பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்

வழ்க்கையின் ஆதாரம் நீர். நீராடல் உத்தமச் செயல். நதி நீராடல் மிக உத்தமம். அதுவும் புஷ்கர சமயத்தில் நதி நீராடல் மிக மிக உத்தமச் செயல். புஷ்கரம் என்பது நதிகளின் திருவிழா. நீரில் இரண்டு சக்திகள் இருப்பதாக வேதம் போற்றுகிறது. ஒன்று, தாகம் தீர்ப்பது. இரண்டாவது, சுத்தம் செய்வது. இவ்விரண்டும் வெளிப்படையாகத் தெரிபவை. மறைமுகமாக மேத்யம், யஜனம் என்ற இரண்டு சக்திகளுமுள்ளன. ‘மேத்யம்’ என்பது நதியில் இறங்கி மூன்று முறை மூழ்கி எழுந்தால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீரும். ‘யஜனம்’ என்றால் நீரைத் தெளிப்பதால் (சம்ப்ரோக்ஷணம்) பூஜா திரவியங்கள் போன்றவற்றை பரிசுத்தமாக்குவது. நீர் நாராயண சொரூபம். ஆதலால், அவருடைய ஸ்பரிசத் தினால் பாவங்கள் தொலைந்து சுத்தமாகின்றன என்பது ஐதீகம்.
புஷ்கரம் என்பதற்கு நீர், வருணன், தாமரை, பன்னிரண்டு ஆண்டுகள் போன்ற பல பொருள்கள் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை இந்தியாவின் பன்னிரண்டு முக்கிய நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுகிறது. பிருஹஸ்பதி எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த நதிக்கு புஷ்கரம் வருகிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசி உண்டு. புஷ்கரம் என்பது சாதாரணமாக ஓராண்டு காலம் கொண்டாடப்படும் விழா. அதில் முதல் 12 நாட்கள், ஆதிபுஷ்கரம், கடைசி 12 நாட்கள், அந்தியபுஷ்கரம். இவ்விரண்டுமே முக்கிய விழா நாட்கள்.
புண்ணிய நதிகளில் நீராடி, மக்கள் தங்கள் பாவங் களைத் தொலைக்கின்றனர். நதிகள் அப்பாவங்களை ஏற்று அசுத்தம் ஆகின்றன. மனிதர்களால் தமக்கு ஏற்பட்ட பாவங்களைச் சுமக்கும் நதிகள் புஷ்கர சமயத்தில் புனிதம் அடைகின்றன.
முன்னொரு காலத்தில் தர்மத்தோடு வாழ்ந்த தந்திலன் என்ற முனிவர் செய்த தவத்துக்கு மகிழ்ந்த ஈஸ்வரன், தன் அஷ்ட மூர்த்திகளில் ஒன்றான ஜல மூர்த்தியை சாஸ்வத ஸ்தானத்தை அளித்தார். அதன் மூலம் தந்திலன் மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்களுக்கு அதிகாரி ஆனார். இதனால் சகல ஜீவராசிகளையும் போஷிக்கும் சக்தி அவருக்குக் கிடைத்தது. ‘போஷிக்கும்’ சக்தியை வடமொழியில் ‘புஷ்கரம்’ என்பர். இவ்விதம் தந்திலன் புஷ்கரன் என்றானார்.
பிரம்மாவின் சிருஷ்டி தொழிலுக்கு நீர் தேவை என்பதால் ஜல சாம்ராஜ்ய சக்ரவர்த்தியான புஷ் கரனைத் தனக்கு தரும்படி ஈஸ்வரனிடம் கோரினார் பிரம்மா. ஈஸ்வரனின் அனுமதியோடு புஷ்கரன் பிரம்மாவின் கமண்டலத்தில் புகுந்தார். பிரம்மாவின் வேலை பூர்த்தியானவுடன், உயிர்களைக் காப்பதற்காக பிருகஸ்பதி, உயிர்களின் ஜீவாதாரமான நீரை அளிக்கும்படி பிரம்மாவை பிரார்த்தித்தார்.
ஆனால் புஷ்கரன், பிரம்மாவை விட்டு விலக இணங்கவில்லை. அப்போது பிருகஸ்பதி, பிரம்மா, புஷ்கரன் மூவரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அதன்படி கிரக ரூபத்தில் உள்ள பிருகஸ்பதி, மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளில் பிரவேசிக்கும்போது ஆண்டில் முதல் பன்னிரண்டு நாட்களில் முழுமையாகவும், மீதி உள்ள நாட்களில் மத்தியானம் இரண்டு முகூர்த்த காலம் மட்டும் புஷ்கரன் பிருகஸ் பதியோடு இருக்க வேண்டுமென்று தீர்மானமாயிற்று. அச்சமயத்தில் அனைத்து தேவதைகளும் பிரகஸ்பதி யின் அதிதேவதையாக உள்ள நதிக்கு புஷ்கரனுடன் வருவார்கள். ஆதலால், புஷ்கர நதி நீராடல் புண்ணிய மளிக்கக் கூடியது என்று புராணங்கள் விவரிக்கின்றன.
புஷ்கரன் நதிகளுக்கு வரும் சமயம் சப்த ரிஷிகளும் அவருக்கு கௌரவமளித்து வரவேற்பளிப்பர் என்றும், அக்காலம் மிகவும் பவித்ரமானதென்பதும் பக்தர்களின் நம்பிக்கை. பிருகஸ்பதி மேஷ ராசியில் பிரவேசிக்கை யில் புஷ்கரன் கங்கா நதியிலும், கன்யா ராசிக்கு வரும் போது, கிருஷ்ணா நதியிலும், சிம்ம ராசிக்கு வரும்போது கோதாவரியிலும் வந்து சேருவார் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு புஷ்கர சமயத்திலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர் கள் வந்து அந்நதியில் நீராடிச் செல்வது வழக்கம். பித்ருக்களுக்குத் தர்ப்பணமளிக்க இந்நாட்கள் மிக உகந்தவை. புஷ்கரம் நிகழும் ஓராண்டில் அந்த நதிக்கு அருகில் வசிப்பவர்கள் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முக்கரணங்களால் செய்த பாவங்களை புஷ்கர ஸ்நானம் போக்கி விடும். ஒருமுறை புஷ்கரத்தில் நீராடினால் பன்னிரண்டு ஆண்டு காலம் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடிய பலனையும், மோட்சத்தையும், அசுவமேதயாகம் செய்த புண்ணியமும், நோய்கள் நீங்கி ஆரோக்கியமும் கிடைக்குமென்பது ரிஷிகளின்வாக்கு.
புண்ணிய நதிகளுள் ஒன்றான கிருஷ்ணா நதி, இந்தியாவின் நான்காவது பெரிய நதி. 1,300 கி.மீ.
நீளம் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையில், மகாராஷ்டிராவின் மகாபலேஸ்வரில் உற்பத்தியாகி கர்நாடகா, தெலங்கானா வழியாகப் பாய்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் ‘ஹம்சலதீவி’யில் வங்கக் கடலில் கலக்கிறது. நதிக்கரையில் பல புண்ணிய கே்ஷத்ரங்கள் உள்ளன. அவற்றுள் இந்திர நீலகிரி மலையில் அமைந்துள்ள விஜயவாடா கனக துர்கா ஆலயம், ஸ்ரீசைலம் பிரமராம்பிகா, மல்லிகார்ஜுன சுவாமி ஆலயம், குண்டூர் அமராவதியில் உள்ள அமரேஸ்வரர் ஆலயம் ஆகியவை முக்கியமானவை. இவற்றுள் விஜயவாடா நகரம் கிருஷ்ணா புஷ்கரத்தின் முக்கிய மையம்.
தெலங்கானாவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஆலம்பூர், பீச்பல்லி, மட்டபல்லி போன்ற புனிதத் தலங்கள் புஷ்கரத்துக்காகத் தற்போது புதிய வனப்பு பெறுகின்றன. வரும் ஆகஸ்ட் 12 முதல் 23ம் தேதி வரை நடைபெறும் கிருஷ்ணா புஷ்கரத்தை முன்னிட்டு அந்நதியின் நீராடும் துறைகளை எல்லாம் சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி அலங்கரிப்பதில் ஆந்திரப் பிரதேச அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கிருஷ்ணா நதியைச் சுற்றி உள்ள மூன்று மாவட்டங்களிலும் புஷ்கர ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தின் முதல் கிருஷ்ணா புஷ்கரம் என்பதால்
ஜோராக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. புஷ்கரம் என்பது நதிகளை பூஜை செய்து நீராடுவதற்கு மட்டு மல்ல, நதிகளையும் அதன் சுற்றுச் சூழலையும் பரி சுத்தமாக வைத்துக்கொள்ளும் நிமித்தம் இந்தப் புஷ் கரங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.

Comments