ஆணவம் அடக்கும் ஆமருவியப்பன்

ஆ’என்றால் பசு. பசுக்களை மேப்பவன் என்றால், அவன் கண்ணன்தான். அந்தக் கண்ணனே பசுக்களாக மாறிய முப்பெருந்தேவியரையும் மேத்து, ஆமருவியப்பன் எனும் பேர் கொண்டான் என்றால், அந்தத் தலத்தின் சிறப்பு எத்தகையதாக இருக்கும்! அதுவே, தேரழுந்தூர் திருத்தலம்!


ஒரு முறை ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். தேவி பார்வதி ஆட்டத்தின் நடுவராக வீற்றிருந்தாள் . பகடைக்கா உருட்டும்போது, மாயனின் மாயையால் ஏதோ குழப்பம் ஏற்பட்டது. குழப்பத்தைத் தீர்க்கும் பொருட்டு, நடுவராக இருந்த பார்வதி, தன் பர்த்தா வான சிவபெருமானைத் தவிர்த்து, சகோதரன் மகாவிஷ்ணுவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாள். இதனால் கடுஞ்சினமுற்ற சிவபெருமான், பார்வதியை பசுவாக மாறும்படி சாபமிட்டார்.


இதனால் வருந்திய பார்வதி, சாபத்துக்கு உட்பட்டு பசுவாக மாறினாள். அவருக்குத் துணை வந்த சரஸ்வதியும், லட்சுமியும்கூட பசுவாக மாறி, பார்வதியுடன் பூமியை அடைந்தனர். இவ்வாறு பசுக்களாக மாறிய மூவரையும் மேப்பவராக பகவான் ஸ்ரீமந் நாராயணனே ஆமருவியப்பன் என்ற திருநாமத்துடன் இங்கே கோயில் கொண்டார்.
கிழக்கு நோக்கி அமைந்த கோயில். இதற்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவண்ணம் சிவன் கோயில் உள்ளது. அங்குதான் பெருமானும் பெருமாளும்
சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது.
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திருப்பதிகளில் ஒன்றான இந்தத் தலத்தில் மூலவர் தேவ ராஜப்பெருமாள் 13 அடி உயரத்தில் மாபெரும் திருமேனியராக் காட்சி தருகிறார். சாளக்ராம மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் தரிசனமளிக்கிறார். இடப்புறம் காவிரித் தாய், கருடன் ஆகியோர் காட்சி தருகின்றனர். காவிரித் தா மண்டியிட்ட கோலத்தில் காட்சி தருகிறார். வலப்புறத்தில் பிரஹ லாதனை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். கருவறையில் பார்வதி தேவி பசுவின் உருவத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது சிறப்பு. தாயார் செங்கமல வல்லி எனும் திருப்பெயருடன் திகழ்கிறார். உற்ஸவர் ஆமருவியப் பன் பெயருக்கேற்ப பசு, கன்றுடன் காட்சி தருகிறார்.
திருத்தலத்தின் பெயரே ஒரு புராணத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. தேர் அழுந்தூர். அதாவது, தேர் ஆகிய ரதம் பூமியில் அழுந்திய ஊர் என்பதால், இந்தப் பெயர். கர்வமும், முரட்டு இயல்பும் கொண்ட உபரிசிரவஸு என்ற மன்னனின் சரித்திரத்தைத் தன்னகத்தே கொண்ட ஊர்!
மன்னன் உபரிசிரவஸு, நான்முகனை வழிபட்டு, பெறற்கரிய வரங்களைப் பெற்றான். ‘தன்னை யாரும் வெல்லக்கூடாது’ என்றும், ‘தான் பறக்கின்ற ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் அல்லது பொருளின் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்’ என்ற கடுமையான வரத்தையும் அவரிடமிருந்து பெற்றான்.
ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானில் தேரில் பறந்து சென்றனர். அப்போது, அழகு மிகுந்த ஆமருவியப்பன் கோயிலைக் கண்டு, அரசி அத்தல பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள். ஆனால், அரசன் அவளது வேண்டுகோளை நிராகரித் தான். மேலும், ‘தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ அது அழிந்து விடும்’என்று ஏளனமாகக் கூறினார். அந்த நேரத்தில், பூமியில் பசுக்கள் கூட்ட மாக, வயலில் மேந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டதும் அவை உயிரிழந்தன. இதனால் ஆநிரை மேத்த பிரான், அவற்றைக் காக்கத் திருவுளம் கொண்டார். அதோடு, உபரிசிரவஸுவுக் கும் பாடம் புகட்ட எண்ணினார். பெருமாளின் குறிப் பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கி வீசப்பட்டு, அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது.
அந்த நேரம், அகஸ்திய முனிவர் அந்த புஷ்கரிணிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். புஷ் கரிணியில் இருந்து எழுந்த அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, நீந்திக் கரை ஏறினர். தாங்கள் இவ்வாறு கீழே விழுவதற்கு, அகஸ்திய முனிவரே காரணம் என்று எண்ணினர். அவரிடம் சென்று தங்கள் மனத்தாங்கலைத் தெரிவித்தனர். கண்திறந்து பார்த்த அகத்திய முனிவர், தம் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை சேவித்து அருள் பெறுமாறு கூறினார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சன்னிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர். அப்போது ஓர் இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னன் உபரிசிரவஸுவின் கர்வத்தைப் போக்கியருளினார் பெருமாள். எதிரியர் ஆணவத்தை அடக்கி, எளியோரைக் காக்கும் பெருமானை, பக்தர்கள் வணங்கி, தங்கள் குறை நீங்கப்பெறுகின்றனர்.
ஆமருவியப்பன் ஆவினம் மேத்த பெருமான். இதனால், கால்நடைகளைக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள், இங்கே பெருமாளை வழிபட்டு, மேலும் வளர்ச்சி அடைகிறார்கள். மேலும், இத்தலப் பெருமாள், சத்ரு விநாசனம் செய்பவர். எதிரிகளின் ஆணவத்தை அடக்கும் பெருமாள் இவர். இதனால் இவரைத் தரிசித்து, சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
தவிர, இப்பெருமாள் ஆயுள் தோஷம் போக்குபவ ராகவும் திகழ்கிறார். மார்க்கண்டேய மகரிஷி, தமக்கு பிறவா வரம் தருமாறு, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார் பெருமாள். அந்த வகையில் ஆயுள் தோஷத்தைப் போக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. கவிச்சக்ரவர்த்தி கம்பர் பிறந்ததும் தேரழுந்தூரே. எனவே, கோயிலின் இடப்புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவங்கள் அமையப்பெற்றுள் ளன.
இருப்பிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 7.30 - 12; மாலை 5 - 8.30

Comments