முக்தி தரும் திருமூலநாதர்!

அதுக்கோட்டை மாவட்டம், திருவுடையார்பட்டி நீர் வளமும், நில வளமும் மிகுந்த, பாரிஜாத நந்த வனம் சூழப்பெற்ற திருத்தலம். இங்கே வற்றாத ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருமூலநாதர் திருக்கோயில். காசிக்குப் போனால் கருமம் தொலையும் என்பது ஐதீகம். இதனால் பலர் அங்கு சென்று, கங்கையில் நீராடி தங்களது பாபங்களைப் போக்கி வருகின்றனர். காசிக்குச் சென்று வழிபட முடியாதவர்கள், அத்தலத் துக்கு இணையான முக்தி கே்ஷத்ரமான திருவுடையார் பட்டி, திருமூலநாதரை வழிபட்டு கர்மம் தொலைத்துப் பலனடைகின்றனர்.
முன்பொரு காலத்தில் செட்டிநாட்டு வணிகர் ஒருவர் தனது பெற்றோர் இறந்து விட்டதைத் தொடர்ந்து, அவர்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க முடிவு செதார். அதற்காக தம்மிடம் பணி யாற்றிய ஒருவரை அழைத்துக் கொண்டு காசி நோக்கிப் பாத யாத்திரையாகப் புறப்பட்டார். வழியில் திருவுடையார்பட்டியில் அருள்பாலிக்கும் திருமூல நாதர் கோயிலை அடைந்தபோது, மாலை நேரமாக இருள் சூழ்ந்து விட்டது. எனவே, இரவுப் பொழுதை அங்கேயே கழிக்க எண்ணிய இருவரும் அக்கோயிலிலேயே தங்கினர். நடந்து வந்த களைப்பால் வணிகர் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார்.
அப்போது அருகில் இருந்த பணியாள் அஸ்தி கலசத்தைத் திறந்து பார்த்தார். கலசத்தில் மல்லிகைப்பூ குவியல் இருந்தது. உடனே அஸ்தி கலசத்தை மூடி வைத்து விட்டார். பொழுது விடிந்ததும் வணிகரும், பணியாளும் காசிக்குப் புறப்பட்டனர். பல மாதங்கள் கழித்து இருவரும் காசியை அடைந்தனர். வணிகர் கரும காரியங்கள் செய்ய அஸ்தி கலசத்தைத் திறந்தார். அப்போது கலசத்தில் எலும்பு துண்டுகளும்,
சாம்பலும் இருந்ததைக் கண்ட பணியாள் திடுக்கிட்டார். ‘திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயிலில் நாம் பார்த்தபோது கலசத்தில் மல்லிகைப்பூ அல்லவா இருந்தது’ என்று எண்ணிய அவர், இது பற்றி வணி கரிடமும் தெரிவித்தார்.
அதைக்கேட்ட வணிகர், பணியாள் கூறியதை நம்பாமல், நான் எனது பெற்றோரின் அஸ்தியைத் தானே கொண்டு வந்தேன். அதில் எப்படி மல்லிகைப்பூ இருக்கும்" என்று அவரிடம் திருப்பிக் கேட்டார். ஆனால் பணியாளோ, நான் திருவுடையார்பட்டி ஆலயத்தில் தங்கியிருந்தபோது அஸ்தி கலசத்தை திறந்து பார்க்கையில் அதில் மல்லிகைப்பூதான் இருந்தது" என்று காசி விசுவநாதர் மீது ஆணையிட்டுக் கூறினார்.
இதனால் குழம்பிப்போன வணிகர், தான் கொண்டு வந்த அஸ்தியில் பாதியை மட்டும் கங்கையில் கரைத்து, செய்ய வேண்டிய கர்ம கடமையைச் செய்து முடித்தார். மீதமிருந்த அஸ்தியை கலசத்திலேயே வைத்திருந்தார். காரியம் முடிந்ததும் இருவரும் ஊருக்குத் திரும்பினர். மீண்டும் வழியில் திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயிலில் இருவரும் இரவு தங்க நேர்ந்தது.
மறுநாள் காலை, காசியில் தனது பணியாள் சோன்னது வணிகருக்கு நினைவு வர, உடனே அவர் தன்னிடம் இருந்த அஸ்தி கலசத்தை திறந்து பார்த்தார். அப்போது அதில் மல்லி கைப் பூக்கள் மணம் வீசிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்ததும் வணி கருக்கு மிகுந்த ஆச்சரியம். பணியாள் கூறியது உண்மைதான் என்று நம்பினார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் வெள்ளாற்றில் நீராடினர். வணிகர், அந்த ஆற்றிலேயே மீதம் இருந்த அஸ்தியைக் கரைத்து, தனது கர்ம கடமையை முழுமையாக நிறைவேற்றினார். இது அவ்வூர் மக்களிடையே பெரும் அதிசயத்தைத் தோற்றுவித்தது. இதன் பின்னர் இத்தலம் காசிக்கு இணையான முக்தி கே்ஷத்ரமாக அனைவராலும் போற்றப் பட்டது.
வசதி இன்மையினாலும், நீண்ட தொலைவு செல்ல இயலாத காரணத்தாலும் இங்கு தங்களது முன்னோர் களுக்கான கரும காரியங்களை பலர் நிறைவேற்றிச் செல்கிறார்கள். மூல வர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தி. அம்பாள் திரிபுரசுந்தரி. கோயிலில் விநாயகர், சோர்ணகால பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கை, சப்த கன்னியர்களுக்கு
சன்னிதிகள் உள்ளன. நவக்கிரகங்கள் அவரவருக்கு உண்டான திசையில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கின்றனர். இன்றும் நூற்றுக்கும் மேற் பட்ட சித்தர்கள் இங்கு உலவுவதாகக் கூறப்படுகிறது.
ஆறு கால பூஜைகள் கண்ட இக்கோயில், புதுக் கோட்டை தொண்டைமான் காலத்தில் நான்கு கால பூஜையாக மாறி, தற்போது இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் சிதிலமடைந்திருக் கும் இக்கோயில், திருப்பணி கண்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பக்தர்களின் முயற்சியினால் தற்போது சிறிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வந்து திருமூலநாதரை மனம் உருக வேண்டினால் அன்று இரவே வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அமைவிடம்: புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ., தொலைவில் வாண்டாக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,
அங்கிருந்து 4 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். புதுக் கோட்டையிலிருந்து அரிமளம் செல்லும் பேருந்தில் மிரட்டுநிலை திருவுடையார்பட்டி விலக்கு என்று கேட்டு இறங்கி அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.

 

Comments