குஜராத் பெண்கவி கவரிபாய்

அதிதீவிர கிருஷ்ண பக்தை அந்தப் பெண். இளவயதில் விதவையாகிவிட்டவர். இனி வாழ்வின் ஊன்றுகோல் கிருஷ்ண பக்தியும், பக்தர் கூட்டமுமே என்று தன் வாழ்நாளை இவற்றிலேயே கரைத்துக் கொண்டிருந்தார். பஜனைப் பாடல்களைப் பாடுவது, ஹரி கதை, காலட்சேபங்களைக் கேட்பது என்று அவள் மனத்தில் கிருஷ்ணனே முழுதா ஆக்கிரமித்திருந்தான். ஸ்ரீகிருஷ்ண பக்தியில் அவள் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டால் போதும், வெளியுலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. சமாதி நிலையில் ஆழ்ந்துவிடுவாள். ஒரு நாளா, இரண்டு நாளா... பல நாட்கள் கூட சமாதி நிலையில் இருந்துவிடுவாள். அப்படி அமர்ந்து விட்டால், அன்ன ஆகாரம் ஏது? உறக்கம்தான் ஏது? உடல் உணர்வு இன்றி, அமர்ந்தது அமர்ந்தபடி இருப்பாள்.
இந்த பக்தையின் தோற்றத்தில், அவளது பணிப் பெண் சந்தேகப்பட்டாள். இவர் உண்மையிலேயே சமாதியில் உள்ளாரா? அல்லது வெறும் நடிப்புத் தானா? சோதித்து அறிய விரும்பினாள். ஊசிகளை எடுத்து வந்து, இந்த பக்தையின் உடலில் ஏற்றினாள். ஆனால், அவரின் உடலில் சிறு நடுக்கமோ, அசைவோ ஏற்படவில்லை! பயந்து போனாள் அந்தப் பணிப்பெண்.
நாட்கள் சில சென்றன. அந்தப் பணிப்பெண்ணுக்கு குஷ்டநோய் பீடித்தது. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு, தான் அன்று செய்த வினைதான் காரணம் என்று உணர்ந்தாள். ஓடோடிச் சென்று, இந்த பக்தையின் காலில் விழுந்து உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கோரினாள். மனம் இரங்கிய அந்தப் பக்தை அவளை மன்னிக்க, பணிப் பெண்ணின் குஷ்டம் அகன்றது. அவளும் குதூகலம் அடைந்தாள்!
இது ஒன்றும் அற்புதக் காரியம் இல்லை தான்! ஆனால், பிரகலாதனுக்கு தீங்கிழைத்த ஹிரண்யனுக்கு பகவானே இடர் கொடுத்துத் தன்னை உணர்த்தியது போல், இங்கேதன் பக்தைக்குத் தீங்கிழைத்த ஒருத்திக்கு பகவானே இடர்கொடுத்ததுபோல் ஆனது இந்த நிகழ்ச்சி! இந்த பக்தையே குஜராத்தி பக்தி இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம்பிடித்த கவரிபா!
அது கி.பி., 1759. குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ள கிரிபூரில் (துங்கர்பூர் என்றும் சொல்கிறார்கள்) பிறந்தார் கவரிபா. குஜராத்தில், கல்வி, இலக்கியம், பக்தி எல்லாவற்றிலும் மிக முன்னேற்ற மடைந்த சமூகப் பிரிவான நாகர் கிருஹஸ்த பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த கவரிபாக்கு சிறு வயதிலேயே திருமணத்துக்கு ஏற்பாடாயிற்று, அக்காலத்திய சமூகப் பழக்கத்துக்கு உட்பட்டு! ஐந்து வயதே நிரம்பிய சிறுமி அவள்! துள்ளி விளையாடும் பருவம். ஆனால் அமர்ந்ததோ மணமேடை!
அப்போது, கண்களில் ஏதோ உபாதை என்பதால் அவள் கண்கள் கட்டப்பட்டிருந்தன. அதே கோலத்தில் அச்சிறுமி மணமேடை ஏறி மங்கல நாண் அணிந்து கொண்டாள். ஆனால் என்னே பரிதாபம்! அடுத்த ஒரே வாரத்தில், அவள் கண்களில் கட்டப் பட்ட கட்டுகள் அவிழ்க்கப்படும் முன்னரே, கட் டிய கணவன் திடீர் நோய் கண்டு மரணத்தைத் தழுவினான்! கைப்பாவை வைத்து விளையாட வேண்டிய கள்ளங்கபடற்ற அறியாப் பருவத்தில் கைம்பெண் கோலம் பூண்டு நின்றாள் கவரிபா.
அடுத்து என்ன செய்வது? சமூகப் பழக்கப்படி, கல்வி கற்க ஏற்பாடானது. கல்வி கற்றலும் இறை வழி நிற்றலுமே வாழ்க்கை என்றானது. அத்வைத ஞானம் கைவரப் பெற்றது. கவிப் புலமையும் காவியத் தீண்டலும் கைகோக்க, பக்தியும் ஞானமும் கைகூடி, அவளுக்குள் ஒரு மாபெரும் ஞானியை வளர்த்துக் கொண்டிருந்தன. பாடல்கள் பல புனைந்தாள். அதுவும் பதின்பருவத்தில்! அவளின் பக்தியும், பாடல்களும், அவளின் உயர்ந்த குணநலனும் சுற்றிலும் ஒரு சீடர் குழாத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அப்போது கிர்பூரை ஆண்டு வந்தான் ராஜா சிவ சிம்மன். மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தவன். சிறந்த பக்திமானும்கூட! குளம் கிணறு வெட்டி, மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தவன். அவனுக்கு கவரிபாயின் நற்குணங்களும் பக்திப் புலமையும் தெரியவந்தது. ஓடோடி வந்து தரிசித்தான். கவரிபாக்காக அழகிய ஓர் ஆலயத்தையும் கட்டிக் கொடுத்தான்.
வயது இருபதைக் கடந்த நிலையில், தனது குடும்ப தெய்வ விக்ரஹங்களுடன் அந்தக் கோயிலில் குடியேறினாள் கவரிபா! கோயில், வழிபாடு, கவிபாடுதல் என வாழ்க்கை சென்றது. அவளது பாடல்களைக் கேட்டு, அந்தக் கோயிலுக்கு யாத்ரீகர் களின் கூட்டமும் பக்தர் கூட்டமும் அதிகரித்தது. அடியார்களும் அறிஞர்களும் கூடினர். ஹரிகதா காலட்சேபங்கள் நிகழ்ந்தன. சங்கீதமும் சத்சங்க மும் கவரிபாயின் சாஸ்திரீய ஞானத்தை வளர்த் தெடுத்தன. அவளின் பாடல்களில் மெப் பொருள் அறிவு பளிச்சிட்டது. ஞானி ஒருவர் அவளுக்கு ஆத்ம ஞான உபதேசம் அளித்து பிரம்ம ஞானத்தையும் பாலகிருஷ்ண விக்ரஹத்தையும் கொடுத்துச் சென்றார்.
கி.பி.,1804. வயது 45-ஐ கடந்தது. கவரிபா இப் போது தேச சஞ்சாரம் செய்ய விரும்பினாள். கண்ணனின் விரஜ பூமியை அடையத் துடித்தாள். தன் ஆலயத்தை விட்டு வெளிக்கிளம்பினாள். செல்லும் வழியில் ஜெப்பூர் மகாராஜா அவளை வரவேற்று, தங்கள் சமஸ்தானத்திலேயே இருந்துவிடக் கோரினான். ஆனாள் அதை மறுத்த கவரிபா, கோகுலம், பிருந்தாவனத்தை அடைந்தாள். கண்ணனின் நினைவுகளுடன் தானும் ஒரு கோபிகையாக விரஜ பூமியில் விழுந்து புரண்டாள். பக்தியும் பிரேமையும் விதைத்த மண் அது! கண்ணன் பால் பிரேமை பூண்டவர்கள், அந்த பூமியில் கண நேர மேனும் கால் வைத்தால் போதும், கண்ணனின் நெருக்கத்தை உணர்வார்கள். கவரிபாயும் உணர்ந்தாள். ஆனால், காலம் செல்லச் செல்ல கங்கையும் காசியும் அவள் கருத்துள் புகுந்தன.
விரஜ பூமியை விட்டு வெளிக்கிளம்பி, காசியை அடைந்தாள். காசி அரசன் சுந்தரசிம்மன் அவளை வரவேற்று அடிபணிந்தான். சுந்தரசிம்மனும் ஒரு பெருங்கவிதான்! அந்த இரு பக்த கவிகளின் சத்சங் கத்தில் பக்தர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள். கவரிபாயின் தெய்வீக ஞானத்துக்கு அடிபணிந்தான் சுந்தரசிம்மன். தன்னைச் சீடனாக ஏற்கும்படி வேண்டி நின்றான். அவனுக்கு ஆத்ம உபதேசத்தை நல்கிய கவரிபா, மன்னனின் குருவானாள்.
நாட்கள் சென்றன. புரி ஜகந்நாதர் தன்னை அழைப்பது போல் தோன்றியது. புரிக்குச் சென்று, சில காலம் அங்கு இருந்து ஜகந்நாதரைப் போற்றிப் பாடி மீண்டும் காசிக்கே திரும்பினாள். தொடர்ந்து ஏழு நாட்கள் சமாதியில் லயித்தாள். பின் வெளிவந்து, தன் வாழ்நாள் நிறைவை எதியதா உணர்ந்தவள், தன் சீடர்களுக்கு அதைத் தெரிவித்தாள். துருவன் வெகுகாலம் தவம் செய்த யமுனைக் கரையில் தன்னுடலை உகுத்துச் செல்ல எண்ணுவதாக் கூறினாள். அதற்கான நாள், அடுத்து வரும் ராமநவமி என்றாள். ராஜா சுந்தரசிம்மன் கவரிபாயின் விருப்பத்தை நிறைவேற்ற யமுனைக் கரைக்கு அனுப்பிவைத்தான்! சில நாட்கள் சமாதியில் லயித்த கவரிபா, கி.பி.,1809ல் ராம நவமி நாளில் உயிர் துறந்தாள். அப்போது அவளுக்கு வயது 50.
கவரிபாயின் பாடல்கள் பெரும்பாலும் குஜராத்தியில் அமைந்தவை. காசி, பிருந்தாவனத்தில் வசித்த போது ஹிந்தியிலும் பாடல்களை எழுதினார். அத்வைதம், மெப்பொருளறிவு, கிருஷ்ண பக்தி, சிவ தத்துவம் என அவரது பாடல்களில் பக்தியும் கவிநயமும் மிகுந்திருக்கும். குஜராத்தி பக்தி இலக்கியத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை இயற்றிய நர்சி மேத்தா ஒரு பிதாமகராகத் திகழ்ந்தார். அவர் அடியொற்றி, பெண்களும் பக்தி இலக்கியத்துக்கு வளமை சேர்த்தனர். ஜானாபா, பஹினாபா, ரதன்பா, கிருஷ்ணாபா, கங்காஸதி, பான்பா வரிசையில் முக்கிய இடம்பிடிப்பவர் கவரிபா!

Comments