தேவி தபோவனம்!

கடல்விடமுண்ட கருணாமூர்த்தி சிவபெருமான் உறையும் திருத்தலங்களில் பெரும்பாலும் பார்வதி தேவி, சிவனாரின் இடப்புறமிருந்து அருள்பாலிப்பதை அநேகத் திருத்தலங்களில் கண்டு தரிசித்திருப்போம். ஆனால், விசேஷமாக அம்பாள் இறைவனின் வலப் புறமிருந்து, அதுவும் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது வெகு அபூர்வம். அதுபோன்ற திருத்தலங்களில் அம்பாளே பிரதானமாக வழிபடப்படும் மூர்த்தமாக விளங்கி வருவதையும் காண்கிறோம்.
அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்று தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தின் அருகில், அம்மன்குடியில் அமைந்துள்ள அருள்மிகு பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில். இக்கோயிலில் அம்பாள், துர்கை வடிவில் சிவனாரின் வலப்புறம் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இந்த துர்கா பரமேஸ் வரியை வழிபடுவோர்களுக்கு ஸர்வாபீஷ்டங்களும், பாபநாசமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுகின்றன.
முதலாம் ராஜராஜ சொழனின் படைத்தளபதி கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் இத்தலத்தில்
பிறந்தவர். இவரே இக்கோயிலைக் கட்டினார். மன்னன் ராஜராஜ சோழனின் மேல் கொண்ட மரியாதை நிமித்தமாக இத்தலத்துக்கு, ‘ராஜராஜேஸ் வரம்’என்றும் பெயர் சூட்டியதாக வரலாறு.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை தந்த மகிஷாசுரனை, அன்னை பார்வதிதுர்கை கோலம் பூண்டு வதைக்கிறாள். மகிஷனை வதைத்த தோஷம் நீங்க, அவனது கழுத்தில் முன்பு ஸ்தாபிக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, ‘கைலாஸேச்வரர்’என்ற பெயருடனும், தமது தபஸுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விநாயகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்து 12 ஆண்டுகள்கடும் தவம் மேற்கொள்கிறாள். அம்பாளின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவள் முன்தோன்றி, உனது தோஷம் நீங்கியது. நீ இத் திருத்தலத்திலேயே நிலைபெற்று, உன்னை தரிசிப்பவர்களின் தோஷங்களைப் போக்கி சுபிட்சம் தருவாயாக" எனக் கூறியருளினார். அம்பாள் தவம் செய்த இத்தலம், ‘தேவி தபோவனம்’எனப்பட்டது. அம்மனேகுடி கொண்டதால் காலப்போக்கில், ‘அம்மன்குடி’என வழங்கலாயிற்று.
தமக்கு அருள்புரிந்த ஸ்ரீகைலாசநாதரை, அன்னை பார்வதியுடன் ஸ்ரீதேவியே இங்கு பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். அதோடு, சிவனாரின் ஆணைப்படி தாமும் துர்கா பரமேஸ்வரியாக இத்தலத்திலேயே நிலைகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். தனிச்சன்னிதியில் அம்பாள் எட்டு திருக்கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், கேடயம், வில், கத்தி, அம்பு, மகிஷனின் தலை ஆகியவற்றை ஏந்தி, சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். துர்கா பரமேஸ்வரி சகல தேவதைகளின் தேஜஸ்ஸிலிருந்தும் தோன்றியதால் அவளுக்குச் செய்யும் பூஜைகள் அனைத்தும் சகல தேவதைகளுக்கும் செய்வதாகவே நம்பப்படுகிறது. நவக்கிரகங்களுக்கு துர்கையே அதிதேவதையாக விளங்குவதால் இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னிதிகிடையாது. மேலும், கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், மரகத தபஸ் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், குழந்தை வடிவ சூரியன், யோக சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டு.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் தபஸ் விநாயகர் சாளக்ராமத்தால் ஆனவர். காலையில் பச்சை நிறத்திலும், நண்பகலில் நீல நிறத்திலும் மீண்டும் மாலையில் பச்சை நிறத்திலும் மாறி மாறிக்காட்சி தருவது சிறப்பு. இப்பெருமானின் வயிற்றில் நாகத்தை அணிந்திருப்பதால் இவரை வழிபட, நாகதோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
‘எவ்வளவு நேரம் படித்தாலும் மனதில் எதுவும் பதிவதில்லை. உடனே மறந்து போகிறது. இதனால் கல்வியில் மற்ற மாணவர்களைவிட மிகவும் பின் தங்கியிருக்க நேரிடுகிறது’என வருந்துபவர்கள், இக்கோயிலில் அருள்பாலிக்கும் கல்விக் கடவுள் யோக சரஸ்வதியை வழிபட, மனம் ஒருமுகப்படும், கல்வியில் மேன்மை அடையலாம். சரஸ்வதிதேவி இக்கோயிலில் வீணையின்றி, தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. நூறு கண்களைக் கொண்டவளாகக் கருதப்படும் இந்த துர்கைக்கு மழை இல்லாத காலங்களில் பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.
அசுரஹத்தி பாபம் அகலவும், சிவாபராத தோஷம் அகலவும், மகிஷனைக் கொன்ற திரிசூலத்தில் படிந்திருந்த ரத்தக்களிம்பினைக் கழுவியதும், தேவி திருப் புனலாடியதுமான பாப விமோசன தீர்த்தம் ஆலயத்தின் வடக்கே அமைந்துள்ளது. அதில் செவ்வாக்கிழமைகளிலும், தேபிறை சதுர்த்தசி கூடிய செவ்வாக்கிழமைகளிலும், வளர்பிறை அஷ்டமியிலும், அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் நீராடி, ஸ்ரீதுர்கையை தரிசித்தால் சுவாச, காச நோய்கள் நீங்கும். ராகு, சுக்ர தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணம் நிகழும், குழந்தைப் பேறு உண்டாகும்.
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, நவராத்திரி எட்டாம் நாள் வளர்பிறை அஷ்டமியன்று மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஆகியவை கோயிலில் விசேஷம்.இக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் 11.7.2016 அன்று நடைபெற்றது. அதை முன்னிட்டு பல்வேறு திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய பெருமைகள் கொண்ட இத்தல இறைவனையும் இறைவியையும் துர்கையையும் வழிபட்டு நலம் பெறுவோம்!
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து உப்பிலியப்பன் கோயில் வழியாக 15 கி.மீ., ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல்
11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தகவலுக்கு: 0435 - 2430972

 

Comments