ஞானம் அருளும் பாம்பணையப்பன்!

கேரள மாநிலம், செங்கணூர் அருகே பம்பை நதியின் வடக்கே, திருவண்வண்டூரில் அமைந்துள்ளது பாம்பணையப்பன் திருக்கோயில். 108 வைணவத் திருத்தலங்களில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம்.
பஞ்ச பாண்டவர் தமது வனவாசத்தின்போது இப்பகுதிக்கு வந்தபோது, இக்கோயில் சிதிலமுற்று இருந்ததைக் கண்டு, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இதனைப் புதுப்பித்து மகாவிஷ்ணுவை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. வனப்பிரதேசமாகையால், அங்கே பெரிய பெரிய வண்டுகள் நிறைந் திருந்தன. வண்டுகளின் ரீங்காரம் நிறைந்த வனம் என்பதால் திருவண்வண்டூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மகாவிஷ்ணு கோயில் என்று அழைக்கப்பட்டாலும் நுழைவாயிலைக் கண்டால் ஸ்ரீ கிருஷ்ணன்
கோயில் என்றே நினைக்கத் தோன்றும். அலங்கார
கோபுரத்தின் மேல் ஐந்து தலை நாகத்தின் மேல் நடன மாடும் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கிறார்.
நுழைவு வாயிலின் ஒருபுறத்து சுவரில் ஸ்ரீ ஆஞ்ச நேயரும் இன்னொரு பக்கத்துச் சுவரில் ஸ்ரீ கருட பகவானும் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கிறார்கள். கோபுரத்தைச் சுற்றி உள்ள சிறிய மாடங்களில் தசாவதார சுதைச் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. கோபுரத்தின் பின்புறம் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசக் காட்சி புடைப்புச் சிற்ப மாகக் காட்சியளிக்கிறது.
வட்டக் கருவறை. உச்சியில் செப்புத் தகட்டால் ஆன கூம்பு விமானம். கருவறையின் வாயிலில் துவாரபாலகர்கள் இருபுறமும் காட்சியளிக்க, உள்ளே நீண்டு நெடிதுயர்ந்த பளபளவென மின்னும் துவஜஸ் தம்பம். கருவறையில் மூலவர் மகாவிஷ்ணு நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவர் பெருமாளை கமலநாதன் என்றும் அழைக்கிறார்கள். அம்பாள் கமலவல்லி நாச்சியார்.
பிரம்மாவினால் சபிக்கப்பட்ட நாரதர், இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து தவம் செய்தார். நாரதரின் தவத்தை மெச்சிய நாராயணன் அவருக்குக் காட்சி தந்து, ஞானோப தேசமும் செவித்தருளினார். தாம் பெற்ற அருள் பேற்றினை மற்றவர்களும் பெற்றுய வேண்டும் என விரும்பிய நாரதர், ஸ்ரீமன் நாராயணன் இத்தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமெனப் பிரார்த்தித்து வரம் பெற்றார்.
பதினெட்டுப் புராணங் களில் ஒன்றாகிய நாரதீய புராணத்தை நாரதர் இங்கே இயற்றியதாகவும், மகா விஷ்ணுவே தன்னைப் பூஜிக்கும் முறைகளை நாரதருக்குக் கற்றுக்கொடுத்து அவரைக் கொண்டு கிரந்தங்களை இயற்றச் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிரஞ்சீவிகளில் ஒருவரான மார்கண்டேயர், பெருமாள் கமலநாதன், தாயார் கமலவல்லி நாச்சியாரின் தரிசனம் பெற்றிருக்கிறார்.
கேரளாவில் பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்ததலங்களில் இக் கோயி லில்தான் நிறைய விசேஷங்கள் நடை பெறுகின்றன. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 11 நாட் கள் உற்ஸவம் மணிமாலா நதியில் ஆராட்டுடன் நடைபெறுகிறது. இச்சமயத்தில் மோகினி அவதாரம் மற்றும் பத்து தசாவதார கோலங்கள் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபடுவது அற்புதக் காட்சி. வேண்டும் வரமருளும் பெருமாளாக இந்தப் பாம்பணையப்பன் அருள்பாலிக்கின்றார். வேண்டு தல் நிறைவேறப் பெற்றவர்கள் சுவாமிக்கு பால்பாயசம் நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.
பாம்பணையப்பன் கோயில் வளாகத்திலேயே இன்னொரு தனிக் கோயிலைப் போன்று காட்சியளிக்கிறது கோசலா கிருஷ்ணன் சன்னிதி. வெள்ளி
திருவாபரணம் சாத்திய கிருஷ்ணன் இங்கே அருள் பாலிக்கின்றார். இவரை கோசலை கிருஷ்ணன் என்று கூறுகிறார்கள். நின்ற திருக்கோலத்தில் இருகரங்களுடன் காட்சி தரும் இந்த விக்ரஹம், இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த விக்ரஹம், சுமார் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் தோன்றிதாம் இருக்குமிடத்தைத் தெரிவித்து அடையாளப்படுத்திக் கொண்டதாம். அதன்படி மிகுந்த சிரமப்பட்டு அதைத் தேடிக் கண்டுபிடித்து இக்கோயிலில் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டி, சன்னிதிக்கு வெளியே ஏராளமான சிறிய மரத்தொட்டில்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
கோயிலில் மகாவிஷ்ணு, கோசலா கிருஷ்ணனைத் தவிர, கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, சிவன், நாகர் விக்ரஹங்களும் உண்டு. தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. சகல ஐஸ்வர்யங்களை யும் அருளும் திருவண்வண்டூர் பாம்பணையப்பனை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து அருள் பெறலாமே.
அமைவிடம்: செங்கணூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 5 மணி முதல் 11 வரை. மாலை 5 மணி முதல் 8 வரை.

 

Comments