கும்பகோணம்

முக்கோண வடிவில் ஒரு குடம் போன்று அமைந்துள்ளது காவிரியின் டெல்டா பகுதி. அக்குடத்தின் மூக்கில் அமைந்துள்ள நகரம் என்பதால், குடமூக்கு என்று பெயர்பெற்றது கும்பகோணம்.  பண்டைய இலக்கியங்களிலும், தேவாரத் திருமுறைகளிலும், கல்வெட்டுகளிலும் குடமூக்கு என்ற பெயரே காணப்படுகிறது.

  விஜயநகர மன்னர்கள் (1371) தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது, தமிழில் இருந்த ஊர்களின் பெயர்களை வடமொழியில் மாற்றினர். அதன்படி குடமூக்கு, குட-கும்ப; மூக்கு-கோணம் என மாறி, கும்பகோணம் என அழைக்கப்படலாயிற்று.

பூவினுள் பதுமம்போலும் புருடருள் திருமால்போலும்
காவினுள் கற்பம்போலும் கலைகளுள் ஞானம்போலும்
ஆவினுள் சுரரான்போலும் அறத்துள் இல்லறமேபோலும்
நாவினுள் மெய்ந்நாப்போலும் நாட்டினுள் சோழநாடு


இத்தகைய பெருமைகளை உடைய சோழநாட்டின் கலைக் களஞ்சியமாக விளங்கும் கோயில்களைக் கொண்டது கும்பகோணம். நாகரிகம், கலை, இசை இவற்றுக்கு இருப்பிடமான இத்தலத்தில் தேவாரப்பாடல் பெற்ற திருக்கோயில் களும், ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற கோயில்களும் அமைந்திருக்கின்றன.

மகாமகத் திருக்குளம் சுமார் ஆறரை ஏக்கர் பரப்பில் கிழக்கு மேற்கில் நீள் சதுரத்தில் உள்ளது. வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்து கிழக்கில் குறுகி, மேற்கில் அகன்று வானிலிருந்து பார்க்க ஏறத்தாழ ஒரு குடம் போலக் காட்சியளிக்கிறது.

கங்கை, காவிரி போன்ற ஒன்பது நதி தேவதைகள் ஒன்பது கன்னிகைகளாகிச் சிவனை நோக்கி, ‘‘அனைவரும் எங்களிடம் வந்து நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.அவர்களின் பாவங்களை நாங்கள் சுமக்க வேண்டியிருக்கிறது! நாங்கள் அவற்றிலிருந்து எப்படி மீள்வது?’’ என்று வேண்டித் தவம் புரிந்தனர்.

அதற்குச் சிவனார், ‘‘பரத கண்டத்தில் சிருஷ்டி பீஜத்துக்கு உறைவிடமான ஓர் இடம் இருக்கிறது. மகா பிரளய காலத்தில், பிரம்மதேவன் சிருஷ்டி பீஜத்தை அமுதத்துடன் கலந்து வைத்திருந்த குடம் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு ஒதுங் கிய திருத்தலம் அது. வெள்ளம் வடிந்ததும், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நான் வேட ரூபம் தாங்கிச் சென்று, அந்தக் குடத்தின் மூக்கை அம்பால் உடைத்தேன். அந்தக் குடத்தில் இருந்த அமுதம் வெளியேறி பரவி தேங்கியதால் உருவான (மகாமக) தீர்த்தமும் அந்தத் தலத்தில் உள்ளது. குரு, சிம்ம ராசியில் - மக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், அந்தத் தீர்த்தத்தில் நீராடுங்கள். உங்கள் பாவங்கள் நீங்கும்'' என்று அருள்புரிந்தார்.

சிவ ஆணைப்படி நவ கன்னிகைகளும் இத்தலத்துக்கு வந்து மகாமகத் தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள். அதுமுதல் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நவதீர்த்தங்களும் இந்த மகாமகத் தீர்த்தத்தில் கலந்து புனிதம் சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

  திருக்குடந்தை மாநகரத்தின் பிரதான கோயிலாக, புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்வது ஸ்ரீமங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில். வேட வடிவம் கொண்ட சிவபெருமான் உலகத்தவர் பூஜித்து வழிபட்டு உய்யவேண்டி, தாமே தம்மை பூஜித்துக் காட்டத் திருவுளம்கொண்டு, கும்பத்தின் வாய் போக, எஞ்சிய கோணத்தை லிங்கமாக்கி அதனைப் பூஜித்தார்; பின், வேடவடிவம் நீங்கி, லிங்கத்துள் புகுந்து ஜோதிர்மயமாக விளங்குகிறார் என்று திருக்குடந்தை தலபுராணம் கூறுகிறது.

  அட்சய திரிதியை அன்று, குடந்தையில் உள்ள அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் உள்ள பெருமாள் மூர்த்தங்களும் கருட வாகனத்தில் அமர்ந்து கருட சேவை தரிசனம் தருவது சிறப்பு!

கும்பகோணத்தில் உள்ள வாணிவிலாஸ சபா, 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ‘இசைவாணி’ எனப் பட்டம் அளித்தது இந்தச் சபாதான். ‘எத்தனை பட்டங்கள்  கிடைத்திருந்தாலும் எனக்குப் பிடித்தது இந்தப் பட்டம்தான்!’ என்பாராம் எம்.எஸ். எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் சிறுவயதில் இந்தச் சபாவில் நடித்திருக்கிறார்கள்.

  செம்மங்குடியும், ராஜமாணிக்கம் பிள்ளை யும் அக்காலத்தில் இங்கு நாடகங்களுக்கு இசை அமைத்துத் தந்துள்ளனர்.  பள்ளியில் படிக்கும் போது, இயக்குநர் கே.பாலசந்தர் இந்தச் சபாவில் நாடகங்கள் பார்த்திருக்கிறார். இங்கு நடந்த ‘லவகுசா’ நாட்டிய நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார்.

  ஓலைச்சுவடிகளில் அழிந்துகொண்டிருந்த தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடிச் சென்று சேகரித்துத் தொகுத்து  அச்சில் வார்த்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளித்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தது கும்பகோணத்தில்தான். பல கணித கோட்பாடுகளை அளித்து உலகையே பிரமிக்க வைத்த கணிதமேதை ராமாநுஜம்,  ‘சில்வர் டங்’ ஸ்ரீநிவாச சாஸ்திரி ஆகியோர் பிறந்ததும் இந்த ஊரில்தான்.
  சிக்கரி குறைவாகக் கலந்து, பதமாக வறுக்கப் பட்ட அராபிகா, ரொபஸ்டா காபி விதைகளால் தயாரிக்கப்பட்ட காபிப் பொடியே கும்பகோணம் டிகிரி காபியில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த டிகாக்ஷனுடன் காய்ச்சிய பசும்பால் சேர்த்து, நுரை பொங்க அடித்து, பித்தளை டம்ளர், டபரா செட்டில் தரப்படுகிறது. இதுவே கும்பகோணம் டிகிரி காபியின் ஃபார்முலா.
ஹைதர்அலி 1780-ல் காஞ்சியை முற்றுகையிட்டபோது, காஞ்சி சங்கரமடம் கும்பகோணத்துக்குத் தற்காலிகமாக இடம் பெயர்ந்தது. அப்போது சங்கராசாரியாருக்கு அடைக்கலம் தந்தவர் கபீர் என்னும் ஓர் இஸ்லாமியர். அவர் பெயரால் கபீர் என்ற பெயரில் இன்றும் கும்பகோணத்தில் தெரு உள்ளது.

  சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டு மக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். எனவே, இந்த ஊரை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம்.

சுவாமி விவேகானந்தர் 1897-ம் ஆண்டு, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய நாட்களில் கும்பகோணம் டவுன்ஹாலில்தான் தன்னுடைய தாரக மந்திரமான ‘எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்!’ என்னும் அற்புத மந்திரத்தை முதன்முதலாக முழங்கினார்.
‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று புகழ்பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்தது கும்பகோணத்தில்தான். 1988-ம் ஆண்டில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப் பெற்று, அதில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ஓவியப் பிதாமகர் எனப் போற்றப்பெறும் ஓவியர் கோபுலு என்னும் கோபாலன் பிறந்ததும் இங்குதான்.

கும்பகோணம் வெற்றிலை மிகவும் பிரசித்தம். அதற்குக் காரணம் இங்குள்ள நீர்வளமும் மண்வளமும்தான். இன்றைக்கும் வெளியூர்களில் நடக்கும் கல்யாண வைபவங்களுக்கு கும்பகோணம் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Comments