முதல் பாகவத பீடம்

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் கங்கா தேவியின் மடியில் அமைந்துள்ளது, தவ பூமியாகக் கருதப்படும் சுகஸ்தல் திருத்தலம். ஆண்டு முழுவதும் பாகவத சப்தாஹம் நடைபெறும் முதல் பாகவத பீடமான இத்தலத்தில் இதுவரை லட்சக் கணக்கான சப்தாஹங்கள் நடந்துள்ளன.
பாகவத சப்தாஹம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது நைமிசாரண்யம்தான். அந்தப் புனிதத் தலம் சூத மகாமுனிவர், ஆயிரக்கணக்கான முனிவர்களுக்கு ஸ்ரீசுகர் கூறிய பாகவதத்தை எடுத்துக் கூறிய தலம்.
ஆனால், சுகஸ்தல், சுகர்த்தல், சுக்தால் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் புண்ணியத் தலம், ஸ்ரீசுகப் பிரம்மம் ஏழு நாட்கள் பரீட்சித் மகாராஜாவுக்கு பாகவதக் கதையைக் கூறிய புகழ் பெற்ற திருத்தலம். இது, ‘சுக மாகாத்மியம்’ என்ற நூலின் மூலம் அறிய வருகிறது. இவ்விடம் வரலாற்றுப்படி மட்டுமின்றி, ஆன்மிக வழியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது.
தமது தந்தை வியாச பகவானால் இயற்றப்பட்ட பாகவதக் கதையை, ஸ்ரீசுக பிரம்மம் கங்கை தீரத்தில் அமைந்த ஒரு வட விருட்சத்தின் கீழ் அமர்ந்து மகா முனிவர்கள் சூழ, பரீட்சித் மன்னனுக்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். அதனாலேயே இவ்விடத்துக்கு சுகஸ்தல் அல்லது சுக்தால் என்ற பெயர் ஏற்பட்டது.
சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன் இக்கலியுகத்தில் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி, இன்றும் இத்தலத்தில் காட்சி தரும் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பாகவதம் கூறியுள்ளார் என்பதை நினைக்கும்போது, நம் புராதன, புராண வரலாற்று உண்மைகள் நம் கண்முன் நிழலாடி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. பெயருக்குத் தகுந்தாற்போலவே இவ்விடம் சுகத்தையும் அமைதியையும் அளிப்பதாக உள்ளது.
இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் ‘மோட்னா’ என்ற இடம் உள்ளது. ‘மோட்னா’ என்றால் திரும்புதல் அல்லது திரும்பிப்போதல் என்று பொருள். தட்சகன் என்ற பாம்புதன் கடுமையான விஷத்தால் பரீட்சித்து மகாராஜாவைக் கொல்வதற்காக வருகிறது. அப்போது, பரீட்சித்து மகாராஜாவைத் தன் தவ பலத்தால் எப்படி யும் காப்பாற்றி விடலாம் என்ற உத்தேசத்துடன் வந்து கொண்டிருந்தான் கஸ்யபன் என்ற அந்தணன். அவனின் அந்தரங்க எண்ணத்தை அறிந்த தட்சகன் அவனுக்கு அளவற்ற செல்வத்தை அளித்து அவனை அங்கிருந்து திருப்பி அனுப்பி விடுகிறான். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதால், அந்த இடத்துக்கு ‘மோட்னா’ என்ற பெயர் ஏற்பட்டது.
கங்கைக் கரையில் கடுந்தவம் இயற்றிய சுவாமி கல்யாண் தேவ்ஜி என்ப வர் பல்லாண்டு காலம் கவனிப்பாரற்றுக் கிடந்த இந்தத் தலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 1944ல் இங்குள்ள அட்சய மடத்தின் அருகில் ஸ்ரீசுக தேவ மந்த்ரம், ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம், ஹனுமான் ஆலயம், பாகவத சப்தாஹயக்ஞ ஆலயம், யக்ஞசாலை போன்றவற்றை நிர்மாணித்து இத்தல மகிமையை பாரத தேசம் முழுவதும் அறியும்படி செய்து பெரும் தொண்டாற்றினார்.
இங்கு பாகவத சப்தாஹம் செய்யும் அன்பர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும், சுவாமி கல்யாண் தேவ்ஜியின் டிரஸ்ட் மனமுவந்து செய்து வருகின்றது. முதல் பாகவத பீடமான இந்த பிரம்மாண்ட வட விருட்சம் ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. இம்மரத்தின் அடியில் ஸ்ரீசுகர் அமர்ந்து பாகவதக் கதையை பரீட்சித்துக்கு கூறிய போது அவரைச் சுற்றி சுமார் 80,000 முனிவர்கள் அமர்ந்திருந்தனராம். தற்போது இம்மரம் 150 அடி உயரம் வளர்ந்து, தன்னருகில் வருபவர்களுக்கு நிழலும் நிம்மதியும் வழங்கி வருகிறது. இப்புராதன மரத்துக்கு விழுதுகள் வளருவதில்லை என்பது சிறப்பு. இந்த ஆலமரத்தின் விழுதுகள் பூமியில் ஊன்றாத நிலையில், கல்யாண் தேவ்ஜியின் சேவா அறக்கட்டளை, அறிஞர்கள் உதவியுடன் இந்த மரம் கீழே சரியாமல் பார்த்துக் கொண்டது.
சுகர்தல் பல வழிகளிலும் சீதாபுர் அருகில் உள்ள நைமிசாரண்யத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில், மக்களின் ஆன்மிக வாழ்வு சிறக்கவும் இறைவனின் கருணை கடாட்சம் கிட்டவும் எளிய வழியாகத் திகழும் ஹரி நாம சங்கீர்த் தன மகோத்ஸவத்தின் வேராகத் திகழும் சுகர்தல், பாகவத சப்தாஹம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுக்கு மிக முக்கியமான ஒரு இடமாகத் திகழ்கிறது.
சுவாமி விவேகானந்தரை ஆதர்ச குருவாக ஏற்று அவரால் ஏற்றப்பட்ட விளக்காக விளங்கிய சுவாமி கல்யாண் தேவ்ஜி மகராஜ் செய்த சமூக சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைவிடம்: ஹரித்வாரிலிருந்து 87 கி.மீ.

 

Comments