கஷ்டங்கள் தீர... கந்தனுக்குக் கடிதம்!

இந்தக் கோயிலில் தனிச் சிறப்பான வழிபாடு ஒன்று நடக்கிறது. திருமணத் தடை, குழந்தைபாக்கியம் இல்லாத குறை, வழக்குகளில் சிக்கல், வீடு கட்ட, தொழில் தொடங்க, வேலை கிடைக்க என்று பிரச்னைகளால் துன்பப்படும் பக்தர்கள், அதை விண்ணப்பக் கடிதமாக எழுதி, ஸ்ரீகொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். பிறகு அந்தக் கடிதத்தை முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் உள்ள வேலில் கட்டிவிடுகிறார்கள். இப்படிச் செய்த 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களுக்குள் தங்கள் வேண்டுதலை ஸ்ரீகொளஞ்சியப்பர் நிறைவேற்றி அருள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


சுயம்புவாகத் தோன்றிய கொளஞ்சியப்பர்

தந்தைக்குப் பிரணவப் பொருள் உரைத்து தகப்பன் சாமி என்று போற்றப்பெறும் அழகு முருகன், தந்தை சிவலிங்க வடிவில் அருவுருவமாகக் காட்சி தருவது போலவே தானும் அருவுருவமாகக் கோயில் கொண்ட திருத்தலம் மணவாள நல்லூர். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் கொளஞ்சி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. அருகில் இருந்த விருத்தாசலத்தில் இருந்து சில சிறுவர்கள் இந்தப் பகுதிக்கு பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம். மேய்ச்சலுக்கு வரும் மாடுகளில் ஒரு பசு மட்டும் வந்த வேலையை மறந்து, மந்தையை விட்டு விலகி ஒரு புதருக்குள் சென்று சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டு வருவதை பலநாட்களாக கவனித்த சிறுவர்கள் புதருக்குள் சென்று பார்த்தார்கள். அங்கே அந்தப் பசு புதருக்குள் இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்குத் தானாகவே பால் சொரிந்து அபிஷேகம் செய்ததாம். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் விவரம் சொன்னார்கள். பின்னர் அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றிய இறைவனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள். கொளஞ்சி வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய இறைவன் ஸ்ரீகொளஞ்சியப்பர் என்னும் திருப்பெயர் கொண்டார். காலப்போக்கில் ஆலயத்தின் அருகிலேயே வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினர். இப்படித்தான் மணவாளநல்லூர் கிராமம் தோன்றியது.


பரிவார தெய்வங்கள்

கொளஞ்சிவனத்தில் சுயம்புவாகத் தோன்றிய கொளஞ்சியப்பர் ஆலயத்தில் பரிவார மூர்த்திகளாக முனியப்பர், வீரனார், இடும்பன் ஆகியோர் சந்நிதி கொண்டு இருக்கின்றனர். முனியப்பர் சந்நிதிக்கு எதிரில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.


வேடுவனாக வந்த வேலவன்

ஒவ்வொரு தலமாக இறைவனை வழிபட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், விருத்தாசலம் வந்தபோது, ‘இதுவோ முதுகுன்றம்! பழமலை! அம்மையோ முதுமையான விருத்தாம்பிகை; இறைவனோ பழமலைநாதர்! ஊரும் கிழம்; இறைவன் இறைவியும் கிழம்! இவர்களைப் பாடாவிட்டால்தான் என்ன’ என்று பாடாமல் சென்றுவிட்டார்.

தன் தந்தையை அலட்சியப்படுத்திய சுந்தரருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார் முருகப் பெருமான். அதற்காக ‘பழமலைநாதர்’ திருக்கோயிலின் எல்லையை சுந்தரர்  தாண்டக்கூடாது என்று தெற்கே ‘வேடப்பர்’, மேற்கே ‘கொளஞ்சியப்பர்’, வடக்கே ‘வெண்மலையப்பர்’, கிழக்கே ‘கரும்பாயிரப்பர்’ என்று நான்கு திசைகளிலும் காவலாக நின்றார் முருகன். அப்போது, மேற்கு திசையை நோக்கி வந்த சுந்தரருக்கு எதிரே வேடுவ குமரனாகத் தோன்றினார். சுந்தரரை வழிமறித்து பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டு, “பழமலைநாதரைப் பாடிவிட்டு உன் பொருட்களைப் பெற்றுக்கொள்” என்று கூறிவிட்டார். தன் பிழைக்கு வருந்திய சுந்தரர் அதன் பின் பழமலைநாதரைப் போற்றிப் பாடினார்.


பிணி தீர்க்கும் வேப்ப எண்ணெய் பிரசாதம்

கை கால்களில் வலி, காயம் மற்றும் பலதரப்பட்ட தோல் சம்பந்தமான நோய்களால் கஷ்டப்படும் பக்தர்கள், ஸ்ரீகொளஞ்சியப்பர் சந்நிதியில் வேப்ப எண்ணெயை வைத்து அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். பின்னர் அந்த எண்ணெயை அறுகம்புல்லால் தொட்டு பிரச்னை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைத்துவிடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.


எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது..?

விருத்தாசலத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது. வேப்பூர் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கொளஞ்சியப்பர் திருக்கோயில் வழியாகச் செல்லும்.

Comments