சந்தனக் காப்பில் மரகத நடராஜர்!

ஆடல்வல்லான் நடராஜப்பெருமானுக்கு அநேகத்திருத்தலங்கள் இருந்தாலும், பாண்டிநாட்டு உத்திரகோசமங்கையே அவன் பதி’ என்கிறார் மாணிக்கவாசகர். ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ் வரம் செல்லும் சாலையில் உள்ள மங்களநாதர் திருக்கோயிலில் அருள்புரியும் மரகத நடராஜர் மிகவும் விசேஷமானவர். ஆதி நடராஜர் என்று அழைக்கப்படும் இவர், அன்னை உமையவள் மட்டுமே காணுமாறு நடனம் ஆடியதோடு, அம்மனுக்கு வேதத்தை ரகசிய மா உபதேசித்த தலம் இதுவென்றும் கூறப்படுகிறது. ‘உத்திரம்’ எனில் உபதேசம், ‘ஓசம்’ எனில் ரகசியம் எனப் பொருள். மங்கைக்கு ரகசியமா உபதேசித்த இடமானதால் இத்தலம் உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றதாம்.
தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் சுமார் ஆறடி உயரமுள்ள மரகத நடராஜப்பெருமான் புன்முறுவல் பூத்த முகத்தினராக் காட்சி தருகிறார். மிகவும் தொன்மையான இந்த ஆடலரசனுக்கு நித்திய அபிஷேகங்கள் கிடையாது. காரணம், வருடம் முழுவதும் சந்தனக் காப்புடனேயே காட்சி தருவதால். மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டுமே இவரது சந்தனக் காப்பு களையப்பட்டு அன்று பகல் முழுக்க தனிச்சபைத் தலைவராகக் காட்சியளிக்கிறார். வருடம் முழுவதும் நடராஜப்பெருமானின் திருமேனியை அலங்கரிக்கும் சந்தனத்தைப் பெற அன்று பக்தர்களிடையே பெரும் பிரயத்தனம் நடைபெறும்.
திருவாதிரைத் திருநாளன்று இப்பெருமானுக்கு ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேகங்களைக் காண நாட்டின் பல பகுதி களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகின்றனர். அன்று இரவே நடராஜப்பெருமான் மறுபடியும் தமது மேனியில் சந்தனக் காப்பிட்டுக்கொள்கிறார்.
மரகதம் மிகவும் மென்மையான கல். சாதாரண ஒலி அலைகள் கூட அதை உதிர வைத்துவிடும் என்பதால், ‘மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்’ எனும் வழக்குமொழி ஏற்பட்டது. கோயிலில் வாசிக்கப்படும் மத்தளம் கொட்டு முழக்கினால் இந்த மரகத நடராஜர் சிலைக்கு ஊறு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதித்தான் அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் சந்தனக் காப்பிடும் வழக்கத்தை உருவாக்கினார்கள் போலும்.
அயல் நாட்டினரின் படையெடுப்புகளின்போது விலைமதிப்புமிக்க நம் நாட்டு கலைப்பொக்கிஷங்க ளாகத் திகழ்ந்த ஏராளமான திருச்சிலைகள் கடத்திச் செல்லப்பட்டுவிட்ட போதிலும், வருடம் முழுக்க சந்தனக் காப்பிலேயே தமது திருமேனியை மறைத்திருந்ததால் அந்நியரின் படையெடுப்புகளிலிருந்து இப்பெரு மான் தப்பினார் போலும். உலகத்திலேயே மிகப்பெரிய மரகதச்திருச்சிலை இது வென்றும் கூறப்படுகிறது.
பூலோக கைலாசம் என்றும் ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படும் உத்திரகோசமங்கை தலத்தின் கருவறை மூலவர் மங்களநாதர் மற்றும் நாயகிமங்களேஸ்வரி மிகவும் வரப்ரசாதிகளாகத் திகழ்கின்றனர். இறைவன் சுயம்புவாக இத்தலத்தின் இலந்தை மரத்தடியில் தோன்றினார் என்பது வரலாறு. மூலவர் ஈசனையும் அம்பாளையும் ஒரு நாளில் மூன்று வேளைவணங்க, மூன்றுவித பலன்களைத் தந்து அருள்பாலிக்கின்றனர். அதாவது, காலையில் வணங்க, முன்வினை பாவங்கள் தொலையும். நண்பகல் வணங்க, இப்பிறவி பாவங்கள் நீங்கும். மாலையில் தரிசிக்க, ஆயுள் விருத்தி, தொழில் வளர்ச்சி, பொருள் சேர்க்கை அபிவிருத்தி அடையும். தவிர, அம்பாள் மங்களேஸ்வரியை தொடர்ந்து வழிபட்டுவர, தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும்.
கோயிலில் சிறிய உருவில் உள்ள மரகதம் மற்றும் ஸ்படிக லிங்கத் திருமேனிகளுக்கு தினமும் உச்சிகால பூஜையின்போது பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபி ஷேகத்தைக் காணபக்தர்கள் பலர் வருகின்றனர். மேலும், உற்ஸவ நடராஜ மூர்த்திக்கு ஆனித்திருமஞ்சனம் உள்பட, வருடத்தில் ஐந்து அபிஷே கங்கள் நடைபெறுவது சிறப்பு.
தல விருட்சம் இலந்தை மரம் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாந்தது. பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் கோயிலில் பசுமை மாறாது காணப்படுகிறது. மணிவாசகர் இந்த மரத்தடியில் அமர்ந்து அருள்புரி கிறார். பொன்னூசல் பதிகமும் நீத்தல் விண்ணப்பம் - 50 பாடல்களும் அவரால் இங்கே பாடப்பட்டவை. இந்த மரத்தடியில்தான் பராசரர், வேத வியாசர் உள்ளிட்ட ரிஷிகளும் முனிவர்களும் தவம் செய்தனர் என்றும் கூறுகின்றனர்.
சிவத்தலங்களில் இங்கு மட்டுமே ஈசனுக்கு தாழம்பூ சாத்தப்படுகிறது. காரணம், அடி முடிகாணா அண்ணா மலையாக சிவபெருமான் நின்றபோது, தான் ஈசனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொ உரைக்க, அதற்கு தாழம்பூ பொய் சாட்சி கூறியதாம். பொய் உரைத்த பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார் என்பது வரலாறு. அதேபோல், பொசாட்சி கூறிய தாழம்பூவும் இத்தலத்தில் சாப விமோசனம் பெற்று இறைவனின் திருமுடியை அலங்கரிக்கும் பேறு பெறுகிறது.
‘அழகமர் வண்டோதரிக்குப் பேரருள் அளித்த பிரான்’என்று சிவபெருமானைப் பாடுகிறார் மணிவாசகர். ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நிகழ இத்தல ஈசன் அருள்புரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆக, ராவணன் அரசாண்ட காலத்திலேயே இக்கோயில் இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம். அதை உறுதிப்படுத்தும் விதமாக ராவணன் மனைவி மண்டோதரி இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறுவர். கோயிலில் உள்ள பெரிய தெப்பக்குளம் உப்பு கரிக்கிறது. திருவிளையாடல் புராணத்தில் ஈசன் வலைவீசி விளையாடிய படலம் நடைபெற்ற திருத்தலம் இதுவென்று கூறப்படுகிறது. இக்குளத்து மீன்கள் கடல் நீரில் வாழும் வகையைச் சார்ந் தவையாம். கோயில் வெளிப்பிராகாரத் தூண்கள், நந்தி சிலைகள் முதலியன கடல்வாழ் பாறைகளை, கடற்காற்று அரித்த எச்சங்களை அடையாளப் படுத்துகின்றன.
செல்லும் வழி: ராமநாதபுரத்திலிருந்து 18 கி.மீ. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 - 12 வரை. மாலை 4 - 8 வரை.

 

Comments