அருணகிரிக்கு அருளிய ஆறுமுகன்!

இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். அவன் தனது பக்தர்கள் சிலருக்கு நேரடி தரிசனம் அளித்து மகிழ்வித்த நிகழ்ச்சிகளும் உண்டு. அதுவும் வழக்கு மன்றத்துக்கே வந்து நிகழ்த்திய அற்புதங்கள் பரவச மூட்டுபவை. அவற்றின் நெகிழ்ச்சியான நினைவூட்டல் தான் இந்தத் தொடர்...
சூழும் இருளைத் துரத்தி அடிக்கும் அக்னித் தலம். கோபுரத்தின் மீது ஏறி நின்ற அந்த இளைஞன் மனத்தில், துன்பம் மட்டுமே சூழ்ந்து இருந்தது..
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோயிலுக்கு பல கோபுரங்கள். அவற்றில் ஒன்று வல்லாள மகாராஜன் கோபுரம். அதை எழுப்பிய மன்னன் பெயரால் அறியப்பட்ட கோபுரம். அதன் மீது நின்ற இளைஞனின் பெயர் அருணகிரி. வாழ்க்கையில் அவன் புரிந்த தவறுகள் ஒன்றா இரண்டா?

முத்து என்ற பெயர் கொண்ட தாசியின் வயிற்றில் பிறந்தவன் அருணகிரி. அவனுக்கு ஆதி என்ற பெயரில் ஒரு மூத்த சகோதரியும் இருந்தாள்.
ஏழுவயதானபோது முத்து இறந்தாள். இறப்பதற்கு முன் மகளை அருகில் அழைத்தாள். ‘அருணகிரியின் மீது தொடர்ந்து நீ பாசத்தைப் பொழிய வேண்டும். அவனது மகிழ்ச்சிதான் உன் வாழ்க்கையின் முக்கிய லட்சியமாக இருக்க வேண்டும்’ என்று உறுதிமொழி பெற்றாள். அதன் பின்னரே அவளது சுவாசம் நின்றது.
அருணகிரி சிறுவனாகவே இருந்தவரை சகோதரிக்கு எந்த பிரச்னையும் இல்லை. இனிப்பான தின்பண்டங்கள், எளிய உடை இவற்றிலேயே திருப்தி அடைந்தான். ஆனால், அவன் இளைஞன் ஆனவுடன் நிலைமை மாறியது.
இளமையில் மனச் சலனங்கள் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவன் சலனங்களை மனத்தோடு வைத்துக் கொள்ள தயாராக இல்லை. உடல்வேட்கை தீர விலை மாதரை நாடினான். தீரக்கூடிய வேட்கையா அது? அக்காள் இதுகுறித்து அறியாமல் இல்லை. ஆனால் அவள் அறிவுரையைக் கேட்க அருணகிரி தயார் இல்லை.
வீட்டில் உள்ள பணத்தை எல்லாம், அக்காவுக்கு தெரிந்தும் தெரியாமலும், கையாடத் தொடங்கினான். நாட்கள் கடந்தன. தவறான உறவுகளில் சுகத்தோடு சோகமும் தானே வரும்! அருணகிரி நோய்வாய்ப்பட்டான்.
ஒருநாள்... தம்பியின் முகத்தில் காணப்பட்ட வருத்தத்தை பொறுக்க முடியாமல், ‘என்னடா செய்வது? வீட்டில் பணமே இல்லை. அதனால்தான் உனக்கு விருந்து படைக்க முடியவில்லை’ என்றாள்.
“அதைவிடு. எனக்கு உடனடியாக பெண் சுகம் வேண்டும். வீட்டிலோ கால் பணமும் இல்லை. அதுதான் துக்கமாக இருக்கிறது” என்றான்.
சகோதரி அதிர்ச்சி அடைந்தாள். ஒரு தம்பி பேசும் பேச்சா இது? கொதித்தாள். வெறிபிடித்தாற்போல் கத்தினாள். “பரத்தையருக்கு அளிப்பதற்கு நம் வீட்டில் பொற்காசு இல்லை. ஒரேயொரு மாற்று வழிதான் உள்ளது. நாம் இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம் தந்தை ஒருவராக இருக்க வாய்ப்பில்லை. தாயின் குலவழக்கம் அப்படி. எனவே என்னை அடைந்து முடிந்த சுகத்தைப் பெற்றுக்கொள்.”
அருணகிரிக்கு அளவிட முடியாத அதிர்ச்சி. தனது கேவலமான வாழ்க்கை இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. அண்ணாமலையாரின் கோவிலை நோக்கி ஓடினான். கோபுரத்தின் மீது ஏறினான்.

‘ஆறுமுகப் பெருமானே, பெரும் பாவங்களைப் புரிந்துவிட்டேன். ஆறாத் துயரத்தில் இருக்கிறேன். இனியும் உயிர்வாழ விருப்பம் இல்லை’ என்று கூறியபோது அவன் உடல் நடுங்கியது. ஆம். அவன் கோபுரத்தின் மீது ஏறியது, தற்கொலை செய்துகொள்ள.
கோபுர உச்சியிலிருந்து குதித்தான். புவி ஈர்ப்பு அவனைக் கீழே இழுத்தது. ஆனால்... ஆனால்... அவன் உடல் பூமியைத் தொடவில்லை. முருகப்பெருமான் அவனைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார்.
எனக்கா இந்தப் பேரருள்? அருணகிரியின் தொண்டையிலிருந்து ஒரு விம்மல் வெடித்தது.
“பெருமானே... நான் வாழத் தகுதியற்றவன்” என்றபோது, அவர் கண்களிலிருந்து நீர் இடையறாமல் வெளிவரத் தொடங்கியிருந்தது.
“எதனால்?”
“என் இறந்த காலம் அவலமானது. அவமானங்கள் நிறைந்தது.”
“அதைவிடு. உன் வருங்காலம் பொருள் மிக்கதாக இருக்கும்.”
“பொருள் மீது உள்ள பற்று நீங்கி விட்டது ஐயனே” என்றபடி தலைகுனிந்தான்.
“நான் அர்த்தம் மிகுந்த வாழ்க்கை என்ற பொருளில் கூறினேன்” என்று புன்னகையுடன் பதிலளித்தார் முருகப் பெருமான்.
அருணகிரிநாதர் முகத்தில் ஆனந்த பரவசம். “எனக்காகவா இங்கு எழுந்தருளினீர்கள்?”
“இங்கு மட்டுமா? உனக்காக அரச மன்றத்துக்குக் கூட வருவேன்.”
“என்ன கூறுகிறீர்கள்?”
“உரிய காலத்தில் விளங்கும்.”
அருணகிரியின் வாயைத் திறந்த முருகப்பெருமான், தன் வேலினால் அவன் நாக்கில் பிரணவத்தை எழுதினார். ஜெபமாலை ஒன்றை அணிவித்தார். பின் ஜோதியாய் மறைந்தார். அருணகிரிநாதர் குமரனின் புகழ் பாடத் தொடங்கினார்.
‘முத்தைத்தரு பத்தித்திரு நகை அத்திக்கிறை சக்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர என ஓதும்!’ என அவர் பாடப்பாட, அவர் உடலைப் பற்றிய நோய் ஓடியது. அன்று முதல் அருணகிரிநாதரின் தோற்றத்தில் ஒரு மாறுதல். நெற்றியில் திருநீறு. கழுத்திலே முருகன் வழங்கிய ஜபமாலை. கோவணம் மட்டுமே உடை.
அருணகிரிநாதரின் புகழ் பரவியது. அது மன்னன் பிரபுடதேவராஜனின் காதுகளையும் எட்டியது.

அந்த நாட்டில் வசித்த பண்டிதர் ஒருவருக்கு இது மகிழ்ச்சியைத் தரவில்லை. தன்னை ஒரு மாபெரும் தேவி உபாசகர் என்று காட்டிக்கொண்டவர் அவர். தனக்கு தேவி தரிசனம் அளிப்பதாக கூறி மற்றவரின் மதிப்பைப் பெற்றவர். அந்த மற்றவரில் மன்னனும் ஒருவன்.
“பண்டிதரே அருணகிரிநாதர் குறித்து கேள்விப்பட்டீர்களா? அவரை நம் அரசவைக்கு அழைத்து கௌரவித்தால் என்ன?” என்றான் மன்னன் ஒருநாள்.
சாமர்த்தியமாக செயல்பட்டார் சம் மந்தாண்டார் (அதுதான் அந்தப் பண்டிதரின் பெயர்). மனத்தில் பொங்கிய பொறாமைத் தீயை மறைத்துக்கொண்டார்.
“நிச்சயம் கௌரவிக்கலாம். அப்படியே அவருக்குக் கிடைத்த முருகப்பெருமானின் தரிசனம் உங்களுக்கும் கிடைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளலாம்.”
மன்னன் கண்களாலேயே பண்டிதரைப் பாராட்டினான். திருவண்ணாமலை ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அவரை வரச் செய்தான் மன்னன்.
பண்டிதரும் வந்திருந்தார். ‘இன்றோடு அருணகிரியின் புகழ் ஒடுங்கிவிடும்’ என்ற வஞ்சக எண்ணம் பண்டிதரின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
அருணகிரிநாதரை வாய் நிறைய வரவேற்ற மன்னன் அவரை அமரச் செய்தான். அருகிலேயே பண்டிதர் சம்மந்தாண்டானுக்கும் ஆசனம் போடப்பட்டது.
அருணகிரிநாதர் கைகுவித்து, கண்களை மூடி முருகனின் புகழ்பாட எத்தனித்தார்.
அப்போது பண்டிதர் “மன்னா, நான் கூறியது நினைவிருக்கிறதா?” என்றார்.
மன்னன் அதைத் தவறாக புரிந்து கொண்டான். “நீங்கள் முதலில் தேவியைத் துதிக்கிறேன் என்கிறீர்களா? செய்யுங்களேன்” என்றான்.
பண்டிதர் யோசித்தார். ‘சரி, தனக்கே முன்னுரிமை இருக்கட்டுமே’ ஆமோதிப்பாய்த் தலையசைத்தார்.
அப்போதுதான் மன்னுக்கு அந்த எண்ணம் தோன்றியது. “பண்டிதரே, முதலில் உங்கள் சக்தியால் தேவியின் தரிசனத்தை எனக்கு அளியுங்கள். அடுத்து அருணகிரிநாதர் தனது சக்தியால் எனக்கு முருகப்பெருமானின் தரிசனத்தை அளிக்கட்டும்.”
சம்மந்தாண்டான் திடுக்கிட்டார். ‘அரசன் அருணகிரிநாதரிடம் வேண்டுகோளை முன்வைப்பார். முருக தரிசனம் தனக்குக் கிடைப்பதாகச் சொல்லும் அருண கிரியால், அரனின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது. அந்த நொடியே மன்னன், அந்த அவையை நீதி மன்றமாகவே கருதி அருணகிரிக்குக் கடும் தண்டனையை வழங்குவான். அதைப் பார்த்து இன்புறுவோம்.’ இப்படித்தான் சம்மந்தாண்டான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நடப்பது வேறாக அல்லவா இருக்கிறது!
எனினும் அவர் மனத்தில் ஓர் ஆறுதல். தன்னால் முடியாத ஒன்று, அருணகிரிநாதராலும் முடியாத ஒன்றாகத் தான் இருக்கும்.
பண்டிதர் கண்களை மூடி தேவியை துதிக்கலானார். நேரம் கடந்தது. தேவியின் தரிசனம் கிட்டவில்லை. மன்னன் பொறுமை இழந்தான்.
‘பண்டிதரே, என்னை ஏமாற்றிவிட்டீர்,’ என்றபடி, அருணகிரிநாதரின் புறமாகத் திரும்பினான். தன் தலையை அசைத்தான். ‘இனி உங்கள் முறை’ என்ற செய்தி அதில் புலப்பட்டது.
அருணகிரிநாதர் மனத்தில் தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது, தடுத்தாட்கொண்ட சரவணப் பெருமான் கூறியது நினைவுக்கு வந்தது. ‘உனக்காக அரச மன்றத்துக்குக் கூட வருவேன்.’
இப்போது அந்தச் சொற்களின் உண்மை புரிந்தது. ‘இறைவா! எனைத் தடுத்தாட்கொண்ட பெருமானே! உன் அருள் என் மீது வற்றாது சுரக்கையில் எந்த சோதனை எனை என்ன செய்துவிடும்?’
பாடத்தொடங்கினார்.
‘அதல சேதநாராட’ என்று தொடங்கிய அந்தப் பாடல் ‘மயிலுமாடி நீயாடி வரவேணும்!’ என முடிந்தது. இந்தப் பாடலின் பொருள் இதுதான். ‘விஷ்ணுவின் மருமகனே. கதையை தாங்கி நிற்கும் பீமசேனன் பெரும் சேனைகளையும் எதிர்த்து வெற்றி காண உதவிய திருமாலின் மருமகனே. நடனமிட்டு ஓடிவா. நீ நடனமாடினால் உலகின் அனைத்து ஜீவராசிகளும் நடனமாடும். சொர்க்கத்தில் ஆதிசேஷன் நடனமிடுவான். பூமியில் மேரு மலை நடனமிடும். காளி, சிவனுடன் நடனமாடுவாள். சிவ கணங்களும் சுற்றி நடனமாடுவார்கள். சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரம்மனும் நடனமாடுவர். தேவர்களும், சந்திரனும் கூட இந்த நாட்டியத்தில் ஈடுபடுவர். செந்தாமரையில் அமர்ந்துள்ள உன் மாமி லட்சுமி தேவியும் நடனமிடுவாள். தன் விஸ்வரூபத்தைக் காட்டிய திருமாலும் நடனமிடுவார். பிரவுட மகாராஜன் மனத்தில் வீற்றிருக்கும் முருகா, நீயும் இங்கு மயில் மீது ஆடியபடி வரவேண்டும்.’


இறைவன் வரவேண்டும் என்று மட்டுமல்ல; எப்படி வரவேண்டும் என்பதைக் கூட அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். பக்தனின் எந்த விருப்பத்தையும் இறைவன் நிறைவேற்றவே செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
பாடல் முடிந்த அடுத்த கணம் அந்த தெய்வீக அனுபவம் மன்னனுக்கு கிடைத்தது. மண்டபத்தின் கம்பத்தில் வேலன் காட்சியளித்தான். மயில்வாகனனாக... எழில் முருகனாக.
ஒரு கணம்தான். அடுத்த கணம் முருக ஜோதி மறைந்தது. பிரபுடதேவ மகாராஜன் வேரற்ற மரமாய் வீழ்ந்தான் அருணகிரிநாதரின் பாதங்களில்.

Comments