ஸ்ரீபிரேமாபாய்

அது வாரணாசி. பகவான் சிவசங்கரன் விஸ்வ நாதரா வீற்றிருக்கும் திவ்வியத் தலம். எங்கும் ஜபதபங்களும், நாம வேள்வியுமா பக்தியிற் சிறந்து விளங்கும் புண்ணியத்தலம். ராமாயணமும் மகாபாரதமும் என சரித்திரங்களைக் கேட்பதும், பாகவத புராணம் வாசிப்பதும், பஜனைப் பாடல்களைப்பாடு வதும் என பக்தியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, இறைத்தொண்டை வாழ்வின் ஓர் அங்கமெனக் கொண்டு வாழும் பக்தர்கள் நிறைந்த பழம்பதி.
அங்கே வசித்து வந்தார் அந்தப் பெண்மணி. பெற்றோர் இட்ட பெயர் பிரேமாபா. பெயருக்கு ஏற்ப, சக மக்களிடமும் பகவானிடத்தும் பிரேமை மிக்க வராயிருந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இயற்கையிலேயே பகவத் பக்தியும், அன்பும், இரக்கமும் கைவரப் பெற்றிருந்தது. தக்க காலத்தில் திருமணம் ஆனது. இவரது குணத்துக்கு நேர் எதிராக அமைந்தான் கணவன். பக்தியில்லை, நற்பண்பில்லை, குணமுமில்லை, உடல் நலனும் உருப்படியாக இல்லை! ஏழ்மையின் காரணத்தால் ஏதோ ஒரு வாழ்க்கையில் அகப்பட்டு விட்டோமே என்று வருந்தாத நாளும் இல்லை. சரி, நாம் செய்த பாக்கியம் இத்தனையே என்று தன்னைத் தேற்றிக் கொண்டு, மன நிறைவு கண்டு காலம் கழிக்கலானார்.
குடும்ப வேலையில் ஈடுபட்ட நேரம் போக, மீதி நேரமெல்லாம் பகவத் பக்தியிலும், பாடல்களைப் பாடுவதிலும் ஈடுபட்டார். ராமாயணம், பாகவதக் கதைகளைப் படிப்பார். ஸ்ரீகிருஷ்ணனின் நினைவினில் மூழ்கித் திளைப்பார். அந்தக் கிருஷ்ணன், இவரிடம் குழந்தைக் கண்ணனாகவே மடியில் ஓடி விளையாடினான். அவனை அவ்வாறே உருவகித்துப் பாடுவார்.
அவரது கிருஷ்ண பக்தியின் விளைவு... பிரேமாபாக்கு அழகிய ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ராமனையும் கிருஷ்ணனையும் எப்போதும் நினைத்திருக்க, குழந்தைக்கும் ராமகிருஷ்ணன் என்றே பெயரிட்டார். அவனை அழைத்துக் கொஞ்சும் போதெல்லாம் அந்தக் கிருஷ்ணனும் ராமனுமே அவள் உள்ளத்தில் எதிர்ப்பட்டார்கள். ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து ஆனபோது, பிரேமாபாயின் கணவர் திடீரென நோவாப்பட்டு உயிரிழந்தார். பிரேமாபாயைத் துயரம் சூழ்ந்து கொண்டது. துன்பத்தின் வேதனை தாளாமல், தவியாத் தவித்தார். வாழ்வின் ஊன்றுகோல் தளர்ந்தது போல் மனம் நொந்தார். ஆனாலும், கண்ணனின் மீதான பக்தி, அவர் கண்களில் புரண்ட நீரைக் குளிர் வித்து அவரைக்கரை சேர்த்தது. ஒருவாறு மனம் தேறி மீண்டார். கிருஷ்ணனின் பாடல்களைப் பாடுவதிலும், தன் மகன் ராமகிருஷ்ணனை பக்தி சிரத்தையுள்ள ஓர் ஆடவனாக வளர்ப்பதிலும் என அவள் பொழுதும் கழிந்தது.
வீட்டில் இருந்த சாளக்ராம மூர்த்தங்களுக்கு ஆராதனை செய்வது நித்தியப் படி பூஜை ஆனது. உலகப்பற்று கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று, பகவத் பக்தியில் தன்னுணர்வற்ற நிலையில் அதிகம் இருக்கத் தொடங்கினாள். ஞானம் எனும் தீபம் அவள் நெஞ்சில் சுடர்விடலாயிற்று! பகவத் பக்தியுடன் இப்போது பாகவத பக்தியும் சேர்ந்து கொண்டது. ஊருக்கு வரும் பாகவதர்களை உபசரிப்பதும், அவர்களுக்கு உணவு சமைத்துப் பரிமாறுவதும் ஒரு தொண்டெனக் கைக்கொண்டாள்.
மாலைநேரம் ஆனால் போதும், எங்கெல்லாம் பகவானின் சரிதங்கள் சொல்லப்படுகிறதோ அங்கே சென்று அமர்ந்து, அவற்றைக் கேட்டு வருவாள். மறுநாள் பகலில் தன் மகன் ராமகிருஷ்ணனை முன் அமர்த்திக்கொண்டு, அதே பாவனையில் கதையைச் சொல்லி மகிழ்வாள். அவனும் தன் அன்னையிடம் கதையைக் கேட்டு வளர்ந்தான்.
ஒரு நாள் மாலை நேரம்... அடியார்க்கு அமுது இடும் இவளின் அன்பைக் கேள்விப்பட்ட பாகவதர்கள் சிலர் பிரேமாபாயின் வீட்டைத் தேடி வந்தனர். அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்தாள். வந்தவர்கள் அகால நேரத்தில் வந்தனர். இவர்களுக்கு உணவு தயார் செய்து அனைவருக்கும் அமுது அளித்து விட்டுச் செல்வதென்றால், அன்று தாம் கேட்க வேண்டிய முக்கியமான பாகவதக் கதைப்பகுதி விடுபட்டு விடுமே! வந்தவர்களை உபசரிக்காமல் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பவும் முடியாதே! என்ன செய்வது என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்.
ஒருபுறம், விருந்துக்கு வந்த அடியார் கூட்டம். மறுபுறம், பாகவதக் கதை கேட்கத் திரண்ட பக்தர் கூட்டம். தாம் எங்கே இருப்பது? வெகுநேரம் மனத்தில் தவியாத் தவித்தாள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தாள். வந்த அடியார்க்கு உணவிடும் செய்யலைத் தாம் செய்வதென்றும், தன் மகனைத் தனியேபாக வதம் கேட்க அனுப்பி, அவன் மூலம் கதையைக் கேட்டுக் கொள்வது என்றும் தீர்மானித்து அப்படியே செய்தாள்.
மகன் ராமகிருஷ்ணன் கதை கேட்க அனுப்பப் பட்டான். அவனுக்கு ஏற்கெனவே தாய் சொன்ன பாகவதமும் புராணமும் எல்லாம் தெரிந்ததுதான் என்றாலும், அன்று என்ன விசேஷமாகச் சொல்லப் படுகிறது என்று கேட்டுவரச் சென்றான்.
வீட்டில் பிரேமாபா, சமையல் செய்து, வந்தவர்களுக்கு உணவிட்டு உபசரித்து முடித்தாள். கதை கேட்கப்போன ராமகிருஷ்ணனும் சற்று நேரத்துக் கெல்லாம் வீட்டுக்குத் திரும்பினான். ஆர்வத்துடன், அவனை அருகே அமர்த்திக் கொண்டவள், அன்றைய கதையின் விசேஷத்தை அப்படியே சொல்லுமாறு கோரினாள். கதாகாலட்சேபத்தில் எப்படி பாகவதக் கதை சொல்லப்பட்டதோ அதே போல் சொல்லும் திறனை அவன் பெற்றிருந்தான். அதே பாவனை! அதே லயம்! பாட்டும் கதையும் அவன் குரலில் அதே போல் பிரவாகமெடுத்தன. அங்கே கிருஷ்ணன் தத்ரூபமாக நடமாடினான்.
அது பாகவத் கதையின் தசம ஸ்கந்தத்தில் குழந்தைக் கண்ணனின் விஷமத்தனங்களைக் குறிப்பிடும் பகுதிதான்! வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு கண்ணன் அங்கே ஓடி விளையாடினான். வெண்ணெய் திரட்டி உண்டு மேலெல்லாம் அப்பிக் கொண்டு, அதன் மேலும் புழுதி அளைந்து பொன் மேனியனா அவன் அங்கும் இங்கும் ஓட்டம் காட்டினான்! துரத்திச் சென்றாள் யசொதை. அன்னையின் கைகளுக்குப் பிடிபடாமல் அங்கும் இங்கும் ஓடினான் கண்ணன். சொர்வின் மிகுதியில் கையில் கோல் எடுத்து குழந்தைக் கண்ணனை அதட்டினாள் அன்னை யசொதை.
கண்ணைப் புரட்டி விழித்துக் கசக்கிக் கொண்டு அழும் பாவனையில் அப்படியே நின்றான் கண்ணன். ஓட்டம் காட்டியவனை ஓரிடத்தில் நிறுத்த வேண்டுமே! யோசித்தாள் யசொதை. கயிறை எடுத்தாள். உரலொடு கண்ணன் இடுப்பைச் சேர்த்துக் கட்டினாள். தவழும் குழந்தைக்கு அது ஒரு தடையாகத் தெரிய வில்லை. உரல் உருண்டது. கயிறு தளர்ந்தது. வீட்டின் பின்புறத்துக்கே தவழ்ந்து சென்றான் கண்ணன். அங்கே இரட்டையா நின்று இடையூறு செய்த மருத மரங்களுக்கு இடையே தன் சிற்றிடை திணித்து வெளி வந்தான். கட்டிய உரல்கள் மரங்கள் இரண்டிலும் மாட்டிக்கொள்ள...
கதையை நிறுத்தினான் ராமகிருஷ்ணன். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு! பிரேமா பாக்கோ அது கதையெனத் தெரியவில்லை! கண்ணனே அவளில் நிறைந்திருந்தான். அடடா...! குழந்தையை ஒருத்தி இப்படியும் கட்டிவைப்பாளோ? அவள் தாயோ இல்லை வஞ்சகியோ? அந்தச் சிறுகுழந்தை இருளில்கிடந்து அல்லல்படுமே!
என்ன நினைத்தாளோ... வீட்டின் கொல்லைப் புறத்துக்கு ஓடினாள் பிரேமாபா! இதோ என் செல்லக் கண்ணனைக் கட்டியிருக்கும் கயிற்றை நான் அவிழ்த்து விடுகிறேன் என்று கதறிக்கொண்டே சென்றாள்! அன்னையின் செகை மகனுக்கு விளங்க வில்லை! அவனும்பின்தொடர்ந்து ஓடினான். நாள் முழுதும் அடியார்க்கு உணவு சமைத்து வேலை செய்த உடல் சொர்வு, அவளைக் கீழே தள்ளியது.
கண்ணா, அவளுக்கு என்னவொரு கல்நெஞ்சு? உன்னையா கட்டினாள் உரலில்! என்று பிதற்றியபடியே மண்ணில் உருண்டாள். கட்டுண்ட மாயனோ அவளைத்தன் கட்டுக்குள் அழைத்துக் கொண்டான். மூர்ச்சையானவள் மூச்சை விட்டாள் கிருஷ்ணா கோவிந்தா என்றபடியே! ஊரார் வந்தனர். பாடலும் பாகவதமும் என வாழ்ந்தவளைப் போற்றித்துதித்தனர்!

Comments