ஏழுமலையானுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?

தினமும் நான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் ‘சாந்தாகாரம் புஜக சயனம்...’ பாடலைச் சொல்லி வழிபட்டு வருகிறேன் எனினும் அதற்கான பொருள் தெரியாது. அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?
‘சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் சுரேசம்
விஸ்வாகாரம் ககன சத்ருசம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்’


இதுதான் நீங்கள் குறிப்பிடும் வரிகள். பகவான் விஷ்ணுவினது சாந்தமான உருவம். அவர் புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம். தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக் கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம்.

அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம். அவர் ஆகாயமாக இருப்பதால், வடிவம் இல்லாத ககன சத்ருசம். அவர் உருவம், மேகத்தின் வர்ணமான சாம்பல் நிறத்தில் இருக்கும். சுபத்தைக் கொடுக்கும் உடல் உறுப்புகளைக் கொண்டதால், சுபாங்கம். மகா லட்சுமிக்கு, காந்தன். தாமரைக் கண்கள் கொண்டவர் என்பதால் கமல நயனம்.

அவரை அடைவது எப்படி? யோகிகளின் இதயம் இருக்கிறதே, அதுபோல யோகாப்பியாசம் செய்ய வேண்டும். அவர்களின் தியானத்தில்தான் அவர் இருப்பார் என்பதால் யோகிஹ்ருத்யான கம்யம். இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் எத்தனையோ விதமான பயங்களை அழிப்பதால் பவபய ஹரம்.. அது யார் அவ்வளவு பெரிய ஆசாமி? அவர்தான் சர்வ லோகங்களுக்கும் நாதனான பகவான். அவரை வணங்கு. இதுவே அதன் கருத்து.
 திருப்பதி திருவேங்கடவனுக்கு கெளஸ்துப மாலை அணிவிப்பதை விசேஷமாகச் சொல்கிறார்களே... கௌஸ்துப மாலை என்பது என்ன? அதன் மகிமைகள் என்னென்ன?
 பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று கௌஸ்துபம் எனும் ரத்தினம். திருமாலை அலங்காரப் பிரியன் என்று போற்றுவர். அணிகலன்கள் அணிவதில் மகிழ்பவரான திருமால், கௌஸ்துபத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு, நாம் அணிவிக்க விரும்பும் மாலைகள் பல இருந்தாலும் அவர் விரும்பும் மாலைக்கு தனிச் சிறப்பு உண்டு. கௌஸ்துப மாலையும் அப்படியே! பாற்கடலில்... நாம் விரும்பும் பொக்கிஷங்களும் உண்டு, ஒட்டுமொத்த உலகை அழிக்கும் விஷமும் இருந்தது. ஆனால், திருமால் கௌஸ்துபம் எனும் ரத்தினத்தை தேர்ந்தெடுத்தார். நாம் வாழும் உலகமும் பாற்கடல் போன்றதே. அதிலிருந்து,  நம்மை உயர்த்தும் நன்னடத்தை களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். திருமாலுக்கு கௌஸ்துப மாலை அணிவிக்கப் படும்போது, இந்தக் கருத்தே நம் மனதில் பளிச்சிட வேண்டும்!
 புத்தாடை அணிவதற்குமுன்பாக, அதில் ஏதேனும் ஓரிடத்தில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?
எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும் அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.

நாம் எதன் மூலம் வாழ்கிறோமோ, அதை வணங்குவது நமது வழக்கம். அறுவடை அன்று நெல்லை மகாலட்சுமி என்று பூஜை செய்வோம். அரிசி இருந்ததால் நாம் வாழ்கிறோம். நாம் வாழ்வதால் பகவானை நினைக்கிறோம். எனவே, அரிசியையும் தெய்வாம்சமாகக் கருதுகிறோம். அதுவே, புத்தாடை விஷயத் திலும் நிகழ்கிறது. இந்தக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது, நல்ல விஷயம்தானே!
புரட்டாசி மாதத்தில் புலால் உணவைத் தவிர்க்கச் சொல்வது ஏன்?
மனித இனத்தின் ஆகாரம் என்பது இன்னோர் உயிரைச் சாப்பி டுவது என்று வைக்கவில்லை. மனிதன் உயிர் வாழ்வதற்கு, தாவர இனங்களில் இருந்து கிடைக்கும் உணவே போது மானது. தாவர உணவில் அவனது தேவைகள் மொத்தத்தை யும் பூர்த்தி செய்யும் அளவுக்கு எல்லாமும் இருக்கின்றன. நமக்கு உணவாவதைத் தவிர தாவரங்களுக்கு வேறு விநியோகம் இல்லை. இதுதான் சிருஷ்டியின் விதி.

மனிதன் ஆசையினால் புலால் சாப்பிட ஆரம்பித்தான். அது பிடித்துப் போனதால் தொடர்கிறான். ‘உடலுக்கு ஊக்கத்தையும் உள்ளத் துக்குத் தூய்மையையும் கொடுக்க என்ன உணவு தேவை?’ என்று தேடவே வேண்டாம். தாவரத்தை நமக்கு பகவானே கொடுத்திருக்கிறார். விலங்கினங் களில் சில வகை, மற்ற விலங்கு களைத்தான் உண்ண முடியும் என்பதும் அவர் வகுத்த நியதிதான். பூச்சிகளைத் தவளை சாப்பிடுகிறது. தவளையை பாம்பு சாப்பிடுகிறது. பாம்பை இன்னொரு ஜீவ ராசி சாப்பிடுகிறது என்று வகுத்திருக்கிறார். அது இயற்கையானதால், சாப்பிடும் பிராணி வகையும் பெருகுகிறது. சாப்பிடப்படும் பிராணி வகையும் பெருகுகிறது.

நம் உடல் உறுப்புகளின் போஷாக்குக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் தாவரங்களிலேயே உண்டு. மாமிச இனங்களில் இன்னின்ன சத்து இருக்கிறது என்று சொல்வது, நமது வசதிக்காக நாம் சப்பைக் கட்டுக் கட்டிக் கொள்வதுதான். உயிரினங்கள் நம்மை எதிர்த்துக் கேட்காததாலும் அந்தந்தக் காலகட்டத்தில் உள்ள சட்டதிட்டங்கள் நமக்கு அனுகூலமாகப் போனதாலும் மாமிச உணவைப் பழகிக் கொண்டோம்.

புரட்டாசியில் மகாவிஷ்ணுவை ஆராதனம் பண்ணுவது சம்பிரதாயம். கடவுளை வழிபடும்போது சாத்விக எண்ணம் வேண்டும். எனவே, அந்த ஆராதனைக் காலத்திலாவது, நாம் செய்து கொண்டிருக்கும் தப்பை நிறுத்தி வைக்கலாமே என்றுதான் புலால் சாப்பிடுவது இல்லை.

சபரிமலைக்குப் போகும்போது நாற்பது நாள் விரதம் என்கிறார்கள். காலையில் எழுந்ததும் குளிக்காமல் எதையும் செய்வதில்லை. நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல் சாப்பிடுவதில்லை. புலால், மது, புகைபிடித்தல் போன்றவை இல்லாமல் விரதம் இருக்க வேண் டும் என்கிறார்கள். நம் மனமே நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ‘இதை எல்லாம் செய்யக் கூடாது!’ எனும் உறுத்தல் ஏற்படுகிறது. இந்த உறுத்தலின் வெளிப்பாடுதான் விரத வேளையில் மாமிசம் கூடாது என்கிற எண்ணம்.
நெற்றியில் குங்குமம், விபூதி அணியும்போது, முதலில் எதைப் பூசிக்கொள்ள வேண்டும்?

 
நெற்றியில் விபூதி பூசும்போது, சுட்டு விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்... மூன்று கோடுகளாக இடமிருந்து வலமாகப் பூச வேண்டும். குங்குமத்தை இரு புருவங்களின் மத்தியில் வைத்துக்கொள்ளலாம்.

சம்பிரதாயத்தை ஒட்டி... முதலில் எதை வைப்பது என்பதை முடிவு செய்யலாம். நெற்றியில் திலகம் வேண்டும். விபூதி, திருமண், கோபி போன்றவற்றை நெற்றியில் இடுவது குறித்து சிறந்த நடைமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கோயிலில் வழங்கப்படும் சந்தனம், குங்குமம் போன்ற பிரசாதங்களை புருவ மத்தியில் மட்டும் வைத்தால் போதுமானது.


விருப்பப்படி நெற்றியில் இட்டுக்கொள்வதை சாஸ்திரம் எதிர்க்காது. எனினும், உரிய நியதிகளை பின்பற்றுவது சிறப்பு.
 நெடுநாட்களாக எனக்குள் ஒரு சந்தேகம். ஒருமண்டல காலம் என்பது எத்தனை நாட்கள். பெரியவர்களில் சிலர் 48 நாட்கள் என்றும், வேறு சிலர் 41 என்றும் கூறுகிறார்கள். அரிதாக சிலர் 108 நாட்கள் விரதம் இருப்பதும் உண்டு. இதுகுறித்து உங்களின் விளக்கம் தேவை.
 உலக விவகாரங்கள் இல்லாத ஆதி மண்டலம் என்பது 41 நாட்கள்தான்! ஆனால், 44 நாளைக்கு ஒரு மண்டலம் என்றும் சிலர் சொல்கிறார்கள். 41 நாள் என்பதுதான் நியாயமாக வந்தது. 41 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை ஒருவர் 44 நாட்கள் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டி வந்ததால், அதுவும் ஒரு மண்டலமாகி விட்டது. இதையே 48 நாளுக்கு இழுத்துக் கொண்டு போன ஓர் ஆசாமி, அதை ஒரு மண்டலமாக ஆக்கிவிட்டார்.

கார்த்திகை மாதம் முதல் தேதியானால், வேதம் சொல்ல ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தைச் சொல்லி முடிக்க 44 நாட்கள் ஆகும். இதுதான் மண்டலம்.

சபரிமலைக்குப் போகும்போது விரதம் ஒரு மண்டலம் என்றார்கள். அந்த மண்டலம் 41 நாட்கள். ரெண்டு மாதங்களுக்கு முன்பே மாலை போட்டவர்கள், ரெண்டு மாதத்தையும் மண்டல காலம் என்று சொல்லிவிட்டார்கள்.

இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்றால், ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்து முடிக்க எத்தனை நாளாகிறதோ, அதை மண்டலம் என்று குறிப்பிட்டதுதான். ஆரம்பத்திலே சொன்ன மாதிரி ஆதிமண்டலம் என்பது 41 நாட்களே!

Comments