குபேர யோகம் தரும் கோயில்... சிதைந்தும் இடிந்தும் கிடக்கலாமா?

சோழ தேசத்தை ஆட்சி செய்து வந்த அந்த மன்னனுக்கு வெண் குஷ்ட நோய் இருந்தது. நோயின் பிடியில் இருந்து மீள்வதற்காக, அந்தத் தலத்துக்கு வந்தான் மன்னன். அங்கே, 48 நாட்கள் கடும் பூஜைகள் மேற்கொண்டு சிவனாரை வணங்கினான்.
வில்வம், கொன்றை முதலான ஆறு வகை இலைகளை, மூலிகைகளைக் கொண்டு சிவலிங்கத் திருமேனிக்கு தினமும் அபிஷேகம் செய்தும் அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டான். ஆறு வகை மூலிகை இலைகளைச் சாறாக்கி, அதையே பிரசாதமாக, அந்தப் பிரசாதத்தையே மருந்தாக தினமும் காலையில் உட்கொண்டு வந்தான். பிறகு, 48-ஆம் நாளில், நோய் முழுதும் நீங்கியது. குஷ்டம் அகன்றது.
முனிவர்களும் ரிஷிகளும் தவமிருந்து சிவபூஜைகள் செய்து வழிபட்ட அந்த இடத்தில், பின்னாளில் அற்புதமான கோயில் கட்டப்பட்டது. சோழ தேசத்தின் எந்த மூலையில் எவருக்கேனும் உடலில் உபாதை என்றால், அவர்கள் வண்டி கட்டிக்கொண்டு, இந்தத் தலத்துக்கு வந்தார்கள். சிவனாரைப் பூஜித்து, மூலிகைச் செடிகளைப் பிரசாதமாக உட்கொண்டு, நிவாரணம் பெற்றார்கள்.
ஒருகாலத்தில், விக்கிரம சோழீஸ்வரம் என்றும் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப்பட்ட அந்த ஊர், பின்னாளில் துக்காச்சி என்று அழைக்கப்படுகிறது. துர்கையின் ஆட்சி என்பதே துக்காச்சி என மருவியதாகச் சொல்வர். 'விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம்’ என்று இந்த ஊரின் பெயர் இருந்ததாகவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சோழ மன்னன் மட்டுமின்றி பல்லவ மன்னனும் கோயிலைச் சீரமைத்து, புனரமைத்து, கோயிலை அழகுபடுத்தி, கோயிலுக்கு நிலங்கள் எழுதி விரிவுபடுத்தினான் என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது நாச்சியார் கோவில். திருநரையூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது துக்காச்சி கிராமம். இங்குதான், முனிவர்களுக்குக் காட்சி தந்தவரும் மன்னரின் நோயை நீக்கி அருள்பாலித்தவருமான சிவனார் கோயிலில் குடிகொண்டிருக்கிறார். இங்கு ஈசனின் திருநாமம்- ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்.
துக்காச்சி கிராமத்துக்கு அந்தப் பக்கத்தில் கூகூரில் பாடல் பெற்ற தலமான ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் ஆலயம் இருக்க... இங்கே அதே பிரமாண்டத்துடன் திகழ்கிறது ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.
கோயில் முன்மண்டபத்துக்கு வடக்கில் கிழக்குப் பார்த்தபடி இருக்கிறான் ஸ்ரீகுபேரன். எனவே ஒருகாலத்தில், குபேர யோகமும் சகல ஐஸ்வரியங்களும் தந்தருளக்கூடிய தலமாக இந்த துக்காச்சி இருந்திருக்கிறது என்கிறார்கள் ஊர்மக்கள். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசௌந்தர்ய நாயகி. ஆக, செல்வத்தை வாரி வழங்கும் சக்தி குடிகொண்டிருக்கும் தலம் இது.
எதிரிகள் இல்லாத நிலையில் ஒரு தேசமும் மனிதனும் இருப்பது மிகப்பெரிய கொடுப்பினை. அப்படி இருக்கிற எதிரியையும் எதிர்ப்புகளையும், தீயவர்களையும் தீய சக்திகளையும் அழிப்பதற்கென உருவெடுத்தவர்கள், ஸ்ரீதுர்கையும் ஸ்ரீவாராஹியும்! அவர்களுக்கு சரபேஸ்வரத் திருமேனியின் தத்துவத்தை, சிவனார் ஸ்ரீசரபேஸ்வரராகவே இருந்து உபதேசித்து அருளினார் என்கிறது புராணம். அதனை விளக்கும் வகையில், இங்கு ஒன்பது படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இதனை சரப நவ பீடங்கள் என்று அழைத்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. இந்தப் படிகளை பசுஞ்சாணம் கலந்த நீர், வில்வம் மற்றும் துளசி கலந்த நீர், காவிரி மற்றும் கங்கா தீர்த்தம், கஸ்தூரி மஞ்சள் கலந்த நீர், பஞ்ச கவ்யம் கலந்த நீர், திரவியம் கலந்த நீர், சந்தனம் கலந்த நீர், ஆகியவற்றால் சுத்தம் செய்து, கோலமிட்டு, செவ்வாய்க்கிழமைகளிலும் நவமி நாளிலும் பூஜைகள் செய்து வழிபட்டால், மிகுந்த பலன் உண்டு. சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்கிறார்கள், திருப்பணிக்கு குழுவினர்.
''ஆனால், இந்தக் கோயிலில் பூஜைகள் நடப்பது வெகுகாலத்துக்கு முன்னதாகவே குறைந்துவிட்டது. காலப்போக்கில், கோயில் தன் பொலிவை இழந்து, பூஜை - புனஸ்காரங்களையெல்லாம் இழந்து நிற்கிறது. ஸ்ரீதுர்கைக்கு என விக்கிரம சோழனால் கட்டப்பட்ட கோயில் சந்நிதியும் மண்டபமும் இடிபாடுகளுடன் கற்கள் சிதைந்தும் உடைந்துமாகக் காட்சி அளிக்கிறது என்பது வேதனையைத் தருகிறது.
விக்கிரமச் சோழன் காலத்தில், முனையர் கோன் என்றொரு மந்திரி இருந்தானாம். இந்த அமைச்சர், சோழ தேசத்தின் ஆலயங்கள் பலவற்றைச் சீர்படுத்தினானாம். இங்கே துக்காச்சி கோயில் கல்வெட்டு ஒன்றில், மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில், துக்காச் சியில் இருந்த சீராண்டான் முனையதரையன் என்பவன், கோயிலைப் புதுப்பித்து, நிர்வகித்து வந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவன், முனையதரையனின் பரம்பரை என்று சொல்வாரும் உண்டு.
ஒருபக்கம் குபேரன், இன்னொரு பக்கம் தாருகா வனத்து ரிஷிப்பெண்கள், கிழக்குப் பார்த்தபடி இருக்கிற ராஜகோபுரம், மதில் பகுதியில் இரண்டாவது கோபுரம், யானை கள் தாங்கி நிற்கிற படிகள் (களிற்றுப் படிகள்), ஸ்ரீதுர்கைக்கு தனியே அமைந்துள்ள கோயில், அம்பாளின் மண்டபத்தில் உள்ள வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் என சிற்ப நுட்பங்களுடன் பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்த ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்துக்கு ஒருமுறையேனும் வந்து திருப்பணியில் தன்னை நேரடியாகவோ அல்லது பொருளுதவி தந்தோ ஈடுபடுத்திக் கொண்டால்... அவர்களின் வம்சம் தழைத்தோங்கும். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள் என்பது ஐதீகம்!
தோஷங்களை நிவர்த்தி செய்து அருளும் கோயில், எல்லா சந்தோஷங்களையும் இழந்து நிற்கலாமா? தென் திருக்காளத்தி என்று போற்றப்படும் திருத்தலம், காலாகாலத்துக்கும் பொலிவுடன் இருந்து அருள்பாலிக்க வேண்டாமா? ஆபத்து சம்பத்துகளில், உதவுவதற்குத் தயாராக இருக்கிற ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தின் கோபுரமும் மதிலும் மண்டபச் சுவர்களும் எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்று ஆபத்துக் காட்டி நின்றால்... அது பாபமில்லையா?
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு சிவநேசச் செல்வரும் சிவனடியாரும் செல்வந்தரும் தம்மால் இயன்றதைக் கொடுத்தாலே போதும்... விரைவில் புதுப்பொலிவுடன் காட்சி தரும் கோயில். கும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெறும்.
குபேரனுக்கு அருளிய திருத்தலத்துக்கு அவன் சந்நிதி கொண்டிருக்கிற கோயிலுக்கு, நம்மால் முடிந்த அளவுக்குத் திருப்பணிக்கு கைக்கொடுப்போம். குபேர யோகத்தை நமக்குத் தந்தருள்வார்கள் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரும் ஸ்ரீசௌந்தர்ய நாயகியும்!
எதிர்ப்பையும் தீய சக்திகளையும் அழிக்க வல்ல, ஸ்ரீசரபேஸ்வரர் சூட்சுமமாகப் படிகளாக இருந்து அருள்பாலிக்கும் தலம், அழகுறத் திகழ்வதற்கு நாமும் காரணமாக இருப்போம். அதுவே நம் வாழ்க்கையும் படிப்படியாக உயரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை!
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரருக்கு அள்ளிக் கொடுப்போம். நம்மை எல்லா ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வார் சிவனார்!

எங்கே இருக்கிறது?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம், செல்லும் வழியில் உள்ளது திருநரையூர் என்கிற நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது துக்காச்சி கிராமமும் ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் ஆலயமும்!
பஸ் வசதி உண்டு. கும்பகோணத்தில் இருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

Comments