ஸ்ரீ மஹாதேவாஷ்டமி!

பைரவர் - தன்னை அண்டியவர்களின் பயத்தைப் போக்குபவர். கெடுமதியுடையோர் அஞ்சி நடுங்கும்வண்ணம் அச்சத்தை உண்டாக்குபவர். தமிழகத்தில் காலபைரவர் அல்லது வைரவர் என்றும், ‘அன்னதானி’ என கர்நாடகாவிலும், பைரோன், பைராத்தியா, பேரூஜி என்று ராஜஸ்தான் முதலிய வட இந்திய மாநிலங்களிலும் இவர் அழைக்கப்படுகிறார். உக்ர வடிவில், அழித்தல் செயலுக்கு அதிபதி யாகவும், அஷ்ட திக்குகளை ரட்சிப்பவராகவும் விளங்குகிறார். தாந்த்ரீகர்களால் உபாசிக்கப்படுபவர். சைவ சமய உட்பிரிவைச் சார்ந்த காளாமுகர், கபாலிகர் அகோரப் பிரிவினரால் பூஜிக்கப்படுபவர்!
மனதைப் பதற வைக்கும் தோற்றம் கொண்ட இவர், நாகங்களைக் காது குண்டலங்களாகவும், கைகளில் காப்பு, கங்கணமாகவும், கால்களில் தண்டையாகவும், மார்பில் உபவீதமாகவும் (பூணூல்) அணிந்து, இடையில் புலித்தோல் தரித்து, மானிட கபாலம் - எலும்புகளை மாலையாக அணிந்து, கைகளில் சூலம், பிரம்புடனும், ஸ்வானம் (நாய்) வாகனமேறி ருத்ர ரூபமாய்க் காட்சியளிப்பார்.
பைரவருக்கு உகந்த தினம் அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறை அஷ்டமி. மேலும், கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி மிகவும் சிறந்தது. இது, ‘மகாதேவாஷ்டமி’ என்று, வட இந்தியப் பஞ்சாங்கப் படி மார்கசீர்ஷ மாதம் தேய்பிறை அஷ்டமியின்போது அனுசரிக்கப்படுகிறது.
ஈஸ்வரனின் ஆணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் பதினாறு வகைச் செல்வங்களை அளிப்பவர்கள் அஷ்ட லக்ஷ்மியர். சொர்ண பைரவரிடமிருந்து பெற்ற அப்பேறுகளை அவர்கள் பக்தர்களுக்கு அளித்துவர, சக்தியின் வீரியம் குறைகிறதாம். அதனால், அஷ்டமி அன்று பைரவரை வழிபட்டு அவற்றை மீண்டும் செறிவூட்டிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் அன்று பக்தர்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறதாம். அதனால்தான் அன்று நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிப்பதில்லை. அஷ்டலக்ஷ்மிகள் வணங்கும் பைரவநாதரை அன்று பூஜிப்பதால் நன்மைகள் பெறலாம் என்பது நம்பிக்கை.
இவரே காலச் சக்கரத்தை இயக்குபவர். இவருக்கான ஒரு சில கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. திருவிசைநல்லூர் சிவயோகிநாதர் ஆலயம் அவற்றுள் ஒன்று. இங்கு காட்சி தரும் நான்குவித பைரவர்கள் மனித வாழ்வில் நிகழும் நால்வகை வாழ்க்கை நெறிகளைக் குறிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மச்சரியம்: கல்வி, கேள்விகளில் தேர்ச்சிப் பெற்று விளங்க வேண்டிய பருவமாதலால் குரு தட்சிணாமூர்த்தியுடன் சேர்ந்திருந்து அண்டியவருக்கு அருளுகிறார்.
கிருஹஸ்தாஸ்ரமம்: செய்யும் தொழில் சிறக்கவும், வாழ்வில் முன்னேற்றம், செல்வாக்குப் பெறத்துடிப்ப வருக்கு அருள, மஹாலக்ஷ்மியுடனிருந்து சொர்ணா கர்ஷண பைரவராகக் காட்சி தருகிறார்.
வானப்ரஸ்தாஸ்ரமம்: சீரான உடல் நலம், நிம்மதியான வாழ்வு, அதிர்ஷ்டம் உண்டாக விரும்புவோருக்குத் துணையிருக்க, பாலசனீஸ்வரருடன் இணைந்து காட்சியளிக்கிறார் உன்மத்த பைரவர்.
சந்நியாசம்: இந்நிலையில் ஜீவன் ஆன்மிக நெறி முறைகளைக் கடைப்பிடித்து இறைவனுடன் ஈடுபாடு கொள்ள விழைகிறது. ஜீவாத்மா, பரமாத்மா இரண்டையும் ஒருங்கிணைத்து, பிறப்பு-இறப்புச் சூழலிலிருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைய முயல் வோருக்கு கைலாச லிங்கத்தோடு இணைந்து யோக பைரவர் அருள்பாலிக்கிறார்.
இவர்களை ஞாயிறுதோறும் ராகுகால வேளையில் எட்டு வாரங்களுக்கு கருப்பு மிளகு, எண்ணெய், அகல் விளக்கேற்றி, தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபட, நற்பலன் கிடைப்பது உறுதி. தவிர, இது தோஷங்களைப் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. அவரவர்க்குரிய ராசிப்படி பைரவரின் அங்கத்தை வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது நியதி.
அவை: மேஷம் - தலை, ரிஷபம் - முகம், கழுத்து, மிதுனம் - கைகள், கடகம் - மார்பு, சிம்மம் - வயிறு, கன்னி - இடுப்பு, துலாம் - பிறப்புறுப்பு, விருச்சிகம் - தொடைகள், தனுசு - முழங்கால், மகரம் - ஆடுசதைக் கால் பகுதி, கும்பம் - கணுக்கால் பாதம், மீனம் - பாத விரல்கள், கால் அடிப்பாகம் ஆகும்.
தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றியும், சாம்பல் பூசணிக்காயை நடுவே இரு பாதியாய்ப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பித் தீபமேற்றியும் இப்பெருமானை வணங்கலாம். பலவித வாசனைத் திரவியங்கள் கலந்த சந்தனக்காப்பு இவருக்கு மிகவும் பிடித்தமானது.
கிராம தேவதையாய் விளங்குவதால் எளிதில் கிடைக்கக்கூடிய தும்பை, செவ்வரளி, நெருஞ்சி, ஆத்தி, செம்பருத்தி, ஊமத்தை, கொன்றை, கள்ளி ஆகிய மலர், தளிர், இலைகளைக் கொண்டு, எட்டு பண்டிதர்கள் சுற்றி நின்று அஷ்டவிதமான அர்ச்சனை செய்வது வழக்கம். மல்லிகைப் பூ கூடாது.
அவருக்குரிய நிவேதனங்கள்: வெண்ணெய், நெய்யில் நனைத்த உளுந்து வடை, தேனில் அமிழ்த்திய வடை,
தேனில் ஊறின இஞ்சி, வெண், சர்க்கரைப் பொங்கல், வெல்லப் பாயசம், அவல் பாயசம், கலந்த சாத வகைகள் முதலானவை.
பைரவரைக் காலையில் வழிபட, சர்வ வியாதிகளும் நீங்கும். பகலில்துதிக்க, விரும்பியது கிட்டும். மாலையில் வணங்க, செய்த பாபம் யாவும் விலகும். அர்த்தசாமத்தில் பூஜிக்க, வாழ்வில் எல்லா வளமும் பெருகி, மனச்சாந்தியும், பெருவாழ்வும் கிடைக்கும். காலபைரவரை பூஜிக்க ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீகாலபைரவாஷ்டகம் மிகவும் உகந்தது.





பைரவ அவதார அபிநவ குப்தபாதர்!
ருத்ர ரூபமான துர்வாச மகரிஷியின் வழித்தோன்றலும், ‘பைரவர் நான், நானே சிவன்’ என அறியப்பட்ட வரும், காஷ்மீர் மாநிலத்தில் ‘விதஸ்தா’ (ஜேலம்) நதிக்கரையோரம் வாழ்ந்து (கி.பி.10-11ஆம் நூற்றாண்டு) சைவ சித்தாந்தம், அத்வைத வேதாந்தத்தைப் பரப்பிய வரும், சிறு வயதிலேயே அஷ்டமா சித்திகளைப் பெற்று, அவரது குருவால் ஆதிசேஷனின் புதிய அவதாரம் எனப் புகழப்பட்டவரும், ‘தந்த்ரலோகம்’ நூலை எழுதியவரும், காஷ்மீரப் பண்டிதர்களால் போற்றப்படுபவருமான மகாமகேஸ்வர ஆச்சாரியார் அபிநவ குப்தபாதர் (அபிநவ - புதிய அவதாரம், குப்தபாதர் - சேஷன்) ஆவார்.
இவர் சைவ சித்தாந்த சாகரத்தில் மூழ்கிப் பல முத்துக்களைச் சேகரித்தவர். ஒருகட்டத்தில் தன் அவதார நோக்கம் நிறைவேறிவிட்டதை உணர்ந்து, தன் பூதவுடலைத் துறக்க முடிவெடுத்தார். தனது 1200 சீடர்கள் பின்தொடர, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பீர்வா மாவட்டத்திலுள்ள பத்ரகாளி தீர்த்த கே்ஷத்திரத்தை அடைந்தார். அங்குள்ள பைரவர் குகையை நெருங்கியதும் சீடர்களை வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் பைரவர் துதியை ஓதியவாறு குகையினுள் நுழைந்து மாயமானார். இல்லை... பைரவருடன் ஐக்கியமாகி விட்டார். அவர்சொல்லிக் கொண்டிருந்த பைரவ துதியின் ஒலி மட்டும் அனைவருக்கும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த நாள்தான் வடஇந்தியப் பஞ்சாங்கப்படி பௌஷ்ய (நமக்கு மார்கழி) மாதம் கிருஷ்ணபட்சம் பத்தாம் நாள் ஆகும்.
காசியில் கே்ஷத்ரபால பைரவர் சன்னிதியில் பூஜாரியிடமிருந்து பைரவரின் கைப்பிரம்பினால் தோள்களில் அடி வாங்கிக்கொண்டு அவர் உச்சரிக்கும் சுலோகம், ‘ரக்த ஜ்வாலா ஜடாதரம், சசிதரம், ரக்தாங்க தேஜோ மயம்...’ மற்றும் ‘தேவ ராஜ்ய சேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்...’ என்பதைக் கேட்டவாறு, மந்திர முடிச்சுகள் பல கொண்ட கங்கணத்தைக் கட்டிக் கொண்டால், பைரவ்ஜி நம் துயர்களைக் களைந்து அருளுவார் என்பது அனைவரின் நம்பிக்கை.

Comments