சிரஞ்சீவி!

பத்மநாபோ அமரப்ரபு!
அதிக சமஸ்கிருத ஞானமில்லாத ஒருவர் தினமும் சகஸ்ரநாம பாராயணம் செய்து வந்தார். அதில், ‘பத்ம நாபோ அமரப்ரபு’ என்று பகவானைப் பற்றி ஒருவரி வருகிறது. ‘தேவர்களின் அரசனே’ என்பதைக் குறிக்கும் சொல் அது. ஆனால் இவர், ‘பத்மநாபா மரப்ரபு’ என்று தவறாகப் புரிந்து கொண்டு, ‘பகவான் மரங்களுக்கு அரசன்’ என்று அர்த்தம் பண்ணிக் கொண்டு அந்த ஊர்க் குளக்கரையிலிருந்த ஓர் அரச மரத்தைத் தினமும் 108 தடவை வலம் வந்தார்.
அந்த ஊரிலிருந்த சமஸ்கிருத பண்டிதர் அந்த ஆசாமியிடம், இறைவனை பத்மநாப; அமரப்ரபு என்றுதான் சொல்லணும். ‘மரப்ரபு’ என்று சொல்லக் கூடாது" என்று எடுத்துச் சொல்லி அதன் அர்த்தத்தையும் விளக்கினார். மறுநாளிலிருந்து அந்த ஆசாமி சம்பந்தப்பட்ட வார்த்தையைத் திருத்திக் கொண்டார். ஆனால், ப்ரபு மரம் இல்லை என்பதால் அரச மரம் சுற்றுவதையும் அன்றோடு விட்டு விட்டார்.
அன்று இரவு பகவான் விஷ்ணு சமஸ்கிருத பண்டி தர் கனவில் தோன்றி, பண்டிதரே! உம் வார்த்தையைக் கேட்டு அரச மரம் சுற்றுவதை அடியோடு நிறுத்தி விட்டார் அவர். அப்படியென்றால் நான் மரங்களுக்கு ப்ரபு இல்லையா? விஷ்ணு புராணத்தில், ‘புவனானி விஷ்ணு, ஜ்யோதீம்ஷி விஷ்ணு, வனானி விஷ்ணு’ என்று பராசர மகரிஷி சொல்லியிருக்கிறாரே. நீர் உடனே அந்த ஆசாமியைப் போய்ப் பார்த்து பழைய படியே, ‘பத்மநாபா மரப்ரபு’ என்று சொல்லச் சொல்லி, வழக்கம் போல் அரச மரத்தைச் சுற்றச் சொல்லுங்கள்" என்றார்.
குழந்தைகள் வார்த்தையைச் சரியாக உச்சரிக்கா விட்டாலும், சந்தோஷத்தோடு நாம் கேட்பதில் லையா? அதுபோல் பகவானும் நம்மை குழந்தையாகப் பாவித்து நாம் பக்தியுடன் சொல்லும் துதி களைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறான்.
- முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சார்யார் சொற்பொழிவிலிருந்து...
அனுமனுக்கு ‘சிரஞ்சீவி’ வரம் அளித்தான் ஸ்ரீராமன். அதேபோல் ராவண வதத்துக்குப் பிறகு இலங்கைக்கு அரசனாக விபீஷணனுக்கு முடிசூட்டி, அவனுக்கும் ‘சிரஞ்சீவி’ வரம் அளித்தான். அளித்த பிறகுதான் அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ‘தான் மட்டும்தான் சிரஞ்சீவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தனக்குப் போட்டியாக விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டானே’ என்று வருத்தப்படுவானோ என்று யோசித்து அதை அனுமனிடம் கேட்கவும் செய்தான். அதற்கு அனுமன், எங்கே நான் ஒரு வன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்லவேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம்தான் ப்ரபு" என்று உரைத்தான் அனுமன்.
அதெப்படி உனக்கு சந்தோஷம்?" என்று ராமன் கேட்க, நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனியொருவனாக இருந்தால் என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய் விடுமே. விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டால், அவர் ‘ராம நாமம்’ உச்சரித்துக்கொண்டே இருக்க, நான் அதைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனியாளாக இருந்தால் எனக்குக் கிடைக் குமா?" என்று பணிவுடன் கூறினான் அனுமன்.
- கவிமாமணி மதிவண்ணன் சொற்பொழிவிலிருந்து...

Comments