பாலர்களால் வெளிப்பட்ட பரமன்!

‘எல்லாமாய் அல்லதுமாய் எங்கெங்கும் நீக்கமற’ நிறைந்திருக்கும் ஈசன், நமக்கெல்லாம் அருள்புரிவதற்காகவே எண்ணற்ற இடங்களில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி, கோயில் கொண்டிருக்கிறார். அப்படி, ஐயன் கொண்ட கோயில்களில் பல இன்றைக்கு மிகவும் சிதிலம் அடைந்தும், அடியோடு மண்ணில் புதைந்தும் இருக்கும் அவலத்தைக் காணும்போதெல்லாம் மனம் பதைபதைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில், பாலூர் என்ற ஊரில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மேலச்சேரி.

வயல்கள் சூழ அமைந்திருக்கும் பசுமையான அந்தக் கிராமத்தில், ஊருக்கு வடக்கே ஏரிக்கரை ஓரத்தில், முற்காலத்தில் அமைந்திருந்த ஐயனின் ஆலயம் ஒன்று, பிற்காலத்தில் அந்நியர் களின் படையெடுப்பினாலோ அல்லது இயற்கைச் சீற்றத்தினாலோ, இருந்த இடமே தெரியாதபடி முற்றிலுமாகச் சிதைந்துபோனது. ஆலயத்தில் சந்நிதி கொண்டிருந்த தெய்வ மூர்த்தங்களும் மண்ணுக்குள் புதையுண்டு விட்டன. காலப்போக்கில் அந்த இடத்தில் புதர் மண்டிவிட, ஊர்மக்கள் அந்தப் பக்கம் செல்லவே அச்சப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான், ஒருகாலத்தில் தம்மை வழிபட்ட பக்தர்களுக்கு அவர்கள் வேண் டிய வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்த ஐயன், மீண்டும் அதே இடத்தில் கோயில் கொள்ளத் திருவுள்ளம் கொண்டார். ஊர்மக்கள் அந்தப் பக்கம் வரவே அஞ்சிய நிலையில், ஐயன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டது எப்படி?

‘‘இந்த இடத்தில் புதர் மண்டி இருந்ததால, நாங்க யாருமே அங்கே போவதில்லை. ஒரு அம்மன் சிலையின் முகம் மட்டும் வெளியே தெரியும். ஆகவே, கார்த்திகை தீபத்தின்போது மட்டும் அங்கே போய் விளக்கேற்றிவிட்டு வருவோம். ஆனாலும், நாங்க மண்ணை அப்புறப்படுத்தாம அப்படியே விட்டுட்டோம். சில வருஷத்துக்கு முன்னாடி, ஏரியைத் தூர் வார்றதுக்காக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டியபோது, இப்ப லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கும் இடத்துக்குப் பக்கத்துல தொட்டி, பானை, உரல் போன்றவை கிடைச்சுது. அப்பவும் அது எங்களுக்குப் பெரிசா தோணலை.

கொஞ்ச நாளைக்கு முன்னால, ஊர்ல இருக்கற சின்னப் பசங்க விளையாடறதுக்காக அங்கே போயிருந்தாங்க. அப்ப, அம்மன் சிலைக்குப் பக்கத்துல மண்ணுக்கு வெளியில தெரிஞ்ச கல்லை அப்புறப்படுத்த நெனைச்சு குச்சி எடுத்து கொஞ்சம் கொஞ்சமா மண்ணைத் தோண்டி இருக்காங்க. முழுசா தோண்டினப்புறம்தான் அது கல் இல்லை, சிவலிங்கம்னும் தெரிஞ்சுக்கிட்டாங்க.

உடனே ஓடி வந்து எங்ககிட்ட சொன்னாங்க. உடனே அங்கே போய்ப் பார்த்தோம். அற்புத மான சிவலிங்கம் அது. பிறகு, பக்கத்துலயே இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்த்தபோது, ஒரு முகம் சற்றே சிதைந்த நிலையில் நந்தி சிலையும் கிடைச்சுது. அதேபோல், முகம் மட்டுமே தெரிஞ்ச அம்மனைச் சுற்றி இருந்த மண்ணைத் தோண்டி எடுத்துப் பார்த்தப்ப, ஒரு காலை முன் வச்ச மாதிரி, நாலு கைகளுடன் அழகான அம்மன் விக்கிரகம் கிடைச்சுது. ஆனாலும், அம்மனோட முன் கைகள் கொஞ்சம் உடைஞ்சிருந்துச்சு. ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கொட்டகை போட்டு, அதில் பிரதிஷ்டை செய்திருக்கோம். எங்களால முடிஞ்ச அளவுக்கு பூஜைகள் செய்துட்டு வர்றோம்’’ என்றனர் ஊர்ப் பெரியவர்கள் சிலர்.

பிறகு, ஐயன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தோம். சதுரவடிவ ஆவுடையார் மீது அழகாகக் காட்சி தருகிறார் ஐயன். ஒரு காலத்தில், பிரமாண்டமான ஆலயத் தில் சர்வ அலங்காரங்களுடன் அருளாட்சி செலுத்திய ஐயன் இன்று ஒரு சிறு கொட்டகையில் இருந்த கோலத்தைக் கண்டு நம் நெஞ்சம் பதறித் துடித்தது.

காஞ்சிபுரம், மணப்பாக்கம், திருப்புலிவனம் போன்ற ஊர்களில் இருந்து சிற்பிகளை அழைத்து வந்து காண்பித்திருக்கிறார்கள் ஊர்மக்கள். இது மிகவும் பழைமையான கோயில் என்றும், பாதுகாக்கப்பட வேண்டிய கோயில் என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பின்னர், சங்கர மடத்தில் இருந்து கண்ணன் என்பவரை அழைத்து வந்து காண்பிக்க, ஐயன் சதுர வடிவ ஆவுடையாரின் மேல் இருப்பதால், முற்காலத்தில் வேதியர்கள் வாழ்ந்த அக்ரஹாரம் அங்கே இருந்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் அவர். மேலும், சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் அமைந்திருக்கும் தோற்றத்தைப் பார்க்கும்போது, சுவாமிக்கு வேதபுரீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு லலிதாம்பாள் என்றும் திருப்பெயர் சூட்டி முற்காலத்தில் வழிபட்டு இருக்கவேண்டும் என்றும், எனவே சுவாமிக்கும் அம்பிகைக்கும் அதே பெயர்களையே சூட்டி வழிபடுமாறும் சொல்லியிருக்கிறார்.
அதன்படியே திருப்பெயர்கள் சூட்டப்பட்டு, தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன. ஊர் மக்களும் தினமும் வந்து வழிபடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கு வந்து வழிபடும் அன்பர்களுக்கு, தடைப்பட்ட திருமணம் கூடி வருவதாகவும், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும், தீராத சிக்கல்கள் தீருவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

இப்போது அவர்களின் ஒரே ஆசை, சிறிய அளவிலாவது வேதபுரீஸ்வரருக்குப் புதிதாக ஒரு கோயில் எழுப்பவேண்டும் என்பதுதான். தவிர, பின்னப்பட்டுப்போன நந்தி, அம்பாள் சிலைகளைப் புதிதாகச் செய்து பிரதிஷ்டை செய்யவேண்டி இருக்கிறது. இதற்காக ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, ஒரு திருப்பணிக் கமிட்டி ஆரம்பித்துள்ளார்கள்.

ஈசான்ய மூலையில் சிவபெருமான் இருந்தால் ஊருக்கு சுபிட்சம்! ஆனால், சிவபெருமானின் ஆலயமே சிதிலம் அடைந்திருந்தால் ஊர் எப்படி சுபிட்சம் அடையும்? இதை உணர்ந்துதான் அவர்கள் ஐயனுக்கு ஆலயம் அமைக்கும் திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள் ளார்கள். அவர்களின் புனிதமான திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுத வியைச் செய்வோம். ஈசான்ய மூலையில் எழுந்தருளி இருக்கும் ஈசன் அந்த ஊரை மட்டுமல்ல; நம் வாழ்க்கையையும் சுபிட்சமாக்குவார்!

  


எங்கு இருக்கிறது? எப்படிச் செல்வது?

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில், பாலூர் என்ற ஊரில் இருந்து சுமார் 1.கி.மீ. தொலைவில் உள்ளது மேலச்சேரி. பாலூர் வரை பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து நடந்துதான் செல்லவேண்டும். அல்லது, செங்கல்பட்டில் இருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.

Comments