காஞ்சி மஹான் -1

தவ கதாம்ருதம் தப்த ஜீவநம் கவி பிரீடிதம் கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்கலம் ஸ்ரீமதாததம் புவிக்ருணந்தி தே பூரிதா ஜநா:


கருத்து: உனது அமுதமான சரிதம் துக்கத்தால் வருந்தும் மனிதர்களின் துக்கத்தை நீக்கி வாழவைக்கிறது; மன மாசுகளைக் களைகிறது; கேட்பதற்கு பரம மங்கலகரமாகத் திகழ்கிறது; சகலவிதமான சிரேயஸையும் அளிக்கிறது. ஞானியர்கள் அனைவரும் போற்றும் நின் சரிதையை உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏற்றிப் போற்றித் துதிக்கிறார்கள்.

- ஸ்ரீமத் பாகவதம்

இறைவனின் திவ்விய சரிதம் மட்டுமல்ல, இறைவனின் அம்சமா கவே நம் புண்ணிய பூமியில் அவதரிக்கும் மஹான்களின் திவ்விய சரிதமும்கூட மனிதர்களால் ஏற்றிப் போற்றப்படுவதுடன், படிக்கப் படிக்க நம்முடைய பாவங்களை எல்லாம் களைந்து, மன மாசுகளை அகற்றி, மகிழ்ச்சியுடன் வாழவைக்கிறது. அப்படி எத்தனையோ மகான்கள் அவதரித்த இந்த ஞானபூமியில், சிவமே வடிவமாக அவதரித்த மஹானின் திவ்விய சரிதத்தை அந்த மஹானின் பாதம் பணிந்து, இங்கே சொல்லத் தொடங்குகிறேன்.

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அந்த மஹான் தங்கியிருந்தார். ஒருநாள், பக்தர்களுக்கு தரிசனம் தந்துவிட்டு, தனிமையில் அமர்ந்துவிட்டார். அப்போது ஓர் ஐரோப்பியர், மஹானை தரிசிப்பதற்காக வந்தார்.


மஹான் அதுவரை வெளிநாட்டவர் யாரையும் சந்தித்ததில்லை என்பதால், மடத்து ஊழியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இருந்தாலும், வந்தவரை உபசரித்து அமர வைத்தனர். எனினும், ஞானாமிர்தம் வேண்டி ஒரு ஜீவன் தம்மைத் தேடி வந்து காத்துக்கொண்டிருப்பது அந்தப் பரப்பிரம்மத்துக்குத் தெரியாதா என்ன? அவரை உடனே தம்மிடம் அழைத்து வரும்படி அணுக்கத் தொண்டரை அனுப்பினார் மஹான்.

மஹானைத் தேடி வந்தவர் பால் பிரண்டன். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அவர், ‘மறைபொருள் நிறைந்த ஆன்மிக இந்தியா’ என்னும் நூலை எழுதுவதற்காகவும், உண்மையான ஞானத்தைப் பெறுவதற்காகவும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். பல ஆன்றோர்களையும், தத்துவ ஞானிகளையும் சந்தித்தும் அவருடைய மனக் குழப்பம் தீரவில்லை. இந்த நிலையில்தான், நண்பர் ஒருவர் மூலம் மஹானைப் பற்றி அறிந்து, அவரை தரிசிக்க வந்திருந்தார்.

தம்மை நாடி வந்திருக்கும் ஐரோப்பிய அன்பரின் மனக் குழப்பங்கள் தெளிந்து பூரண அமைதி அடையும்படியாக நீண்ட நேரம் அவருடன் உரையாடிய மஹான், அவருக்கு மட்டுமே தெரியும்படியாகத் தம்முடைய தேஜஸ் நிறைந்த தெய்வாம்சத்தைக் காட்டி அருளினார். அதைப் பார்த்துப் பரவசப்பட்ட பால் பிரண்டன், ‘ஆகா, என்ன அற்புத தரிசனம்!’ என்று சிலிர்ப்புடன் கூறினார். உடனிருந்த மடத்து ஊழியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பால் பிரண்டனிடம் கேட்டபோது,  மஹானின் தேஜஸ் நிறைந்த தெய்விகத் தோற்றத்தை தான் தரிசித்ததாகக் கூறினார்.

பின்னர் விடைபெற்றுச் சென்ற பால் பிரண்டன், தனது அனுபவத்தை இப்படி விவரித்திருக்கிறார்: ‘மஹானை தரிசித்த அந்த உன்னதமான பொழுதில், நான் அதுவரை எதைத் தேடி அலைந்துகொண்டிருந்தேனோ அது என் வசப்பட்டது போன்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.நான் தரிசித்த மஹான்களில் காஞ்சி மஹானுக்குத் தனிப் பெருமை உண்டு. பிரெஞ்சு மொழியில் ஸ்பிரிச்சுவல் (spiritual) என்றொரு சொல் உண்டு. தெய்விகம் என்னும் அந்த உன்னதமான சொல்லே ஓர் உருவில் எனக்கு முன்னால் இருந்து எனக்கு அருள்புரிவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது!’

எங்கெங்கோ அலைந்து இறுதியில் காஞ்சி மஹானின் அருட் பார்வை தன்மேல் பட்டதும்தான் பால் பிரண்டன் பூரண மனத் தெளிவும், பரவசமும் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் சிவாம்சமே மஹானாக அவதரித்து பூமியில் இறங்கி வந்துள்ளது என்பதுதான்!

மஹானின் பணிவிடைகளில் தம்மைப் பூரண பக்தியுடன் அர்ப்பணித்துக் கொண்டவர் பட்டாபி. அவர் மஹானுடைய அருளாடல்களைப் பல தளங்களிலும் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்படி அவர் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல்...

திருநெல்வேலி அருகில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன் என்ற பெரியவர். ஆசார சீலரான அவர் வெளியிடங்களில் தண்ணீர்கூட அருந்தமாட்டார். அடிக்கடி காஞ்சி மஹான் முகாமிட்டிருக்கும் இடத்துக்கு வந்து பல நாட்கள் அங்கே தங்கி மஹானை தரிசிப்பது, அவரது வழக்கம். மஹானின் சந்நிதானத்தில் போய் அமர்ந்து விட்டால், அவருக்குப் பசி தாகம் எதுவும் இருக்காது.
அப்படி ஒருமுறை மஹானை தரிசித்துவிட்டு ஊருக்குக் கிளம்ப மஹானிடம் உத்தரவு கேட்டபோது, எப்போதுமே எதுவும் பேசாமல் ஆசிர்வதித்து அனுப்பும் மஹான், ‘‘கிளம்பி யாச்சா ஊருக்கு? சோடாவாவது ஒரு வாய் வாங்கிக் குடிக்கலா மோல்லியோ? சரி, போறச்சே அதையாச்சும் பண்ணுங்கோ’’ என்று கூறி அனுப்பினார்.

மதுரைக்குப் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அங்கே ஒரு சின்ன பெட்டிக் கடை இருந்ததும், கடையில் சோடா பாட்டில்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததும் சிவனுக்குத் தெரிந்தது. ‘ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்கோ’ என்று பெரியவர் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது.

உடனே, தன்னுடைய பையை இருக்கையில் வைத்துவிட்டு, இறங்கிப் போய் ஒரு சோடா குடித்துவிட்டு வந்து, பஸ் ஏறினார். அவருடைய இருக்கையில் வைத்திருந்த பையைக் காணோம். அதுவரை பஸ்ஸில் அட்டகாசம் செய்துகொண்டிருந்த சில இளைஞர்கள் அவருடைய பையை கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் போட்டு விட்டு, அவருடைய இருக்கையை ஆக்கிரமித் திருந்தனர். தன் பையைத் தேடிய சிவனிடம், ‘யோவ் பெரிசு, உன்னோட மஞ்சப் பையை பின்னால போட்டிருக்கோம். அங்கே தேடிப் போய் உட்கார்ந்துக்கோ’ என்று எகத்தாளமாகப் பேசினர். அவர்களிடம் எதற்கு வம்பு என்று நினைத்த சிவன் அமைதியாகத் திரும்பி, பின்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார்.  சற்றைக்கெல்லாம் எதிரில் அசுர வேகத்தில் தாறுமாறாக தடதடத்து வந்த ஒரு லாரி பஸ்ஸின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. அந்த விபத்தில் பலருக்கு பலத்த காயம். ஒரு சில உயிரிழப்பும் நேர்ந்தது.


தெய்வாதீனமாக சிவன் அந்த விபத்தில் அதிக பாதிப்பில்லாமல் தப்பினார். மஹான் எதற்காக தன்னை சோடா குடிக்கும்படி சொல்லவேண்டும், அதற்கேற்றாற்போல் அந்தப் பெட்டிக் கடை அருகே பஸ் எதற்காக நிற்க வேண்டும் என்றெல்லாம் யோசித்த சிவனுக்குக் கண்களில் கரகரவென்று நீர் சுரந்தது. மஹானை பத்து நாட்கள் தரிசனம் செய்த புண்ணியம்தான் தன்னைப் பெரிய கண்டத்தில் இருந்து காப்பாற்றியது என்பதாக உணர்ந்து, மானசீகமாக மஹானை நமஸ்கரித்தார்.

பின்பு ஒருநாள் பட்டாபியிடம் இந்தச் சம்பவத் தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட சிவன், ‘‘பெரியவாதான் என்னைக் காப்பாத்தினா’’ என்று கண்ணீர் உகுத்தார். அதற்கும் சில நாட்கள் கழித்து, மஹானை தரிசிக்கச் சென்றிருந்தபோது, இதுபற்றிப் பெரியவாளிடம் பட்டாபி சொல்ல, ‘‘என்னது..! நான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாரா? அட அசடே, நான் எங்கேடா காப்பாத்தினேன்? அந்தப் பரமேஸ்வரன்தானே காப்பாத்தினான்’’ என்று சிரித்தாராம் மஹான். மஹான்தானே சிவனை சோடா வாங்கிக் குடிக்கச் சொன்னார்? அவரின் வார்த்தை கள்தானே சிவனைக் காப்பாற்றின? எனில், அவர் சாட்சாத் பரமேஸ்வரனே அல்லாமல் வேறென்ன?

இன்றைக்கும் நம்மிடையே அருளொளி பரப்பி நிற்கும் காஞ்சி மஹான் அந்தக் கயிலை சங்கரனின் அம்சமாக அவதரித்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. மனித குலத்துக்கு நன்மைகள் அருள திருவுள்ளம் கொண்டுவிட்ட அந்தக் கயிலை சங்கரன்தான், காலடி ஞானியாகவும், தொடர்ந்து காஞ்சியின் கருணைத் தெய்வமாகவும் அவதரித்தார்.

ஐயன் ஈசன் விண்ணிலிருந்து மண் ணில் இறங்கி வந்த அந்தப் புனித வரலாறுதான் என்ன..?

Comments