லட்சம் முறை ஸ்ரீருத்ர பாராயணம் கோடி முறை வில்வார்ச்சனை!

ஆலயத்தில், அமர்க்களமாக ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஓர் உலக உன்னதம்! ஆமாம்... ஆலய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு லட்சம் முறை, சிவனுக்குப் பிரியமான ஸ்ரீருத்ரத்தை பாராயணம் செய்யும் லட்ச ருத்ர பாராயணம், கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி, தினந்தோறும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கோடி அர்ச்சனை, லட்ச ஹோமம் என எல்லாமே பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கில் தீட்சிதர்கள் அமர்ந்து ருத்ர மந்திரம் ஓத, அதன்பின் வில்வ அர்ச்சனை மேற்கொள்ளப்படும் இந்த கண்கொள்ளாக் காட்சி, உலகில் எங்கும் இதுவரையில் நடந்திராத ஆன்மிக அற்புதம்.

உலக மக்களின் நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்காகவும் நடத்தப் படும் இந்த லட்ச ருத்ர பாராயண ஏற்பாடுகளுக்கான செலவு முழுவதையும் ஏற்றிருப்பவர், காஞ்சிப் பெரியவர் மேல் தீராத அன்பும் பக்தியும் கொண்டவரும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபருமான பி.ராமகிருஷ்ணன்.

சிதம்பரம் கோயிலின் பொது தீட்சிதர்கள் அனைவரும் ஈடுபட்டிருக்கும் இந்தப் புனிதப் பணியை முன்னின்று கவனித்து வரும் நி.பா.பட்டு தீட்சிதர் மற்றும் முனைவர் எஸ்.ராஜா சோமசேகர தீட்சிதர் இருவரும் இந்தப் பெரும்பணி குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினர்.

‘‘ஸ்ரீருத்ரம் என்பது சிவனுக்கு உகந்த மந்திரம். இன்னும் சொல்லப் போனால், ‘ஓம் நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரமே, ருத்ரத்தில் உள்ள மந்திரம்தான். வேதங்களில் மையத்தின் மையமாகிய இந்த மந்திரத்தின் மகிமை வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.

நான்கு வேதங்களில் பிரதானமான 3 வேதங்களான ரிக், யஜுர், ஸாம வேதங் களின் மையம் யஜுர் வேதம். அதில் உள்ள 7 காண்டங்களில் மையமான 4-வது காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் ருத்ரம், சமகம் ஆகிய சக்திவாய்ந்த இரு மந்திரங்கள்.

இறைவனை ‘நமஹ’ என்று போற்றிச் சொல்லுவது ‘நமகம்’... அதாவது ருத்ர மந்திரம். அதேபோல, இறைவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவதற்கான மந்திரம் ‘சமகம்’.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேவைகள், ஆசைகள். அதைக் கேட்டுப் பெறுவதற்கான மந்திரம், ‘சமே’ என்று முடியும். எளிமையாகச் சொல்வதானால், போற்றுவது ‘நமஹ’, கேட்பது ‘சமே’. இந்த நமகமும் சமகமும் ஒருங்கே அமையப் பெற்ற வேதபாகத்தின் பெயர்தான் ஸ்ரீருத்ரம்.

ஸ்ரீருத்ரத்தில் 11 அனுவாகங்கள். அதில் மையமான 6-வது அனுவாகத்தில், 183 முறைகளுக்கு மேல் ‘நமஹ’ என்று போற்றப்படும். அவற்றின் மையத்தில்தான் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த நமகமும் சமகமும் ஒருங்கே பெற்ற ஸ்ரீருத்ரத்தை எவர் ஒருவர் பாராயணம் செய்கிறாரோ, அவருக்கு அந்த மூன்று வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது புராண, இதிகாசங்களின் கூற்று.

அதேபோல, சிதம்பரமும் உலகின் மையத்தில் அமைந்திருக்கும் ஸ்தலம். இது மெய்ஞானத்தின்படி மட்டும் அல்லாமல், விஞ்ஞானத்தின்படியும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் கோயிலில் அமைந்துள்ள பொன்னால் வேயப்பட்ட அம்பலத்தின் கீழ் கால் தூக்கி ஆடும் ஸ்ரீநட ராஜர் இருக்குமிடம் - அதிலும் தூக்கிய அந்தக் காலின் கீழுள்ள புள்ளிதான் உலகின் நடு மையப்புள்ளி என்பதை இப்போது நாஸாவே கண்டறிந்துள்ளது. எனவே, வேதங்களின் மையமான ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்ய, புவியின் மையமான சிதம்பரம் பொருத்தமான ஸ்தலம்! மேலும், இறைவன் தேர்ந்தெடுத்து அமர்ந்த இடம். பூலோகக் கயிலாயம்! மற்ற கோயில்களிலிருந்து பல அம்சங்களில் வேறுபட்டுத் திகழும் வித்தியாசமான ஸ்தலம், சிதம்பரம்!

நம் மதத்தின் சிறப்பம்சமே அது கொடுத்திருக்கும் சுதந்திரமும், நமக்குப் பிடித்த விதத்தில், இயன்ற நேரத்தில், இருக்குமிடத்திலேயே கூட இறைவனை வணங்கக் கூடிய இலகுத்தன்மையும்தான்.
இதற்கு ஓர் எளிய உதாரணத்தைக் குறிப்பிடலாம். அனுதினமும் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் சேரும் நேரம்தான் பிரதோஷ காலம். இந்த நேரம் சிவனை வணங்குவதற்கு உகந்த காலம்.
ஆனால், தினந்தோறும் அந்நேரத்தில் சிவனை வணங்க முடியாதவர்கள், மாதம் இருமுறை வரும் பிரதோஷத்தில் வணங்கலாம் என்ற சுதந்திரம் உண்டு. அதுவும் இயலாதவர்கள், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் வணங்கலாம்.

அதைப்போலத்தான் ஸ்ரீருத்ரமும். மூன்று வேதங்களைச் சொல்ல முடியாதவர்கள் ஸ்ரீருத்ரம் மட்டும் பாராயணம் செய்யலாம். அதையும் செய்ய இயலவில்லையா... ‘நீ நமசிவாய மந்திரத்தை மட்டுமே சொல், போதும்’ என்கிறது நம் இந்து மதம்’’ என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்கள்.

“லட்ச ருத்ரம் ஏன்?'' என்று ரூ.2 கோடி பொருட்செலவில் லட்ச ருத்ர பாராயணத்தை நடத்தும் பி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்:

‘‘இறைவனிடம் பக்தி செய்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. மலர்களால் அர்ச்சனை, வாசனை திரவியங்களால் அபிஷேகம், பகவான் நாமத்தைச் சொல்லும் நாமசங்கீர்த்தனம், பஜன், வேதமந்திர உச்சாடனம்... இப்படிப் பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ருத்ராபிஷேகம்.

இந்த சபாநாயகர் மேல் எனக்கு அதீத பக்தி. ஏற்கெனவே ஏகாதச ருத்ரம், லகு ருத்ரம், மஹா ருத்ரம், அதி ருத்ரம் எல்லாம் செய்திருக்கிறேன். கடந்த முறை (2009-ம் ஆண்டு), அதி ருத்ரம் செய்யும்போது ‘‘இதையே செய்துட்டிருக்கோமே! ஏன் லட்சம் முறை பாராயணம் செய்யக் கூடாது?‘‘ என்ற கேள்வி எனக்கும் என் மனைவி காயத்ரிக்கும் தோன்றியது. இந்த எண்ணத்தை தில்லை கோயில் தீட்சிதர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

‘‘தாராளமாகச் செய்யலாமே!’‘ என்று மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். அந்த பாக்கியம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கிடைத்துள்ளது.

இப்போது லட்சம் முறை ருத்ர பாராயணம் மட்டுமல்லாது, கோடி வில்வ அர்ச்சனையும் நடைபெறுகிறது. தினமும் காலையிலும் மாலையிலும் லட்சார்ச்சனை (2 லட்சம் முறை) நடப்பதால், நிறைவு நாளான 50-ம் நாளில் ஒரு கோடி முறை அர்ச்சனை நிறைவு பெறும்.

ஒரு நாளில் 100 பேர் சேர்ந்து  இருவேளையும் சகஸ்ரநாமாவளியைச் சொல்லும்போது அது லட்சார்ச்சனை ஆகிறது. இங்கே தீட்சிதர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதால், அதை நடத்துவதற்கான வழிமுறைகள் உண்டு.


‘‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’’ என்கிறது லிங்காஷ்டகம். ஒரே ஒரு வில்வ இலை கொண்டு சிவனைத் துதித்தாலே, கோடி வில்வம் போட்டு அர்ச்சித்ததற்கு சமம். இங்கே கோடி வில்வ அர்ச்சனை செய்வதால், கோடி கோடி பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை’’ என்றார்.

லட்ச ஹோமம்

பொதுவாகக் கோயில்களில் யாகம், ஹோமம் ஆகியவற்றைச் செய்வதற்கு விதிகள் உண்டு. செப்டம்பர்-15 அன்று இங்கே நடைபெறப்போகும் லட்ச ஹோமத்தில் 9 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, ஒரு குண்டத்துக்கு 12 தீட்சிதர் கள் என 108 தீட்சிதர்கள் அமர்ந்து சகஸ்ர நாமாவளி (சுவாமிக்கும் அம்பாளுக்கும்) சொல்லி, ஆஹுதி செய்வார்கள்.

காலையில் கலச பூஜை உண்டு. காலை 6 மணி முதல் 12 மணி வரை லட்ச ஹோமம். பிறகு பூர்ணாஹுதி. கலசங்கள் வைத்து பூஜை செய்த பிறகு, மாலையில் கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தம்பதி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை அனைத்தும் முடிந்து, 2016 கலசங்கள் புறப்பாடு உண்டு. அதன் பின்னர் பவித்ராரோஹணம் செய்யப்பட்டு, சர்வ திரவிய மகாபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதத்தில், பவித்ராரோஹண மகாபிஷேகம் எனப்படும் நடராஜருக்கு பூணூல் சார்த்தும் வைபவம் நடக்கிறது. இந்த ஆண்டு ஆவணி மாத மகாபிஷேகம் நடக்கும் நாளான செப்டம்பர் 15-ல்தான் லட்ச ருத்ர நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


இந்த மாபெரும் பிரம்மாண்ட நிகழ்வில், தினமும் காலையில் 3 மணி நேரம் 100 பேரும், மாலையில் 3 மணி நேரம் 100 பேரும் ஜபம் செய்கிறார்கள். மொத்தத்தில், தினசரி 600 மணி நேரம். 50 நாட்கள் 600 பேர் ஜபம் செய்வதால், 30,000 மணி நேரம், மனித குல நன்மைக்காக செலவிடப்படுகிறது.

‘சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்ற வேதவாக்கியத்தின் அடிப்படையில், பூமியில் வாழும் புல், பூண்டு, பறவை, மிருகம், மனிதன் என அனைத்து உயிர்களும் நலமாய் வாழவேண்டி, ஸ்ரீநடராஜருக்கு நடத்தப்படும் இந்த லட்ச ருத்ராபிஷேக விழாவில் தினமும் மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து வணங்கிச் செல்கின்றனர். நிறைவு நாளில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய அரிய நிகழ்வில் பங்கேற்று, ஆடல் பெருமானின் கிருபாகடாட்சம் பெற்று, பேரின்பம் கொள்வோமாக!


ஸ்ரீருத்ரம் சொல்லும் முறை

11 முறை ருத்ரம் சொல்வது, ‘ஏகாதச ருத்ரம்’ எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, ‘லகு ருத்ரம்’. லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, ‘அதிருத்ரம்’.

பொதுவாக கோயில்களில் 121 முறை ருத்ர பாராயணம் (லகுருத்ர பாராயணம்) செய்து, ‘ருத்ராபிஷேகம்’ செய்வது வழக்கம். இது எல்லாக் கோயில்களிலும் நடக்கும். மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகள், எப்போதாவது ஏதேனும் பெரிய சிவஸ்தலங்களில் நடைபெறும். இவற்றை ஒரு நாளில் செய்ய முடியாது. நாள்கணக்கில் செய்ய வேண்டும். அபூர்வமாகத்தான் காண முடியும். ஆனால் இப்போது சிதம்பரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘லட்ச ருத்ரம்’ என்பது, காணக் கிடைக்காத மிக மிக அரிய நிகழ்வு. முதல் முறையாக ஒரு லட்சம் முறை ஓதப்படுகிறது. உலக சமாதானம் மற்றும் உலக மக்களின் நன்மைக்காகவே இது நடத்தப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ்வதுதான் இந்த லட்ச ருத்ர ஜபத்தின் நோக்கம்.

Comments