ரஸ வித்தை ஞானி கருவூரார்!

பழநி தெய்வம் தண்டாயுதபாணியின் நவபாஷாணச் சிலை செய்த சித்தர் பெருமான் போகரின் மாணாக்கர்களில் ஒருவராக, தலையாய வராகத் திகழ்ந்தவர் சித்தர் கருவூரார். கருவூர் என்பது இன்றைய கரூர்தான். இந்தக் கருவூரில் பிறந்தவர் என்பதால், அவருக்குக் கருவூரார் என்றே பெயர் ஏற்பட்டது.
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது தமிழுல கின் முதுமொழி. கருவூராரும் அப்படியே! விளையாடும் பருவத்திலேயிருந்து ஆர்வத்துடன் ஞான நூல்களைத் தேடித் தேடிக் கற்கும் பெரும் ஆர்வம் அவரிடத்தே முளைவிட்டது. ஆர்வத்தால் நூல் பல கற்றார். அவரின் பெற்றோரோ, ஊர் ஊராகச் சென்று கோயில்களில் விக்ரகங்கள் செய்து கொடுத்து வாழ்க்கை யைத் தெய்வீகக் கலையம்சத்துடன் வகுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறுதான் கருவூராரும் திருவாவடுதுறையில் பெற்றோருடன் தங்கியிருந்தபோது, சித்தர் போகர் அங்கே வந்திருந்தார். போகரைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த கருவூரார், போகரிடத்தில் சென்று அடி பணிந்தார். தம்மை அவரிடம் சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டி நின்றார். மாணாக்கர்களை தம்மளவில் உருவாக்கி, சித்தர் உலகை விரிவாக்கிய போகரும், அவரைத் தம் சீடராக ஏற்றுக்கொண்ட போதிலும், ஒரு சிறந்த வழிபாட்டை அவர் மேற் கொண்டு, மேலும் சித்திகள் பெற வேண்டும் என்று எண்ணினார்.
எனவே, போகர் கருவூராரிடம், குலதெய்வத்தை வழிபட்டு அருள் பெறுமாறு கூறினார். கருவூராரே உம் குலதெய்வம் அம்பாள். அவளை அனுதினமும் வழிபட்டு வா. அம்மை உனக்குத் தோன்றி உனக்கான ஒரு வழியைக் காட்டுவாள்" என்று கூறி, அவருக்கு அம்பாளின் வழிபாட்டு நெறிகளை உபதேசித்தார். அதனைக் கேட்டுக்கொண்ட கருவூராரும் அம்மனை உள்ளம் உருக வழிபட்டு ஸித்தி பெற்றார். சித்துகளைப் புரியும் ஞானம் கைவரப் பெற்றார்.
கருவூராரும், சித்தர் திருமாளிகைத்தேவரும் போகரின் சீடர்களாக விளங்கினர். கருவூராருக்கு ரஸ வித்தை கைவரப் பெற்றது. ரஸ குளிகையும் உலோகக் கலவையைக் கட்டும் வித்தையையும் பெற்றிருந்த கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவ லிங்கங்களை உண்டாக்கி வைத்தார்.
தாமிரபரணிக்கரையில் அமைந்த திருக்குருகூருக்குச் சென்றார் கருவூரார். வைணவம் தழைத்தோங்கும் பதி அது. அங்கிருந்த பாகவதர்கள் சிலர் அவர் முன் திரண்டனர். அவருக்கு மரியாதைகளைச் செய்து வணங்கி நின்றனர்.
ஆச்சரியத்தில் கருவூரார் அவர்களிடம், ஏன் எனக்கு மரியாதை செய்கிறீர்கள்" எனக் கேட்டார். அதற்கு அவர்கள், பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எங்கள் கனவில் தோன்றினார். தாங்கள் வரும் விவரத்தைச் சொல்லி, தங்களுக்கு மரியாதை அளித்து வணங்கும்படி கூறினார். அதனால்தான் இவ்வாறு செய்தோம். இருந்தபோதும், கார்முகில்வண்ணன், கருணைக் கண்ணன் எங்கள் கனவில் வருவதற்கு நீங்கள்தான் காரணம் ஆனீர்கள். உங்களை முன்னிட்டே பெருமாள் தரிசனம் கனவிலும் எங்களுக்குக் கிட்டியது" என்று மகிழ்வுடன் கூறினார்கள்.
சித்தர் அதனால் மிக மகிழ்ந்து, மாதவன் எனக்கு மகிழ்வூட்டினன்" என்று கூறி அங்கிருந்து நெல்லையம் பதிக்குச் சென்றார். திருநெல்லைத் தலத்தின் வாயிலில் நின்று, நெல்லையப்பா நெல்லையப்பா" என்று உரக்கக் கூவி அழைத்தார். இவர் குரலுக்குப் பெருமான் பதிலிறுக்கக் காணோம். பெருமான் குரல் கேட்காததால், இங்கே தெய்வமேதும் இல்லை போலிருக்கிறதே" என்று கூறியபடியே, யாரும் இல்லாத இடத்தில் எருக்கு முளைக்கட்டும்" என்று கூறிச் சென்றார். அவர் அங்கிருந்து விலகியதுதான் தாமதம், சித்தரின் வாக்கு பலிக்கத் தொடங்கியது. கோயிலைச் சுற்றிலும் எருக்கஞ்செடிகள் முளைக்கத் தொடங்கின.
நெல்லையில் இருந்து மானூர் பகுதிக்குச் சென்றார் கருவூரார். அப்போது நெல்லையப்பர் அவருக்கு அங்கே காட்சி தந்து, எனக்கான நைவேத்திய காலத்தில் ஆலயத்துள் புகுந்து, நேரங்கெட்ட நேரத்தில் குரல் கொடுத்துவிட்டு, யாரும் வரவில்லை என்று நீ இப்படிச் செய்யலாமா? உடனே நெல்லைக்குத் திரும்பு" என்று கட்டளையிட்டார். அதேநேரம் அடியார் சிலரிடமும், கருவூரார் என்னைப் பார்க்கா மல் திரும்பி விட்டான், அவனை அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார்.
பெருமானின் வாக்கைக் கேட்டு அடியார் கூட்டம் மானூரை நோக்கிச் சென்றது. அங்கே கருவூராரைக் கண்டு, தங்கள் கனவில் பெருமான் சொன்னதைச்
சொன்னதும் வருத்தம் கொண்ட கருவூரார், மானூரில் இருந்து நெல்லைக்குத் திரும்பினார். அவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு பொன்னைத் தோன்றச் செய்தார் நெல்லையப்பர். கோயிலை அடைந்தார் கருவூரார். பெருமானைத் தொழுது ஆலயத்தினுள் புகும்போது, எருக்கஞ்செடிகள் எல்லாம் தாமாகவே மறையத் தொடங்கின. மகேசனின் கருணையை எண்ணி உளம் மகிழ்ந்தவாறு நெல்லையப்பரை வணக்கிச் சென்றார் கருவூரார்.
இதேபோன்று ஒருமுறை கருவூரார் திருவிடை மருதூர் தலத்தை அடைந்தார். அங்கே சென்று ஆலயத்தினுள் உறையும் பெருமான் மகாலிங்கேசரை நோக்கிக் குரல் கொடுத்தார். பெருமானோ, கூப்பிட்ட குரலுக்கு பதில் கொடுக்கும் பாவனையில், தன் தலைப்பகுதியைச் சிறிது சாத்து கருவூராருக்கு பதில் கொடுத்தாராம்.
கருவூரார் ஒருமுறை காசிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கே சென்ற அவர், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தாமிரத்திலேயே வேதை செய்து, லிங்கத்தை தங்கமயமாக உருவாக்கிக் கொடுத்தார்.
ஆலயங்கள் பல அமைத்து, சிவபெருமானைக் கருவறையில் அழகுக் கோலத்தில் அமர்த்தி வைத்து பூசனைகளைக் குறைவற நடத்திவைத்த சித்தர் போகரே, இத்தகைய தமது பணிக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்க கருவூராரைப் பணித்திருந்தார். அதன்படிதான், தில்லைச் சிதம்பரத்தில், இரணியவர்மன் எனும் மன்னன், சிவகங்கை தீர்த்தத்தினுள் மூழ்கியபோது கண்ட நடராஜரின் அற்புதத் திருக்கோலத்தை விக்ரஹமாக வடிக்கக் கேட்ட போது, கருவூரார் உதவியிலேயே அந்தச் சிலை வடிக்கப் பட்டது. அதுவும் தங்கத்தாலேயே அந்த விக்ரஹம் அமைக்கப்பட வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டிருக்க, அதில் சிறிது செம்பு கலந்து, அதனைச் செய்து முடித்தார் கருவூரார்.
இருப்பினும் விவரம் அறிந்து வெகுண்ட மன்னர் கருவூராரை சிறையில் அடைத்தார். ஆயினும் உண்மையை விளக்க, போகர் நேரடியாகத் தோன்றி, நடராஜரின் சிலையை மன்னரிடமே கொடுத்துவிட்டு, கருவூராரை அழைத்துக் கொண்டு போனார்.
தரணி போற்றும் தஞ்சையில், தன் தலைநகரில் பெருமானுக்கு மாபெரும் கோயில் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தான் மாமன்னன் ராஜராஜசோழன். அதற்காக பல சிற்பிகளிடமும், வல்லுநர்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றான். அறிஞர்கள் பலர் ஆலோசனை கூறினர். சித்தர் கருவூராரின் பெருமையை அறிந்திருந்த ராஜராஜன், கருவூராரையும் அழைத்து ஆலோசனை கேட்டான்.
கருவூரார் ராஜராஜனுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், அவரைப் பிடிக்காத சிலர், எப்படியாவது கருவூராரை அவமதிக்க வேண்டும் என்று கருதி, மன்னனிடம் புறம் கூறினர். ராஜராஜனும் அவர்கள் பேச்சைக் கேட்டு, கருவூராரின் அறிவுரை களைப் புறம் தள்ளினான்.
ஆயிற்று! கோயில் கட்டி முடிக்கப்பட்டது. எல்லாம் நன்றாகத்தான் நடந்தது. ஆனால், மூலவரைப் பிரதிஷ்டை செய்யும் தினத்தில்தான் சிக்கல் தொடங்கியது. ஆவுடை மீது லிங்கத்தை நிறுத்த எவ்வளவோ முயன்றும், அது இயலாமலே போனது. ராஜராஜன் கலக்கமடைந்தான். அவன் மனம் கலங்கியிருப்பதை முகம் காட்டிக் கொடுத்தது. அதைக் கண்ட மக்களும் பெரிதும் கலங்கினர்.
மாபெரும் கோயிலை ராஜராஜன் கட்டியதும், அதனுள் பெருமான் பிரதிஷ்டை ஆகாமல் நின்று போனதும் குறித்து அறிந்தார் சித்தர் போகர். சீடர் கருவூராரே இதற்கு சரியான தீர்வு என்று கருதியவர், ஒரு காகத்தின் காலில் ஓலையைக் கட்டி, கருவூரார் இருக்குமிடத்துக்கு அனுப்பிவைத்து, தம் சீடரை உடனே அழைத்தார். அதன் படியே, கருவூராரும் அங்கே வர, அம்பாள் உபாசகனான நீ போய், லிங்கத்தை நிலை நிறுத்தி விட்டு வா. நீ போனால்தான் காரியம் முடியும்" என்று கூறி அனுப்பினார் போகர்.
ஏற்கெனவே, தன் குருவைப் போல் அங்கே தோன்றி, ஆலோசனைகளை வழங்கிய கருவூராரின் கட்டளைகளைத் தாம் மதியாமற் போனோமே என்று வருந்தி, ராஜ ராஜன் கருவூராரை நினைத்துக் கொண்டிருந்தான். அந்த நேரம், ராஜராஜன் மனத்தை அமைதிப்படுத்துபவரா அங்கே வந்தார் கருவூரார். வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி வந்து சேர்ந்த கருவூரார், மன்னன் வாட்டமாக இருப்பதன் காரணம் அறிந்தார். ஆவுடை அருகே சென்றார். தம் வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றை, அஷ்டபந்தன மருந்துடன் கலந்து பிசைந்தாராம். பெருமானின் பேரைச் சொல்லி, மருந்தை இட்டு லிங்கத்தை நிலை நிறுத்த, என்ன ஆச்சரியம்! அதன் பின்னர், மூலவர்
சிலை ஆடாமல் அசையாமல் அடியுடன் பிடித்துக் கொண்டு, அப்படியே நின்றது.
மன்னன் ராஜராஜனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. கருவூராரின் மகிமையை நன்கு உணர்ந்தான். ரசவாதக் கலை அறிந்த சித்த புருஷரின் ஆலோசனையை மதியாது போனோமே என்று வருத்தம் மிகக் கொண்டான்.
சித்தியின் மூலம் சிவலிங்கத்தை நிலைநிறுத்திய கருவூராரை விழுந்து வணங்கினான் மாமன்னன் ராஜ ராஜன். கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஹரஹர கோஷம் போட, ஆலயத்தில் தெய்வீகப் பேரொளி தோன்றியது. புதிதா நிர்மாணிக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனியில் இருந்து ஒளிவெள்ளமா அருள் புறப் பட்டு, கருவூராரிடம் ஐக்கியமானது. கருவூரார் தம் கைகளைக் குவித்து துதித்து பெருமானைப் போற்றினார்!
இவ்வாறு தஞ்சையில் ஒரு மாபெரும் தெய்வீகச் செயலை முடித்துவிட்டு, அரங்கநாதப் பெருமான் அரிதுயில் கொள்ளும் திருவரங்கம் நோக்கிப் பயணப் பட்டார் கருவூரார். அங்கே, கருவூராரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த தாசி அபரஞ்சி என்பவள் அவரைச் சந்தித்தாள்.

Comments