முத்தாயின் ஞானப்பிள்ளை

ஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசர் சுவாமிகளும் சம காலத்தில் வாழ்ந்து, சமயத்தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்தனர். சமுதாயத் தைச்சிந்திக்காத வழிபாடு சரியில்லை. பஞ்சம் ஒன்று வந்தது. திருவீழிமிழலையிலே பரமன் படிக்காசு அருள, மடத்தில் அடியார் என வந்தோர் அனைவருக்கும் உயிர் காக்க அமுதோ, கஞ்சியோ தந்தனர். திருமறைக்காடாம் வேதாரண்யத்தில் திருநெறிய தமிழ்பாடி மணிக்கதவம் திறக்கவைத்தார் ஞானக் குழந்தை. மீண்டும் திருக்காப்பிடப் பாடினார் அப்பர்.
அந்த சமயம் பாண்டி நாடும், மன்னனும் சமண ஆதிக்கத்தில் இருந்தனர். பாண்டிமாதேவியாம் மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் தவிர, அங்கயற்கண்ணி ஆலவாயப்பனை வழிபட ஆளில்லை. ச்மதச் சண்டையல்ல; பண்பாட்டு மாற்றம் நடந்தது. விளக்கே இறைவன் என்றது நம் சமயம். விளக்கு வைத்தால் பூச்சி சாகும் என இருட்டும் முன் உணவுண்டது பிறசமயம். மணமிக்க மலர், சந்தனம் இறைவனுக்கே என்றது நம் சமயம்; மணம் சிற்றின்ப வேட்கையைத் தூண்டும்; கூடாது என்றது பிற சமயம். ஆகவே மதுரை, மல்லிகையின், மரிக்கொழுந்தின் மணமில்லாது, சந்தனம் மணக்காது, பண் கேட்காது, ஒளியில்லாது இருந்தது.
கோளறு திருப்பதிகம்
ஞானப்பால் குடித்த குழந்தை வந்தால் சைவம் ஓங்கும் என மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் தூதுவரை அனுப்பி அழைக்க... அப்பரோ, ‘நாளும்
கோளும் நன்றாக இல்லையே!’எனக் கவலைப்பட்டார். ஆளுடைப்பிள்ளை, ‘ஆலவாய் அரண் துணை நிற்க, நாளும் கோளும் அடியானா வந்து நலியாய்’எனப் பாடியது கோளறு பதிகம். முன்பு ஒருமுறை அஷ்டகிரகச் சேர்க்கை என எட்டு கிரகங்கள் சந்தித்தன. உலகமே பயந்தது. காஞ்சி மகாபெரியவர்,
‘கோளறு பதிகம்பாடுக. கிரகங்களின் பாதிப்பு இருக்காது’ என்று அருளினார். நாங்களெல்லாம் பாடினோம்.
‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வா புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.’
எல்லா நாளும் அடியார்க்கு நலமே பயக்கும் என்று பாடி மதுரை வந்தார்.
திருநீற்றின் மகிமை மதுரையில் சிவனடியார்களுடன், சம்பந்தப் பெருமான் திருமடத்தில் தங்கினார். அரசனின் அனுமதி பெற்றுச் சமணர் அம்மடத்தில் தீ மூட்டினர். ஞானக்குழந்தை, ‘பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே!’ எனப் பாட, வெப்பு நோயாகப் பாண்டியன் வயிற்றில் அத்தீ பாய்ந்தது. அருள் வடிவாகப் ‘பையவே’ (மெதுவாக) என்றார். இல்லையேல் பாண்டியன் ஒரு பிடிசாம்பலாகியிருப்பானே! பாண்டிமாதேவி மங்கலநாண் என்னாகும்? குலச்சிறையார் மன்னன் மீது வைத்த அன்பு அதைத் தாங்குமா? பாண்டியன் மீண்டும் சைவத்துக்கு வர
வேண்டுமே. ஆதலால், மெதுவாகப் பற்று என்றார். சமணர் மந்திரித்துப் பயனில்லை. சம்பந்தர் திருநீறு பூசிவிட்டுத் திருநீற்றுப் பதிகம் பாட, வெப்பு நோய் மறைந்தது.
‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல
வாயான் திருநீறே’
இதைப் பாடுங்கள். நீறு பூசுங்கள். நோய் ஓடிப் போகும். சிவன் திருநீறு செய்த அற்புதம் இது. ஆகவே, சைவத்துக்கு மாறுங்கள் என அரசியும் அமைச்சரும் வேண்டினர்.
சமணர் உடன்படவில்லை. வாதம் நடத்துவோம்" என்றனர். அனல்வாதம், புனல்வாதம் நடத்திப் போட்டி போடுவோம். வென்றவர் பக்கம் சேரலாம்" என்றனர். நெருப்பில் அவரவர் கருத்தை ஏட்டில் எழுதிப் போடுவோம். எரியாது நிற்கும் ஏடு வெற்றிக்கு அடையாளம். இது அனல்வாதம். ஆற்று நீரில் நம் கருத்தமைந்த ஓலையை (ஏட்டை) எறிவோம். எதிர்த்து வந்து கரை ஏறும் ஏடு வென்றவர் ஏடு என்போம். இது புனல்வாதம்" என்றனர். நெருப்பு வளர்த்தனர். ஞானசம்பந்தர் கயிறு சார்த்தி எடுக்க, திருநள்ளாற்றுப்பதிகம் வந்தது. ‘போகமார்த்த பூண்முலை அம்மை’யின் புகழும், அருளும், ஏட்டை அவளைப் போலப் பச்சையாகவே இருக்கவைத்தது. எரியவில்லை. மரகதவல்லி என்றால் பச்சைப் பசுங்கொடி என்பது பொருள் அல்லவா! வைகை ஆற்றில் ஏடுகள் விடப்பட்டன.
‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’என்ற பதிக ஏடு கரை ஏறித்திருவேடகம் (திரு+ஏடு+அகம்) படித்துறையில் வர, மன்னன் பணிந்து, வியந்து அந்த ஏட்டைத் தலைமேல் ஏற்றிக் கொண்டான். வெப்பு நோய் மிகுதியால் உடல் வளைந்து கூன் பாண்டியனாக இருந்த அரசன், நின்றசீர் நெடுமாறன் ஆனான். மன்னனும் மக்களும் சைவத்தை மேற்கொண்டனர். அமைதிப் புரட்சி இது!
அங்கம் பூம்பாவை ஆன அதிசயம்
புண்ணியக்கன்றான சம்பந்தருக்குப் பதினாறு வயது. திருமயிலைக்கு வருகிறார். அங்கு சிவநேசச் செட்டியார், ஞானப்பிள்ளையின் முன் ஒரு சிறு மண் குடத்தை வைக்கிறார்! சம்பந்தர், என்ன இது?" என வினவ, உமக்காகவே, உம்மை மணம் முடிக்கவே நான் பெற்று வளர்த்த என் மகள் பூம்பாவை. பூ நாகம் தீண்டி உயிர் விட்டாள். அவளது எலும்பும் சாம்பலும் இக்குடத்தில் உள்ளன" என அழுதார் செட்டியார். கருணை பெருக்கெடுக்க திருமயிலைப் பதிகம்பாடுகிறார் ஞானக்குழந்தை. ‘மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை’ என்ற பதிகம் அது!
‘அடியார்க்கு அட்டியிட்டல் காணாமல் போனாயே பூம்பாவாய்!
தைப்பூசம் காணாமல் போய்விட்டாயே பூம்பாவை!’
என இரங்கிப் பாட, வெந்த சாம்பலிலிருந்த குடத் திலிருந்து அழகிய பன்னிரண்டு வயதுப் பருவ மங்கையாக மங்கலப் பூம்பாவை எழுந்து வந்து வணங்கினாள்.
என் மகள் உங்களுக்காக, உங்களால் உயிர் பெற்று வந்து விட்டாள். மணந்து கொள்க" என சிவ நேசர் சொல்ல, என்னால் உயிர் தரப் பெற்றவள் என் மகள் முறையாகிறாள். மணப்பது சரியில்லை" என்ற ஞானக் குழந்தையின் பக்குவத்தைச் சேக்கிழார் வியந்து பாடுகிறார்.
பிரம்மா யார்? பல ஊழிகளாக உலகை, உயிர்களைப் படைக்கும் படைப்புக் கடவுள். எத்தனையோ அழகிகளை, அழகான உயிர்களைப் படைத்தவன். ஒருமுறை மிக அழகான பொருள்களில் திலம் (எள்) அளவு எடுத்து உத்தம மங்கை ஒருத்தியைப் படைத் தானாம். அவள் திலோத்தமை. தன்னால் உண்டாக்கப் பட்டவள் தன் மகள் என்பதையும் மறந்து, மறைக்கிழவன் அவள் மீது சற்று ஆசை கொண்டானாம். வயதான பிரம்மா சபலப்பட்டான். சபல வயதான பதினாறுடைய ஞானப்பிள்ளை அழகான பூம்பாவையை என் மகள் என்றாரே! இது அல்லவா சிறப்பு! அவளை அழகியாகப் பார்க்கவில்லை. கண்ணுதல் கடவுளின் கருணை வெள்ளமாகப் பார்த்தாராம்.
பெற்ற தாய் பகவதி உலகுக்கு நன்மகனைத் தந்தார். ஆதிபராசக்தியான தாய் ஞானப்பாலால் அருள் சேர்த்தார். பெறாததாய் மங்கையர்க்கரசியாரோ அவரால் பாண்டி நாட்டை மீண்டும் சிவலோகமாக்கினார்.
‘எந்தைபிரான் சம்பந்தர் அடியார்க்கும் அடியேன்’

Comments