இஷ்ட தெய்வ வழிபாடு!

ஷ்டம் இருந்தாலும் இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது என்று ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஓர் அன்பு உருவகமாக பாவித்து, பக்தி செய்வதற்கு நம் மதம் அருளியுள்ள வழிபாடே இஷ்ட தெய்வ வழிபாடு’ என்று தெய்வத்தின் குரலாக மொழிந்திருக்கிறார் காஞ்சி பெரியவர்.

தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாகச் செய்யப்படும் வழிபாடு ஆகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள் மனதுக்குப் பிடித்தமான தெய்வத்தை வழிபடுவது.

விநாயகர் சிலருக்கு இஷ்ட தெய்வம் என்றால், சிலருக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். சிலர் அம்பிகையை இஷ்ட தெய்வமாக வழிபடுவார்கள்; இன்னும் சிலர் சிவபெருமானை இஷ்ட தெய்வமாக வழிபடுவார்கள். இப்படியே ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி சிவன், கிருஷ்ணன், ஆஞ்சநேயர் என்று ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவார்கள்.
முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று நெறிமுறைகளை வகுத்துச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடவேண்டும்.

இன்றைக்குப் பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால், ‘அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது’ என்பதுபோல், பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுவதைவிடவும், ஒரு தெய்வத்தை மட்டுமே உறுதியான பக்தியுடன் ஒருமித்த மனத்துடன் வழிபடுவது, சிறந்த பலன்களைத் தரும்.

ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டு அன்பர்கள் பலன் பெறவேண்டும் என்பதற்காக, இந்த இணைப்பில் விநாயகர் தொடங்கி சில தெய்வங்களை வழிபடும் முறைகள், மந்திரங்கள், வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறோம்.

அன்பர்கள் அனைவரும் இஷ்ட தெய்வத்தை முறைப்படி வழிபட்டு, கஷ்டங்கள் நீங்கி சுகமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஸ்ரீவிநாயகர்

தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் ஆதலால், கணபதி பெருமானுக்கு விநாயகர் என்று திருநாமம். ‘வேழ முகத்து விநாய கனைத் தொழ, வாழ்வு மிகுத்து வரும்’ என்பார் ஒளவை பாட்டி.

எந்தவொரு சுபகாரியமாக இருந்தாலும் சரி, முழுமுதற் தெய்வமான விநாயகரை வழிபட்டுவிட்டே துவங்கவேண்டும் என்கின் றன சாஸ்திரங்கள். அப்படியிருக்க அவரையே இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு, வாழ்வில் என்றென்றும் ஏற்றம்தான்!
வாழ்வில் விக்னங்கள் நீங்கவும், கல்வி ஞானம் கைகூடவும் அவை பலனளிக்கவும் விநாயகரை வழிபடவேண்டும். அதேபோல் ஜாதகத்தில் சனி பகவான் மற்றும் சர்ப்ப கிரகங்கள் குறைபாட்டுடன் திகழும் அன்பர்களுக்குக் காப்பு கணபதியே.

வழிபட உகந்த நாட்கள்: அனுதினமும் வழிபடுவது அவசியம். சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்கள் விசேஷமானவை.

அர்ச்சனைப் பொருள்கள்: தும்பை, அருகம்புல்.

நிவேதனம்: அவல்-பொரி கடலை, மோதகம்.

புண்ணிய நூல்கள்:  பிள்ளையார் புராணம், கணபதி சதகம்.

சிறப்பு வழிபாடு: செவ்வாய் பிள்ளையார் விரதம். பெண்கள் மட்டுமே செய்யும் விரதபூஜை இது. ஆடிச் செவ்வாய் இரவு பெண்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி, நெல் குத்தி, அரிசியாக்கி, மாவாக்கி, உப்பில்லாது, இளநீரை விட்டுப் பிசைந்து உருண்டை ஆக்கி, நீராவியில் வைத்து எடுத்து, கன்று ஈனாத பசுவின் சாணத்தில் பிள்ளையார் செய்து, பூஜை செய்து, விடிவதற்குள் விரதம் முடித்து, காலையில் பிள்ளையாரை ஆற்றில் விட்டால் தாலி பாக்கியம் பெருகும், தன தான்யங்கள் வளரும் என்பது ஐதீகம்.

இது, விரத மகாத்மியம் என்னும் நூலில் கூறப் பட்டுள்ள 46 விரதங்களில், விநாயகரின் அருள் கிடைக் கச் செய்யும் ஒரு விரதம் ஆகும்.

வழிபாட்டு மந்திரங்கள்

காரிய ஸித்தி காயத்ரீ
‘ஓம் க்லெளம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே
   பக்தானுக்ரஹகர்த்ரே விஜய கணபதயே ஸ்வாஹா’
மகா கணபதி திருமந்திரம்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் ஸோகவினாஸ காரணம்
நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்

சர்ப்பதோஷத்தின் குறைகள் நீங்க விரும்பும் அன்பர்களும், அஸ்த நட்சத்திரக் காரர்களும் கணபதியை கைதொழுது கஷ்டங்களை விலக்கலாம்.

ஸ்ரீமகாலட்சுமி

உலக வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது செல்வம். அதன் அதிபதியாகவும், அதை அள்ளி வழங்குபவளாகவும் திகழ்பவள் மகாலட்சுமி. அவளே வீரர்களிடம் வீரலட்சுமியாகவும்,  தேசத்தைச் செழிக்கச் செய்யும் ராஜ்ஜிய லட்சுமியாகவும், உணவுப் பொருட் களில் தான்ய லட்சுமியாகவும், யோகிகளிடம் யோக லட்சுமியாகவும், மனச் சலனங்களை நீக்கும் தைரிய லட்சுமியாகவும், பிள்ளைச் செல்வம் அருள்வதில் சந்தான லட்சுமியாகவும், வீடுகளில் கிரக லட்சுமியாகவும், விளக்குகளில் தீபலட்சுமியாகவும் திகழ்கிறாள்.
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுதல், தலைவாயிலைக் கழுவி கோலமிட்டு பூக்களால் அலங்கரித்தல், வெள்ளிக்கிழமைகளில் வில்வத்தால் அர்ச்சித்து திருமகளை வணங்குதல், இனிப்பு தானம், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றால், லட்சுமி  கடாட்சத்தை பரிபூரணமாகப் பெறலாம்.

வழிபட உகந்த நாட்கள்: அனுதினமும் வழிபடுவது அவசியம்.  வெள்ளிக் கிழமைகள், ஏகாதசி, கார்த்திகை மாத ஸ்ரீபஞ்சமி.

அர்ச்சனைப் பொருள்கள்: துளசி, வில்வம்
நிவேதனம்: இனிப்பு பதார்த்தங்கள்.
புண்ணிய நூல்கள்: ஸ்ரீசூக்தம், ஸ்ரீலட்சுமி தந்திரம், ஸ்ரீஸ்துதி

சிறப்பு வழிபாடு: வெள்ளிக் கிழமை மாலையில் தாமரை வடிவிலான கோலம் போட்டு, அதன் மீது ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றிவைத்து, அதையே திருமகளாகப் பாவித்து தாமரைப் பூக்களால் திருமகளின் 12 திருப் பெயர்களைக் கூறி அர்ச்சித்து வழிபடுவதால், வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

வழிபாட்டு மந்திரங்கள்

ஸ்ரீமகாலட்சுமி ஸ்தோத்திரம்

பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச
நமோநம:
லட்சுமி ஸ்தோத்திரம்
மானே மடமயி லேயிசை பாடிடு மாங்குயிலே
தேனே நவமணி யேமிடி நோய்தவிர் தெள்ளமுதே
வானே முதலெங்கு மாயவளேயிவ் வறுமையினி
நானே பொறுக்கிலன் வந்தாள் செந்தாமரை நாயகியே

- திருமகள் வழிபாட்டின்போது இந்த துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் விரைவில் ஈடேறும்.
கிருத்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் மகாலட்சுமியை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் கைகூடும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி

இறைவன் ஞானத்தின் திருவுருவமாக, அதைப் போதிக்கும் ஆசானாக திருக்கோலம் தாங்கிய நிலையில் தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் என்கின்றன ஞானநூல்கள். ‘தட்சிணா’ என்றால் ‘தென்னன்’ என்று பொருள் கூறுவர். ஆற்றல், ஆளுமை, யோகம், வீரம் ஆகிய பொருள்களையும் அந்தச் சொல் குறிக்கும்.

சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி  முனிவர்களுக்கு ஞானமருளிய இந்த தெய்வத்தை இஷ்டதெய்வமாக ஏற்றவர்கள், புத்தியால் சாதிப்பவர்களாகத் திகழ்வர். ஞானச் செல்வம் மட்டுமல்ல, உலக குருமார்களுக்கு எல்லாம் குருவான தட்சிணாமூர்த்தியை வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்.
வழிபட உகந்த நாட்கள்: அனுதினமும் வழிபடலாம். குறிப்பாக குரு வாரமாகிய வியாழக்கிழமை வழிபடுவது விசேஷம்.

அர்ச்சனைப் பொருள்கள்: வில்வம்.
நிவேதனம்: கொண்டைக்கடலை.

புண்ணிய நூல்கள்:  தட்சிணாமூர்த்தி உபநிஷத். தலையாய உபநிடதங்கள் நூற்றெட்டில் ஒன்று இது.

சிறப்பு வழிபாடு: ஆனி மாதம் மிருகசீரிட நட்சத்திர திருநாள் தட்சிணாமூர்த்தி வழிபாட்டுக்கு உகந்த நாள். இந்த தினத்தில் தியான மூர்த்தியாகிய தட்சிணாமூர்த்தியை மனதில் தியானிப்பதும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் விசேஷம்.

வழிபாட்டு மந்திரங்கள்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
உபாஸகானாம் யதுபாஸனீய
    முபாத்தவாஸம் வடசாகமூலே
தத்தாம தாக்ஷிண்யஜுஷா ஸ்வமூர்த்யா
    ஜாகர்த்து சித்தே மம போதரூபம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி துதிப்பாடல்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
    ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
    பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை
    இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
    நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளிய பாடல் இது.

மகம், பூரம், உத்திரம் மற்றும் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தென்முகக் கடவுளை வழிபட்டு வரம்பெறலாம்.

ஸ்ரீகிருஷ்ணன்

பக்த மீரா, சூர்தாஸ், கிருஷ்ண சைதன்யர் முதலான அடியவர் கள் பலரும் கிருஷ்ணனை இஷ்டதெய்வமாக ஏற்று உலகக் கஷ்டங்களைத் தவிர்த்த அடியவர்கள் ஆவர். அவர்கள் வழியில் நாமும் கிருஷ்ண பக்தியால் வாழ்வில் கீர்த்தி பெறலாம்.
ஞானம் பெறுவதற்கு பார்த்தசாரதியையும், கல்யாண வரம் பெற ராதாகிருஷ்ணனையும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கு சந்தான கிருஷ்ணனையும் வழிபடச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள். விரிவான வழிபாடுகள் ஏதும் செய்ய முடியாவிட்டா லும் பரவாயில்லை; அவனது பாலவிளையாடல்களை, திவ்ய கதை களை படிப்பதும் கேட்பதுமே சிறந்த வழிபாடாகிவிடும் அவனுக்கு. அதனால் நம் கஷ்டங்கள் நீங்கும்; இஷ்டங்கள் ஸித்திக்கும்!

வழிபட உகந்த நாட்கள்: அனுதினமும் வழிபடலாம். ஏகாதசி, துவாதசி தினங்கள், ரோகிணி நட்சத்திரம் மற்றும் அஷ்டமி தினங்கள் கிருஷ்ண வழிபாட்டுக்கு மிக உகந்தவை.
அர்ச்சனைப் பொருள்கள்: துளசி.

நிவேதனம்: வெண்ணெய், விளாம்பழம்.

புண்ணிய நூல்கள்:  ஸ்ரீமத் பாகவதம்.

சிறப்பு வழிபாடு: கண்ணனுக்கு எல்லா நாட்களும் திருநாள்தான்.  கிருஷ்ண ஜயந்தி -கோகுலாஷ்டமி வைபவங்கள் உலகெங்கிலும் பிரசித்தம். குறிப்பாக, செவ்வாய்க்கிழமையுடன் தேய்பிறை சதுர்த்தசி இணைந்து வரும் ‘கிருஷ்ண அங்காரஹ சதுர்த்தசி’ புண்ணிய தினத்தில், நெய் தீபமேற்றி வைத்து, வெண்ணெய் சமர்ப்பித்து, கீழ்க்காணும் துதிப்பாடல்களைப் பாடி கண்ணனை வழிபட்டால்,
உடற்பிணிகள், கடன் பிரச்னைகள் போன்றவற்றால் எழும் மனக் கவலைகள் நீங்க வழிபிறக்கும்.

வழிபாட்டு மந்திரங்கள்

கிருஷ்ணாஷ்டகத்தில் ஒரு பாடல்...

ஸமஸ்தகோபநந்தனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
   நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாரு ஸாயகம்
   ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
தாமரைக் கண்ணன் எம்மான்!
இனித்திரைத் திவலைமோத எறியும்தண் பரவைமீதே
தனிகிடந்து அரசுசெய்யும் தாமரைக்கண்ணன் எம்மான்
கனிஇருந் தனையசெவ்வாய்க் கண்ணனைக் கண்டகண்கள்
பனிஅரும் புதிருமாலோ என்செய்கேன் பாவியேனே!

கண்ணனுக்கு உகந்த ரோகிணி, அவிட்டம், சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள் கண்ணனை இஷ்டதெய்வமாக வழிபடுவது விசேஷம்.

ஸ்ரீதுர்கை

பக்தர்களின் பிரச்னைகளை நீக்கி வெற்றிகளை அருள்பவள் துர்காதேவி. துர்கம் என்றால் குகை. அடியார்தம் மனக்குகையில் வசிப்பவள் ஆதலால், அவள் துர்கா எனப் போற்றப்படுகிறாள். துர்காதேவி முழுமுதற் கடவுளான விநாயகருக்கு தாயாகவும், சித்தர் களின் தலைவியாகவும் தோன்றி பசி, தாகம், சோம்பல், பிரமை நீக்கி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி, வீரம் ஆகியவற்றைத் தருகிறாள். அவளை இஷ்டதெய்வமாக ஏற்று வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள், தீவினைகள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
வழிபட உகந்த நாட்கள்: அம்மன் வழிபாட்டுக்கு உகந்த செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்கள். ஞாயிறு ராகு காலத்தில், துர்காதேவியை தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷ பலன்களை அளிக்கும்.
அர்ச்சனைப் பொருள்கள்: குங்குமம், செந்நிறப் பூக்கள்.

நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல், கனி வகைகள்.

புண்ணிய நூல்கள்:  ஸ்ரீதேவி பாகவதம்.

சிறப்பு வழிபாடு: துர்காதேவியை மட்டுமின்றி, அவளுடன் சேர்த்து ஐந்து தேவியரை வழிபட உகந்த பஞ்சமிதேவி பூஜை அதிவிசேஷமானது. சரஸ்வதி, லட்சுமி, துர்கா, சாவித்திரி, ராதா தேவியரையும் சேர்த்து ஐவரை வழிபடும் இந்த பூஜையை பஞ்சமி திதியில் செய்யவேண்டும். மணைப் பலகையில் மஞ்சள் வஸ்திரம் விரித்து அதில் ஸ்வஸ்திக் கோலமிட்டு ஐந்து தீபங்கள் ஏற்றி, அவற்றையே ஐந்து தேவியராகக் கருதி, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, திராட்சை, வாழை ஆகிய ஐவகை கனிகளைச் சமர்ப்பித்து, கீழ்க்காணும் துதிப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். இதனால், மங்கல வாழ்வும் மாங்கல்ய பலமும் பெருகும்.

வழிபாட்டு மந்திரங்கள்

தேவி ஸ்தோத்திரம்
‘சர்வ மங்கள மாங்கல்யே சதா புருஷார்த்த சாதகே
சரண்யே பஞ்சசக்தி ரூபே தேவி மகாபூரணி
     நமோஸ்துதே
மங்களேஸ்வரியம் பாடல்களில் ஒன்று...
பார்வதியே கெளமாரி பங்கயத்தி சிற்பரையே
சீர்மிகுந்த வாடைபுனை தேவியே வார்சடையான்
வாமமதில் வாழுகின்ற மங்களத்தே மாங்கனியே
நாமமதில் தேன்சுவைக்கும் நா!

கயற்கண்ணியான அம்பாளை பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரக் காரர்கள் பூஜித்து வந்தால், அவர்களது வாழ்வில் என்றென்றும் வெற்றியே!

ஸ்ரீமுருகன்

சிவபெருமானை நெருப்பின் வடிவாகவும், சக்தியை நீரின் வடிவாகவும் கூறுவர். சிவலிங்கத்தில் ஆவுடையாரின் வடிவம் பரந்த நீரையும், அதன் நடுவே ஓங்கி உயர்ந்துள்ள லிங்க பாணம் நெருப் பையும் குறிக்கின்றன. நீரும் நெருப்புமே உலகத் தோற்றத்துக்கு ஆதாரம். அந்த வகையில், சக்தி வேலுடன் ஆறுமுக சிவமாய் அருளும் கந்தனும் உலகின் உயிர்நாடியாய் விளங்குகிறான்.
ரத்தம், யுத்தம், சகோதர உறவு ஆகியவற்றுக்கு உரித்தானவர் செவ்வாய். அவருக்கு அதிபதி கந்தவேள். அவரை வழிபட உறவு கள் மேம்படும், சகல காரியங்களிலும் ஜயமே உண்டாகும், வந்த வினைகளும் வருகின்ற வல்வினைகளும் விலகியோடும்.

வழிபட உகந்த நாட்கள்: செவ்வாய்க் கிழமைகள், மாதாந்திர சஷ்டி, ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை மற்றும் விசாக தினங்கள்.
அர்ச்சனைப் பொருள்கள்: செவ்வரளி

நிவேதனம்: பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல்.

புண்ணிய நூல்கள்:  ஸ்ரீகந்தபுராணம்.

சிறப்பு வழிபாடு: ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டி விரதம் இருப்பது நமக்குத் தெரியும். அதுமட்டுமின்றி மாதம் தோறும் வரும் சஷ்டி நாட்களிலும் விரதம் இருந்து முருகனை வழிபடுவது விசேஷம். இந்த விரதம் முருகனுக்கு மட்டுமின்றி, தெய்வானை தேவிக்கும் உரியது. அவளுக்கு சஷ்டி தேவி என்பது ஆதிப் பெயர். அவள், குழந்தைகளின் தெய்வம். கருவில் குழந்தைகளை வளர்ப்பவளும், பிறந்த பிறகு அந்தக் குழந்தைகளை காப்பவளும் அவளே. ஆக, சஷ்டியில் விரதமிருந்து தெய்வானை உடனாய முருகனை வழிபட்டால், புத்திரப் பேறு விரைவில் உண்டாகும். பிணிகள் முதலாக குழந்தைகளுக்கு உரிய பிரச்னைகள் யாவும் நீங்கும்.

வழிபாட்டு மந்திரங்கள்

சண்முக காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
ஸ்ரீசுப்ரமணிய கலம்பகம்
வேலவனே விக்கிரமாதிபனே விடையோனளித்த
பாலகனே புவிப்பண்டிதனே பணிந்தோர்களனு
கூலவனே திருப்போரூர் குமர குருவெனவே
நுலவனே அருள்செய்தற் கினிவிழி நோக்குவையே

செவ்வாய் தோஷத்தின் கெடுபலன்கள் குறைய விரும்பும் அன்பர்களும், புனர் பூசம், பூசம், கிருத்திகை, விசாகம் மற்றும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களும் முருகனை வழிபட, வாழ்க்கை வரமாகும்.

ஸ்ரீநரசிம்மர்

அதர்மத்தை அழிக்க உக்ர ரூபத்துடன் தூணைப் பிளந்து அவதரித்த திருமாலின் அவதாரம் நரசிம்மம். தன்பால் பக்தி கொண்டொழுகும் அன்பர்களை அனவரதமும் தெய்வம் காத்து நிற்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்வது இந்த தெய்வ அவதாரம்.அதர்மவாதிகளுக்குத்தான் அவர் சிம்மசொப்பனமே தவிர, பக்தர்களுக்கு அவர் வெல்லக்கனியாகத் திகழ்கிறார்.
அதுமட்டுமல்ல, நரசிம்ம மூர்த்தியை பேரழகன் என்றும் போற்று கின்றனர் அடியவர்கள். ராமனை அழகு ராமன் என்றும், அபிராமன் என்றும் போற்றும் அன்பர்கள், நரசிம்மரை பேரழகன் என்று பொருள்படும்படியாக ‘வேள்’ என்று அடைமொழியுடன் சேர்த்து அழைத்து வழிபடுகிறார்கள். அதாவது சிங்கவேள் பெருமாள் என்று போற்றுவர். தீவினைகள் நீங்கவும், சத்ரு பயம் விலகவும் இந்த அழகரை- சிங்கவேள் பெருமாளைப் போற்றி வழிபட வேண்டும்.

வழிபடவேண்டிய நாள்: சனிக்கிழமைகள், சுவாதி நட்சத்திர திருநாள் மற்றும் பிரதோஷ காலங்கள்.

அர்ச்சனைப் பொருள்கள்: துளசி

நைவேத்தியம்: பானகம்

புண்ணிய நூல்கள்: ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீநாராயணீயம்

சிறப்பு வழிபாடு: நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் மாலை மயங்கும் பிரதோஷ வேளையில் தோன்றி அசுரனை அழித்தார். அவதாரத்தின்போது உக்கிரமானவராக இருந்தபோதிலும் அசுர சம்ஹாரத்துக்குப் பிறகு பிரகலாதனின் பிரார்த் தனையால் மனம் குளிர்ந்தார். அவனுக்கு சிரஞ்ஜீவியாக வாழும் வரத்தை அளித்தார். ஆக, பிரதோஷ வேளையில் துதிப்பாடல்கள் கூறி, பானகம் சமர்ப்பித்து, நரசிம்மரை வழிபடுவதால் துன்பங்கள் தொலையும், ஆயுள் பெருகும், வேண்டிய பலன்கள் யாவும் கிடைக்கும்.

வழிபாட்டு மந்திரங்கள்

நரசிம்ம காயத்ரீ
வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோநாரஸிகும்ஹ ப்ரசோதயாத்:
திருப்பல்லாண்டு
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்துவழிவழி யாட்செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்
அந்தியம்போதில ரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே

சுவாதி மற்றும் திருவோண நட்சத்திரக்காரர்கள் நரசிம்மரை வழிபட்டு வந்தால், பிரச்னைகள் யாவும் நீங்கி நலம்பெறலாம்.

ஸ்ரீபைரவர்

வாழ்க்கை பல்வேறு நிலைகளில், பல்வேறு கோணங்களில்  நம்மை பயமுறுத்தும். அப்படித் தோன்றும் அச்சத்தை அகற்றி, நம்மை ரட்சிக்கும் தெய்வம் ஸ்ரீமகா பைரவர். சிவபிரானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீபைரவர் என்கின்றன ஞானநூல்கள்.
வேதங்களிலும், ஆகமங்களிலும், பல்வேறு ஞான நூல்களிலும்  பைரவரின் திருக்கதைகள் விரிவாக விளக்கப்படுகின்றன. பைரவ மூர்த்தி அந்தகாசுரனை வதைக்கச் சென்றபோது அவரிடம் இருந்து எண்மர் தோன்றினர். அவர்களே அஷ்டபைரவர் எனவும், இந்த எண்மரும் 64 காலங்களில் 64 திருவடிவங்களில் காட்சி தருகிறார்கள் எனவும் விளக்குகின்றன ஞானநூல்கள். பைரவ மூர்த்தங்கள் விவசாயத்தை காக்கும் தெய்வமாகவும், போர் தெய்வ மாகவும், யோக தெய்வமாகவும் அருள்வதாக ஐதீகம். 
 
வழிபட உகந்த நாட்கள்: அஷ்டமி தினங்கள்.

அர்ச்சனைப் பொருள்கள்: குங்குமம், செந்நிறப் பூக்கள்.

நிவேதனம்: அவல், பொரி, வெல்லம் கலந்த தயிர், இனிப்புப் பதார்த்தங்கள்.

புண்ணிய நூல்கள்: சிவாகம நூல்கள்

சிறப்பு வழிபாடு: அவல், பொரி, வெல்லம் கலந்த தயிர், மாதுளை முத்துக்கள் இட்ட தயிர் அல்லது தேன், இனிப்பு பட்சணங்களை பைரவருக்கு நைவேத்தியம் செய்து, அன்பர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும். பால், தயிர், தேன் ஆகியன கலந்த திரி மதுரத்துடன் எள்ளை ஊறவைத்துக் கலந்து பைரவருக்கு ஹோமம் செய்து வழிபட்டால், பீடைகள் விலகும்.

வழிபாட்டு மந்திரங்கள்

அஸிதாங்க பைரவ தியானம்
த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் முண்ட மாலாவிபூஷிதம்
ச்வேத்தவர்ணம் க்ருபா மூர்த்திம் பைரவம்
                     குண்டலோ  ஜ்வாலம்
கதாகபால ஸம்யுக்தம் குமாரஞ் ச திகம்பரம்
பானம் பாத்ரஞ்ச சங்கம் அக்ஷமாலம் கமண்டலும்
நாக யக்ஞோபவீதஞாச தாரிணம் ஸு விபூஷிதம்
ப்ரஹ்மாணீ சக்தி ஸஹிதம் ஹம்ஸாருடம் ஸுரூபிணம்
ஸர்வாபிஷ்டப்ரதம் நித்யம் அஸிதாங்கம் பஜாம்யஹம்.

- வல்லமை மிக்க இந்த தியான வரிகளைப் படித்து பைரவ மூர்த்தியை வழிபட்டால், எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். மகம், பூரம் மற்றும் உத்திர நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டு வந்தால், காரியங்கள் யாவும் ஸித்தியாகும்.

ஸ்ரீவாராஹி

வாழ்வளிக்கும் இந்த தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்த மாதர்களின் மகிமையை தேவி மஹாத்மியம் முதலான ஞான நூல்கள் விரிவாக விளக்குகின்றன. மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் ‘சப்த ஸதீ’ என்று போற்றப்படுகிறது.
இந்த நூல், அசுரர்களாகிய சும்ப- நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இவர்களில் வாராஹி தேவியை வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இவளை வழிபடுவார்கள்.

வழிபட உகந்த நாட்கள்: பஞ்சமி திதி நாட்கள்.

அர்ச்சனைப் பொருள்கள்: குங்குமம், செந்நிறப் பூக்கள்.

நிவேதனம்: பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன்.
புண்ணிய நூல்கள்: வாராஹிமாலை

சிறப்பு வழிபாடு: பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீவாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.

மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள்.

வழிபாட்டு மந்திரங்கள்

வராஹி மாலையில் ஒரு பாடல்...
இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம்
            இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!

- பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராஹிதேவியை வழிபட, அனவரதமும் நமக்குத் துணை நிற்பாள். அஸ்வினி, பரணி, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாராஹியை வழிபட்டு  அருள் பெறலாம்.

ஸ்ரீவீரபத்திரர்

உலக நலம்பொருட்டு சிவபெருமான் அநேக அசுரர்களை வென்றடக்கியுள்ளார். அதற்காக அவர் புரிந்த வீர விளையாடல்களில் தலையாய எட்டை அட்டவீரட்டம் என்று பக்தர்கள் போற்றுவர்கள். அந்த எட்டிலும் குறிப்பிடத்தக்கது தட்சனை தண்டித்த திருக்கதை.
இந்த மறக்கருணை நிகழ்த்தியது சிவாம்சமான வீரபத்திரர். இவரை சிவனாரின் உக்கிர குமாரராகவும் சித்திரிப்பது உண்டு. வீரத்தையே ஐஸ்வரியமாகக் கொண்ட தெய்வம் இவர். இவரை வணங்கி வழிபடுவதால் மறைமுக எதிர்ப்புகளும், சத்ரு பயம் கடன், நோய் போன்ற வாழ்க்கை பிரச்னைகளும் நீங்கும் என் கின்றன ஞான நூல்கள்.

வழிபடவேண்டிய நாட்கள்: செவ்வாய்க்கிழமை, மகா அஷ்டமி.

அர்ச்சனைப் பொருள்கள்: தும்பை, நந்தியாவட்டை

நைவேத்தியம்: வெண்ணெய், மஹா நைவேத்தியம்

புண்ணிய நூல்கள்: தக்கயாகப்பரணி. காரணாகமம்,  தத்துவ நிதி முதலான நூல்கள் வீரபத்திரரைப் போற்றுகின்றன.

சிறப்பு வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் செம்பூக்களாலும் செஞ்சந்தனம் கொண்டும் வீரபத்திரரை வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில், தும்பை, நந்தியாவர்த்தம் முதலிய வெண்மலர்களாலும் வெண்பட்டாலும் அலங்கரித்து, மகா நிவேதனம் செய்து வீரபத்திரரை வழிபடவேண்டும். இந்த நாட்களில் ஆலயங் களில் வீரபத்திரருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வழிபடுவது சிறப்பு. அதேபோல், ஆடிப்பூரத்தன்று வெற்றிலை சாற்றி வணங்குவதும் சிறப்பாகும்.

வழிபாட்டு மந்திரங்கள்

எச்சன் நினைத்தலை கொண்டார்
பகன் கண்கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல்லிருத்துக்கொண்டார்
மெச்சென் வியத்திரன் தலையும் வேறாக் கொண்டார்
விறலிங்கி கரங்கொண்டார் வேள்விகாத்த உச்ச
நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார்
உணர்வில்லாத் தக்கந்தன் வேள்வியெல்லாம்
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே

- தட்ச யாகத்தை அழிக்கச் சென்ற வீரபத்திரர் அங்கிருந்த தேவர்களை தண்டித் ததுடன், அவர்கள் தம் தவற்றைப் பொறுத்தருளும்படி பிரார்த்திக்க, அவர்களுக்கு அனுக்கிரஹமும் செய்தாராம். இதை அப்பரின் தனித் திருத்தாண்டகம் விவரிக் கிறது. இந்தப் பாடலைப்பாடி பெருமானைப் பூஜிக்க சகல வரங்களும் கிடைக்கும்.திருவாதிரை, பூரம் நட்சத்திரக்கார்கள் வீரபத்திரரை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஸ்ரீசரபேஸ்வரர்

இரண்யகசிபுவை அழித்தருளிய நரசிம்மரின் சினம் தணிக்க சிவபெருமான் எடுத்த  திருக்கோலமே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.
பிரத்யங்கிரா எனும் காளியும், சூலினி துர்கையும் சரபரின் இறக்கைகளாகவும், இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ, தொடையில் நரசிம்மரைக் கிடத்தியபடி காட்சியளிப்பதாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. ஸ்ரீசரப மூர்த்தியின் சக்தி அரிப்ரணாசினி.

ஸ்ரீசரபேஸ்வரர் - சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். ‘தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய  முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் ஸ்ரீசரபரை வழிபட வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் வியாசர்.

வழிபடவேண்டிய நாட்கள்: ஞாயிறு - ராகு காலவேளை

அர்ச்சனைப் பொருள்கள்: வில்வம்.

நைவேத்தியம்: தயிர்சாதம்

புண்ணிய நூல்கள்: சரப உபநிஷத்

சிறப்பு வழிபாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளை யில், வில்வம் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். இந்த மூர்த்தியை உள்ளம் உருக வழிபட்டு வந்தால், பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும், நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம்.

வழிபாட்டு மந்திரங்கள்

சரபர் காயத்ரீ
ஸாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்
சரபேஸ்வர அஷ்டகத்தில் ஒரு பாடல்...
ஸர்வேச ஸர்வாதிக விச்வமூர்த்தே
கிருதாபராதான் அமரானு ஏதாகன்யாந்
விநீய விச்வர்த்தி விதாயினதே
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய

- 'எல்லாம் வல்ல இறைவன் - முழுமுதற்கடவுளே, குற்றம் புரிந்த தேவர்களையும் திருத்தி இவ்வுலகத்தைக் காத்து ரட்சிக்கும் கருணாமூர்த்தியே, உமக்கு நமஸ்காரம்' எனும் பொருள் கொண்ட இந்தப் பாடலைப் பாடி, சரபேஸ்வரரை தியானித்து வழிபடுவதால், அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம். குறிப்பாக மகம், பூரம், திருவோணம் மற்றும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் சரபேஸ்வரரை வழிபட்டு சங்கடங்கள் நீங்கப் பெறலாம்.

ஸ்ரீஐயப்பன்

இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். மகிஷியை அழித்து தேவர்களைக் காக்கும் பொருட்டு ஹரிஹர புத்திரனாக அவதரித்த தர்மசாஸ்தா, பதினெட்டு யோகங்களையும் படிகளாகக் கொண்டு சபரியில் அருளாட்சி செய்கிறார். தீய சிந்தனைகளை கைவிட்டு, தூய பிரம்மசர்யம் கடைப்பிடித்து, உடல், மன சுத்தத்துடன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) வரை விரதம் இருந்து, தன்னைத் தேடி வந்து தரிசிக்கும் பக்தர்களுடைய வாழ்க்கைக்கு ரட்சகனாகத் திகழ்கிறார் ஐயப்பசாமி! விரத நாட்கள் என்றில்லாமல், அனுதினமும் வழிபட்டு வந்தால்... கேட்காமலேயே நற்பலன்களை் வாரிவழங்குவார் சுவாமி ஐயப்பன்.
வழிபடவேண்டிய நாட்கள்: சனிக்கழமை, உத்திர திருநாள்.

அர்ச்சனைப் பொருள்கள்: பிச்சிப்பூ, நீலம் கலந்த சங்கு புஷ்பம்.

நைவேத்தியம்: கனி வகைகள்.

புண்ணிய நூல்கள்: சாஸ்தா திருக்கதைகள்

சிறப்பு வழிபாடு: சனிக்கிழமைகள் ஐயப்ப வழிபாட்டுக்கு உகந்த திருநாள். அன்று ஸ்வாமிக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, அவருடைய நமஸ்கார ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுங்கள்; குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

உத்திர நட்சத்திரக்காரர்கள் இந்த ஸ்லோகத்தைக் கூறி வழிபட வாழ்வு நலமாகும்.

ஸ்வாமி ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்கள்
லோக வீரம் மஹாபூஜ்யம் சர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
விப்ரபூஜ்யம் விஸ்வவந்த்யம் விஷ்ணுசம்போ ப்ரியம்சுதம்
ஷிப்ரப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
மத்த மாதங்க கமனம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
பாண்ட்யேச வம்சதிலகம் கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
அருணோதய ஸங்காசம் நீலகுண்டல தாரிணம்
பீதாம்பரதரம் தேவம் வந்தேஹம் ப்ரும்ம நந்தனம்
சாபபாணம் வாமஹஸ்தே ரௌப்ப வேத்யதாஞ்ச தக்ஷ்ணே
விலஸத்குண்டலதரம் வந்தேஹம் விஷ்ணு நந்தனம்
வ்யாக்ராரூடம் ரக்த நேத்ரம் ஸ்வர்ணமாலா விபூஷணம்
வீரபட்டதரம் கோரம் வந்தேஹம் சம்பு நந்தனம்
கிண்கிண் ஒட்யாண பூஷேசம் பூர்ண சந்திர நிபானனம்
கிராத ரூபசாஸ்தாரம் வந்தேஹம் பாண்ட்ய நந்தனம்
பூத வேதாள ஸம்ஸேவ்யம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்டமிதிக்யாதம் வந்தேஹம் சக்தி நந்தனம்
யஸ்ய தன்வந்தரி மாதா பிதா ருத்ரோ பிஷக்தம
தம் சாஸ்தாரம் அஹம் வந்தே மஹாவைத்யம் தயாநிதிம்
பூதநாத சதானந்தா சர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம

ஸ்ரீஅனுமன்

‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது’ என்பர். இதன் உண்மையான பொருள், எந்த ஒரு நல்ல காரியமும் ஸித்தி அடைய வேண்டும் என்றால் முதலில் விநாயகரை வழிபடவேண்டும். காரியம் ஸித்தி அடைந்ததும் உத்தம ராமபக்தரான ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்லவேண்டும்.

ராமாயணத்தில் ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களைப் போற்றும் பகுதி அவருடைய பெயரால் சுந்தர காண்டம் என்றே அழைக்கப் படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி கிரகத்தினால் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும்; தூய பக்தி, நல்லறிவு கிட்டும்.
வழிபட உகந்த நாள்கள்: மூலம் நட்சத்திரம் வரும் நாள்களிலும், சனிக்கிழமைகளிலும் வழிபடலாம். அமாவாசையும் மூலநட்சத்திரமும் இணைந்து வரும் நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
அர்ச்சனைப் பொருட்கள்: துளசி. வெண்ணெய் சாற்றுவதும், வெற்றிலை மாலை, வடைமாலை அணிவிப்பதும் சிறந்தது.
நிவேதனம்: அவல், சர்க்கரை, தேன், இளநீர், பானகம்.

புண்ணிய நூல்கள்: சுந்தர காண்டம், அனுமன் சாலீஸா

சிறப்பு வழிபாடு: மார்கழி மாதம் மூலம் நட்சத்திர நாளில் வரும் அனுமத் ஜயந்தி அன்று காலை ஸ்நானம் செய்த பிறகு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு, வீட்டுக்கு வந்து சிறிது பாலை மட்டும் அருந்திவிட்டு விரதம் இருக்கவேண்டும். அனுமன் சாலீஸா, சுந்தரகாண்டம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். ராமநாம ஜபம் செய்வது மிகவும் சிறந்தது. மாலை மறுபடியும் கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

வாயு மைந்தனை மூல நட்சத்திரக் காரர்கள் வழிபட்டு வரம் பெறலாம்.

வழிபாட்டு மந்திரங்கள்

கம்பர் ராமாயணப் பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க் காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்
    கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்             
      காப்பான்

அனுமன் ஸ்துதி:

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்  
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

Comments