ரோக நிவாரணி துர்கா பரமேஸ்வரி!

கர்நாடக மாநிலம், குந்தபுரா தாலுகாவில் கமலாசிலி கிராமத்தின் மையத்தில், மலைகளும் பச்சைப் பசேல் காடுகளும் சூழ, குஜ்ஜா நதியும் நாக தீர்த்தமும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது துர்கா பரமேஸ்வரி ஆலயம். கமலா என்றால் தாமரை. சிலி என்றால் கல். தாமரை வடிவ கல்லில் சிவலிங்கம் சுயம்புவாக அமைந்துள்ளது. இதனை, பிரம்மி துர்கா பரமேஸ்வரி என பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
கருவறையில் லிங்கத்துக்குப் பின்னால் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் முன்பு உள்ள லிங்கத்துக்கு மாதத்துக்கு இரு முறை ஏகாதசியன்று மிருதிகா அஷ்டபந்தன அபிஷேகம் நடைபெறுகிறது. சிவனை களி மண்ணால் பூசி வைத்திருந்து அபிஷேகம் செய்கிறார்கள். நீர் அபிஷேகத்தையும் மீறி ஏராளமான மண் லிங்கத்தின் மீது தொடர்ந்து ஒட்டியுள்ளது. அடுத்து வரும் ஏகாதசியன்று அவை அகற்றப்பட்டு, பிரசாதமாக அது பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை நீரில் கலந்து அருந்தினால் ரோகங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இதனைப் பெற பக்தர் கூட்டம் அலை மோதுகிறது!
சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அம்மனுக்கு தங்கக் கவசம் சாத்தியுள்ளனர். வருடா வருடம், மழையின்போது வெள்ளம் கோயிலுக்குள் புகுந்து, லிங்கத்தை ஸ்நானம் செய்து விட்டுச் செல்கிறது! தாமரை பீட வடிவில் உள்ள லிங்கம் சிலகாலம் ‘பிரம்மலிங்கேஸ்வரா’ என வணங்கப்பட்டு வந்துள்ளது. பிறகு உண்மை தெரிய வர, லிங்கத்தின் பின்னால் துர்கா பரமேஸ்வரி பிரதிஷ்டை செய்யப்பட்டு, ‘பிரம்மி துர்கா பரமேஸ்வரி’ என அழைக்கப்படலானார். துர்கையும் லிங்கமும் இங்கு மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதியாக பூஜிக்கப்படுகின்றனர். இதனால் இங்கு நவராத்திரி மிகவும் விசேஷம். அச்சமயம் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இங்கு கூடுகின்றனர். ஒன்பது நாட்களும் இங்கு தினமும் 3000 பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
இக்கோயில் பூமி தோன்றிய நாளிலிருந்து இருக்கிறது என்றும், பிரம்மாவே இந்த லிங்கத்துக்கு பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது. கோயிலின் உள்ளே 75 அடி உயர மரத்தால் ஆன துவஜஸ்தம்பத்துக்கு 200 கிலோ வெள்ளிக் கவசம் போர்த்தியுள்ளனர். இது 2010ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நிறைவேற்றப்பட்ட தால், வருடா வருடம் அதே நாளில் துவஜஸ்தம்ப பூஜா தினம் கொண்டாடப்படுகிறது.
பிங்கலா என்ற பெண் கயிலாயத்தில் தினமும் சிவபெருமான் - பார்வதி முன்பு நடனம் ஆடுபவள்! எல்லோர் மனதிலும் சனி புகுவது சகஜம்தானே. அதே போல் அப்பெண் மனதிலும் சனி புக, நான் ஏன் நடனம் ஆடி இவர்களை மகிழ்விக்க வேண்டும் என குதர்க்கமாக எண்ணுகிறாள். இது பார்வதிக்கு தெரிய வர, பிங்கலாவை சபித்து விடுகிறாள்.
பூலோகத்தில் சிறிதும் அழகில்லாத பெண்ணாக (குஜ்ஜா) நீ பிறப்பாய்" என சபித்து விடுகிறாள். நடந்த தவறுக்கு வருந்திய பிங்கலா, பார்வதியை சரணடைந்து சாப விமோசனம் கேட்க, பூலோகத்தில் சகாயத்ரி காட்டில், ரெய்குவா ஆசிரமம் அருகே தவம் செய்து வா. அங்குள்ள கராதசுரா என்ற அரக்கனை கொல்ல, நான் அவதாரம் எடுப்பேன். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" எனக் கூறுகிறாள் பார்வதி.
பூலோகத்தில் பிறந்த பிங்கலா சகாயத்ரி காட்டில் குஜ்ஜா நதியும், நாக தீர்த்தமும் சங்கமிக்கும் இடத்தில் தவம் செய்து வந்தாள். காலம் வேகமாகச் சென்றது. அம்மன் பூமிக்கு வந்து அரக்கனைக் கொன்று, சுயம்பு லிங்கமாக இங்கேயே பிரசன்னமானாள். அப்போது பிங்கலாவின் தவத்தை மெச்சிய பார்வதி, உன் சாபம் விலகியது. ஆனாலும், நீ மோட்சம் பெற மதுரா செல்ல வேண்டும். அங்கு, ஸ்ரீ கிருஷ்ணன் உன்னைத் தொடும்போது நீ மோட்சம் அடைவாய். அதோடு, இங்கு நீ தவம் செய்ததன் பொருட்டு, இங்கு ஓடும் நதி உன் பெயரால், ‘குஜ்ஜா’ என அழைக்கப்படும்" எனவும் கூறி மறைந்ததாக தல வரலாறு.
கோயிலில் நவராத்திரி தவிர, யுகாதி மற்றும் பிரம்மோத்ஸவம் மிகவும் விசேஷம். அதிலும் தேர்த் திருவிழா மிக மிக விசேஷம். தினமும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறுகின்றன. பிற்பகல் பூஜைக்குப் பின் வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் உண்டு.
இங்கு மாலையில், ‘சலாம் ஆரத்தி’ என்று ஒன்று நடைபெறுகிறது. அது என்ன சலாம் ஆரத்தி? இக்கோயிலுக்கு ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோர் அவ்வப்போது வந்து, மாலை ஆரத்தியில் பங்கேற்று, தங்கள் மத பாணியில் சலாம் செய்வார்களாம்! இந்த நடைமுறை மத நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும்விதமாக இன்றும் தொடருகிறது.
கமலாசிலி கோயிலுக்குச் சற்று இடதுபுறம் தள்ளி குகை உள்ளது. இதனுள் பல மன்னர்கள், ரிஷிகள் தவம் செய்துள்ளனர். இவர்களில் மன்னன் சுபர்ஷ்வா சிறந்த சிவ பக்தன். தன்னுடைய தவத்துக்கு இடைஞ் சல் வராமல் இருக்க சிவனிடமே வேண்டி வரம் பெற்றவன் இவன். இதனால் சிவனின் வடிவமான பைரவரை இந்தக் குகையின் வாசலில் இன்றும் காண லாம். இந்த பைரவர், மன்னனின் கோரிக்கையை ஏற்று சிவனால் அனுப்பப்பட்டவராம். இந்தக் குகை யிலிருந்துதான் நாக தீர்த்தம் உற்பத்தியாகி வந்து, குஜ்ஜா நதியுடன் இணைகிறது.
கோயிலில் பலியிடல் கிடையாது. இருந்தாலும் பலியாக, அஷ்டதிக் பாலர்களுக்குத் தினமும் மூன்று வேளை அரிசி வழங்கப்படுகிறது. இந்த அம்மனைத் தரிசிக்க வருடம் முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சண்டி ஹோமம், துர்கா
ஹோமம், சண்டிகா பாராயணம் நடப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.
எப்படிச் செல்வது: உடுப்பியிலிருந்து 65 கி.மீ., குந்தபுராவிலிருந்து 35 கி.மீ., கொல்லூரிலிருந்து 24 கி.மீ., மங்களூரிலிருந்தும் வரலாம்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
தொடர்புக்கு: 095915 60809

Comments