கஷ்டங்களைப் போக்கும் பைரவ வழிபாடு!

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார். எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர். இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார். அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.

இன்னொரு கதையும் சொல்வார்கள்.

திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து, திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்லவைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்.

இதனால் கோபம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டுபண்ணினார். `‘பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி'’ என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்த பைரவர், மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால்,  பிரம்மதேவனை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டார். சிவப்பரம்பொருள் மனம் கனிந்தது. பிரம்மதேவனை மன்னித்ததுடன், வேதம் ஓதுவோருக்கு தலைவனாகவும், வேள்விகளுக்கெல்லாம் குருவாகவும் இருக்கும்படியான வரத்தையும் பிரம்மதேவனுக்கு அளித்தார் சிவனார் என்கின்றன புராணங்கள்.

ஒருவன், தான் பெற்ற கலைகளால், கல்வியால், செல்வத்தால் ஆணவம் கொள்ளும்போது, அவனுள் தீய எண்ணங்களும் உண்டாகும். இதை தெய்வம் ஏற்காது; தண்டிக்கும் என்பதையே மேற்சொன்ன திருக்கதைகள் விளக்குகின்றன.
பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்க, அவருடைய சிரத்தைக் கொய்த பைரவ மூர்த்தியை `பிரம்மசிரக் கண்டீஸ்வரர்' என்று அழைப்பார்கள். பைரவர் பிரம்மனின் தலையைக் கொய்த இடம் கண்டியூர் ஆகும். சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதன்மையான தலம் இது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள இவ்வூரின் சிவாலயத்தில், மேற்கு பார்த்த சந்நிதியில் சிரக்கண்டீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள்- மங்களநாயகி.

பிரம்மனின் தலையைக் கொய்த பைரவரின் வடிவம் இங்கு உள்ளது. பிரம்மன், இங்கு திருக்குளத்தை (பிரம்ம தீர்த்தம்) அமைத்து, சிவனாரை வழிபட்டான். `கண்டியூர் வீரட்டனாத்து மகாதேவர்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம் கயிலாசநாதர் திருக்கோயிலிலும் பிரம்மசிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று உள்ளது. இதில் ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மதேவன். 
பைரவரோ தம்முடைய எட்டு கரங்களில் ஒன்றில், பிரம்மனின் தலையையும், மற்ற 6 கரங்களில் வில், மான், மழு, அம்பு, சூலம், பாசம் ஆகியவற்றை ஏந்தியும், மற்றொரு திருக் கரத்தால் வியோம முத்திரை காட்டியபடியும் அருள்பாலிக்கிறார். சடையில் பாம்புகள்; முகத்தில் கடுங்கோபம்; வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்தும் காட்சி தருகிறார்.

காஞ்சிக்குத் தெற்கில் உள்ள பெருநகர் என்பது, பிரம்மன் சிவபெருமானை வழிபட்ட பிரம்ம நகரம் ஆகும். இங்குள்ள தனிச் சந்நிதியில் பைரவ சிவன் வடிவம் தனிச் சிறப்புடன் திகழ்வதைத் தரிசிக்கலாம்.

ஞானநூல்கள் பலவும், பெரும் வல்லமை மிகுந்த பைரவ மூர்த்தியிடம் உலகைக் காக்கும் பொறுப்பை சிவபெருமான் ஒப்படைத்ததாகச் சொல்கின்றன. ஆகவே அவரை வழிபட்டால், தீய வினைகளும், சத்ரு தொல்லைகளும் நம்மை நெருங்காது.

அப்படி பைரவ மூர்த்தியை வழிபட்டு அவருடைய திருவருளைப் பெற்று மகிழ்வதற்கு ஏதுவாக, அவரை வழிபடுவதற்கான நியதிகள், வழிபாட்டு தகவல்கள், விரத நியதிகள், திருத்தலங்கள் துதிப் பாடல்கள் ஆகியவை குறித்து விரிவாக நாம் தெரிந்துகொள்வோமா?

திருவருள் தரும் பைரவ திருவடிவம்!


சிவாலயங்களுக்குச் சென்று பைரவ திருவடிவை தரிசிப்பதும், வழிபடுவதும், மனதால் தியானிப்பதும் விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும்.

தலை மீது ஜுவாலா முடி, மூன்று கண்கள், மணிகளால் கோக்கப்பட்ட ஆபரணங்கள், பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு, முன்னிரு கரங்களில் சூலம், கபாலம் கொண்டவர் பைரவ மூர்த்தி.

இவரது வாகனமாகத் திகழ்வது நாய். காவல் தெய்வம் என்பதால் காவலுக்கு உதாரணமான நாயை வாகனமாக கொண்டுள்ளார் என்றும், வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்வார்கள்.
இவரது வாகனமான நாய் சில தலங்களில் குறுக்காகவும், சில தலங்களில் நேராகவும் காட்சியளிக்கும். இன்னும் சில திருத்தலங்களில் நான்கு நாய்களுடன் காட்சி தரும் பைரவ மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

 கும்பகோணம்- திருவாரூர் வழியில்  உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் பைரவரின்  வாகனமான நாய், இடப் புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. இது காண்பதற்கு அரிதான ஒன்றாகும் .

பிறந்த குழந்தையின் அரைஞாண் கயிற்றில் நாய்க் காசு கட்டும் வழக்கம் உள்ளது. இந்த காசு பைரவரையே குறிக்கும்; இது குழந்தைகளை பயம், தோஷம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது என்பது நம்பிக்கை.

பைரவ மூர்த்தியை ஏன் வணங்க வேண்டும் ?

நம்மை எதிரிகளிடம் இருந்தும் , உடன் இருந்தே தீமை விளைவிக்கும் துரோக சிந்தனை கொண்டவர்களிடம் இருந்தும், மந்திர தந்திரங்களால் விளையும் தீமைகளில் இருந்தும் நம்மை காப்பவர் பைரவ மூர்த்தி.

நமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி. மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார்.

பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

பைரவ மூர்த்தி சனியின் குரு. ஆகவே ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும்.

பைரவ தியானம்

ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்
   ரக்தாங்க தேஜோமயம் |
டக்கா சூல கபால பாசகதரம்
   ரக்ஷாகராம் பைரவம் ||
நிர்வாணம் ஸுநவாஹனம்
   த்ரிநயனஜ் சாநந்த  கோலாஹலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
     க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||

கருத்து:
சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.
பைரவரை வழிபட உகந்த நேரமும் நாட்களும்...

சிவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகள் காலையில் சூரியபகவானிடம் துவங்கி, இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும். கோயில் சாவியை பைரவரிடத்தில் சமர்ப்பித்து வழிபடும் வழக்கமும் உண்டு.

கால பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், சதுர்த்தி திதிகளிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்குவது விசேஷம். இவரை செந்நிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.அதேபோல் செவ்வாடை அணிவித்து, செந்நிற பழங்களை நிவேதனம் செய்து வழிபடலாம்.

அதேபோன்று அனுதினமும் ராகு கால பூஜையில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்வது மிகவும் நன்மைபயக்கும். இதனால் நம் மனதில் தாழ்வு மனப்பான்மை அகலும்; நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
பைரவர் அவதரித்தது  கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி. இந்த புண்ணிய தினத்தை `காலபைரவாஷ்டமி' என்று போற்றுவார்கள். இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு  விசேஷ வழிபாடுகள் நடக்கும். இதில் கலந்துகொண்டு பைரவரைத் தரிசித்து வழிபடுவது, அதீத பலன்களைப் பெற்றுத் தரும்.

திருமணம் நடைபெற: வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் பைரவருக்கு ருத்திராட்சம் மற்றும் விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் கைகூடும்.

சந்தான பாக்கியம் பெற: திருமணமாகியும் வெகுநாட்களாக குழந்தைச் செல்வம் வாய்க்காமல் வருந்துவோர், தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இழந்த பொருள்- சொத்துகளைத் திரும்பப் பெற: பைரவர் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் மீட்க வழி பிறக்கும்.

வறுமை நீங்க:
வெள்ளிக் கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
நோய்கள் தீர, யம பயம் நீங்க :
பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள்- ராகுகாலம், மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தனம் அபிஷேகம் செய்து , எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்யவேண்டும்.
சனி தோஷம் நீங்க :
சனிக் கிழமைகளில் பைரவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

கல்வியில் சிறக்க : பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமைகள்  ராகு கால வேளையிலும், மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் பைரவருக்கு எலுமிச்சை ரசத்தால் அபிஷேகம் செய்து, வில்வ மாலை அணிவித்து, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்துவழிபட, குழந்தைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
வழக்குகளில் வெற்றி பெற: 
மேற்சொன்ன தினங்களில் பைரவ மூர்த்திக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, வில்வ மாலை அணிவித்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, ஆராதித்து வழிபட்டால், வழக்குகளில் வெற்றி கிட்டும்; சத்ரு பயம் நீங்கும்.
பைரவருக்கான நைவேத்தியங்கள்!

சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால் சாதம், , எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள்.

மேலும் சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன் அடை, எள்ளுருண்டை, பாயசம், தேன்குழல், அதிரசம் ஆகியவையும் பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள் ஆகும்.

இனி சில விசேஷமான பைரவ மூர்த்திகளையும் தலங்களையும் தரிசிப்போமா?

பைரவ திருத்தலங்கள்


திருவண்ணாமலையில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில், சுமார் 7 அடி உயரத்துடன், எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார் பைரவமூர்த்தி.

சிருங்கேரி திருத்தலத்தில் மூன்று கால்களுடன் திகழும் பைரவ மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

காரைக்குடியைச் சுற்றியுள்ள எட்டு ஊர்களில் (வைரவன்பட்டி, இலுப்பைக்குடி, மாத்தூர், சூரக்குடி, கோட்டையூர், இளையாற்றங்குடி, நேமம், இரணியூர்) உள்ள சிவ ஆலயங்களில் பைரவருக்குத் தனிப் பிராகாரமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களுக்கு பைரவரே குலதெய்வமாகத் திகழ்கிறார்.

காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார் பைரவர்.

சென்னை பெசன்ட்நகரில் இருக்கும் அறுபடை முருகன் கோயிலிலும் யோக பைரவருக்கு தனிச் சந்நிதி உண்டு.

காசி-கால பைரவருக்காகச் செய்த வேள்வியில் தோன்றியவரே திருப்பத்தூர் யோக பைரவர் என்பது நம்பிக்கை.

கு
ம்பகோணம் அருகில் திருவிசலூர் எனும் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில், ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

ஞ்சை பெரிய கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், ஆறு கரங்களுடன் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியபடி திகழும் பைரவ மூர்த்தி, சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார்.

ங்கரன்கோவிலில், கையில் சர்ப்பம் ஒன்றை செங்குத்தாக பிடித்தபடி காட்சி தரும் சர்ப்ப பைரவரைத் தரிசிக்கலாம்.

துரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐம்பொன்னாலான பைரவர் உற்சவர் விக்கிரகத்தைத் தரிசிக்கலாம்.

திருவொற்றியூர் - தியாகராஜ சுவாமி ஆலயத்தில், பைரவர் சிற்றாலயமும், அருகில் பைரவ தீர்த்தமும் உள்ளன.

கா
ஞ்சிபுரத்தின் தென்மேற்கில், `அழிபடை தாங்கி ‘ என்ற இடத்தில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது .

திருக்கழுக்குன்றத்துக்கு அருகில், செம்பாக்கம் மலை மீது பைரவர் ஆலயம்  உள்ளது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு அருகிலேயே கால பைரவர் சந்நிதி கொண்டுள்ளார்.

காளஹஸ்தியில் உள்ள இரட்டை பைரவர் (ஒருவர் பைரவர், மற்றவர் பாதாள பைரவர்) சந்நிதி பிரசித்திப் பெற்றது.

ழநி சாது ஸ்வாமிகள் மடத்தில், சுமார் 8 அடி உயரத்தில் 10 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் விஜயபைரவரை, தென்னகத்திலேயே மிகப் பெரிய பைரவர் என்கிறார்கள்.

60 ஆண்டுகளுக்கு முன், சாது ஸ்வாமிகள் காசியில் இருந்து கொண்டு வந்த பைரவ சக்கரத்தை இங்குள்ள பீடத்தில் வைத்து, அதன் மீது பைரவரைப் பிரதிஷ்டை செய்தாராம்.

ந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள சிறு குன்றில் பைரவரின் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இதை `பைரவ கொண்டா' என்று அழைக்கிறார்கள். இங்கே, மலையை குடைந்து எட்டு கோயில்கள் அமைந்துள்ளன. இந்த எட்டிலும் அமைந்திருக்கும் சிவ லிங்கங்களை அஷ்ட பைரவர்கள் வழிபட்டதாகக் கூறுவர். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அஷ்ட பைரவ லிங்கங்களுக்கான ஆலயங்கள் இவை.

யிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழைமையானதும் மகிமைகள் மிக்கதுமான இந்தக் கோயிலில் அருளும் பைரவ மூர்த்தியை இந்திரன், நவகிரக நாயகர்கள் பூஜித்து வழிபட்டு வரம்பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. பைரவர் சிவபூஜை செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற தலம் இது என்கின்றன புராணங்கள்.

பொதுவாக பைரவர் கோலம் மிகவும் உக்கிரமாகக் காணப்படும். ஆனால், இங்குள்ள பைரவர் ஆனந்த கோலத்தில் காணப் படுகிறார். இங்கு கார்த்திகை மாதம் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

காசி கால பைரவர்

காசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.

இவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.

காசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்' படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது  நம்பிக்கை.

காசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது. இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.

காசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று இவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இத்தலத்தைப் போன்றே வைஷ்ணவிதேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள பைரவரை தரிசித்தால்தான், அந்த யாத்திரையும் தரிசனமும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

அஷ்ட பைரவ யாத்திரை!

காசியில் அஷ்ட பைரவர்கள் முறையே எட்டு இடங்களில் சந்நதி கொண்டிருக்கிறார்கள்.

காசியிலுள்ள அனுமன் காட்டில்-அஜிதாங்க பைரவரும், துர்காமந்திரில்-சண்ட பைரவரும்,  விருத்தகாளேசுவரர் ஆலயத்தில்-ருரு பைரவரும், லாட்டு பைரவர் கோயிலில்-கபால பைரவரும்,  தேவார கிராமத்தில்-உன்மத்த பைரவரும், திரிலோசன கஞ்ச் எனும் இடத்தில்-சம்ஹாகார  பைரவரும், காமாச்சாவில்- குரோத பைரவரும், காசிபுராவில்-பீஷ்ண பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.

இந்த சந்நதிகளுக்குச் சென்று வழிபடுவதை `அஷ்ட பைரவ யாத்திரை' என்கிறார்கள். இங்கு கார்த்திகை மாத தேய்ப் பிறை, வளர்ப்பிறை அஷ்டமி தினங்கள் விசேஷ தினங்களாகும் .

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி

பைரவ திருவடிவங்களில் மிக முக்கியமானது ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ வடிவம் ஆகும்.

இவர் பொன் நிறத்தில் திகழ்பவர். இவருடைய பின் கரங்களில் தாமரை, சங்கு ஆகியனவும், முன் கரங்களில் அபய-வரத முத்திரைகளும் திகழ்கின்றன.

இவர் மஞ்சள் பட்டாடைகளை அணிந்திருப்பார். மாணிக்கம் போன்ற அணிகளால் இழைக்கப்பட்ட தங்க அட்சய பாத்திரத்தை ஏந்திருப்பார். தமது மடியில் ஸ்வர்ணாதேவியை அமர்த்தியிருப்பார். இந்த தேவி, தன்னுடைய திருக்கரங்களில் தங்கக் காசுகள் நிரம்பிய குடத்தை வைத்திருப்பாள்.

ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவரும், ஸ்வர்ணாதேவியும் தங்களை வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி வழங்குபவர்கள்.

இலுப்பைக்குடியில் இருக்கும் பைரவர் சிறப்பு வாய்ந்தவர். பொன்னையும் பொருளையும் அளிக்கக்கூடியவர். ஒருமுறை கொங்கண சித்தர் தன்னுடைய தவவலிமையால் ஒரு மூலிகையை கண்டுபிடித்தார். அந்த மூலிகை எந்த பொருள் மீது ஊற்றினாலும் தங்கமாக மாறவேண்டும் என்று எண்ணி பைரவரை வணங்கி தவமிருந்தார்.

அவருடைய தவத்தால் மகிழ்ந்த பைரவர் மூர்த்தி கொங்கணருக்கு காட்சி தந்ததுடன், “என்னை பக்தி சிரத்தையோடு யார் வேண்டினாலும், அவர்களுக்கு பொன்னையும் பொருளையும் எப்போதும் கொடுப்பேன்'' என்று அருள்புரிந்ததாக ஒரு திருக்கதையைச் சொல்வார்கள்.

இலுப்பைக்குடியில் இருக்கும் பைரவருக்கு கொங்கண சித்தர் பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கருதப்படுகிறது.

கொங்கண சித்தர் ஜீவ சமாதியும் இங்கு உள்ளது. இங்கு பக்தர்கள் பைரவருக்கு காணிக்கையாக பொன்னையும் பணத்தையும் செலுத்துகிறார்கள். இதனால் பன்மடங்காக பொன்பொருள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிற்காலத்தில் ஸ்ரீதுர்கைச் சித்தர், ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகமும், அர்ச்சனை மந்திரங்களையும் இலுப்பைக்குடி பைரவர் மீது இயற்றினார். இந்த துதிகள், இலுப்பைக்குடி கோயிலில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஸ்வர்ண பைரவர் படத்தை வீட்டில் வடக்கு நோக்கி வைத்து, தினமும் இந்த பைரவ அஷ்டகத்தை படித்து,  பூஜை செய்து வருபவர்கள், நீங்காத செல்வத்துடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

திருமயத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தபசு மலை என்ற இடத்தில் பைரவர் கோயில் ஒன்று உள்ளது. இதை உருவாக்கியவர் கௌசிக முனிவர் என்கிறார்கள். ஆண்டு தோறும் இவரே இங்கு வந்து சிறப்பு வழிபாடு செய்வதாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கு மூலவரும் உற்சவரும் சொர்ண பைரவராக காட்சி தருகின்றனர்.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயங்கள்...
செ
ன்னை அடையாரில் உள்ள மத்திய கயிலாஷ் திருக்கோயிலில் ஸ்வர்ண பைரவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் இவரின் சந்நிதியைத் தரிசிக்கலாம்.

ஆந்திர மாநிலம்  செகந்திராபாத் நகரில் உள்ள ஸ்ரீநாகதேவதை அம்மன் கோயிலில், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் சிலா ரூபத்தைத் தரிசிக்கலாம்.

கஷ்டங்களைத் தீர்க்கும் அஷ்ட பைரவர்கள்

புராணங்கள் பஞ்ச பைரவர்கள், நவ பைரவர்கள், அஷ்ட பைரவர்கள் என்று பல வகையாக பைரவ வடிவங்களை விளக்கிக்கூறுகின்றன. இதுவரை, எண்ணில்லாத அரக்கர்களை அழிக்க எண்ணில்லா முறை அவதரித்து, பகைவர்களை அழித்தும் மன்னித்தும் அருள் புரிந்துள்ளார் பைரவமூர்த்தி. அவ்விதம் தோன்றிய அத்தனை வடிவங்களையும் போற்றி வணங்குவது கடினம் என்பதால், அவற்றில்  முதன்மைபெற்ற எட்டு இடங்களை தேர்ந்தெடுத்து, அஷ்ட பைரவர்களாக வணங்கி வருகிறோம்.

அஷ்ட பைரவர் தோன்றிய வரலாறு

ரு முறை அந்தாகாசுரன் எனும் அரக்கன் தேவர்களை துன்புறுத்தியதோடு அவர்களை பெண் வேடத்துடன் திரியும்படி செய்து அவமானப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் சிவபெருமானிடம் சென்று சரணடைந்தனர்.

சிவபெருமான் அசுரனை அழிக்க மகாபைரவராக எழுந்தருளும் வேளையில், அவரது திருமேனியில் இருந்து அவரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த அஷ்ட பைரவர்கள், அந்தகாசுர வதத்தின்போது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அஷ்டமாதர்களான பிராமி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகிய எண்மரை மணந்தனர்.

அஷ்ட பைரவர்களை `அஷ்டபால பைரவர்கள்' என்றும் அழைப்பது உண்டு.

தாருகன் என்ற அரக்கனை அழித்த காளிதேவி மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அந்த உக்கிரத்துடனும் வெற்றிக்களிப்பிலும் தான் தோன்றிய திசைகளில் எல்லாம் உக்ர தாண்டவம் ஆடினாள்!

பூலோகவாசிகளும், தேவர்களும், முனிவர்களும் அன்னையின் கோபத்தினால் ஏற்பட்ட வெம்மையின் தகிப்பை தாங்க முடியாமல் சிவபெருமானிடம் சென்று சரணடைந்தனர். அவளை சாந்தப்படுத்த சிவனின் ஆணைப்படி அஷ்ட பைரவர்களும் அஷ்ட பாலகர்களாக வடிவெடுத்து வந்தனர். அவர்களைக் கண்டதும் காளிதேவியின் கோபம் தணிந்து உள்ளத்தில் அன்பு பொங்க ஆரம்பித்துவிட்டது. அவர்களே `அஷ்டபால பைரவர்கள்' ஆவர். இந்த பால பைரவர்களுடன் இருக்கும் காளிதேவியை வழிபட்டால், அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அஷ்ட பைரவர்கள் யார் யார் ?

ட்டு திசைகளில் இருந்து உலகை பாதுகாப்பவர்களாகவும், அஷ்ட ஐஸ்வரியங்களுக்குத் தலைவர்களாகவும் திகழ்பவர்கள் அஷ்ட பைரவர்கள். இந்த பைரவர்கள் எண்மருக்கும் அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப திருப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை விரிவாகக் காண்போம்.

1.அசிதாங்க பைரவர்:
திகம்பரத் தோற்றம் கொண்டவர்; வெல்லமுடியாத அங்கங்களை உடையவர்.

தேவி: பிராமி
வாகனம்: அன்னம்
திசை: கிழக்கு
நிறம் : வெண்மை

2.ருரு பைவர்: அளவில்லாத ஆற்றலுடையவர்; தலைமை பண்பாளர்.

தேவி: மஹேஸ்வரி
வாகனம்: காளை
திசை: தென்கிழக்கு
நிறம்: ஸ்படிகம்

3. சண்ட பைரவர்: இயற்கைக்கு மாறான எதையும் எளிதில் நிகழ்த்திவிடும் ஆற்றல் மிகுந்தவர்.

தேவி: கௌமாரி
வாகனம்: மயில்
திசை:  தெற்கு
நிறம்: பொன்

4. குரோதனர்: கோபத்தை மனதில் அடக்கியவர்; பேராற்றல் அளிப்பவர்.

தேவி: வைஷ்ணவி
வாகனம்: கருட வாகனம்
திசை: தென்மேற்கு
நிறம்: கறுப்பு

5. உன்மத்தர்: அடியார்களுக்கு அருள்வதில் மெய்ம்மறந்து செயல்படுபவர்.

தேவி: வாராஹி
வாகனம்: குதிரை
திசை: மேற்கு
நிறம்: பொன் நிறம்

6. கபால பைரவர் : காலத்தை வென்றவர்; கபால மாலை அணிந்தவர்.

தேவி: மஹேந்திரி
வாகனம்: யானை
திசை:  வடமேற்கு
நிறம்: பத்மராக காந்தி

7. பீஷ்ணர்: தான் அழிவற்றவராக இருப்பது போல், பக்தர்களுக்கும் அழிவில்லாத செல்வத்தை வழங்குபவர்.

தேவி: சாமுண்டி
வாகனம்: சிம்மம்
திசை: வடக்கு
நிறம்: சிவப்பு

8.சம்ஹாரர்:
மேலான தர்மத்தை காக்கும்விதம், அநீதியை அழிக்கும் வல்லமை கொண்டவர்.

தேவி: சண்டிகாதேவி
வாகனம்: நாய் .
திசை: வடகிழக்கு
நிறம்: வெண்மை

பைரவர்களின் இந்தத் திருவடிவங்கள் எட்டும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களாக நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நீக்கமற நிறைந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனவாம். அஷ்டபைரவர்களை வழிபடுவதால் மனநிம்மதி கிடைக்கும்.

இனி அஷ்டபைரவர்களின் சாந்நித்தியம் நிறைந்த தலங்கள் சிலவற்றை அறிவோம்.

அஷ்ட பைரவ க்ஷேத்திரம்: காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிள்ளையார் பாளையத்தில் உள்ளது அஷ்ட பைரவ க்ஷேத்திரம். சோழ மன்னர்கள் இக்கோயிலை சிறப்பாகப் புதுபித்துச் சிறப்பான பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர். அவர்கள் பெயராலேயே இன்றளவும் இது `சோழிசுவரர் கோயில்' என்றே  அழைக்கப்படுகிறது. இத்தலத்துக்கு அஷ்ட பைரவ மூர்த்திகளும் வந்து, பெரிய சோலையின் நடுவில் தத்தமது பெயரால் சிவலிங்கங்களை அமைத்து, சிறப்பாக பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.

இந்த லிங்கங்கள் யாவும் பைரவர் வடிவங்களேயாகும். அந்த லிங்கங்கள் எட்டுக்கும் தனித்தனி சிற்றாலயங்கள் ஒரே மதிலுக்குள் அமைந்துள்ளன.

இந்தத் தலம் வெற்றியை மற்றும் அரச வாழ்வை தரும் மேலான தலமாகும். இங்கு வழிபாடு செய்வது, அஷ்ட பைரவர்களையும் அஷ்ட லிங்கங்களையும் ஒரு சேர வழிப்பட்ட புண்ணியத்தை தரும் என்பது பெரியோர் வாக்கு.

ஆறகளூர்: சேலம் - ஆத்தூர் வட்டம், தலைவாசலில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறகளூர். இங்குள்ள காமநாதீசுவரர் ஆலயம், அஷ்டபைரவருக்கு உரிய சிறந்த பிராத்தனை தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காமனை அழித்து மீண்டும் உயிர்பித்ததை புராணங்கள் கூறுகின்றன.

அஷ்ட பைரவர்களும் தனித்தனியாகவும் பெரிய திருவுருவுடனும் எழுந்தருளியிருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்றைய நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் அஷ்டபைரவர்களுக்கு மிளகு தீபம் ஏற்றி, செந்நிற அலரி மாலைகளைச் சூட்டி, அர்ச்சனை செய்து மனமார வழிபட்டுச் செல்கிறார்கள்.
வலம்புரி மண்டபம்:
சீர்காழியில் வலம்புரி மண்டபத்தில், நான்கு திசைகளையும் நோக்கியுள்ள மாடங்களில், திசைக்கு இரு பைரவர்களாக அஷ்டபைரவர்களும் அருள்கின்றனர். திருவண்ணாமலையிலும் அஷ்ட பைரவ மண்டபம் உள்ளது.

மேலும் சென்னையில் அஷ்ட பைரவர்கள் காட்சி தரும் இடம் ஸ்கந்தாஸ்ரமம். சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்கந்தாஸ்ரமத்தில் சரபர் சந்நிதி உள்ளது. இந்த சரபரைச் சுற்றிலும் அஷ்டபைரவர்கள் எழிலுறக் காட்சி தருகின்றனர்.

அஷ்ட பைரவர் துதி


துண்டமதி புனைந்து அகல்விண்தோய்        
      சிகரத்தினில் அமர்ந்த
அண்டர் பிரான் கணத்தலைமை    
    அசிதாங்கன் கபாலி
சண்டன் ருரு குரோதனன் 
     சங்காரன் பூஷணன் சீர்
கண்டருளும் உன்மத்தன்
      கழற்கமலம் பரவுவாம்


கருத்து: நிமிர்ந்து உயர்ந்திருக்கும் உமாமகேஸ்வரர் ஆலய விமானத்தின் சிகரத்தில் அமர்ந்திருப்பவரும், பிறைச்சந்திரனை அணிந்தவரும், சிவ கணங்களுக்கெல்லாம் தலைமை வகிப்பவரும்... அசிதாங்கன், கபாலி, சண்டன், ருரு, குரோதனர், சங்காரர், பூஷணன், உன்மத்தன் ஆகிய  எட்டு வடிவங்களைத் தாங்கி வந்து அன்பர்களுக்கு அருள்புரிபவரும் ஆகிய வடுக மூர்த்தியின் கழல்களைப் போற்றிப் பணிகிறேன்.

Comments