மாற்றங்கள் அருள்வார் மாத்தூர் ஐயனார்!

ல்லை தெய்வங்கள்- நம் மண்ணின் மகிமையை, வீரத்தை, கலாசாரத்தை, வரலாற்றை, தியாக திருக்கதைகளைத் தாங்கி நிற்பதுடன், நம் முன்னோரின் வாழ்வியலுக்கும், வழிபாட்டு நெறிகளுக்கும் சான்றாகவும் திகழ்கின்றன. ஊரைக் காக்கும் எல்லைச் சாமிகளாக மட்டு மின்றி, தங்களின் குலதெய்வமாகவும் நம் முன் னோர்கள் போற்றி வழிபட்ட அந்த மூர்த்திகளில் சாஸ்தாவுக்கும் ஐயனாருக்கும் மிக முக்கியத்துவம் உண்டு.

தனியாகவும், பூரணை-புஷ்கலை தேவியருட னும் ஐயனார் அருள்பாலிக்கும் தலங்கள் தமிழகத்தில் ஏராளம். அவற்றில் ஒன்று மாத்தூர் கிராமம். பிரசித்தி பெற்ற வைணவத் தலமான நாச்சியார்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மாத்தூர். இங்கே தேவியருடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு  ஹரிஹரபுத்ர வீரசேன ஐயனார்.

ஐயன் வழிபாடு மிகத் தொன்மையானது. கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணத்தில் ஒரு தகவல் உண்டு. சூரபதுமனுக்கு பயந்து சீர்காழித் தலத்தில் மறைந்து வாழ்ந்தாள் இந்திரனின் மனைவியான சசிதேவி. அவள் அங்கிருப்பதை அறிந்து, அவளைப் பிடித்துச்செல்ல வந்தாள் சூரபதுமனின் தங்கையான அஜமுகி. அப்போது அவளிடம் இருந்து இந்திரனின் மனைவியைக் காத்தருளியது ஐயன்(சாஸ்தா) என்பது கந்தபுராணம் தரும் தகவல். இதிலிருந்து ஐயன் வழிபாட்டின் தொன்மையை நாம் அறியலாம். ஐயன் என்ற பதமே ஐயனாராகவும், ஐயப்பனாகவும் மாறியது என்பார்கள்.

ஐயனாருக்கு இரு தேவியர்கள் உண்டு (ஐயப்ப அவதாரத்தில் அவர் பிரம்மசாரியாகத் திகழ்ந்தார்). பூரணையையும் புஷ்கலையையும் அவர் மணமுடித்த காலத்தில், தேவியரின் சுற்றத்தாராகத் திகழ்ந்த இந்தக் கிராமத்தவர்,  தங்கள் ஊர் எல்லையிலேயே கோயில் கொண்டருளும்படி வேண்டிக்கொண்டார்களாம். அதன்படி, மாத்தூரில் பூரணை-புஷ்கலா தேவியருடனும் கோயில் கொண்டாராம் ஹரிஹரபுத்ர வீரசேன ஐயனார்.

கருவறையில் இருபுறத்திலும் தேவியர் உடனிருக்க, திருக்கரங்களில் புரசை இலை, சின்முத்திரை, சாட்டை ஆகியவற்றைத் தாங்கியபடி அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் ஐயனார். ஸ்வாமியும் தேவியர் இருவரும் ஒரே ஆதார பீட ஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம். அமர்ந்த கோலத்தில் விநாயகரும் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். ஐயனாருக்கு இடப்புறத்தில் அவருடைய பரிவார தெய்வங்களான கருப்பண்ண ஸ்வாமி, மதுரைவீரன் மற்றும் மாரியம்மன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். ஸ்வாமி சந்நிதியின் எதிர்ப்புறத்தில் பலிபீடத்தை அடுத்து, ஸ்வாமியைப் பார்த்தபடி யானை விக்கிரகம் உள்ளது. ஆம், இங்கே யானை வாகனராக அருள்கிறார் ஐயனார்.

ஐயனார் சாந்நித்தியம் மிகுந்தவர்; இவரது சக்திக்கு ஈடுஇணையே இல்லை என்கின்றனர் மாத்தூர் கிராமவாசிகள். மதவேறுபாடின்றி  அனைவரும் இவரை வழிபடுகிறார்கள். துரைராஜ் என்ற அன்பர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன்தான். ஆனாலும், இந்த  ஐயனார் மீது அளவு கடந்த ஈடுபாடு உண்டு. முப்பது வருடங்களுக்கு முன்பு குப்பு ஐயர் என்றொருவர் இருந்தார் அவருக்கு இரண்டு கரங்களுமே சூம்பிப்போய் இருந்தன. தினமும் என்னை அழைத்து,  தன் சார்பில், ஐயனாருக்கு 48 தேங்காய் உடைக்கச் சொல்வார். நானும் அவருக்கு உதவி செய்வேன். தேங்காய்களை உடைத்ததும், கோயில் மண்ணை எடுத்துக் கைகளில் பூசிக்கொண்டு சாமி கும்பிட்டுவிட்டுச் செல்வார். சொன்னால் நம்பமாட்டீர்கள்... இரண்டே வருடங்களில் அவருடைய கைகள் குணமாகிவிட்டன’’ என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டவர்,  “ரொம்ப துடியான சாமி இவர். தப்புத்தண்டா செய்தோம் என்றால் கடுமையாக தண்டிப்பார்’’ என்கிறார் பயபக்தியுடன்.

பங்குனி மற்றும் கார்த்திகை மாதங்களில் வெகு விமரிசையாக விழாக்கள் நடைபெறு கின்றன. மண் மணக்கும் இந்தத் திருவிழாக்களில் இன்றளவும் ஸ்வாமியின் திருவீதியுலா, மாட்டு வண்டியில் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

கடுமையான தோஷங்கள் மற்றும் தீராத வழக்கு களால் தவிப்பவர்கள், ஏவலால் பாதிக்கப்பட்ட வர்கள், தாம்பத்திய ஒற்றுமையின்மை, திருமண முறிவு ஆகிய பிரச்னைகளால் வருந்துவோர், மாத்தூர் ஐயனார் கோயிலுக்கு வந்து, அவரைத் தரிசித்து அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு, ஏழை- எளியவர்களுக்கு, அன்னதானம் செய்தால், சகல பிரச்னைகளும் தீரும்; வாழ்வில் சந்தோஷம் பொங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: ஹரிஹரபுத்ர வீரசேன ஐயனார்

தேவியர்: பூரணை - புஷ்கலை

எப்படிச் செல்வது?: கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து, நன்னிலம் அல்லது திருவாரூர் செல்லும் எல்லா பேருந்துகளும் இந்தக் கோயில் வழியாகச் செல்பவையே. மாத்தூர் பாலம் என்ற நிறுத்தத்தில் இறங்கிய உடனேயே கோயிலைத் தரிசிக்கலாம்.

நடைதிறந்திருக்கும் நேரம்: நாள்தோறும் காலை 7 முதல் 9 மணி வரையிலும், மாலை 6 முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

Comments