ஸ்ரீ ராமானுஜ திக்விஜயம்

கலி புருஷனின் கொட்டத்தை அடக்கியவர் ராமானுஜர். இதனால் அவர் மீது பெருத்த கோபத்தில் இருந்தான் கலி புருஷன். வாய்ப்பு கிடைத்தால் எப்படியாவது ராமானுஜரைப் பழி வாங்கும் சமயத்தை எதிர் நோக்கியிருந்தான். அப்படியொரு வாய்ப்பு அவனுக்கும் கிடைத்தது. எம்பெருமானார்க்கே சொதனைகள் உண்டு என்றால் நம்போல்வார் எம்மாத்திரம்? என்பதை உணர்த்த எம்பெருமான் செய்த திருவிளையாடல் இது.
சோழ அரசன் பண்புள்ளவனாகத்தான் இருந்தான். எனினும், சில மந்திரிகளின் துர்போதனையால் மன்னன் மனம் மயங்கினான். ‘மந்திரிகளும், அரசனும் ஒருமித்தக் கருத்துடன் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்’ எனும் மூதுரை, இந்த துர்மந்திரிகளின் சம்பந்தத்தால் வருத்தமுற்றது. நல்ல விஷயத்தில் மன்னனை ஈடுபடுத்த வேண்டியவர்கள் மததுவேஷத்தை உண்டாக்கினர்.
ஒரு மதத்தை அழித்துதான் மற்றொரு மதத்தை நிலைநிறுத்த முடியும் எனும் கொள்கை என்றுமே தவறானது. அறிவின் மிகுதியால் ஆராய்ந்து பார்க்கும்திறன் பெற்றவர்களே வாதங்களில் வல்ல
மையை வெளிப்படுத்தி தங்களின் கொள்கை
தனை நிலை நிறுத்துவர். இது சாத்விகர்கள் இசைந்த வழி. பாண்டித்யம் கொண்டு வலியுறுத்த வேண்டியதை பலாத்காரமாகச் செய்ய நினைத்தான் அரசன்.
சைவ சமயப் பற்றுதல் உடைய அவனுக்கு வேறு மதங்கள் வளருவதில் விருப்பமில்லை. அதிலும் வைணவத்தை வேரோடு அறுத்துவிட உறுதி பூண்டான். வழிவழியாக அவன் முன்னோர்கள் வந்த வழிதனை மறந்து விட்டான். சைவத்தை வளர்ப்பதை விடவைணவம் வேரறுக்கவே அவன் எண்ணம் அதிகம் செயல்பட்டது என்றால் மிகையில்லை. இதற்காக பல வழிகளைக் கையாண்டான்.
குறிப்பாக, ‘சிவனை விட மேலான தெய்வம் இல்லை’ என்பதை ஒப்புக் கொள்ளும்படி எல்லோரையும் நிர்ப்பந்தம் செய்தான். இதற்கு உண்மை வைணவர்கள் மறுப்பு தெரிவிப்பர் என்பதை அரசன் நன் கறிந்திருந்தான். ‘வைணவத்தில் வாழ்வதா! அல்லது உயிருடன் வாழ்வதா!’ எனும் கேள்விக்கு உயிரே வென்றது.
ஆம், ‘சிவனை விட மேலான தெய்வமில்லை’ என்று ஒப்புக் கொண்டவர்கள் சிறப்பான சலுகைகளைப் பெற்றனர். ‘வைணவமே உயிர் மூச்சு; என் ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே’ என்ற ஆழ்வாரின் கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பயந்த மனோ நிலையிலேயே மக்கள் மாறத் தொடங்கினர். தான் வெற்றியடைந்து வருவதாக அரசன் பூரித்து நின்றான்.
வாளையும், வேலையும் கொண்டு வீரத்தால் எதிரி களை பயமுறுத்த வேண்டியவன், இன்று எளியவர்களை வென்றதாக இறுமாந்திருக்கிறான். தன் சமயம் வெற்றி பெறுவதாக பிரகடனம் செய்தான். உண்மையில் கலி புருஷன் கொஞ்சம், கொஞ்சமாக வெற்றி பெறுவதாகத் தோன்றியது. அரசனின் மந்திரி எல்லா விதத்திலும் அரசனுக்கு ஈடு கொடுப்பான். அரசே, இந்த எளிய வைஷ்ணவர்களை தாங்கள் நிர்ப்பந்தம் செய்து என்ன பயன்? இவர்கள் எல்லோருக்கும் தலைவரான ராமானுஜர் ஒருவர் ஒப்புக்கொண்டால் மொத்த வைணவமும் மண்ணுள் புதையுண்டு போகும். எனவே, ராமானுஜரை சபைக்கு வரவழைப்போம். அவரைப்பணிய வைப்போம்" என்றுதுர் போதனை செய்தான்.
ராமானுஜருக்கு அரசாணை அறிவிக்கப்பட்டது. ‘ஐயகோ! இது கொடியதாயிற்றே. எதிராசர் மன்னரிடம் சென்றால் மகானின் உயிருக்கு ஆபத்தாயிற்றே’ என்று சிஷ்யர்கள் கதி கலங்கினர். என்ன செய்வது? என்பது அறியாமல் திகைத்தனர்.
ராமானுஜரோ, அரசனின் அந்தரங்கம் (உள்ளம்) அறியாதவர். அதேசமயம் அரச சபைக்கெல்லாம் போவதற்கு விருப்பமில்லாதவர். இதற்குள்ளாக ஆசாரியரான பெரிய நம்பிகளும், சீடரான கூரத்தாழ்வானும் அங்கு விரைந்து வந்தனர். பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளதை அறிந்து விரைந்து செயல்பட்டனர். உடனடி யாக ராமானுஜர் திருவரங்கம் விடுத்து புறப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர். சாஸ்திர வரையறை மீறாமல், அதேநேரம் ஆபத் தர்மத்தில் உட்பட்டு ராமானுஜரை வெளியேற்றினர்.
அரசனின் சேவகர்கள் ஆசிரமத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். ராமானுஜரை அழைத்துச் செல்வதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். மிகுந்த சாதுர்யமுடைய கூரத்தாழ்வானின் சமயோசித புத்தி உடனடியாக செயல்பட்டது. தனது ஆசார்யரின் துறவறக் கோலத் தைத்தான் ஏற்றுக்கொண்டார். ஆம், இனிமையான இல்லறத்தில் உள்ள கூரத்தாழ்வான் காவித்துணியை தானுடுத்தி, கையில் த்ரிதண்டம் (முக்கோல்) ஏந்தினார். அரசனுக்கு ராமானுஜரைத் தெரியாது. காவியுடுத்தியவர் ‘வைணவத் தலைவர்’ எனும் எண்ணத்துடன் இருந்தான்.
பெரிய நம்பிகளும், கூரத்தாழ்வானும் அரச சபைக்கு வந்தனர். ‘வைணவர்கள் பயந்தவர்கள்’ என்று நினைத்த அரசனுக்கு இவர்களின் கம்பீரம் வியப்பை அளித்தது. அசராமல் அரசனைக் கண்டனர். அவர்களின் பார்வையின் கூர்மையால் தாக்குண்டு மன்னன் நிலை குலைந்தான். ம்... எழுதி கையெழுத்திடுங்கள்" அவன் ஆழ்வானை ராமானுஜராகத்தானே நினைக்கிறான். எனவே, ‘சிவனை விடமேலான தெய்வமில்லை என்று கையெழுத்திடுங்கள்’ என ஓர் ஓலை நறுக்கினை அவரிடம் அளித்தான்.
இங்குதான் கூரத்தாழ்வானின் கூரிய அறிவு
வேலை செய்தது. மெதுவாக ஓலைதனை வாங்கியவர், எழுத்தாணி எடுத்தார். ஆவலுடன் அரசன் அவரையே பார்க்கிறான். ‘தான் வெற்றி பெற்றுவிட்டோம்’ எனும் பூரிப்பு அவன் முகத்தில் ஜொலித்தது.
ஆழ்வான், ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனைவிட மேலான தெய்வம் இல்லை) எனும் சம்ஸ்கிருத வாக்யத்தின் கீழே, ‘த்ரோணமஸ்தி தத:பரம்’ என்று எழுதினார். அதாவது, சமஸ்கிருத மொழியின் சிறப்பு இங்கு அற்புதமாக எடுத்தாளப்படுகிறது. சிவம் என்பதற்கு முக் கண்ணனாகிய பரமசிவனை அரசன் பொருளாகக் கொண்டான். ஆனால், கூரத்தாழ்வான் கைக்கொண்ட பொருள் வேறு. ‘சிவம்’ என்பதற்கு ஓர் அளவை என்பது பொருள். அதாவது, தானியங்களை அளப்பதற்கு குருணி, பதக்கு என்றவாறு அளவைகள் உண்டு. இதில் ஒன்றைவிட மற்றொன்று பெரியது. ‘த்ரோணம்’ என்பதற்கு ‘பதக்கு’ என்பது பொருள். இப்போது ‘சிவம்’ என்பதற்கு ‘குருணி’ சிறிய அளவுள்ள ஒரு அளவை என்பதாக ஆழ்வான் பொருள் கொண்டான். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனைவிட மேலானவர் இல்லை) என்ற பொருளில் அரசன் நிர்ப் பந்தம் செய்ய, இவர், ‘குருணி’ என்ற அர்த்தத்தை வைத்து, ஏன் இல்லை... குருணியைவிட பதக்கு அளவில் பெரியதன்றோ" (த்ரோணம் அஸ்தி
தத:பரம்) என்று கேலி செய்து கையெழுத்திட்டார்.
‘எந்தவொரு மதத்தையும் நிர்ப்பந்தத்தினால், பலவந்தத்தினால் நிலைநிறுத்த முடியாது’ என்று உணராத அரசன் கொதித்தெழுந்தான். இதுவரை தன்னை எவருமே இவ்விதம் அவமானம் செய்ததில்லை. ஓர் எளிய வைணவன் எள்ளி நகையாடுவதா! கண்கள்
சிவந்தன. உதடுகள் துடித்தன. கோபத்தில் வசமிழந் தான். பாவத்திலும் பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தான். வாளையும், வேலையும் வீசியெறிந்து எதிரிகளைத் தாக்கும் யுத்தத்தில் வல்லவன், கூர்மை யான எழுத்தாணியின் தாக்குதலில் நிலை குலைந்தான்.
இந்த அவமானம் அவன் வாழ்வில் சந்தித்திராதது. தான் வணங்கும் தெய்வத்தை இவர்கள் எள்ளி நகையாடியதை இவனால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. உண்மையில் கூரத்தாழ்வான் இங்கு சிவனை நிந்திக்கக் காரணமேயில்லை! அரசனின் சமயப் பற்று ஏனையவற்றை அழித்துவிட எண்ணத்தை வளர்த்தது. இந்த இரு வைஷ்ணவர்களுக்கும் என்ன தண்டனையளிப்பது? என்று ஆலோசித்தான்.
அரசசபைக்குள் நுழைந்தபோது இவர்களின் கூர்மையான பார்வையினால், தான் தாக்குண்டது மனத்தில் நிழலாடியது. எனவே, ‘அந்தக் கண்களை (கண் விழிகளை) பிடுங்கி எறிந்துவிட வேண்டும்’ என்று கொடூரமான தண்டனை விதித்தான்.
இப்படி, அரச சபையில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும். அது ராமானுஜருக்கு ஆபத்தாகும் என்று எண்ணித்தானே, பெரிய நம்பிகளும், ஆழ்வானும் ராமானுஜரைத் தடுத்து தாங்கள் வந்தனர். எண்ணியவாறே நடந்தது. கொடுமையான அரசன் பெரிய நம்பிகளின் விழிகளை நோண்டினான். வலியிலும், வேதனையிலும் அம்மகாத்மா துடித்தார்; துவண்டார்.
கூரத்தாழ்வானோ! தனது கம்பீரம் துளியும் குறையாமல், நீ என்ன எனக்கு தண்டனையளிப்பது. கொடுங்கோன்மை கொண்ட உன்னைப் பார்த்ததே எனக்கு தண்டனைதான். நான் செய்த பாபம்தான். இத் தகையதொரு பாபத்தைச் செய்த என் கண்களை நானே பறித்துக் கொள்கிறேன்" என்று கையிலிருந்த எழுத்தாணியால் தன் கண்களைத் தானே பிடுங்கி எறிந்தார்.
எத்தகையதொரு வைராக்யமும், குரு பக்தியும் இருந்தால் இதைச் செய்ய முடியும். தரிசனம் என்றால் சம்ப்ரதாயம் என்பது பொருள். தரிசனம் என்றால் பார்வை என்பதும் பொருள். இப்போது, ராமானுஜ தரிசனத்தை (சம்ப்ரதாயம்) காத்திட பெரிய நம்பிகளும், கூரத்தாழ்வானும் தங்கள் தரிசனத்தை (பார்வை) இழந்தனர். இவர்கள் தியாகத்தின் திருவுருக்கள்.

Comments