நல்லன அருளும் நவராத்திரி திருக்கோயில்!

முப்பெரும் தேவியருள் அம்பிகைக்கு அமைந்த ஆலயங்கள் பல. தாயார் மகாலட்சுமிக்கும் திருமால் ஆலயங்களில் தனி சன்னிதிகள் உண்டு. சரஸ்வதி தேவிக்கு தனிக் கோயில்கள் குறைவு. ஆனால், இம்முப்பெரும் தேவியருமே, ஒரே சன்னிதியில் ஒன்றாகக் கருவறையில் கோயில் கொண்டு அருள்பாலிப்பது , சென்னை, வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகில் உள்ள நவராத்திரி திருக்கோயிலில்தான்! இங்கே, ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீசக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் சரிநிகர் சமானமா, ஒரே கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு செல்வம், வீரம், கல்வி எனும் இம்மூன்றையும் அருள்கின்றனர். இவ்வகையில், தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் மூவரும் ஒரே கருவறையில் மூலவராகத் திகழ்கின்றனர் எனலாம்!
பிராகாரத்தில் சப்த கன்னியரான வைஷ்ணவி, இந்திராணி, பிராஹ்மி, வாராஹி, சாமுண்டி, கௌமாரி, மகேஸ்வரி ஆகியோரும், கோஷ்டத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி, காமாட்சி, பால திரிபுரசுந்தரி, துர்கை ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். இவ்வாறு தேவியர் மூவரும், சப்த கன்னியரும், அம்பிகையும் சன்னிதி கொண்டிருப்பதால், இக்கோயிலுக்கு ‘நவராத்திரி திருக்கோயில்’ என்றே பெயர் ஏற்பட்டது.
உள் பிராகாரத்தில் ஸ்ரீ குபேர விநாயகர், பால முருகர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆகியோர் சன்னிதி கொண்டுள்ளனர். வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஸ்ரீதத்தாத்ரேயர் ஆகியோர் எழுந்தருள, சீரடி சாய்பாபாவுக்கும் தனிச் சன்னிதி அமையப்பெற்று, அனைத்து மக்களும் அபிமானத்துடனும் பக்தியுடனும் தொழுவதற்கு ஏற்ற வகையில் திகழ்கின்றது!
தேவியரை வழிபட, பௌர்ணமியே சிறப்பான நாள். எனவே, பௌர்ணமிகளில் மாலை 5 மணிக்கு தேவியர் மூவருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது, மகா தீபாராதனையும் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறு கிறது. பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மன நிம்மதியும், தொழில் வளர்ச்சியும் கிட்டும். சரஸ்வதிக்கு நடைபெறும் அபிஷேகத்தைக் காணும் குழந்தைகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது என்பது பலரது அனுபவம்.
முப்பெரும் தேவியருக்கும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம். தேவியர் மூவரையும் தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். காரியத் தடை நீங்கும், செல்வம் பெருகும். ஸ்ரீவாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதிகளில் மாலை 5 மணிக்கு பஞ்சமி ஹோமம், அபிஷேகம், நடைபெறுகின்றன. அப்போது, பக்தர்கள் மரவள்ளிக் கிழங்கு, சக்கரவள்ளிக் கிழங்கு, முறுக்கு அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து, அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், பெண்களுக்குத் திருமணம் கைகூடும். குழந்தைச் செல்வம் கிட்டும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும்.
குபேர விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று தீபம் ஏற்றி வழிபட்டால், செல்வவளம் பெருகும்; கிருத்திகை தோறும் பாலமுருகனுக்கு நடைபெறும் சர்வ அபிஷேகத்தில் கலந்து கொண்டால், தீவினைகள் அகலும்; புதன்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகும் என்பது நம்பிக்கை. ஷீரடி சாபாபாவுக்கு வியாழக்கிழமைகளில் பக்தர்கள் தங்கள்கரங்களாலேயே பால் அபிஷேகம் செய்து நன்மை பல பெறுகின்றனர்.
இக்கோயிலில் சிறப்பம்சமாகத் திகழ்வது, நவராத்திரி சிறப்பு பூஜைகளும், கொலுவும்தான்! இந்தக் கொலுவை காண்பதற்கென்றே இக்கோயிலுக்கு சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் அன்பர்கள் வருகிறார்கள். சுமார் 3,000 பொம்மைகள். இதில், முருகன், ஆறு குழந்தைகளாக சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றி தாமரைப் பொகையில் அவதரிக்கும் காட்சி, கார்த்திகைப் பெண்கள் உடன் இருக்க அழகாக வைக்கப்படுகிறது. மேலும், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் தத்ரூபமாக கொலுவில் அமைக்கப்படுகிறது.
வேங்டாசலபதி சன்னிதி கருவறை அமைப்பு, தத்ரூபமாக கொலுவாக வைக்கப்படுகிறது. மேலும், ஸ்ரீ பத்மாவதி தாயாரின் அழகு பொம்மை, உடன் அருள் சேர்த்து, பக்திப் பரவசத்தை ஏற்படுத்துகின்றது. ஸ்ரீ ராமர் சீதை லட்சுமணன், குகன் மற்றும், சுக்ரீவன், அனுமன் ஆகியோர் கானகத்தில் இருப்பது போன்ற காட்சிகள், ராமாயணத்தை நம் கண் முன் நிறுத்தும். சிவன் பார்வதி திருக்கல்யாணக் காட்சி, ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் காட்சியளிக்கும் பெரிய அளவிலான பொம்மைகள் யாவும் நம் கண்களுக்கு மங்கலமான காட்சிகள்!
பாட்டி வடை சுடும் கதை, ராமாயணக் கதை, கிருஷ்ண லீலைகள், சப்த மாதர்கள், பள்ளிக் கூடம், கிராமம், பாலைவனம், எஸ்கிமோஸ் வசிப்பிடம், மாப்பிள்ளை ஊர்வலம், விருந்து என எண்ணற்ற காட்சிகளுடன் இந்தக் கொலு கண்காட்சி திகழ்கிறது.
நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 1 அன்று திருவேற்காடு கருமாரி பட்டர் ஐயப்ப சுவாமிகள் கொடியேற்றி வைக்க, பத்து நாட்கள் இந்த நவராத்திரி விழா களைகட்டுகிறது. முதல் நாள் முறுக்கு, தட்டை, சீடை இவற்றுடன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரமும், இரண்டாம் நாள், சாக்லெட் திருவடி அலங்காரத்துடன் ஸ்ரீ மாரியம்மனும் அலங்கரிக்கப் படுகிறார்கள். சிவன், பார்வதி மூன்றாம் நாள் பிஸ்கெட் வகைகளால் அலங் கரிக்கப்படுவர். நான்காம் நாள் இனிப்பு வகைகளுடன் துர்கை அம்மனும், ஐந்தாம் நாளில் ஒன்பது வகையான சாதங்களுடன் ஸ்ரீ அன்னபூரணியும், ஆறாம் நாளில் உலர் பழ வகைகளுடன் ஸ்ரீ மீனாட்சியும் அலங்கரிக்கப்படுகின்றனர். மஞ்சள், குங்குமம், வளையல், தாலிக்கயிறுடன் ஸ்ரீ மஹாலட்சுமி ஏழாம் நாளிலும், பழ வகைகளுடன் மூகாம்பிகை எட்டாம் நாளிலும், பேனா பென்சில், நோட்டு புத்தகங்களுடன் சரஸ்வதி ஒன்பதாம் நாளிலும் அலங்கரிக்கப்படுகின்றனர். விஜயதசமி நாளில் காய்கறிகளுடன் மஹிஷாசுர மர்த்தினி அலங்கரிக்கப்படுவது சிறப்பு.
அமைவிடம்: சென்னை, வில்லிவாக்கம் ரயில்வே கேட் கடந்து பட்டுமேடு, ஜிகேஎம் காலனி, 36வது தெருவில் அமைந்துள்ளது இக்கோயில்.
தொடர்புக்கு: 9940479770, 9381040565

Comments