மடி, ஆசாரம் என்று கூறி, குளித்து முடித்து ஈரத்துணியுடன் வந்து பிறகு ஆடை மாற்றுவது சரியா?


சாஸ்திரங்களில், குளித்து முடித்து ஈரத்தைப் பிழியாமல் அப்படியே உடுத்திக் கொண்டு பிரேத சம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும் என்று
சொல்லப் பட்டிருக்கிறது. தேவ காரியங்கள் என்று வரும்போது, துணியைப் பிழிந்து ஏழுமுறை நன்றாக உதறிக் கட்டிக் கொண்டால் மடி அல்லது ஈரத்தைப் பிழிந்து கொண்டு வந்து, வேறு மடியான துணியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்யலாம். ஆனால், தண்ணீர் சொட்டச் சொட்ட, பிழியாமல் வந்து காரியங்கள் செய்யக் கூடாது. சொட்டச் சொட்ட குளித்து விட்டும் உள்ளே வரக்கூடாது.


கடலில் ஸ்நானம் செய்வது, கங்கையில் ஸ்நானம் செய்வதற்கு ஒப்பானதா?
சமுத்திர ஸ்நானம் எல்லா நாட்களும் செயக் கூடாது. அமாவாசை, கிரகண காலங்கள், மாதப் பிறப்பு இந்தக் காலங்களில்தான் செய்யலாம். மற்ற நாட்களில் சமுத்திர ஸ்நானம் கூடாது. ‘சமுத்திர ஜலத்தைத் தொட்டாலே ஸ்நானம் செய்யணும்’ என்று சொல்கிறது சாஸ்திரம். வருஷம் 365 நாளும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யலாம் என்று சொல்லக்கூடிய ஒரே இடம் தனுஷ்கோடி மட்டும்தான். ‘ராம சேது’ என்று சொல்லக்கூடிய தனுஷ்கோடியில்தான் சமுத்திரத்துக்கு தோஷம் கிடையாது. ஆனால், சமுத்திர ஸ்நானம் என்பது விசேஷம்தான். கங்கை எப்படி சரீரத்தை சுத்தம் செய்யுமோ, அதுபோல்தான் சமுத்திரமும். இருந்தாலும் கங்கை கங்கைதான். கங்கைக்கு சமானமாக வேறு எதையும் சொல்ல இயலாது.


சுவாமிக்கு தேங்காய் உடைக்கும்போது, கோணல் மாணலாக உடைந்தால் கெடுதல் சம்பவிக்குமா?
தேங்காய் இரண்டாக உடைய வேண்டும். அப்படி உடையாமல் அதற்கு மேல் மூன்று, நான்காக உடைந்தால்தான் அபசகுனம் என்பது சாஸ்திரம். சிலர், நேராக உடையவில்லை என்றாலே அபசகுனம் என்பார்கள். அப்படியல்ல, இரண்டாக உடைய வேண்டும். அது தான் விஷயம்.


படுக்கை அறையில் கடவுள் படங்களை மாட்டி வைப்பது சரியா?
தப்பில்லை... வைக்கலாம். சிலர், ‘அதுபடுக்கும் இடமாச்சே, அங்கே சுவாமி படத்தை வைத்துக் கொண்டால் அது தோஷமாகாதா?’ என்று நினைப்பார்கள். நம் சாஸ்திரங்களில், ‘கர்ப்பாதானம்’ என்று ஒரு முறை உண்டு. சாந்தி கல்யாணம் என்று சொல்வோ மில்லையா! அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது என்றால், மனைவியின் வயிற்றில் கணவன் கையை வைத்துக் கொண்டு, ஒரு மந்திரம் சொல்ல வேண்டும். ‘விஷ்ணுர்யோனிம் கல் பயது’ என்று! அதாவது, ‘இந்தக் கர்ப்பப்பையில் விஷ்ணுவானவர் உட்காரட்டும். விஷ்ணுவானவர் கர்ப்பத்தை உண்டாக்கட்டும். விஷ்ணுவானவர் கர்ப்பத்தை ரட்சிக்கட்டும்’ என்று சொல்வது. அதிலிருந்தே பகவானின் நினைவுடன், பகவத் சங்கல்பத்துடன் நம் வாழ்க்கையை தொடங்கச் சொல்கிறது. அதனால், பகவானின் நினைவு எந்த விதத்திலும் எந்த இடத்திலும் வரவேண்டும். விழித்திருக்கும் நேரத்திலோ, படுக்கப் போகும் நேரத்திலோ, பகவானை நாம் பார்ப்பது, நினைப்பது என்பது உயர்வுதானே. எனவே, இதை தோஷம் என்று சொல்ல முடியாது.


ஏலத்தில் எடுத்த நகை மற்றும் வீடு, தோஷ௸ம் உடையவையா?


பொதுவாக, ஒருவரது கஷ்டத்தை அனுபவித்த எந்தவொரு பொருளையும் திரும்பவும் நாம் வாங்கி உபயோகிப்பது என்பது சரியாகாது. அதேநேரம், சில பொருள்கள் சிலரிடம் தங்குவதற்கு பாக்கியம் இருக்காது. சில பொருட்கள் சிலரிடம்தான் தங்குவதற்கு பாக்கியம் இருக்கும். ஒரு வீட்டை கோடி ரூபாய் செலவழித்துக் கட்டி, அதில் வசிக்கணும் என்று ஆசைப்பட்டாலும், யோகம் இல்லை என்றால் அது நிலைக்காது. யாருக்கு யோகம் உள்ளதோ அவர்களுக்குத்தான் அது வந்து சேரும். அந்த ரீதியில் ஏலத்தில் எடுத்த நகைகள் மற்றும் வீடுகளை வாங்கலாம் என்று கொள்ளலாம். சிலர் மிகுந்த மனக்கஷ்டத்தில் ஒரு பொருளைக் கொடுத்தோ அல்லது விற்றோ இருப்பார்கள். அதுபோன்றவற்றை ஏலத்தில் எடுப்பது என்பதையோ அல்லது அனுபவிப்பது என் பதையோ கூடியவரையில் தவிர்ப்பது நல்லது.

Comments