ஆரணக் கவிதையாகும் நாரண விளையாட்டு!

திருக்கச்சிநம்பிகள் காஞ்சிக்கே வந்த பின்னர் வரதனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டானது. எத்தனையோ திவ்ய தேசங்கள் சேவித்து வந்தாலும், வரதன் திருவடியில் வைத்த மனது நம்பிகளுக்கு ஒரு பூரணத்வத்தை அளித்தது. பிரம்மதேவன் செய்த அச்வமேத யாகத்தில் ஆவிர்பவித்ததினால் உண்டான அக்னியின் வெம்மை தணிந்து
வரதன் குளிர்ந்து போனான். நம்பிகளின் திருவாலவட்ட கைங்கர்யம் தொடர்ந்தது.
பெருமான் எடுத்த அவதாரங்களின் நிலை ஐந்து என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவை பரமபதம் எனும் ‘ஸ்ரீவைகுண்டா வியூஹம்’ என்னும் திருப்பாற்கடல். விபவமாகிய அவதாரங்கள் (ராமன், கண்ணன், நரசிம்மன் முதலியன). அவரவர்கள் இதயத்தினுள் இருந்து கொண்டு இயக்குவது ‘அந்தர் யாமி’ எனப்படும். இவை நான் கினும் மேலானவை அர்ச்சாவ தாரம் என்பர் பெரியோர். அதாவது, ஆங்காங்கு ஆலயங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி
சேவை சாதிப்பது அர்ச்சை (விக்ரகம்) என்று பொருள். நம்மைப் போன்ற பக்தர்கள் எந்த வடிவில் பெருமானை சேவிக்க நினைக்கிறோமோ அதே வடிவில் சேவை சாதிப்பதே அர்ச்சையான ஏற்றமாகும். ஆழ்வார்களும், ஆசார்யர்களும் இதில் ஈடுபட மனம் மயங்குகின்றனர்.
இந்த அர்ச்சாவதாரத்தில் (விக்ரகத்தில்) சாமானியர்கள் பெருமாளை சேவிப்பதற்கும், ஞானிகள் சேவிப் பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. சாமானிய மக்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள பகவானை வழிபடுகின்றனர். ஞானிகள் எனில் பகவானின் தேவைகளை அறிந்து அவற்றை அவனுக்கு நிறைவேற்றி வைத்து மகிழ்கின்றனர். எம் பெருமானுக்குத் தேவைகள் உண்டா? எனும் கேள்வி வருமன்றோ!
அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் அவனுக்கு விருப்பம் என்று ஒன்றுமில்லை தான். ஆனால், பக்தன் பகவானை அனுபவிக்க சில கைங்கர்யங்களை விதிக்கிறான். அதாவது, கட்டளையிடுகிறான். இதனால் பக்தனுக்கும், பகவானுக்கும் நெருக்கம் அதிகமாகிறது.
அந்தச் சமயம் தனது பிரியத்தின் வெளிப்பாடாக பகவான் அர்ச்சைதனை மீறிக் கொண்டு (அதாவது விக்ரக வடிவில் பேசுவதில்லை என்பதையும் விடுத்து) சில சமயம் பேசுகிறான். அதனை நம்மைப் போன்றவர்கள் கேட்க முடியாது, உணரவும் முடியாது. பக்தன்- பகவான் எனும் இருவருக்கு மிடையில் மட்டுமே நடக்கும் சங்கேதம்.
இதற்கொரு உதாரணம் கூறுகிறேன். குருக்ஷேத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணன் பகவத் கீதைதனை உபதேசித்தான். அதை அருகிருந்த பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானோர் அறிந்தனரா! இல்லையெனில், அர்ஜுனனின் சகோதரர்களான யுதிஷ்டிரர், பீமன் முதலானவர் அறிந்தனரா! எவருக்குமே அது தெரியாதல்லவா! ஆனால், ஸஞ்ஜயன் மட்டும் அதை நன்கு தெரிந்திருந்தான். காரணம், வியாஸர் எனும் ஆசார்யரின் அநுக்ரகம். ஆசார்ய அநுக்ரகம் இருந்தால் எம்பெருமானின் தெய்வீகத்தை நன்கு உணர முடியும் என்பதற்கு இஃதொரு அத்தாட்சி.
ஆளவந்தார், பெரியநம்பிகளின் அருட்கடாட்சம் பூரணமாகப் பெற்றவர் திருக்கச்சிநம்பிகள். ஆதலால்தான் ஸ்ரீரங்கம், திருப்பதி பெருமான்கள் அவரிடம் பேசினார்கள். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று வரதன் எப்போதும் அவரிடம் வார்த்தையாடினான். இவன்தான் அருளாளனாயிற்றே. ஆகையால், வாஞ்சையுடன் நம்பிகளுடன் பேசுவது வழக்கம். இதையறிந்தவர் ராமானுஜர் மட்டும்தான்.
இக்கதை நடைபெறும் சமயம் நாம் ராமானுஜரின் வாழ்க்கையின் முதற்பகுதியில் உள்ளோம். அதாவது, ராமானுஜர் துறவறம் ஏற்ற புதிது. காஞ்சியில் தனது சிறு வயது முதற்கொண்டே ராமானுஜர் நம்பிகளிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். விந்திய மலைக் காடுகளிலிருந்து ஓரிரவுக்குள் தன்னை வரதன் அழைத்து வந்த விந்தைதனை நம்பிகளிடம் மட்டுமே ராமானுஜர் தெரிவித்திருந்தார். ( இந்த வரலாற்று நிகழ் வினை விளக்கும் வகையில் அடியேன், ‘மேகத்தின் தாகம்’ எனும் நாவலில் இதனை விரித்துரைத்துள்ளேன்.)
எத்தனையோ ஆபத்துக்கள் நேர்ந்தாலும் வரதனின் துணையும், நம்பிகளின் ஆதரவுமே ராமானுஜருக்கு பக்கபலம். தான் ஏதாவது கைங்கர்யம் செய்ய வேண்டுமென்று ராமானுஜர் நினைத்தபோது நம்பிகளின் மூலமாகவே வரதனின் திருவுள்ளத்தை அறிந்தார்.
அதாவது, ‘சாலையோர கிணற்றிலிருந்து தினந்தோறும் ஒரு குடம் தீர்த்தம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது’ வரதனின் நியமனம். இதனை நம்பிகள் வாயிலாகவே வரதன் வெளியிட்டான். அதன்படி பெருமாளுக்கு சாலைக் கிணற்றிலிருந்து ராமானுஜர் உபயமாக இன்றும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவையெல்லாம் ராமானு ஜரின் பூர்வாசிரமத்தில், அதாவது அவர் துறவறம் ஏற்பதற்கு முன்பாக நடைபெற்றவை.
இவ்விதம் சத்சிஷ்யர்களுடன் காஞ்சியில் வாழ்ந்த போது அவரின் உள்ளத்தில் பலவித எண்ணங்கள் உண்டாயின. அவையனைத்தும் வைணவத்தின் தலை சிறந்த கோட் பாடுகள். பின்னாளில் உலகம் முழுதும் உயர்வை அடைந்திட ராமானுஜரின் சிந்தனை - செயல்பாடுகள். இருப்பினும் தனது எண்ணத்தை அப்படியே செயல்படுத்திட ராமானுஜர் விரும்பவில்லை. ஏனெனில், இஷ்டப்பட்டபடி கருத்துக்களைப் பெரி யோர்கள் ஒருபொழுதும் கூறுவதில்லை.
இது சாஸ்த்ரத்தின் வழி செல்கிறதா? இதனைப் பெரியோர்கள் ஏற்றுக் கொள்வாரா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தும், பல பெரியோர்களின் அனுமதியைப் பெற்றுமே கருத்துக்களை உரைப்பர். இதற்கு ஓர் உதாரணமாக வால்மீகியின் எண்ணங்களைக் காணலாம்.
ராமனைக் குறித்து காவியம் இயற்ற வேண்டும் என்பது வால்மீகி முனிவரின் பேரவா! அதற்குரிய சிந்தனைவயப்பட்டவராகவே அவர் இருந்தார். ஆனாலும், உடனடியாக எண்ணத்தை செயல்படுத்தவில்லை. அவர் எதிர்பார்த்த காலமும் வாய்த்தது.
எதிர்பாராதவிதமாக வால்மீகியின் ஆச்ரமத்துக்கு நாரதர் விஜயம் செய்தார். தேவரிஷியின் தெய்விக அருளினால் தனது சந்தேகங்கள் தீரும், எண்ணங்கள் சிறக்கும் என்று உணர்ந்த வால்மீகி நாரதரிடம் பல கேள்விகள் கேட்டார்.
அதற்கெல்லாம் ஒரே பதிலாக நாரதர் கூறியது, ‘ராமன்’என்பதாகும். ‘நாரணன் விளையாட்டை யெல்லாம் நாரத முனிவர் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி பகவான்’ என்கிறார் கம்பர். அது போன்றே நாரதர் உபதேசித்த வழியில் ராமனின் புகழ் பாடும் ராமாயணம் எழுதினார் வால்மீகி.
இங்கும் தனது எண்ணத்தில் உள்ள வற்றுக்கு எம்பெருமான் அனுமதியைக் கோரினார் ராமானுஜர். தனது சிந்தையில் உதித்தது என்றாலும் அதனைப் பெரியோர் ஏற்க வேண் டாமா! எனவே, திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதனிடம் இதுகுறித்து விளக்கம் பெறுவது எனத் தீர்மானித்தார். மெதுவாக தனது உள்ளக்கிடக்கையை திருக்கச்சிநம்பிகளிடமும் தெரிவித்தார்.
ஒருநாள் தனிமையில் வரதனு டன் நம்பிகள் பெரிய விசிறி கொண்டு பெருமாளுக்கு திருவால வட்டம் சமர்ப்பிக்கிறார். எல்லாம் அறிந்தவன்தானே வரதன். நம்பிகள் வாய் திறவட்டும் என வாளா விருந்தான்.
ப்ரபோ! வரதா!" என்றார் நம்பிகள்.
என்ன நம்பிகளே?" வரதன்.
இளையாழ்....வா....ர்" என இழுத்தார்.
ராமானுஜனுக்கு என்ன?" வரதன்.
ஒரு சந்தேகம்?" நம்பிகள்.
உமக்கா? ராமானுஜனுக்கா?" வரதன்.
ராமானுஜருடைய சந்தேகம்தான் ப்ரபோ! தங்களிடம் கேட்டு வரச் சொன்னார்" நம்பிகள்.
ஏன்... ராமானுஜன் நேரடியாகவே என்னிடம் கேட்கலாமே?" வரதன்.
உண்மைதான். தாங்கள் வாய் திறப்பீர்களா? என்று..." நம்பிகள்.
சரிதான். நம்பிகளே! நீரும் ராமானுஜன் கட்சி போலுள்ளதே. ஏன் அவனிடம் பேச மாட்டேனா!"
இதுவரை நேரடியாகப் பேசியதில்லையே" நம்பிகள்.
இதற்கு வரதனிடம் பதிலில்லை.
சரி... சரி. என்ன வேண்டுமாம். உம் மூலமாகக் கேட்டவற்றுக்கு உம்மிடமே பதில் சொல்கிறேன். அதை நீர் அப்படியே ராமானுஜனிடம் சென்று சொல்லும்" என்றான்.
அன்றொரு நாள் பார்த்தனுக்கு பாகனாகத் தேரூர்ந்து ‘என் ஒருவனை சரணமடை. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்’ என்று மார்பிலே கை வைத்து சொன்னான். அதன் பொருளை உலகம் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், இன்று இங்கு நம்பிகளிடம் கூறிய வார்த்தை வரதன் தனது அர்ச்சாமேனியைத் தொட்டுக் காட்டின வார்த்தை. இதன் பொருளை உணர்ந்து உரைக்கவல்லார் ராமானுஜர்தானே...

Comments