பரம்பொருளைப் பாடிய பக்தைகள்!

தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. தோழியரோ போட்டி போட்டு மண்ணில் புரண்டு விளையாடினர். அவளும் தன் பங்குக்கு ஒரு மணல் வீடு கட்டியிருந்தாள். பிஞ்சுக் கைகளால் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. அழகாத்தான் இருந்தது. ரசித்துக் கொண்டிருக்கும் போதே... அட! என்ன இது? குழந்தை கட்டிய வீடென்றும் பாராமல் இப்படியா அதைத்தன் கால்களால் மிதித்துக் கலைத்து விட்டு அப்படியே செல்வது? தம்பூரா மீட்டிக் கொண்டு ஏதோ பாடியபடி, எங்கோ பார்த்து நடந்து கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பெருகியது அவளுக்கு. ஓடிச் சென்றாள் சிறுமி!


சிறு வீட்டைக் கலைத்த அந்தப் பெரியவரை மறித்து நின்றாள்.
பெரியவருக்கு ஒன்றும் விளங்கவில்லை! ஏதோ சுய உணர்வு திரும்பப் பெற்றவரா மலங்க மலங்க விழித்தார். கோபத்தில் சிறுமி கத்தினாள், ‘வயதானவர் என்றால் இப்படித்தான் ஒரு சிறுமியின்
சிற்றிலைச் சிதைப்பீரோ?’


இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. சிறுமி கட்டிய மண்வீட்டைத் தாம் தன்னுணர்வற்ற நிலையில் சிதைத்து வந்தது! அதற்காக சிறுமியிடம் மன்னிப்பு கேட்டார் அவர். அம்மா... நானோ என்னை மறந்து பாடிக் கொண்டு வந்தேன். அறியாமல் செய்த தவறு! நான் வேண்டுமானால் உனக்கு ஒரு மண் வீடு கட்டித் தரட்டுமா?
வினயமாகத்தான் கேட்டார் அவர். ஆனாலும் அச்சிறுமி அதற்கெல்லாம் மசியத் தயாராயில்லை! ம்ஹும் முடியாது. நீர் உம் கையில் வைத்த தம்பூராவை அதற்கு ஈடாகக் கொடுத்துவிடும் என்று அடம் பிடித்தாள். இதென்னடா வம்பாகப் போயிற்று... நீ கட்டிய மண்வீடும் இந்தத் தம்பூராவும் சமமாகுமா? அடம்பிடிக்காதே குழந்தா என்றார் அவர். ஆனால் அவள் அடங்க வேண்டுமே?! அடம் பிடித்தாள். வேறு வழியின்றி தம்பூராவைக்  கொடுத்த பெரியவர், அவளிடம் இருந்து அதை மீட்கப் படாத பாடுபட்டார். இறுதியில் அவள் காதில் எட்டெழுத்து மந்திரத்தை ஓதினார். இதைச் சொல்லிக் கொண்டிரு. உனக்கு இந்தத் தம்பூராவை விட பெரும் செல்வம் கிடைக்கும். நீ குழந்தை என்பதால், பிரகலாதன் கதையைச் சொல்கிறேன். இப்படித்தான் அவன்..." என்று பிரகலாதனைப் பதிய வைத்தார். அவளும் அதைக் கேட்டுக் கொண்டு, தம்பூராவைத் திருப்பி அளித்தாள். உம் பாட்டு மிக நன்றாக இருக்கிறது. எனக்கு அதைச் சொல்லித் தரவேண்டும். எப்போது திரும்பி வருவீர்?" என்று கேட்டாள் அந்தச் சிறுமி! தாம் பண்டரிபுரம் செல்வதாகவும், பின்னொரு நாள் அவள் நினைக்கும்போது வந்து சொல்லித் தருவதாகவும் கூறி அப்போதைக்கு விடைகொண்டு சென்றார். அவரின் கானம் இவள் காதுகளில் பட்டு மெது வாத்தேந்தது.
அதுமுதல் அந்தச் சிறுமியின் வாயில் அஷ்டாட்சர மந்திரம் அருவியாப் பெருக்கெடுத்தது. சிறுமிக்கு உரிய உற்ஸாகம் போனது. எந்நேரமும் மந்திர ஜபம் முணுமுணுக்க, அவள் இருந்த கோலம் கண்ட பெற்றோர் அச்சத்தின் உச்சத்துக்கே சென்றனர். உடனிருந்த தோழியரோ, பெரியவர் ஒருவர் வந்ததையும், தம்பூராவை இவள் திருப்பியளிக்க அவர் ஏதோ கதையைச் சொன்னதையும் அந்தத் தாய்யிடமே விளக்கினார்கள். தாய் அதிர்ந்தாள். ‘ஹே பகவானே! அன்றொரு நாள் கனவில், உன் குழந்தை பக்தியில் சிறந்து விளங்குவாள் என்று உரைத்தீர். ஆனால் அவள் ஏதோ பித்தாகிவிடுவாள் போலுள்ளதே! பாண்டுரங்கா நீயே காப்பாற்று’என்று கதறிக் கைதொழுதாள்!


பின்னே...! கவலை இராதா என்னே! நெடு நாட்களாக குழந்தைச் செல்வம் இல்லை. அந்தப் பாண்டுரங்கனையே உபாயமெனப் பற்றி, அவனிடமே பிரார்த்தனை செய்தார்கள், பண்டரிபுரத்தில் வாழ்ந்த கங்காதர ராவ், கமலாபா தம்பதியர்! அவர்களின் பிரார்த்தனைக்கு விடையளித்தான் பாண்டுரங்கன். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் அது பக்தியில் சிறந்து விளங்கு மென்றும் கனவில் கண்டார்கள்.


சக்குபா பிறந்தாள். வளர்ந்தாள். துடுக்குத்தனம் எல்லாம் அந்தப் பெரியவரைக் கண்டு மந்திர உபதேசம் பெற்ற பின் மறைந்தது. எப்போதும் ஜபம்தான். கவலை கொண்ட தாய், பத்து வயது முடிந்த பெண்ணிடம் மணம் பற்றிப் பேச்செடுத்தாள். சக்குபாயோ, பாண்டுரங்கனை மணப்பேன் என்றாள். தாயின் கவலை கூடியது. பாண்டுரங்கனே வழிவிடுவான் என்று இருந்துவிட்டாள். ஊரிலோ, சக்குபாக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகப் பேச்சு எழுந்தது. அவளை எவர் திருமணம் செய்வார்கள் என்று காதுபட பேசிக் கொண்டார்கள்.
வருடங்கள் சென்றன. மித்ருராவ் என்பவன் வேறு ஊரில் இருந்து அங்கே வந்தான். வந்தவன், சக்குபாயின் தேஜஸைக் கண்டு மயங்கினான். பெற்றோரிடம் சென்று , அவளைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரினான். அவனது குணாதி சயம் பிடித்துப் போகவே, கங்காதர ராவ் சக்குபாயிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். சக்குபாயும் அதை ஏற்றாள். நன்னாளில் திருமணமும் முடிந்தது. சில காலத்துக்குப் பின், சக்குபாயைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்றான் மித்ரு ராவ்.


சக்குபாயின் புகுந்த வீட்டில் எல்லோருமே அவளைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால், இவளோ வீட்டு வேலைகளைச் செய்துவந்தாலும், பின்னர் தெய்வ சிந்தனையில் அமர்ந்து தியானம் செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எப்போதும் பாண்டுரங்க பஜனையைப் பாடிக் கொண்டிருப்பதும் புகுந்த வீட்டில் ஒரு அன்னியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நிந்தனை, அடி, ஏச்சுப் பேச்சு என்று  சக்குபாய் அவஸ்தையை அனுபவித்தாள்.
அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதோ என்று எண்ணி, வைத்தியம் செய்தார்கள். அதனாலும் பயன் இல்லை. அதேதியான மனநிலை. வாய்திறவாத அமைதி. வெறுத்துப்போன அவள் கணவனோ ஒருநாள்யாருமற்ற அறையில் அடைத்துப் பூட்டினான். ஆனால் வருந்துவதற்குப் பதில் மகிழ்ந்த சக்குபாய் அங்கே தனிமைத் தியானத்தில் ஈடுபட்டாள். அன்று அஷ்டாட்சர மந்திரம்
கொடுத்த பெரியவர், இப்போது வரமாட்டாரா என்று ஏக்கத்தில் தவித்தாள்.


பிரார்த்தனையின் வலிமைதான்! அந்த இருட்டறையிலும் வெளிச்சக்கீற்றா அதே பெரியவர் குரல் கேட்டது ‘உன்னைக் காக்க வந்து விட்டேன்’ என்று! அந்தப் பெரியவர், வீட்டு வாசல்முன் பிச்சை கேட்டார். வீட்டில் உள்ளோர் துரத்தி விட்டனர். அவரோ, ‘உள்ளே ஒரு பெண் நோயுற்றிருக்கிறாள், அவளை குணப்படுத்துவேன்’ என்றதும், சக்குபாயின் கணவன் முன்வந்து அவரை அழைத்துச் சென்றான். இருட்டறை திறக்கப்பட்டது. பெரிய வரைக் கண்ட சக்குபாய் ஓடிவந்து பாதம் பணிந்தாள். புக்ககத்தினரோ, இதுவே ஒரு மாற்றம்தான் எனக் கண்டனர். அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது, குளத்தில் மூழ்கச் செய்து மந்திரித்தால் சரியாகும் எனப் பெரியவர் கூற, அப்படியே செய்யப்பட்டது. அப்போது பெரியவர், இல்லற தர்மம் பற்றிக் கூறி, சக்குபாயை கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டே, பகவத் பக்தியில் ஈடுபடச் சொன்னார்.
சக்குபாயும் அவ்வாறே செய்தாள். அவள் கணவனும் வீட்டாரும் மகிழ்ந்தனர். நாட்கள் சென்றன. மீண்டும் அவள் மனத்தில் பாண்டுரங்கன் தோன்றினான். அவளுக்கு வாழ்க்கை வெறுத்தது. ஒரு நாள் நீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றவள், அதில் குதித்து உயிரை மாத்துக் கொள்ளத் துணிந்தாள். மீண்டும் ஓடோடி வந்தான் பாண்டுரங்கன், அந்தப் பெரியவரின் உருவில். குளத்தில் இருந்து அவள் காப்பாற்றப்பட்டாள். ஆனால், யாரோ ஒருவருடன் சக்குபா பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற பழி அவள் கணவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓடி வந்த அவன், அவரை அடிக்கக் கை ஓங்க, அங்கிருந்தோர் உண்மையை உரைத்தனர். மனம் வருந் தியவன், அவரிடம் மன்னிப்பு கேட்டு சக்குபாயை மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச் சென்றான்.


ஒரு நாள் பாகவத கோஷ்டி அவள் வீட்டின் வழியே ஏகாதசி உற்ஸவம் காண பண்டரிபுரத்தை நோக்கிச் சென்றது. அதை அறிந்து கொண்ட சக்குபாய், தானும் பண்டரிபுரம் செல்ல விருப்பம் தெரிவித்தாள். அவள் கணவனோ, மீண்டும் அடித்து அவளை அறையில் கட்டிவைத்தான். அழுது தீர்த் தாள் சக்குபாய். அப்போது, ஒரு பெண் அங்கே வந்தாள். சக்குபாய்க்குப் பதிலாகத் தான் கட்டுண்டு இருப்பதாகவும் அவள் பண்டரிபுரம் செல்லலாம் என்றும் சொன்னாள்.


அரைகுறை மனத்துடன் அவள் சொன்னதை ஏற்று, யாருக்கும் தெரியாமல் கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவ் என பரம பாகவதர்கள் அடங்கிய அந்த கோஷ்டியுடன் பாடல்களைப் பாடியபடியே பண்டரிபுரம் சென்றாள் சக்குபாய். வீட்டில் கட்டுண்டு இருந்த பெண்ணோ சக்குபாய் வடிவெடுத்தாள். கணவன் சொல்லுக்கு செவிசாத்து, வீட்டு வேலைகளைச் செய்தாள். அதனால் அவனும் மகிழ்ந்தான். நாட்கள் சென்றன. 
 
பண்டரிபுரத்தில் பகவத் சேவையிலும் பஜனாம் ருதத்திலும் திளைத்தாள் சக்குபாய். தன் கணவனையும் புகுந்த வீட்டாரையும் நல்வழிப்படுத்த வேண்டிக் கொண்டால். ஒரு நாள் நந்தவனத்தில் அவளைப் பாம்பு தீண்டியது. பேச்சுமூச்சற்றுக் கிடந்த அவளுக்கு பாண்டுரங்கனே வைத்தியனா வந்து, சிகிச்சை செய்து அவளுக்கு புத்திமதி சொல்லி, மீண்டும் அவள் கிராமத்தின் குளக்கரைக்கே அழைத்துச் சென்றான். அங்குதான், தனக்காக வீட்டில் விட்டு வந்த பெண் நீர்க்குடம் சுமந்து செல்வது கண்டு வருந்தி, அவளுக்கு நன்றி சொல்லி மீண்டும் தானே வீடு திரும்புவதாகச் சொன்னாள் சக்குபாய்.
வீடு திரும்பியவளிடம் மாறுதல் கண்ட அவள் கணவன், உண்மையைக் கூறும்படி அதட்டினான். நடந்தது கேட்டு, அவன் மனம் துணுக்குற்றது. பாண்டுரங்கனே இங்கே சேவை செய்தானா என்று மனம் நொய்ந்த அவன், தன்னை பகவத் பாகவத அபசாரங்களில் இருந்து காக்க மன்றாடினான். அவனது மாற்றம் சக்குபாக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பண்டரிநாதனின் புகழ்பாடி, அவர்கள் நெடுநாட்கள் பஜனை சம்ப்ரதாயத்தை  வலுப்படுத்தினார்கள். சக்குபாய்யின் வாழ்க்கை, பண்டரிபுர பக்தர்களிடம் ஒரு சிலிர்ப்பூட்டும் சரித்திரமாகவே மாறிப் போனது!

Comments