தொல்லை தீர்க்கும் தில்லை!

‘கோயில்’ என்று சொன்னாலே சைவத்தில் சிதம்பரம். வைணவத்தில் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்). விரைவு ரயிலில் சென்னை வருகையில் சிதம்பரம் கோபுரம் கண்டு, கை தொழுது, ‘ஆகா! எத்தனை அடியவர் போற்றிப் பாடிய அணிதில்லை இது’ என்று நினைத்துக் கண்களில் நீர் கசிய நின்றபோது, அலைபேசியில் அழைத்த என் மாணவி, அம்மா, நீங்கள் எம்.எஸ்.அம்மாவைப் பற்றி அருமையாக எழுதியிருந்தீர்கள். மகிழ்ச்சி. ஆனால், ‘காலைத் தூக்கி நின்று’ பாட்டை எப்போதும் பாடுவீர்களே! எம்.எஸ். அம்மாவின் அந்த ரிக்கார்டு குறித்தும், மாரிமுத்தா பிள்ளை குறித்தும் ஏன் எழுதலை?" என்றாள்.
ஆம்! தவறுதான்! உடனே எழுதி விடுகிறேன்" என்றேன். தமிழிசை மூவரில் அருணாசல கவிராயரை யும் முத்துத்தாண்டவரையும் குறித்து எழுதிய நான், மாரிமுத்தா பிள்ளையை எழுதாமல் விட்டது கவனக் குறைவுதான். தில்லையிலேயே அதை நினைவூட்டி விட்டார் நடராசப்பெருமான்!
கர்நாடக இசை மும்மூர்த்திகளுக்கு முன்னரே தோன்றி, பக்தி இசை வளர்த்த தமிழிசை மூவரும், ‘சீர்காழி மூவர்’ எனப்படுகிறார்கள். அருணாசல கவிராயர், முத்துத்தாண்டவர், மாரி முத்தா பிள்ளை ஆகியோர் அம்மூவர்.
ஆட்கொண்டார் ஆடிய பாதர்:
‘தில்லைத் திருநடனம் காண்பதற்குக் கிடைத்த மனிதப் பிறவி இன்பம்’ என்றார் சுந்தர மூர்த்தி சுவாமிகள். ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே’ என்றார் அப்பர் சுவாமிகள். ‘தில்லை தில்லை என்றால், பிறவி இல்லை இல்லை என ஓடிவிடும்’ என்றார் கோபாலகிருஷ்ண பாரதியார். அந்தச் சிதம்பரம் அருகே, ‘தில்லைவிடங்கன்’ என்ற சிற்றூர். அங்கே தெய்வங்கள் பெருமான் பிள்ளை என்ற நல்லவர் செய்த தவத்தால் கி.பி.1712-ல் வந்து தோன்றியவர் மாரிமுத்தா பிள்ளை. (மாரிமுத்து)76 வயது நிறைவு வாழ்வு வாழ்ந்த பெரியவர் தில்லைவிடங்கன் மாரிமுத்தா பிள்ளை, 1787ல் அமரர் ஆனார். இள வயதிலேயே திருமணம் நடந்தது. மூன்று மகன்கள் பிறந்தனர். மூத்தவனுக்குத் தாத்தாவின் பெயரை, தெய்வங்கள் பெருமான் என்று இட்டார். அவன் 12 வயதிலேயே, ‘உமையவள் மாலை’ பாடியமேதை. என்ன காரணமோ, வீட்டை விட்டு ஓடி விட் டார். கவலை மேகம் சூழ்ந்ததால் குடும்பம் இருண்டது. மாரிமுத்து சொகக் கடலில் தத்தளித்தார். கனவில் நடராசர் தோன்றி, அழுதால் மகன் வருவானா? என்னைப் பாடு. மகன் திரும்பி வருவான்" என்றார். உடனே எழுந்து, ‘புலியூர் வெண்பா’ பாடினார். மகனும் வந்து சேர்ந்தான். மகிழ்ச்சியில் திளைத்தார்.
இதற்கு ஈடு உண்டா?
இன்னும் ஒரு தலம், இன்னும் ஒரு கோயில், இன்னும் ஒரு தெய்வம் இப்படியும் உண்டோ? எனத் தில்லை நடராசரை உறுதியாகப் பற்றிக் கொண்டார் மாரிமுத்தா பிள்ளை. தமிழிசையில் அற்புதமான வாக்கேயக்காரர் இவர். 50க்கும் மேற்பட்ட பாடல் களைத் தந்தாராம். 25 பாடல்களே கிடைத் துள்ளன. அவரது நேரடி வாரிசான டி.வி. மெய்கண்டார் தேடித் தந்துள்ள பாடல்கள்! ‘உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லாது!’ என்ற உறுதி மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் தெரியும். ஆரபி ராகத்தில் பிரசித்தமான பாடல் இதோ:
பல்லவி:
‘ஒருக்கால் சிவசிதம்பரம் என்று நீ சொன்னால்
இருக்காது ஊழ் வினையே!’
அனுபல்லவி:
‘கருக்காறறாகிலிது தெரியும் பொதுவில்
ஒரு காலைத் தூக்கி நின்ற கோலம்
மனதிற் கொண்டு’ (ஒரு)
சரணத்தில் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்புகிறார்.
‘வேத மந்திரம் சொல்லி அனுப்பினேன்...
கொல்லன் ஊதும் துருத்தி போல்,
வாயுவைக் குடும்பத்துடன் யோகத்தில்
எழுப்புவானேன்
ஐந்து பூதங்களும் கலங்கப் பிரதட்சிணம்
செய்வானேன்?
பிறந்து பிறந்து மதி மருண்டு அழுந்துவானேன்?
உருக்கி உடலை மெத்த வருத்தி,
உறக்கத்தையும் ஊனையும்
துறப்பானேன்
லோக வாழ்க்கை
அநித்தியம் என்பதை
மறப்பானேன்?
சித்தர்களாகி நாடெங்கும் பறப்பானேன்?
இவை எல்லாம் ஏன்? ஏன்?
சபைத்திரைக்குள்ளே மறைவாகி இருக்கும்
இரகசியத்தின் திறம் தெரியாமல் வீணே இறந்து,
இன்னும் பிறப்பானேன்?
ஒருமுறை சிதம்பரம் என்று சொல்லியே
ஊழ்வினையை மாற்றி
உலவாத பேரின்ப நிலை அடையலாமே!’
என்கிறார்.
தில்லை, சிதம்பரம், புலியூர், தென்கயிலாயம், பூலோக கைலாசம் என்று பலவாறு போற்றிப் பாடுகிறார்.
பதம்:
அகப்பொருளை உள்ளடக்கி, இறைவனைக் காதல னாக்கி, நடனத்துக்கென்று பாடப்படும் பதமும் பாடியுள்ளார். காதல், நீதி, பக்தி, வைராக்கியம், நகைச்சுவை எல்லாம் கலந்து பாடியுள்ளார்.
‘என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பு?’
‘எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி’
பதங்கள் அருமையானவை! சுருட்டியில்,
பல்லவி:
‘ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மீதையா?’
அனுபல்லவி:
‘பாதிப் பிறையைச் சடையில் தரித்த
பரமனே தில்லைப் பதிவாழ் நடேசனே!’
நாட்டியாஞ்சலிகளில் தவறாமல் இடம்பெறும் பாடலிது. எம்.எஸ்.அம்மா பாடி உலகையே கவர்ந்த, ‘யதுகுல காம்போதி ராகப் பாடல்’ மாரிமுத்தா பிள்ளையை உலகறியச் செய்தது.
பல்லவி:
‘காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே - ஒரு
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே -
என்னைக்
கைதூக்கி ஆள் தெய்வமே! தெய்வமே!’
அனுபல்லவி:
‘வேலைத் தூக்கும் பிள்ளை தனைப்பெற்ற
தெய்வமே!
மின்னும் புகழ் சேர்தில்லைப் பொன்னம்பலத்தில்
ஒரு’ (காலை)
சரணம் 1:
‘செங்கையில் மான்தூக்கி
சிவந்த மழுவும் தூக்கி
அங்கையில் ஒரு பெண்ணை
அனுதினமும் தூக்கி
கங்கையைத் திங்களைக்
கதித்தசடை மேல் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி
இருவர் கண்டறியாத...’ (காலை)
சரணம் 2:
‘நந்தி மத்தளம் கொட்ட
நாரதர் யாழ் மீட்ட
‘தொம் தொம்’ என்றயன் தாளம்
சுருதியுடன் தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர்
சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய
முயலகன் தன்னைத் தூக்க... (காலை)
‘என் மனக்கவலை தீர்த்த நடராசப் பெருமானையன்றி எனக்கு உற்றார் யார்? தில்லை தவிர, என் உளம் கவர்ந்த ஊர் ஏது? அவனைப் பாடுவதைவிட எனக்குப் பணி ஏது?’ என்று சிதம்பரமே கதி என்று அமைதி யாக வாழ்ந்தார். தலயாத்திரை செல்லவில்லை. பலப்பல பிரார்த்தனைகள் செய்து கொள்ள வில்லை. பாடும் பணியே பணியாக அருளிய தில்லைக்கூத்தன் பொற் பாதத்தில் அமைதி பெற்றார். சிவகாமியம்மையும் ‘என்னைப் பாடு’ என்றாளாம். ‘ஏன் இந்தப் பராக்கு?’ என்று பாடி, அவளையும் ஏசுவது போல் புகழ்ந்தார். தமிழிசை மூவரும், தேவார மூவரும், சங்கீத மூர்த்தி கள் மூவரும் இறைவனை இசையால் ஈர்த்தவர்கள். நம்மை அவனிடம் ஆற்றுப்படுத்துபவர்கள்!
நல்ல கற்பனாசக்தியுடையவர் மாரிமுத்தா பிள்ளை. சிதம்பரம்தான் உயர்வு என்பதை அழகாக, நயமாக விவரிக்கிறார் பாருங்கள்:
‘இன்னமும் ஒரு தலம் இருக்குமென் றொருக்கால்
ஏன் மலைக்கிறாய் மனமே!
சொன்ன சொன்ன தலங்கள் எங்கும்
ஓடிக் களைத்து
சொதித்து அறிந்தால் இந்த
ஆதி சிதம்பரம் போல்’ (இன்னமும்)
‘உப்பும் கற்பூரமும் ஒன்றுபோலிருந்தாலும்,
ஊரெங்கும் பெரிதாய்க் கற்பூரம்
தனைச் சொல்வாரே!
அப்படிப் போல் அநேக தலமிருந்தாலும்
அல்லல்வினை தொலைக்கும் தில்லைப் பதிக்கு
நேர்’ (இன்னமும்)
‘விண்ணுலகத்தின் மீன் இனமெலாம் கூடினும்
வெண்ணிறமாம் ஒரு தண்மதி ஒளி இராது
கண்ணுலாவிய அல்லி திரளாய்ப் பூத்தாலும்
ஒரு தாமரை மலருக் கொவ்வாது
மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும்
கூடினும்
மருவுலவும் கற்பகத் தருவுக்கு நிகராகாது’
அதுபோல, எந்தத் தலமும் தில்லைத் தலத்துக்கு ஈடாகாது என்று வாழ்ந்து, இனிப் பிறவி இல்லை எனும் பதமடைந்து, தொல்லைவினை தொலைத்து, நல்ல பல தமிழிசைப் பாடல் தந்த மாரிமுத்தா பிள்ளை இசையாக, இசையுடன் வாழ்கிறார்.

Comments