காஞ்சி மகான் -2

சகலந்தீ சம்போ த்வச்சரித - ஸரித: கில்பிஷரஜோ
தலந்தீ தீகுல்யாஸ ரணிஷு பதந்தி விஜயதாம்
திசந்தீ ஸம்ஸார ப்ரமண பரிதாபோப சமனம்
வஸந்தீ மச்சேதோ ஹ்ரதபுவி சிவானந்த - லஹரீ


ம்புவாகிய ஈசனே! உமது திவ்விய சரிதமாகிய நதியில் இருந்து பெருகி வந்து, பாவமாகிய புழுதியை அடித்துச் செல்வதாகவும், புத்தி என்னும் வாய்க்கால் வழியாகப் பாய்ந்து சென்று, உலக வாழ்வாகிய பிறவிச் சுழலில் ஏற்படும் பெரும் துன்பங்களைப் போக்கி அமைதி அளிப்பதாகவும், என் உள்ளத்தில் எப்போதும் தேங்கி இருப்பதுமான சிவானந்த வெள்ளம் வெற்றியுடன் விளங்குவதாக!

- சிவானந்த லஹரி

யிலை நாயகனாம் நம் ஐயன், மனித குலம் உய்யும்பொருட்டு இந்த உலகத்தில் அவதரிப்பதற்கு முன்பாக, ஒரு லீலையை நிகழ்த்தி அருளினார். அந்த லீலையின் பயனாகத் தோன்றியதும் அருள்திறம் கொண்டு திகழ்வதுமான திருத்தலம்தான் சிவாஸ்தானம் என்னும் உன்னதத் திருத்தலம்.

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, பிரம்ம காஞ்சி என மும்மூர்த்தியரின் பெயரில் மூன்று தலங்கள் அமைந்திருக்கும் காரணமாக, ‘நகரேஷு காஞ்சி’ என்று காளிதாசனாலும், ‘முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி’ என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகராலும் போற்றப் பெற்ற காஞ்சி மாநகரத்தில், பிரம்ம காஞ்சியில் அமைந்திருக் கிறது சிவாஸ்தானம் என்னும் திருத்தலம்.

உலகை உய்விக்கத் திருவுள்ளம் கொண்டு, காஞ்சி மகான் பத்தாண்டு காலமாக உன்னத தவம் இயற்றிய இந்தத் திருத்தலத்தில்தான், பிரம்மா தவம் இருந்து உயிர்களைப் படைக்கும் ஆற்றலைப் பெற்றார். இன்றைக்குத் தேனம்பாக்கம் என்று அழைக்கப்பெறும் இந்தத் தலத்தில் பிரம்ம தேவரின் தவத்துக்கு இரங்கி, ஐயன் தரிசனமும் வரமும் அருளிய அந்த வரலாற்றைத் தெரிந்து கொள்வோமா?
சிவபெருமானின் இட பாகத்தில் இருந்து தோன்றியவர் மஹாவிஷ்ணு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்ம தேவர் தோன்றினார். அவர் சிவபெருமானிடம் உலக உயிர்களைப் படைக்கும் ஆற்றலைத் தமக்கு வழங்குமாறு பிரார்த்தித்தார். ஐயன் அவரிடம், ‘‘புண்ணிய பூமியாம் காஞ்சிக்குச் சென்று, எம்மைக் குறித்து தவம் இருப்பாயாக. நீ மனம் ஒன்றிச் செய்யும் தவம் வெற்றி பெற்றால், யாம் உமக்குப் படைக்கும் ஆற்றலை அருள்கிறோம்’’ என்றார்.

சிவபெருமானின் ஆணைப்படியே காஞ்சித் தலத்துக்கு வந்த பிரம்மா, இந்தத் தேனம்பாக்கம் பகுதியில் ஈசனை தியானித்துக் கடும் தவம் இயற்றினார். கூடவே, சிவபெருமானுக்கு உகந்த சோம யாகமும் நடத்த விரும்பினார். யாகம் நடத்த வேண்டுமானால், மனைவியும் உடன் இருக்கவேண்டும் என்பது நியதி. அப்போது சரஸ்வதி அருகில் இல்லாததால் சாவித்ரி, காயத்ரி ஆகிய தேவியரைத் தோற்றுவித்து யாகத்தைத் தொடங்கினார். பிரம்ம தேவரின் இந்தச் செயல் சரஸ்வதிக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை அழைக்காமல் பிரம்ம தேவர் செய்யும் யாகத்தைத் தடுக்க, சரஸ்வதி வேகவதி நதியாக மாறி, வெள்ளப் பெருக்கெடுத்து வந்தாள். எங்கே வெள்ளப்பெருக்கில் யாக குண்டம் மூழ்கிவிடுமோ என்று அஞ்சிய பிரம்மா, சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். சிவபெருமானின் ஆணைப்படி, திருமால் அந்த வெள்ளத்தின் நடுவில் சயனம் கொண்டு, வெள்ளப் பெருக்கைத் தடுத்தார். தன் தவற்றை உணர்ந்த சரஸ்வதி மன்னிப்பு கேட்டுக்கொண்டு, பிரம்மா நடத்தும் யாகம் பூர்த்தி அடைய உதவினாள்.

பிரம்மாவுக்குக் காட்சி தந்த சிவபெருமான், உயிர்களைப் படைக்கும் ஆற்றலை அவருக்கு வரமாகத் தந்தார். ‘‘ஐயனே, படைக்கும் ஆற்றலை தாங்கள் எனக்கு வரமாகத் தந்த இந்தத் தலத்தையே ஆஸ்தானமாகக் கொண்டு, தாங்கள் எழுந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார் பிரம்மா. அதன்படியே, பிரம்ம தேவர் ஸ்தாபித்த லிங்கத்தில் ஈசன் ஐக்கியமானார். இந்தத் தலத்தை ஈசன் ஆஸ்தான தலமாக ஏற்றதால், இது சிவாஸ்தானம் என்று பெயர் பெற்றது. பிரம்ம தேவர் பூஜித்ததால், ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார்.

ஐயனின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவத்தில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கி அருட்காட்சி தரும் ஐயனுக்குப் பின்புறச் சுவரில் சோமகணபதி (ஐயனுக்கும் அம்பிகைக்கும் இடையில் கணபதி அமர்ந்திருக்கும் வடிவமே சோம கணபதி) புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். அந்தச் சிற்பத்தில் ஆதிசங்கரரையும் தரிசிக்கலாம். பல்லவர் காலத்தில் புனர் நிர்மாணம் செய்யப்பெற்ற இந்தக் கோயிலில் சந்திரசேகர கணபதி, சுவாமிநாத சுவாமி, துர்கை, ஆனந்த தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இங்குள்ள சோமகணபதியை வழிபட்டால், திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமைவதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஆலயத்தில் ஆதிசங்கரரின் செப்புத் திருமேனியும், அவருடைய திருப்பாதங் களும் அமைந்துள்ளன. ஆதிசங்கரரின் திருப்பாதங்களை வணங்கினால் கண் தொடர்பான குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. பிரம்ம தேவரால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தத்தின் புனித நீரைத் தலையில் தெளித்துக்கொண்டால், முன்வினைப் பாவங்கள் தீருவதுடன், விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிவாஸ்தானமாகிய இந்தத் திருத்தலம்தான் சிவாம்சமாக அவதரித்த காஞ்சி மகானின் நேத்ர ஸ்தானம் என்றும் சொல்லலாம். இங்கிருந்தபடியே அனைத்தும் அறிந்து, நம்மை நல்வழிக்கு ஆற்றுப்படுத்தினார் காஞ்சி மகான். எங்கோ தொலை தூரத்தில் நடக்கும் சம்பவத்தையும் இங்கிருந்தபடியே அறியும் காஞ்சி மகானின் ஞான திருஷ்டியை விளக்கும் வகையில் இங்கே பலப்பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

1970-களின் தொடக்கத்தில், புதுப் பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பெற்ற ஸ்ரீயேந்திர சரஸ்வதீ ஸ்வாமிகள் கேரள விஜயம் செய்தார். எர்ணாகுளத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசத்தின்போது, பக்தர்கள் அவரை ஒரு குட்டி யானையின் மேல் அமரச் செய்து, ஊர் வலமாக வந்துகொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று மின்சாரம் தடைப்படவே, எங்கும் இருள் சூழ்ந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்பில் குட்டி யானை மிரளவே, பக்தர்களும் பதறினர். ஸ்ரீஜயேந்திர சரஸ்வதீ ஸ்வாமிகளும் பத்திரமாக யானையின் மேல் இருந்து இறங்கிவிட்டார். சில நிமிடங்களில் மின்சாரம் வர, இயல்பு நிலை திரும்பியது. அதேநேரம், காஞ்சிபுரத்தில் இருந்து தொலைபேசி மூலம் எர்ணாகுளத்தில் இருந்த பக்தர் டி.வி.சுவாமிநாதனைத் தொடர்பு கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஏ.நாகராஜ ஐயர், ‘‘என்ன, ஊர்வலத்தில் ஏதேனும் குழப்பம் உண்டாயிற்றா?’’ என்று விசாரித்தார்.


நடந்ததை விவரித்த டி.வி.சுவாமிநாதன், ‘‘அதிருக்கட்டும்... சம்பவம் நடந்து சில நிமிடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?’’ என்று வியப்புடன் கேட்டார். அதற்கு,
‘‘சிவாஸ்தானத்தில் மகா பெரியவா எங்களிடம், ‘நான் நாற்பது வருஷத்து முன்னாடி மலையாள தேசத்துக்கு யாத்திரை போனப்ப இருந்ததைவிட, புது சுவாமிக்கு ஏக வரவேற்பு...’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென்று, ‘ஒரே இருட்டாயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே’ என்று சொன்னார். ‘உடனே எர்ணாகுளத்துக்குப் போன் போட்டு என்ன நடந்ததுன்னு விசாரி’ன்னார்” என்றார் நாகராஜ ஐயர்.

எங்கோ தொலைதூரத்தில் இருந்த எர்ணா குளத்தில் நடந்த சம்பவம் தேனம்பாக்கத்தில் இருந்த மகானுக்கு ஞானதிருஷ்டியில் தெரிந்தது என்றால், சிவாஸ்தானத்தை மகானின் நேத்ரஸ்தானம் என்று சொல்வது சரிதானே?!

இந்த நேத்ர ஸ்தானத்தில் இருந்து அவர் நிகழ்த்திய அருளாடல்கள்தான் எத்தனை எத்தனை?! அத்தனையும் அவருடைய அருள் திறனை நமக்கு உணர்த்துவதாகவும் திகழ்கின்றன.
சரி... அந்தக் கயிலை நாயகன் விண்ணிலிருந்து மண்ணிறங்கி வந்த அந்த அற்புதம் எப்போது, எப்படி நிகழ்ந்தது?

Comments