ஆடல்வல்லானின் ஆனித் திருமஞ்சனம்

ஈசன் - வாழ்வளிக்கும் வள்ளல். திருநடம் புரியும் அவன், சபையின் நாயகன். உலகின் தலைவன். நமக்கு நல்வாழ்வு அளிக்கும் அந்தப் பரமனை திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டு மகிழ்கிறோம். அந்தப் பரமன், அபிஷேகப் பிரியன் என்பதனால்தான், அவனுக்குப் பலவிதங்களில் அபிஷேகங்கள் செய்து, அவன் மனத்தைக் குளிர்விக்கின்றோம்.
பெருமாள் ஸ்ரீ மகாவிஷ்ணு, அலங்காரப் பிரியன் என்று பேர் எடுத்தவர். அவருக்குச் செய்யப்படும் அலங்காரங்களால், அவர் மகிழ்கிறார். அதுபோல், பெருமான் சிவசங்கரன், தனக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் உள்ளம் மகிழ்ந்து, பக்தருக்கு வேண்டும் வரம் தந்திடுகின்றான். இது அனுபவ உண்மை. பெருமானுக்கு, இளநீர், தேன், பால் உள்ளிட்ட உயர்ந்த பொருட்களைக் கொண்டு உள்ளம் குளிர அபிஷேகம் செகிறோம். இந்த அபிஷேகமும்கூட, மனத்தால் ஒன்றி ஒன்றுகலத்தல் என்பதன் பொருளாகும். நீர் நிலைகளாகிற நதி, அருவி, ஓடை, ஆறு என இருந்தாலும், அவை அனைத்தும் இறுதியாகக் கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல், ஒவ்வொரு ஜீவனும் செய்யும் இத்தகைய வழிபாடுகளெல்லாம், அந்தப் பரமனைச் சென்று சேர்வதே பெருமானுக்குச் செய்யும் அபிஷேக வழிபாட்டின் ஆன்மத் தத்துவ மாகப் பெரியோர் கூறுவர்.
இவ்வகையில், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்பது பற்றி,
‘ஆடினா நறு நெயொடு பால் தயிர்’
‘நெய்யினோடு பால் இளநீர் ஆடினான் காண்’
‘நெய்யும் பாலும் தயிருங் கொண்டு நித்தல்
பூசனை’ என்றெல்லாம், சிவபெருமானுக்கு நடை பெறும் அபிஷேகங்களை திருமுறைப் பாடல்கள் போற்றிக் கூறுகின்றன.
இவ்வகையில், சிவபெருமானுக்கு மேற்கொள்ளும் அபிஷேகத்துக்கு உரிய பொருள்கள் என்ன என்பது பற்றியும், அதன் பலன்கள் என்ன என்பதையும் சிவ ஆகமங்கள் கூறுகின்றன.
லிங்க ரூபமாத் திகழும் பெருமானுக்கு அபிஷேகம் எந்நேரமும் திகழும் வண்ணம், தாராபாத்திரம் மூலம் தாரை தாரையா நீர் விழும் வகையில் அமைக் கப்பட்டிருக்கும். ஆனால், அபிஷேகம் என்று சொன்னால், அது நடராஜ மூர்த்திக்குச் செய்வதையே சிறப் பித்துச் சொல்லப்படுகிறது. சிவபெருமானை பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் நடராஜப் பெருமானின் வடிவம் மிகவும் சிறப்பானது.
தில்லைச் சிதம்பரத்தில் திருநடம் புரியும் ஈசனாம் அந்தப் பரம மூர்த்தி, சுற்றிச் சுழன்றாடி உலகையே தன் நடனத்தில் ஆட வைக்கிறான். அவ்வாறு, ஆனந்த நடனம் புரியும் ஆடல்வல்லானின் அற்புதத் திருவடிவம் தமிழகத்துக்கு தனிப் பெருமை அளிப்பது.
பல்லவர் கால கோயில்களிலும்,பாண்டியர் குடைவரைக் கோயில்களிலும் ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் அழகிய வடிவங்கள் அற்புதமாகச் செய்துக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் பல திருக்கோயில்களில் ஆடல்வல்லானை அழகிய செப்புத் திருமேனிகளாகச் செய்து வழிபட்டனர். ஆடல்வல்லானையே சோழர்கள் தங்கள் குல நாயகனாகப் போற்றிச் சிறப்பித்தனர்.
ஆடல்வல்லானாம் நடராஜப் பெருமான் நடனம் ஆடிய தலங்களாக சிதம்பரம் - கனகசபை, மதுரை - வெள்ளிசபை, திருநெல்வேலி - தாமிர சபை, திருக்குற்றாலம்-சித்திரசபை, திருவாலங்காடு - ரத்தின
சபை ஆகியவை சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
‘ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம் ஆனந்தக் கூத்து’ என்றெல்லாம் சிவ பெருமான் ஆடிய தாண்டவத்தை திருமூலர் போற்றித் துதிக்கின்றார்.
நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் பெருமானுக்குச் சிறப்பான வகையில் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் அதிகாலையிலும், மாசி மாதத்தில் காலையிலும், சித்திரையில் உச்சி காலத்திலும், ஆனி மாதத்தில் மாலையிலும், ஆவணியில் இரண்டாம் காலமும், புரட்டாசி மாதத்தில் அர்த்த யாமத்திலும் இந்த சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
ஆடும் கூத்தன் அழகிய நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் ஆறு அபிஷேக நாட்கள் பற்றிக் குறிப்பிடுகிறது ஒரு வெண்பா...
‘சித்திரையில் ஓணம் முதல்; சீர் ஆனி உத்தரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி வளர்
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்றீசர் அபிடேக தினமாம்.’
சித்திரை - திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி - திருவாதிரை, மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் சதுர்த்தசி நாளில் நடைபெறும் அபிஷேகங்கள் சிறப் பானவை.
பெருமானுக்குச் செய்யப்படும் அபிஷேகமாகிய திருமஞ்சனம் என்பது, இந்த உலகில் காணப்படும் அனைத்தும் ‘கானல் நீர்’ என்று நாம் தெரிந்து தெளியும் தத்துவஞானம் என்பர். இதனை காசி காண்டத்தில் உள்ள ஒரு செய்யுள் உரைக்கிறது. இவ்வாறு ஆனி மாதத்தில் உத்திர நாளில் மாலை நேரத்தில் நடராஜப் பெருமானுக்கு சகல நடராஜத் தலங்களிலும் நடை பெறும் ஆனித் திருமஞ்சன வைபோகம், மிகவும் சிறப்பானது. இந்நாளில் சிவாலயங்களுக்குச் சென்று ‘ஆனித் திருமஞ்சன’வைபோகத்தைக் கண்ணாரக் கண்டு, வழிபட்டு நம் வாழ்வில் அனைத்து பாவங்களும் கரையப் பெற்று சகல நலன்களையும் பெறுவோம். ஆனந்தமா நடராஜ மூர்த்தி அதற்கு அருள் புரியட்டும்!

Comments