கலியில் உகந்த அவதாரம்!

இந்தப் பரமேச்வரனுக்கே பல ரூபம் இருக்கிறதே! கல்யாண சுந்தரமூர்த்தி, சொமாஸ்கந்த மூர்த்தி, நடராஜ மூர்த்தி, பைரவ மூர்த்தி என்றெல்லாம்! இவற்றில் எதிலிருந்து அவதாரத்தைப் பிறப்பிப்பது? சந்நியாசி குருவாக அவதாரம் ஏற்படணும் என்று சொல்லியாயிற்று. ஆகையால், பத்னியோடு இருக்கிற இந்த அவசரங்களிலிருந்து அவதாரம் உண்டாவதற்கில்லை. ஏனென்றால், பதி பூலோகத்துக்குப் போகிற போது அம்பாளும்தானே கூடக்கிளம்புவாள்?
பைரவருக்கும் பைரவி என்று பத்னி உண்டு. அதுவுமில்லாமல், அவர் பயங்கரமான மூர்த்தி. பைரவம் என்றாலே பயங்கரம்தான். பயங்கரமாக இருக்கிறவர் பரம சாந்த நிலையை உபதேசிக்க வருவதென்றால் அசந்தர்ப்பமல்லவா? ப்ரசாந்த நிலையிலுள்ள ஒரு அவஸரத்திலிருந்து இந்த அவதாரம் ஏற்படுவதுதானே பொருத்தம்?
இதனால் எல்லாம், பத்னி சமேதனா இல்லாமல், ஏகாங்கியாக, அடங்கிய சாந்த சமுத்ரமாக, நிஷ்கரிய நிஷ்டாமூர்த்தியாக, ஆதி குரு என்றே பெயர் பெற்று விளங்கும் தட்சிணாமூர்த்தியிடம் இருந்தே இந்த அவதாரம் உண்டாக வேண்டுமென்று திவ்ய சங்கல்ப மாயிற்று.
ஒன்று சொல்லாமல் விடக்கூடாது. பத்னி சமேத னாகத் தெரியாவிட்டாலும் பரமேச்வரன் அம்பாளின் சம்பந்தம் இல்லாமலிருப்பது என்பது ஒருபோதும்கிடையாது. தட்சிணாமூர்த்தி ஸ்வரூபத்திலும் கூடத்தான்! அதேபோல அம்பாளும் பாலா திரிபுரசுந்தரி, கன்யாகுமாரி, துர்காதேவி என்றெல்லாம் ஈச்வரனோடு சேர்ந்தில்லாமல் தனியாகக் காணப்படும் சமயங்களி லும், நம் காட்சிக்குத்தான் அவன் தெரியவில்லையே தவிர, அவன் அவளிடமிருந்து பிரிந்திருக்கிறான் என்று ஒருபோதும் இல்லை.
சிவ - சக்திகளை ஒருபோதும் பிரிக்கவே முடியாது. நிர்குண - ஸகுண ப்ரம்மங்களைத்தான் (முறையே) சிவன் - சக்தி என்பது. இரண்டும் சேர்ந்துதான் பரப்ரம்மம். லோகத்தில் பல தினுசாக விளையாடி, காட்சி கொடுத்து, பலவிதமான பாடங்களைக் கொடுக்க வேண்டும், பலவிதமான தத்துவங்களை உணர்த்த வேண்டும், பலவிதமான ரசங்களைத் தரும் கதை புராணங்களாக நடித்தே இப்படிச் செய்ய வேண்டும் என்றுதான் அவர்கள் சில அவசரங்களில் தம்பதியாகவும், சில அவசரங்களில் ஒண்டியாக, ஏகாங்கியாகவும் இருப்பது.
பரம ஞானமான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் பரமேச்வரன் நிஷ்க்ரியமாக உட்கார்ந்திருக்கும் போதும் அவருக்குள்ளே ஸகல க்ரியா சக்தியுமான ஸாக்ஷாத் அம்பிகையை அவர் நம் கண்ணுக்குக் காட்டாமல் வைத்துக் கொண்டு தானிருப்பார். இல்லாவிட்டால் அந்த நிஷ்க்ரிய மூர்த்தி அவதாரம் என்ற க்ரியையை பண்ணியிருக்க முடியாது! அவதரித்த பின் ஆ சேது ஹிமாசலம் மூன்று தரம் இந்தப் பெரிய தேசத்தைச் சுற்றி வருவது, கட்டுக் கட்டாகப் புஸ்தகம் எழுதுவது, ஊர் ஊராகப் போ வாதம் செய்வது, பேர் பேராக அநுக்ரஹம் செய்வது என்றெல்லாமும் செய்திருக்க முடியாது.
அவதாரத்துக்குப் பெயரே என்ன? சங்கரர். ‘கரர்’என்றாலே ‘செய்கிறவர்’,‘காரியம் பண்ணுகிறவர்’என்றுதான் அர்த்தம்.‘சம்’என்றால் உயர்ந்த மங்கள மான சுகம். லோகத்திற்கெல்லாம் பரம மங்களத்தை விடாமல் செய்கிறவர் ‘சங்கரர்’.


செயலில்லாத தட்சிணாமூர்த்தி இப்படி வந்தார் என்றால் எப்படி? க்ரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி ஆகியனவும்தான், எல்லா சக்திகளுக்கும் மூலமான பராசக்தி அவருக்குள்ளேயே சூட்சுமமாக அடங்கியிருந்ததால்தான்! சாக்தர், சைவர், வைஷ்ணவர் மூன்றுமான ஆசார் யர் அவர். அவரைப் பற்றிச் சொல்வதுண்டு...
அந்த: சாக்தோ, பஹி: சைவ:, வ்யாவஹாரே துவைஷ்ணவ: என்று. உள்ளுக்குள்ளே சக்தி - அம்பிகையான பராசக்தி. வெளியிலே ரூபத்தைப் பார்த்தால் வெள்ளை வெளேரென்று, விபூதியும் ருத்ராட் சமுமாகப் ‘பரமசிவனே வந்திருக்கிறானோ?’ என்று நினைக்கும்படியாக. உலக விவகாரம் ஓயாமல்
ஓடி ஆடிப் பண்ணிக் கொண்டிருப்பதிலோ விஷ்ணு வாகவே இருக்கிறார். வாயாலே ஆசீர்வாதம் பண்ணுவதும் ‘நாராயண, நாராயண’ என்றுதான்! ஸ்ரீமுகம் கொடுப்பதெல்லாம், ‘க்ரியதே நாராயண ஸ்ம்ருதி:’என்று விஷ்ணு ஸ்மரணையோடுதான்!
சிவ அவதாரம்! செய்வதெல்லாம் நாராயணன் பேரில்! இப்படி சிவ - விஷ்ணு அத்வைதம்!


விஷ்ணுவை வ்யவஹார சக்தி, க்ரியா என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் அம்பாளே என்றுதான் அர்த்தம்! புருஷ ரூபத்தில் அவதாரம் ஆதலால் அம்பாளின் புருஷ ரூபமான நாராயணனின் பேரிலேயே எல்லாக் காரியமும் செய்தார். வெளியிலே காட்டாமல் உள்ளுக்குள் அம்பாள் ரூபம். அதாவது, இதயத்தில் தாயாராக பரம கருணை! அதுதான் அந்த: சாக்த:
சக்தி, சக்தி என்றால் அந்தக் கருணைதான். அது இல்லாமல் சிவம் இல்லை. சிவம் தானிருப்பதாகத் தெரிந்து கொள்ளவே ஒரு சக்தி இருக்கத்தானே வேண்டும்? சிவம் தன்னையே கருணையாக வெளிப்படுத்திக் கொள்வதும் சக்திதான். அவளுடைய ‘விமர்ச’ம் இல்லாமல் இவருடைய ‘ப்ரகாசம்’ உலகத்துக்கு ஏற்படவே முடியாது என்று தத்துவ ரீதியில்  சொல்வார்கள். ஆனாலும், சீதா-ராமர்கள், ராதா-கிருஷ் ணர்கள் மாதிரி, ஸ்திரீ புருஷ ஜோடியாக அவதாரம் எடுக்க முடியாமல், சந்நியாச அவதாரமாக அமைய வேண்டும் என்று காலத்தின் சந்தர்ப்ப நிர்பந்தம் இருந்ததால், அவளை வெளியிலே காட்டாமல் உள்ளே வைத்துக் கொண்டுள்ள யோகேச்வர அவசரத்தில் இருந்து அவதாரம் நிகழ்த்துவதென சங்கல்ப மாயிற்று.


மஹாவிஷ்ணு எப்போதும் லக்ஷ்மியை வெளிப்பட வைத்துக் கொண்டேதான் இருப்பார். அப்படி இல் லாமல் அவர் ஏகாங்கியாக நர-நாராயணர்கள் மாதிரி இருந்தார் என்றால் அப்போது அவர் பூர்ண விஷ்ணு வாகத் தெரிய மாட்டார்; அம்சாவதாரம் என்னும்படி தான் இருப்பார். இப்போதோ, கலி கோலாகலத்தை அடக்க பூர்ணமான பகவத் சக்தி அவதரிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், லக்ஷ்மீ சமேதரான விஷ்ணு தம்பதி சமேதமாக பூர்ணாவதாரம் செய முடியாமல், இப்போது அவதரிக்க வேண்டியவர் சந்நி யாசியாகத்தான் இருந்தாக வேண்டும் என்றும் இருந்தது. இப்படிப் பார்க்கிறபோதும் பரிபூர்ண சிவமாக இருப்பவராக தட்சிணாமூர்த்தி என்று ஒரு ஏகாங்கி இருப்பது ரொம்பவும் சௌகர்யமாகி விட்டது!
பார்வதி ஸமேதராக இருக்கப்பட்ட பரமேச்வரனின் அம்சமாக மட்டும் இல்லாமல் அவருடைய ஸ்வச்சமான பூர்ண ஸ்வரூபமாகவே இருக்கிறவர் தான் தட்சிணாமூர்த்தி. ஆகையால், இப்போது அவரிடமிருந்து அவதாரத்தை உத்பவிக்கச் செவதே ஸகல விதத்திலும் பொருத்தமுடையதாக இருந்தது.
இப்படி எல்லாப் பொருத்தங்களும் இருக்கும்படி யாகப் பரமாத்மாவின் ஸங்கல்பம் அமைந்தே பரம சுபமான ஸ்ரீ சங்கராவதாரம் ஏற்பட்டது.

Comments