் பெறலாம் என்று எண்ணினான் அல்லவா, அதை இப்படி சுவாரஸ்யமாகச் சொல்வார்கள்.
இதைத்தான், ‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி’ என்று கைகாட்டி விடுவதையும் சேர்த்துச் சொன்னார் ஆண்டாள்.
ஸ்ரீகிருஷ்ண அனுபவம் என்பது பக்தர்களுக்கு அளப்பரிய இன்பத்தைக் கொடுப்பது. ஸ்ரீ கிருஷ்ணனோ, பக்தர்களுக்கு எளிவந்தவன். அதாவது, எளிய தன்மையை வெளிப்படுத்துபவன். பக்த பராதீனன், பரம தயாளன் என்றெல்லாம் சொல்லப்படு பவன். நரசிம்ம அவதாரத்தில் பக்தன் பிரகலாதன் எங்கே காட்டினானோ அங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். இத்தனைக்கும், ஹிரண்யகசிபு கட்டிய அரண்மனைதான். அவன் நிர்மாணித்த தூண்தான். ஆனால், பிரகலாதன் கைகாட்டினான் என்ற ஒரே காரணத்துக்காக, அதிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான் பகவான். பக்தன் என்ன தோற்றத்தில், எப்படி வர வேண்டும் என்று விரும்புகிறானோ, அவ்வாறே தன்னை அமைத்துக் கொண்டு காட்சி தருவதுதான் பகவானின் தன்மை! அதைத்தான் நரசிம்மராக வெளிப்படுத்தினார்.
குழந்தைக் கண்ணனாக இருந்து, தன் எளிய தன் மையை பகவான் காட்டினார். குழந்தைகளோடு கலத்தல் என்பது, தன் உணர்வை விட்டு, தன் அகங்காரத்தை விட்டு ஒன்றி விடுவது. நம் பெரிய தன்மையை மறந்து, எளியவராகி விடுதல்! அப்படித்தான் கிருஷ்ணன், கூடியிருந்து கோபர்களுடன் உணவு உண்பா னாம். ‘கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவா’ என்று ஆண்டாள் அதையும் பாடினார். பல கோபர்கள் ஒன்றுகூடி வட்டமா அமர்ந்து, சாப்பாட்டை முன்புறம் குவித்து, தயிரும் ஊறுகாயும் விரலிடுக்கில் படும்படி அவன் உண்ணும் அழகே அழகு என்று வர்ணிப்பர் பெரியோர்.
ஒரு கோபர் சிறுவனின் விரலிடுக்கில் அவன் கடித்து வைத்த எச்சில் ஊறுகாயை தானும் கடித்து உண்டு கிருஷ்ணன் அனுபவித்தான்! எப்பேர்ப்பட்ட அனுபவம். வலக்கை, இடக்கை கூட அறியாத ஆச்சியருடன் கலந்து பழகினான் கண்ணன். வெண்ணெ எடுத்துக் கொடுக்கும் கரம் எது என்று அறியாத அனுபவத்தைக் கொண்டிருந்த ஆச்சியர்! வியர்த்தால் குளிப்போம் என்று இருந்த இடையர்களுடன் கலந்து பழகியவன்.
பகவானின் தன்மை இத்தன்மையது அன்றோ! அதனால்தான், ராமனைச் சொல்லும்போது, ‘கபி களோடே கலந்து’ என்று ஆசார்யர்கள் சொல்வர். அதா வது, குரங்குகளோடே கலந்து பழகியவன் பெருமான். குகனுடன் சகோதரனாக் கலந்தவன். பாசுரத்திலே அழகா வர்ணிப்பார் ஆழ்வார். ‘ஏழை ஏதலன் கீழ் மகன் என்று எண்ணாது இரங்கி, மற்றவர்க்கு இன்னருள் சுரந்து’ என்று கூறுவார். ஏழை, பகைவன், கீழான வன் என்றெல்லாம் பார்க்காமல், அனைவருக்கும் இரங்கி அருள் புரிபவன் என்பதை பாசுரத்தில் வெளிப் படுத்தி, அவன் தன்மையைக் காட்டினார் ஆழ்வார்.
ஸ்வாமி வேதாந்த தேசிகர், ‘கோபால விம்சதி’ என்று எழுதினார். 21 பாடல்கள்தான். எல்லாமே கிருஷ்ணனின் பால்ய லீலைகள்! குழந்தைகளுக்குத்தான் எல்லாமே மனத்தில் அமரும். நாம் எது சொல்லிக் கொடுத்தாலும், பெரியவர்களுக்கு புத்தியில் ஏற்று வதை விட குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைப்பது மிக சுலபம். வேத பாராயணமா, சந்தஸ் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? எல்லாமே பால்ய பருவத்தில் மனத்தில் பதிய வைப்பது சுலபம். அதனால்தான், குழந்தைக் கண்ணன் லீலைகளைச் சொல்லி, குழந்தைகளை தர்ம மித்திரர்கள் ஆக்கும் முயற்சியை நாமும் மேற்கொள்ள வேண்டும்."

Comments