மகா பெரியவா நிகழ்த்திய அற்புதம்!

பேராசிரியரும், காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அத்யந்த பக்தருமான ஆர்.வீழிநாதன், மஹானின் அருள்திறம் பற்றிய ஒரு சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘பல வருஷங்களுக்கு முன்னே, காஞ்சி மஹா ஸ்வாமிகள் மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவபுத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிப்பதற்காக அங்கே சென்றிருந்தார். அப்போது அங்கே வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக்கொண்டு, மாலையில் வரும்படி சொல்லியனுப்பினார் மஹான். அதேபோல், மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக்கொண்டு வந்து மஹானிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து, ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு, ‘அவனால் பேசமுடியாது ஸ்வாமி!’ என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘ம்... நீ ராம நாமம் சொல்லு!’ என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்றுத் திணறிவிட்டு, பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்லத் தொடங்கிவிட்டான்.

இதை நேரில் பார்த்து அனுபவித்த அந்த பண்டிதர் பின்னர் ராமாயண உபன்யாசம் செய்யத் தொடங்கியபோது, பிரார்த்தனை ஸ்லோகமாக, ‘எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகாமௌலியான என் குருநாதரை நமஸ்கரிக்கிறேன்’ என்று பொருள்படும் வகையில்...

‘யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யத: புன:
தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம:’

என்று பாடினார்!’’

‘மரபுகள் குறுக்கே நிற்கக்கூடாது!’

தூய அன்பும் பக்தியும் இருந்தால், அங்கே மரபுகள் குறுக்கே நிற்கக்கூடாது என்பார் காஞ்சி மகாபெரியவா. இதை உணர்த்தும் வகையில் ஸ்வாமிகள் நிகழ்த்திய ஓர் அருளாடலை, மஹானிடம் அளப்பரிய அன்புகொண்டிருந்த ‘பாம்பே டையிங்’ ரமணன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘1986-ம் வருடம் காஞ்சிப் பெரியவரை தரிசிக்கச் சென்றிருந்தேன். மஹானின் பக்தரான ஜோஷி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஜோஷி, அடிக்கடி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் சென்று மஹா ஸ்வாமிகளை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததார். அப்படி போகும்போதெல்லாம் நல்ல உயர்தரமான பழங்களாகப் பார்த்து வாங்கிக்கொண்டு போவார்.

ஒருமுறை நான் அவருடன் போயிருந்தபோது, ஜோஷி வாங்கிக்கொண்டு வந்திருந்த பழங்களைப் பார்த்த ஸ்வாமிகள், ‘‘ஜோஷிதான் இப்படி நல்ல நல்ல பழங்களா பார்த்து எனக்கு வாங்கிண்டு வந்து தர்றான்’’ என்று சொல்லிப் புன்னகைத்தார். அப்போது எனக்குள், ‘நாமும் இப்படி தரமான பழங்களாக வாங்கி வந்து மஹா ஸ்வாமிகளுக்குத் தரணும்’ என்ற எண்ணம் உண்டானது.

ஆனால், அப்போது என்னுடைய மாதச் சம்பளம் மிகவும் குறைவு. இருந்தாலும் ஒருநாள், ஜோஷியிடம் 200 ரூபாய் கடனாக வாங்கிக் கொண்டு, அவர் எந்தக் கடையில் பழங்களை வாங்குவாரோ அதே கடைக்குப்போய் நல்ல பழங்களாகத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு, காஞ்சிபுரம் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன். அன்றைக்குப் பார்த்து ஸ்டிரைக் என்பதால், ஒரு பஸ்கூட ஓடவில்லை.

எனக்கோ, மஹானுக்கென வாங்கிய பழங்களை அன்றைக்கே அவரிடம் சேர்ப்பித்துவிடவேண்டும் என்கிற தவிப்பு! எனவே, அங்கிருந்த ஒருவர் சொன்ன யோசனையின்படி பீச் ஸ்டேஷனுக்குச் சென்று, ரயிலைப் பிடித்து காஞ்சிபுரம் மடத்துக்குச் சென்றபோது இரவு 9 மணி.

அப்போது மஹா ஸ்வாமிகள் முக்கிய பிரமுகர்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருந்தார். அவரின் முன்னே, நான் வாங்கிக்கொண்டு சென்றிருந்த பழங்களைத் தட்டுகளில் வைத்துச் சமர்ப்பித்தேன். நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்பதை ஆதியோடந்தமாக மற்றவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டார் மஹான். பழத்தட்டுகளைப் பார்த்துக்கொண்டே வந்தவர், ஒரு தட்டில் கறுப்பாக இருந்த ஒரு மங்குஸ்தான் பழத்தைத் தம்முடைய கைகளில் எடுத்துக்கொண்டு, ‘இதை நான் இப்பவே பிக்ஷை பண்ணணும்’ என்றார். அருகில் இருந்த ஒருவர் மிகவும் பவ்வியமாக, ‘இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிட்டபடியால் மஹா ஸ்வாமிகள் பிக்ஷை செய்யவேண்டாம்’ என்று சொன்னார்.
அவரைத் தம் பார்வையாலேயே அடக்கிய மஹான், தாமே பக்கத்தில் இருந்த ஒரு கத்தியை எடுத்து, அந்தப் பழத்தை இரண்டாக நறுக்கினார். அதில் ஒரு பாதியை அங்கேயே எல்லோர் எதிரிலும் பிக்ஷை பண்ணினார். பிறகு, இன்னொரு பாதியை அருகில் இருந்த வேதகிரி மாமாவிடம் கொடுத்து, ஏதோ சொன்னார். உடனே வேதகிரி மாமா என்னிடம் வந்து அந்தப் பழத்தைக் கொடுத்து, ‘பெரியவா உன்னை அவருக்கு எதிரில் அமர்ந்து இதைச் சாப்பிடச் சொன்னார்’ என்றார். பெரியவா உத்தரவுப்படி, நான் அவர் எதிரில் போய் அமர்ந்து சாப்பிடும்போது, தமது திருக்கரத்தை உயர்த்தி என்னை ஆசீர்வதித்தார்.

பொதுவாக, அந்த வேளையில் மஹான் பிக்ஷை பண்ணுவது மரபில்லை. என்றாலும், என்னுடைய தூய அன்பையும் பக்தியையும் அங்கீகரிப்பதுபோல் மஹா ஸ்வாமிகள் பிக்ஷை பண்ணி எனக்கு அனுக்கிரஹம் செய்தார். இதை மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியே என்னைத் தம் எதிரில் அமர்ந்து பழத்தை உண்ணச் செய்தார் என உணர்ந்தேன்.’’

மஹா ஸ்வாமிகளின் ஞானதிருஷ்டி!

சதாராவில் உள்ள கோயிலை மஹா ஸ்வாமிகளின் உத்தரவின்படி நிர்வகித்து வருபவர் ஜகதீஷ் பட். அவர் சென்னையில் இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘1984-ம் வருஷம் என்று நினைக்கிறேன். அப்போது நான் மஹா ஸ்வாமிகளின் உத்தரவின்படி, மயிலாப்பூர் சலிவன்கார்டனில் இருந்த வேத பாடசாலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், வித்யார்த்திகளை அழைத்துக்கொண்டு மஹா ஸ்வாமிகளை தரிசிப்பதற்காக இரண்டு வேன்களில் கிளம்பினோம். காஞ்சிபுரத்தை நெருங்கும்போது, நான் இருந்த வேனில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.

 உடனே நான் டிரைவரை எச்சரிக்கை செய்ய, அவர் வண்டியை நிறுத்தினார். கீழே இறங்கிப் பார்த்தோம். வேனின் ஆக்ஸில் உடைந்திருந்தது. நான் எச்சரிக்கை செய்யாமல் இருந்திருந்தால், வேன் விபத்தில் சிக்கி, அசம்பாவிதம் நடந்திருக்கும். பின்னர், பின்னால் வந்துகொண்டிருந்த இன்னொரு வேனில் எல்லோரும் ஏறிக்கொண்டு, காஞ்சிபுரத்தை அடைந்தோம். எங்களைப் பார்த்ததும் மஹா ஸ்வாமிகள் கேட்ட முதல் கேள்வி... ‘‘எல்லோரும் க்ஷேமமா வந்துட்டேளா?’’ என்பதுதான். இத்தனைக்கும் நடந்த சம்பவம் பற்றி யாரும் அவருக்குச் சொல்லவில்லை. எங்களுக்கு நடக்க இருந்த அசம்பாவிதத்தை தம்முடைய ஞான திருஷ்டியால் உணர்ந்து, எங்களைக் காப்பாற்றிய மஹான் அருளுக்கு இணை ஏது?!’’

Comments