பக்தைக்கு பிரசவம் பார்த்த தர்மஸம்வர்த்தினி!

அதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூரில் உள்ளது தர்மஸம்வர்த்தினி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். மிகவும் பழைமையான இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈஸ்வரன் சுயம்பு மூர்த்தி. ராமாயண காலத்தில் தனது தேரில் சீதையைத் அபகரித்துச் சென்றான் ராவணன். சீதையின் அழுகுரல் கேட்டு உதவிக்கு வந்த ஜடாயுவுக்கு இதோ வழி என தேரின் வழி காட்டியதால், தேர் காட்டு ஊர் என்றாகி, தற்போது தேக்காட்டூர் என்று வழங்கப்படுகிறது.
தேக்காட்டூரில் புகழ் பெற்றது பல ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருமாள் கோயில். அடுத்து உள்ள அழகிய குளம் மற்றும் நிலங்கள் உள்ள பகுதியில் தர்மஸம்வர்த்தினி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். தற்போது, இந்த ஆலய விமானம் மிகவும் பாழடைந்து, அதன் உச்சியில் அரச மரங்கள் வளர்ந்து, அதன் வேர்கள் கருவறை வரை காணப்படுவது வேதனை தருகிறது.
அகஸ்தீஸ்வரர் சன்னிதியின் எதிரில் தனியாக அமைந்துள்ளது தர்மஸம்வர்த்தினி அம்மனின் சன்னிதி. இது, தனியாக அமைந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணொருத்தி பிரசவ வேதனையில் வலி தாங்காது உதவி கோரிக் கதறினாள். அம்மா காப்பாற்று" என்று கதறிய அவளது குரல் அம்பாளின் செய்விகளில் விழுந்தது. தாயுள்ளம் கொண்ட தர்மஸம்வர்த்தினி தாம் சென்று அவளுக்குப் பிரசவம் பார்த்து வர அனுமதிக்க பெருமானிடம் வேண்டினாள்.
அவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்க, ‘பக்தையின் அழுகுரலைத் தன்னால் சகிக்க முடியவில்லை’ என்று கூறி வெளியே செல்ல அம்பாள் தயாரானபோது, எனது வார்த்தையை மீறிச் சென்றால் மீண்டும் இங்கே திரும்பக் கூடாது" என்றாராம் பெருமான். இருப்பினும், சுவாமியின் வார்த்தையைப் பொருட் படுத்தாது வெளியே சென்ற அம்பாள், அப்பெண்ணின் துயர் தீர்த்து வைத்தாள். பெருமான் கூறிய வாக்கைக் காப்பாற்ற அவரைப் விட்டுப் பிரிந்து, மேற்கு நோக்கி தனிச் சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.
அம்பாளின் கோபத் தீயைத் தணிக்க, இங்கே ஊருணி வெட்டி திருக்குளம் அமைத்தனர். ஆனால், அம்பாளின் கோபத்தினால் இத்திருக்குள நீர் எப்போதும் சூடாகவே உள்ளதாம். பாண்டிய, சோழ மன்னர்களின் வழித்தோன்றல்களால் திருப்பணி பெற்ற கோயில் இது.
ஆலயத்தின் சுற்றுச் சுவர்கள் பல்வேறு சிற்ப வேலைபாடுகளுடன் சிறப்புறத் திகழ்கிறது. கண்ணப்ப நாயனார், அன்னை பார்வதி செய்யும் சிவ பூஜை, நர்த்தன விநாயகர் போன்ற சிற்பங்கள் மிகச் சிறப்பு வாந்தவை. வழக்கமான சிவாலய அமைப்பு போல், விநாயகர், வள்ளி தெவானையுடன் சுப்ரமணியர், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் விக்ரகங்கள் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன.
ஆலயத்தில் நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பண்டிகை நாட்கள், மார்கழி, தை மாதங்கள், பொங்கல், தீபாவளி, கார்த்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. பிரதோஷங்கள், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சிகளில் ஆலயத்தில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுகின்றனர்.
மனம் அமைதி பெற, குழந்தை பாக்கியம் பெற, பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர, திருமணத் தடைகள் அகல, சுகப்பிரசவம் நிகழ வேண்டியும், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர் கல்வியறிவு பெறவும், பேச்சாற்றலில்
சிறந்து விளங்கவும் இத்தல ஈசனை வேண்டிக் கொள்ள பக்தர்கள் பலர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். பழைமை வாந்த இக்கோயிலை புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் பலரும் ஆவலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைவிடம்: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.

Comments