முத்தொழில் புரியும் முகுந்தன்!

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் திருக்கோயில். பஞ்சகிருஷ்ண கே்ஷத்ரங்களுள் ஒன்றான இது, 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில்
சோழ நாட்டுத் திருப்பதிகளில் இருபத்தி இரண்டாவதாகத் திகழ்கிறது. ஸப்த புண்ணிய கே்ஷத்ரமான இது, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்களால் பாசுரங்கள் பெற்ற திருத்தலம். கண்ணன் மகிழ்ந்து உறைந்த இடமாதலால், ‘திருக்கண்ணபுரம்’ எனப் பெயர் பெற்றது.
மூலவர் ஸ்ரீநீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் பிரயோகச் சக்கரம் ஏந்தி, கிழக்கு திருமுக மண்டலத்தோடு காட்சியளிக்கிறார். உத்ஸவர் சௌரிராஜப் பெருமாள் சிரசில் சௌரி(முடி)யுடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் அமாவாசை திருவுலாவின்போது மட்டுமே திருமுடி தரிசனத்தைக் காண இயலும். விபீஷணனுக்காக அமாவாசைதோறும் சௌரி பெருமாள் திருக்கைத்தல
சேவையில் தன் நடையழகைக் காட்டுகிறார்.
உத்ஸவ பெருமாள் கன்ய காதானம் வாங்ககையேந்திய கோலத்தில் சேவை ஸாதிக்கிறார். ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அக்ஷரங்களிலும் இந்த
கே்ஷத்ரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இது ‘ஸ்ரீ மதஷ்டா க்ஷர மஹாமந்த்ர ஸித்தி கே்ஷத் ரம்’ என்ற பெயர் பெற்றது. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப் பட்ட ஸ்தலம். திருமங்கையாழ் வாரைப் பாடத் தூண்டிய திருத்தலம் இது. இவருக்குக் கோயிலுக்கு வெளியே தனி சன்னிதி உண்டு. திருவரங்கம், ‘மேலை வீடு’ என்றும் இத்தலம், ‘கீழை வீடு’ என்று உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.
உபரி சிரவஸு என்னும் மன்னன் தேவாசுர யுத்தத்தில் தேவர்களை வெற்றி பெறச் செய்தான். திரும்பி வருகையில், இந்த கே்ஷத்ரத்தில் அவன் முனிவர்களை துன்புறுத்தியதால் பெருமாள் மன்னனை எதிர்த்து நின்றார். ‘தாம் எதிர்த்து நிற்பது அந்தப் பெருமாளையே’ என்று உணர்ந்த மன்னன், பெருமாளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். பெருமாள் அவனை மன்னித்து சேவை சாதித்தார்.
மன்னனின் பெண் பத்மினி நாச்சியாரை பெருமாள் கடிமணம் புரிந்தார். வீகடாக்ஷன் என்னும் அசுரனை பெருமாள் வதம் செய்த இடம். இக்கோயிலின் ஆறு மதில்களை உடைத்த மன்னனை, எவ்வளவு சொல்லியும் கேளாமல் ஒன்றும் செய்யாமையால் கோபம் கொண்ட பக்தர் அரையர், தன் கையிலிருந்த தாளத்தால் பெருமாள் முகத்தில் அடித்தார். அதனால் பெருமாள் முகத்தில் ஏற்பட்ட தழும்பை இன்றும் சேவிக்கலாம்.
பலா என்றால் மாமிசம். உத்பலா என்றால் மாமிச உடலில் ஆசை துறந்த ஞானியர். அந்த ஞானிகளுக்கு மோக்ஷம் கொடுக்கவே பெருமாள் எழுந்தருளியுள்ள விமானம் ஆகையால், இக்கோயில் விமானத்துக்கு, ‘உத்பலாவதக விமானம்’ என்று பெயர்.
முனையதரையன் என்ற பக்தர் ஸமர்ப்பித்த பொங்கல் இப்பெருமாளுக்கு மிகவும் உகந்தது. தினமும் இரவு அர்த்தஜாமத்தில் பெருமாள் முனையதரையன் பொங்கல் அமுது செய்விக்கிறார். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் ‘சௌரி’ எனும் திருநாமம் தன் பக்தர்களுக்காக சௌரிக் கொண்டை சாத்தி
சேவை ஸாதிக்கும் இப்பெருமானையே என்பார் ஸ்ரீ பராசரபட்டர்.
இத்தலத்துப் பெருமாள், ‘சரண்ய முகந்தத்வம்’ எனும் குணத்தால் நமக்குச் சேவை சாதிக்கிறார். சரண்யன் என்றால் மோக்ஷத்துக்கு வழியாக, எல்லோராலும் பற்றத்தகுந்தவன். ‘மு’ என்றால் மோக்ஷம். ‘கு’ என்றால் பூமி. ‘த்’ என்றால் கொடுக்கிறான் என்று பொருள். மோக்ஷ பூமியைக் கொடுப்பவர் முகுந்தன். ஆக, சரண்ய முகுந்தன் என்றால் தன்னிடம் சரணாகதி பண்ணியவர்களுக்கு மோக்ஷ பூமியை கொடுப்பவன் என்று பொருள். இதையே நம்மாழ்வார்,
‘சரணமாகும், தனதாள் அடைந்தார்க் கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதன்பார்க்கு அன்பாகுமே.’
- திருவாய்மொழி 9-10-5
இத்திருத்தலம் கிருஷ்ணாரண்யம், தண்டகாரண்யம் என்றும் வழங்கப்படுகிறது. முக்தித் திருத்தலமான இது, மிகவும் புராதனமானது. 64 சதுர் யுகங்களைக் கண்டது. சப்த பிராகாரங்களைக் கொண்டது. பெருமாள் இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். வைகாசி பிரம்மோத்ஸவம் ஏழாம் நாளில், ஸ்திதி காத்தருளும் நிலையில் மஹாவிஷ்ணுவாக வும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்பத்தின் மத்தியில் சிருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் அதாவது, முக்கால் மணி நேரம் ஸம்ஹாரம் செய்யும் சிவனாகவும் காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெரும் சிறப்பாகக் கருதப்படுகிறது. மூலவரின் அருகில் கருடனும் காட்சியளிக்கிறார். திருக்கண்ண புரமே பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதால் தனியாக இக்கோயிலில் சொர்க்கவாசல் இல்லை. ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் இத்தலத்தில் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார். திருக்கண்ணபுரம் கண்ணனை வணங்கி வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் பெறுவோம்.
அமைவிடம்: நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் வழியில் திருப்புகலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருமலைராயனாறுக்கும், வெட்டாறுக்கும் இடையே உள்ளது. பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.

Comments