முத்தேர் பவனியில் ஸ்ரீ முத்துவிநாயகர்!

இலங்கை, கொழும்பு நகர் செட்டியார் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமுத்து விநாயகர் திருக்கோயில். சுமார் 200 வருடம் பழைமை வாந்த இக்கோயில் கடந்த சித்திரை மாதம்தான் புனரமைக்கப் பட்டு தேர்த்திருவிழாவும் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்த் திருவிழாவில், ஸ்ரீ முத்து விநாயகர், பஞ்சமுக முத்து விநாயகர், ஸ்ரீ சண்டேஸ்வரர் ஆகியோரின் முத்தேர் பவனி கோலாகலமாக நடைபெறுகிறது.
நகைக் கடைகள் அதிகம் மின்னும் அழகிய தெருவில் அமைந்துள்ளது இக்கோயில். செல்வச் செழிப்பு மிகுந்த சமூகத்தினராக செட்டியார்கள் வாழ்ந்த பகுதி இது. அவர்கள் தங்களுக்கெனவும், தமிழர்க்கெனவும் அமைத்த இந்த ஆலயத்தில், முத்து விநாயகப்பெரு மான் செல்வவளம் தரும் நாயகனாகத் திகழ்கிறார். இந்தக் கோயிலும் அதனால்தான் முகப்பிலேயே தங்கத்தாலும் வெள்ளியாலும் ஜொலிப்பது போல் தங்க நிறத்தில் ‘தகதக’வென மின்னுகிறது.
கொழும்பு புறக்கோட்டைக்குப் புகழ் சேர்க்கும் வீதியாகத் திகழ்கிறது இந்தப் பகுதி. தங்க வணிகத்தை முதன்மையாகக் கொண்டு தனம் சேர்த்த சமூகத்தினர் என்பதால் செல்வம் கொழிக்கும் சீமான்களாகவே இவர்கள் வாழ்ந்துள்ளனர். அந்த வனப்பு இந்தத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்து விநாயகர் கோயிலிலும் எதிரொலிப்பதை காணலாம்.
கோபுரம், முன் முகப்பு, முகப்பு மண்டபம் அனைத்துமே அழகிய வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன. மண்டப முகப்பில் சிவன், பார்வதி திருமணக் காட்சி வெகு அழகு. ஆலய கொடிமரம் மண்டபத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. சுற்றிலும் மூடப்பட்ட நவீன மேற்கூரை, நவீன விளக்குகள், தனித்துத் தெரியும் தூண்கொடுங்கைகள் என அனைத்துமே வசீகரிக்கும் வண்ணத்தில் திகழும். நவக்கிரகங்களுக்கு அமைந்துள்ள தனி சன்னிதி வெகு தூமை யாகப் பராமரிக்கப்படுகிறது.
மண்டபத்தில் பைரவர் சன்னிதி. விமானத்தின் முகப்பில் தனது வாகனமான பைரவருடன் நின்ற திருக்கோலத்தில் தங்கவண்ணத்தில் பளிச்சிடுகிறார். உள் சன்னிதியில் நாகமும் உடுக்கையும் கையில் கின்னமும், வேலும் தாங்கி நிற்கிறார் பைரவர்.
பிரதான சன்னிதியில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் வீராசனத்தில் காட்சி தருகிறார்.இரு புறங்களிலும் மூஷிக வாகனம் சற்றே உயரத்தூக்கிய தலையுடன் பெருமானை வணங்குவது போல் உள்ளது. இடப்புறம் அன்னை பார்வதியும் சிவபெருமானும் அமர்ந்திருக்கும் சிற்பம் அழகு. அடுத்து சமயக்குரவர் நால்வர், அனுமன் ஆகியோருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. அஞ்சலி ஹஸ்தரா அகல விரித்த புருவங்களுடன் அஞ்சனைமைந்தன் இலங்கைக்கே உரிய வகையில் வீர ஆஞ்சநேயராகக் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சி தரும் பெருமாள் தனி சன்னிதியில், வரம் தரும் கரத்தினராத் திகழ்கிறார். ஸ்ரீவிஷ்ணு துர்கை, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரும் காட்சி தருகின்றனர். பிரதான சன்னிதியில் முத்து விநாயகர் பீடத்தின் அருகே ஒரு யந்திரம் உள்ளது. சக்திகள் பல தரும் இந்த யந்திரத்துக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. கொழும்பு நகருக்குப் புகழ் சேர்க்கும் ஆலயங்களில் இது மிக முக்கியமானது!

Comments