அழகைக் காக்கும் அரம்பேஸ்வரர்

திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் பரமன். பூமியே தேராக, சூரிய, சந்திரரே சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேரு மலை வில்லாக, வாசுகியே நாணாக, நாராயணப் பெருமானை அம்பாகக் கொண்டு, தாரகாக்ஷன், கமலாக்ஷன் மற்றும் வித்யுன் மாலி ஆகியோரின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டு விட்டார் பரமன். என்ன தான் தந்தையானாலும் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் விநாயகரை வழிபட வேண்டும் என்பதை மறந்தார் பரமன். இதனைக் கண்ட விநாயகப் பெருமான் புன்முறுவலுடன் ஆகாயத்தில் எழுந்த பரமனை நோக்கினார். அவர் பார்வையைத் தாங்க இயலாமல் தேரின் அச்சு முறிந்தது. மேல் எழும்பிய தேர் நிலை தடுமாறி கீழே இறங்கியது.
சாந்த தேரில் இருந்த பரமன்தன் கையில்
இருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். அப்போது அவர் கழுத்தில் இருந்த கொன்றை மாலை சற்றுத் தொலைவில் போய் விழுந்தது. அதிலிருந்து பரமன் சுயம்பு லிங்கமாக அமர்ந்தார். தேவர்களையும் தெய்வங்களையும் திரிபுர
அசுரர்களிடம் இருந்து காக்க வந்ததால் இறைவனுக்கு தெவநாயகேஸ்வரர் என்று பெயர்.
இந்த நேரத்தில் தேவலோக அப்சரஸ்களான ரம்பா, மேனகை, ஊர்வசி ஆகியோர் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். தங்கள் அழகு பொலிவிழந்து வருவதைக் கண்டு அவர்களுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனைக் கேட்க தேவகுரு ப்ரஹஸ்பதியை அணுகினர். அவர், அம் மூவரையும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார்.
அதைக்கேட்ட தேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக்கரைக்கு வந்து தெவநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க, அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு, அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள், தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். ரம்பை பிரதிஷ்டை செய்த லிங்கம் ‘அரம்பேஸ்வரர்’ என்றும், ஊர் அரம்பையர்க் கோட்டம் என்றும் வழங்கப்பட்டது.
நாளடைவில் அது மருவி, ‘இலம்பையங்கோட்டூர்’ என்றும், இன்று எழுமியன்கோட்டூர் என்றும் அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் திருவிற்கோலம் திருத்தலத்தைப் பாடிவிட்டு இந்த வழியே சென்ற போது தன்னை அறம்பயர்க்கோட்டத்தில் பாட வேண்டும் என்று சிவ
பெருமான் விரும்பினார். ஒரு வயோதிகரா, ஒரு பாலகரா அவர் முன்தோன்றி தன்னை அறம்பயர்க்கோட்ட திருத்தலத்தில் பாடுமாறு வேண்டினார்.
ஆனால், சம்பந்தரால் மல்லிகை வனத்துக்குள் இருந்த தெய்வநாயகேஸ்வரரைக் கண்டுபிடிக்க இயல வில்லை. எனவே, ஈசன் ஒரு காளையாக மாறி சம்பந்தரை விரட்டினார். இறைவனைக் கண்ட சம்பந்தர் மனமுருகி, ‘எனதுரையை தனதுரையா’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அப்பாடலில் இந்த இறைவனை வழிபடுவதன் மூலம் தங்கள் இளமையையும் அழகையும் நிரந்தரமாக்கி இறைவனை அடைந்து முக்தி பெறலாம் என்று கூறுகிறார். தெய்வநாயகேஸ்வரர் தீண்டா திருமேனியாகும். பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன.
1983ஆம் ஆண்டு, இவ்வூரில் இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடியினைத் தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர். கருவறை மூலவரின் மேல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 முதல் 7 வரையும், செப்டம்பர் 5 முதல் 11 வரையும் சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுந்து வழிபாடு செய்கின்றன.
அன்னை கனககுஜாம்பிகை தன் பாதத்தில்
காஞ்சி மகா பெரியவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரத்துடன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையினை சாத்து, கண்களை மூடி, கைகளால் சின் முத்திரை காட்டி, அதைத் தன் யக்ஞோபவீதத்தின் ப்ரம்ம முடிச்சின் மேல்வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும், மறு கரத்தில் அக்க மாலையும் தாங்கி இருக்கும் கோலத்தைக் காண கண்கள் கோடி போதாது. குரு பெயர்ச்சி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் யோக தட்சிணாமூர்த்தியின் அருளினைப் பெற்று பலனடைகின்றனர்.
அரம்பையர் அமைத்த அரம்பேஸ் வரர் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் வீற்றிருந்து தன்னை வணங்கு வோர்க்கு பதினாறு செல்வங்களும் வழங்கத் தயாராக இருக்கிறார். இக்கோயில் முழுமையாக புதுப்பிக்கப்
பட்டு இப்போது பொலிவுடன் திகழ்கிறது. கோயிலில் ஒரு வேத பாடசாலையும் செயல்பட்டு வருகிறது. பல கல்வெட்டுகள் இக்கோயிலில் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதுவும் இங்கு காணப் படவில்லை.
அமைவிடம்: சென்னை - அரக்கோணம் சாலையில் கூவம் கிராமத்தை கடந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எழுமியன்கோட்டூர் என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது.
தரிசன நேரம்: கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே. எனவே, அர்ச்சகரிடம் பேசி விட்டுச் செல்வது நலம்.
தொடர்புக்கு: 96000 43000

Comments