பகழிக்கூத்தன் பெற்ற பதக்கம்!

திறமைசாலிகளுக்கு ஒரு குணம் உண்டு. ‘என் திறமை தெரிந்து, யாராவது வந்து கேட்டால் அவர்களுக்குச் செய்வேனே தவிர, நானாகப் போய் யாரிடமும் கேட்க மாட்டேன்’ என்பார்கள். அப்படிப் பட்ட ஒருவரிடம் ஆறுமுக வள்ளலே போக் கேட்ட வரலாறு இது.
மதுரையில் ஒரு சிற்றூரில், அரசர்களின் போர்த் தொழிலுக்கு வேண்டிய ‘பகழி’ (அம்பு)களைத் தயாரிக்கும் தொழிலில் தலைசிறந்து விளங்கிய குடும்பத்தில், உத்தமப் பிள்ளையொன்று உமை சுதனருளால் உதித்தது. குழந்தைக்கு, ‘கூத்தன்’ எனப் பெயரிட்டார் கள். அக்குழந்தைதான், ‘பகழிக்கூத்தர்.’
பகழிக்கூத்தருக்கு முன்வினைத் தொடர்பால், கலைமகளின் திருவருள் எளிமையாகக் கைகூடியது.ஆனால், கல்வி கேள்விகளில் தலைசிறந்த பகழிக் கூத்தர், எந்த தெய்வத்தின் மீதும், யார் மீதும் பாடல்கள் இயற்றவில்லை.
பலரும் சொல்லிப் பார்த்தார்கள்; பகழிக்கூத்தா! அருந்தமிழ்ச் செல்வம் உனக்கு அருமையாக வாத்திருக்கிறது. ஆண்டவனையோ, நல்லரசர்களையோ பாடாமல், உன் நல்லறிவை இப்படி வீணடிக்கிறாயே" என்றார்கள்.
அவ்வாறு சொன்ன அனைவருக்கும், எந்தத் தெய்வம் செந்தமிழில் விருப்பம் உடையதாக இருக்கிறதோ, அந்தத் தெய்வம் தன்மீது பாடும்படியாகக் கட்டளை இடட்டும். அவ்வாறு கட்டளை பிறந்தால் நான் பாடுகிறேன்" எனபதில் கூறினார் பகழிக் கூத்தர்.
இதன் பிறகும் முருகப்பெருமான் சும்மா இருப்பாரா? சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், தானும் ஒரு
சங்கப் புலவனாக இருந்து, தமிழை வளர்த்தவரல்லவா? மேலும், ‘தமிழ்க் கடவுள்’ எனப் பெயர் பெற்ற ஒரே பெருந்தெய்வம் ஆயிற்றே!
அதனால், பகழிக்கூத்தரின் கனவில்போ, செந்தூர் கந்தக்கடவுள் காட்சி கொடுத்தார். பகழிக் கூத்தா! யாம் செந்தூர்வாழ் கந்தப்பெருமான்’ என்று சொல்லி, பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதத்தையும் ஓர் ஓலைத் துணுக்கையும் தந்து மறைந்தார்.
செக்கச்செய்வேலென ஜோதி வடிவில் எழுந்தருளிப் பேசி, இரு பொருட்களையும் தந்து விட்டுப்போன, இமவான் பேரனின் அருளை நினைத்துக் கண் விழித்தார் பகழிக்கூத்தர். அவரை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, முருகப்பெருமான் தந்த இரு பொருட்களும் தன்னருகிலேயே இருப்பதைக் கண்ணாரக் கண்டார்.
உடனே, படுக்கையிலிருந்து துள்ளியெழுந்த பகழிக்கூத்தர், இரு பொருட்களையும் விழுந்து விழுந்து வணங்கினார். பன்னீர் இலைப் பிரசாதமான விபூதியை நெற்றி நிறையப் பூசிக்கொண்டு, ஓலைத் துணுக்கை எடுத்துப் படித்துப் பார்த்தார்.
அதில்...
‘பூமாது போற்றும் புகழ்ப் பகழிக்கூத்தா உன் பாமாலை கேட்கயாம் பற்றேமா?-ஏமம்
கொடுக்க அறியேமா?கூற்றுவன் வாராமல்
தடுக்க அறியோமா தாம்?’
என முருகப்பெருமான் எழுதியிருந்தார்.
பகழிக்கூத்தருக்கு மெசிலிர்த்தது. ‘அலைகட லோரம் அடியார்களின் துன்ப அலைகளை இல்லாமல் செவதற்காக எழுந்தருளியிருக்கும், இபமுகன் இளையோனே! உன் கட்டளையை யான் மீற முடியுமா?’ என்று மனமுருகி வழிபட்டுப் பாடத் தொடங்கினார்.
தமிழ்க் கடவுள் தந்த ஓலைச் சுவடியிலிருந்த முதல் சொல்லான, ‘பூமாது’ என்ற சொல்லையே முதலாவதாக வைத்து, ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்’ பாடினார். பாடி முடித்ததும் அதை அரங் கேற்றுவதற்காகத் திருச்செந்தூரை அடைந்தார்.
ஆனால், திருச்செந்தூரில் பகழிக்கூத்தருக்குச் சரியான வரவேற்பு இல்லை. கந்தவேளின் கட்டளைப்படி, கவி பாடியிருக்கிறேன்" என்றார் பகழிக்கூத்தர்.
வழக்கப்படி நடந்தது. பகட்டையே பின் பற்றும் கூட்டம், அம்பு செய்யறவன் கனவுல போயி, ஆறுமுகன் சொன்னாராம். இவரு எழுதிருக்காராம்" என அவமானப்படுத்தினார்கள்.
பகழிக்கூத்தருக்கு உள்ளம் கலங்கியது. ஆதரிப்பார் இன்றி, உணவுக்கும் தங்குமிடத்துக்கு மாக மூன்று மாத காலங்கள், திருச்செந்தூரில் அல்லாடினார் அவர். சில சமயங்களில் முருகப் பெருமான் மீது, கோபம் கூட வந்தது. ஆனால், கனவில் வந்து கருணை செய்த கந்தப்பெருமானின் கருணையை எண்ணிக் களிப்புடனிருந்தார் அவர்.
ஒருநாள், பகழிக்கூத்தரின் கனவில் செந்தூர் இறைவன் காட்சியளித்து, பகழிக்கூத்தா! இந்தா! இதைவைத்துக்கொள்! இங்கேயே இரு! நூல் அரங்கேறும்" எனச் சொல்லி மறைந்தார். கண் விழித்தார் கூத்தர். அவரருகில் முருகப்பெருமானின் திருமார்பை அலங் கரிக்கும் தங்கப்பதக்கம் இருந்தது.
அதேசமயம், குலசேகரன்பட்டினத்தில் இருந்த காத்தபெருமாள் மூப்பனார் எனும் உத்தமரின் கனவில் தோன்றிய செந்திலாண்டவன், பக்தா! பகழிக்கூத்தன் நம்மைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறான்.அந்நூலை அரங்கேற்றம் செய்ய ஆவன செய்" என்று நடந்ததையெல்லாம் விவரித்துக் கூறி மறைந்தார்.
காத்தபெருமாள் உடனே ஒரு பல்லக்கில் புறப் பட்டுத் திருச்செந்தூரை அடைந்தார். அதேசமயம், ‘செந்திலாண்டவரின் தங்கப்பதக்கம் காணாமல்போ விட்டது. யாரோ களவாடி விட்டார்கள்’ என்று திருச்செந்தூரில் ஒரே களேபரமாக இருந்தது.
அந்த நேரம் பார்த்து, திருச்செந்தூரை அடைந்த மூப்பனார், கோயில் நிர்வாகி களைச் சந்தித்து, கந்தப்பெருமான் கனவில் வந்து சொன்னதையெல்லாம் விவரித்தார். பகழிக்கூத்தரின் நூல் அரங்கேற்றத்துக்கு ஆவன செய்யவே, அடியேன் வந்திருக்கிறேன்" என்றார்.
பகழிக்கூத்தரை மட்டமாக எண்ணி ஒதுக்கியவர்கள் திருந்தினார்கள். குகப் பெருமானருளால் நூல் பாடிய, பகழிக்கூத்தரை அவமானப்படுத்தினோம். நமக்கு புத்தி புகட்டவே, நாரணன் மருகன் தன் தங்கப் பதக்கத்தைத் தானே கொண்டுபோய், கவிஞரிடம் அளித்துவிட்டார். மன் னித்துவிடு முருகா" என்று புலம்பியபடியே பகழிக் கூத்தரைத் தேடிப்போனார்கள்.
அங்கு போனதும் காத்தபெருமாள் பகழிக் கூத்தரை வணங்கி, வள்ளி மணவாளனின் உத்தரவைக் கூறினார். பகழிக்கூத்தருக்கு உள்ளம் உருகியது. பார்வதி மைந்தா! பன்னிருகை பரமா! பாடல் பாடிய வனுக்குப் பதக்கம் அளித்து மரியாதை செயத்தான் இவ்வாறு செய்தாயா?" என இருந்த இடத்திலிருந்தே கைகளைக் கூப்பித் திருச்செந்தூரான் சன்னிதியிருந்த திசை நோக்கி விழுந்து வணங்கினார்.
அதன் பிறகு, அனைவருமாக அலைகடலோன்
சன்னிதியை அடைய, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் அரங்கேற்றமானது. அனைவரும் கூடிக்கேட்டு, ஆனந்தித்தார்கள். அப்போது ஆறுமுக வள்ளலே, ஒரு புலவராக அங்கு வந்து கேட்டு ஆனந்தித்தார்.
கூடவே,
‘செந்தமிழ்க்கு வாத்த திருச்செந்திற் பதிவாழும்
கந்தனுக்குப் பிள்ளைக்கவி செய்தான்-சொந்தத்
திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகன் வண்மை
தருமால் பகழிக் கூத்தன்’
எனும் சிறப்புப்பாயிரமும் கூறியருளி மறைந்தார்.
அரங்கேற்றம் முடிந்ததும் காத்தபெருமாள் மூப்பனார் ஏராளமான பொருளைப் பகழிக்கூத்தருக்கு வழங்கி, பகழிக்கூத்தரிடம் இருந்த முருகப்பெருமானின் தங்கப் பதக்கத்தை மீட்டு, அதை மறுபடியும் செந்தூரான் திருமேனியிலேயே சாத்த ஏற்பாடு செய்தார்.
செந்தூர்க் கூத்தனை வணங்கி, அவன் செய்த அருளாடலை நினைத்தபடியே இருப்பிடம் திரும்பினார் பகழிக்கூத்தர்.
(தர்ப்பாதனர் எனும்வைணவ அந்தணரின் மகன், பகழிக்கூத்தர். அவருக்குக் கடுமையான வயிற்றுவலி வந்து, செந்திலாண்டவனைக் குறித்துப் பிள்ளைத்தமிழ் பாடினார் என்றும்; பகழிக்கூத்தர் செங்குந்த மரபைச் சேர்ந்தவரென்றும் தகவல்கள் உண்டு.)

Comments