ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தினசரி சேவைகள்!

திருமலை ஏழுமலையான் சன்னிதி அதிகாலை மூன்று மணிக்குத் திறக்கப்படும். 3.30 வரை சுப்ரபாத தரிசனம். சுவாமியை எழுப்ப, இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்க ஒருவர், வீணை வாசிக்க ஒருவர் என ஆறு பேர் தங்க வாசலுக்கு வருவார்கள். துவார பாலகரை நமஸ்கரித்து,
சன்னிதியைத் திறப்பார் அர்ச்சகர். பின் சுவாமியை வணங்கி கதவை சாத்தி உள்ளே செல்வர். அந்நேரம் சுப்ரபாதம் பாடப்படும். தீப்பந்தம் கொண்டு செல்பவர் சன்னிதி விளக்குகளை ஏற்றுவார். வீணையை ஒருவர் இசைக்க, மூலவர் முன் பள்ளியறையில் இருந்து கொண்டுவரும் ‘போக ஸ்ரீனிவாச மூர்த்தி’ விக்ரஹத்தை எழுந்தருளச் செய்வர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னிதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து, ‘நவநீத ஹாரத்தி எனும், ‘விஸ்வரூப தரிசனம்’ நடக்கும்.
ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் எடுத்து வருவர். ஒரு குடம் காலை பூஜைக்கும் மற்றொன்று மாலை பூஜைக்கும் இன்னொன்று இரவு பூஜைக்கும் பயன்படுத்தப்படும்.
சுவாமியின் பாதத்தில் நீர் சேர்க்கப்படும். முழு மூர்த்திக்கும் திருமஞ்சனம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக போகஸ்ரீனிவாச மூர்த்திக்கு திருமஞ்சனம் செயப்படும். அலங்காரம், பதினாறு வகை உபசாரம், தீபாராதனையோடு, சுப்ர பாத பூஜை நிறைவடையும்.
அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னிதியில் தூமை பணி நடக்கும். அப்போது, சுவாமிக்கு அணிவித்த பழைய மாலைகளைக் களைந்து, புதிய மாலை களை ஏகாங்கி உதவியுடன் ஜீயங்கார் முரசு வாத்தியம் முழங்கக் கொண்டு வருவார். அவரோடு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடிக்கொண்டும், புருஷ ஸுக் தம் சொல்லியபடியும் ஒரு கோஷ்டி வரும். காலை 3.45 மணிக்கு ‘தோமாலை சேவை’ ஆரம்பமாகும்.
இதையடுத்து, கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடம் நடக்கும். ‘கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி‘ விக்ரகத்தை வெள்ளிப் பல்லக்கில், வெள்ளிக் குடை பிடிக்க சன்னிதியில் இருந்து எடுத்து வந்து, மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் பஞ்சாங்கத்தின், அன்றைய நாள், நட்சத்திரம், திதி விவரங்களை வாசிப்பார். பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகியன சுவாமியிடம் சொல்லப்படும்.
முதல் மணி: வேங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியமாக தயிர்சாதம் நிவேதிக்கப்படும். விஷ்வக்சேனர், கருடன், நித்ய சூரிகளுக்கும் இதே நைவேத்தியம்.
இரண்டாவது மணி: பின், இரண்டாவது நைவேத்தியம். அப்போது அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால், நைவேத்யத்தில் குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
சகஸ்ரநாம அர்ச்சனை: அடுத்து வேங்கடாசலபதி
சகஸ்ரநாம அர்ச்சனை. காலை 4.45 முதல் 5.30 வரை நடக்கும். பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லி பக்தர்களின் பெயரில் அர்ச்சனை செய்யப்படும். இது முடிந்து 5.30 - 6.30 வரை அர்ச்சனாந்த்ர தரிசன பூஜை நடைபெறும்.
சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங் கள்) செய்யப்படும். இதைக் காண கட்டணம் உண்டு. ஐந்து பேர் வரை பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும்.
ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வேங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் ஏதுமின்றி வேட்டி, வெல்வெட் அங்கி அணிவிக்கப்படும். அதன் மேல் அங்க வஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ‘சாலிம்பு’ என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்துக்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.
கல்யாண உற்ஸவம்: திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிராகாரத்தில் உள்ள திருமண அரங்கில் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். திருமணத்தடை உள்ள ஆண், பெண் அனை வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் திரை போடப்படும். பின்னர் அந்தத் திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்து வைப்பார். விழாக் காலங்களில் இது நிறுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒரு மணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்ஸவம் துவங்கும். திருமண உற்ஸவம் காண கட்டணம் உண்டு. இரண்டு பேர் அனுமதிக்கப்படுவர்.
ஊஞ்சல் சேவை: மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் கோலத்தை தரி சிக்கலாம். இதை ‘டோலோத்ஸவம்’ என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கப்படும். இதிலும் பணம் செலுத்தி ஐந்து பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு ஐந்து லட்டு, ஒரு அங்க வஸ்திரம், ரவிக்கைத் துணி தரப்படும். மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடையும்.
- மகா வெங்கடேஷ், மதுரை
திருமலையப்ப சுவாமி விசேஷம்!
* திருப்பதி ஏழுமலையான் மூலவர் விக்ரகம் ‘சிலாதோரணம்’ என்னும் அபூர்வப் பாறையால் உருவாக்கப்பட்டது. 250 கோடி ஆண்டுகள் பழைமையான இப்பாறைகள், ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன.
* திருமலை, 3,000 அடி உயரத்திலிருக்கும் குளிர்ப்பிரதேசமாயிருந்தாலும், ஏழுமலையா னின் விக்ரகம் எப்போதும் 110 டிகிரி வெப்பத்தில் இருக்கிறது. வியாழக்கிழமைகளில் அபிஷேகத்துக்காக ஆபரணங்களைக் கழற் றும்போது அவை சூடாக இருக்குமென்று ஆலய அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.
* அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த பால், நீர் மற்றும் வாசனைத் திரவியங்களால் திருமஞ் சனம் முடிந்ததும், பெருமாள் விக்ரகத்தின் மீது நீர்த்திவலைகள் தென்படும். இதை அர்ச்சகர்கள் பீதாம்பரத் துணியினால் ஒற்றியெடுப்பர்.
* ஏழுமலையானுக்குத் தினமும் ஒரு புதிய மண் சட்டியில் தயிர் சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது. நைவேத்ய தயிர் சாதத்தோடு அந்த மண் சட்டி கிடைக்கப் பெறுபவர் மிகவும் பாக்கியம் செய்தவர்.
* ஏழுமலையான் திருமேனியில் சாத்தப் படும் பட்டு பீதாம்பரம் 21 முழ நீளமும்,
6 கிலோ எடையும் கொண்டது. உள்சாத்து வஸ் திரத்தின் மதிப்பு ஒரு ஜோடி 20 ஆயிரம் ரூபாய் எனப்படுகிறது.
* தினமும் அதிகாலை 4.30 மணியிலிருந்து 5.30 வரை திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அதற்காக, ஸ்பெயின் நாட்டிலிருந்து, குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனா விலிருந்து புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமா லம், நிரியாசனம், பாரீஸிலிருந்து வாசனைத் திரவியங்கள் வரவழைக்கப்படுகின்றனவாம்!
* சிவராத்திரி அன்று நிகழும் ‘கே்ஷத்திர பாலிகா’ உற்ஸவத்தில், வைரத்தில் விபூதிப் பட்டை சாத்தப்பட்டு, திருவீதியுலா நடத்தப் படுகிறது.
* திருப்பதி அலர்மேலு மங்கைக்கு சாத்தப் படும் பருத்தியாலான பாவாடையை, கத்வால் என்னும் ஊரிலுள்ள செஞ்சு என்ற இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் பயபக்தியுடன் நெய்து அனுப்பி வருகிறார்கள்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்தில் ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக் குக் கொண்டு செல்லப்பட்டு, ஸ்ரீ ஏழுமலை யானுக்குச் சாத்தப்படுகின்றன.

Comments