ஸ்வாமி தரிசனம் முடிந்தவுடன் சிறிது நேரம் ஆலயங்களில் அமர்வது ஏன்?

பொதுவாக, சிவ ஆலயங்களில்தான் இதுபோன்று அமரும் பழக்கம் உள்ளது. காரணம், தரிசனம் முடிந்து பக்தன் வீட்டுக்குக் கிளம்பும் போது, அவன் பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும் என்ற பரிவோடு, பூத கணங்களை சிவபெருமானே அந்த பக்தனின் பின்னே அனுப்புகிறார். அந்த பக்தன் கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து பூத கணங்களிடம், ‘நான் பத்திரமாக வீட்டுக்குப் போகிறேன். சிவ கைங் கரியத்தை விட்டு விட்டு நீங்கள் வர வேண்டாம்’ என்று அவற்றைத் திருப்பி அனுப்புவதற்காக அவ்வாறு அமரும் பழக்கம் வந்தது என்பர்.
இது பொதுவான காரணம். ஆனால், உண்மையில் வெகுநேரம் கருவறையில் நாம் பகவானை தரிசனம் செய்து கொண்டு இருக்க முடியாது. அவ்வாறு கண நேரத்தில் நாம் தரிசித்த பகவானை மீண்டும் மன
சுக்குக் கொண்டு வந்து தியானம் செய்து பார்க்கணும். இந்த அப்பியாசம், பயிற்சி மிகவும் முக்கியம். அவ்வாறு நாம் பயிற்சி செய்தால் மீண்டும் நாம் எப்போது பகவானைப் பார்க்கிறோமோ, அதுவரையிலும் பகவானின் உருவம் நம் மனக்கண்ணிலேயே இருக்கும். அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு அமரும் பழக்கம் வந்தது. ஆனால், அதுவே பின்னாளில், கோயிலில் அமர்ந்து வம்பு பேசும் பழக்கமாக மாறி விட்டது.


பொதுவாக, சாஸ்திரங்களில், பகவான் என்பதற்கு ஐச்வரியம், ஞானம், சக்தி, வீர்யம், தேஜஸ் இவை எல்லாம் ஒருவரிடம் பூரணமாக இருப்பதனால், அவர் பகவான் என்று ஆகிறார் என்று சொல்கிறது.
இந்த முழுமையான தன்மை என்பது பகவான் மகாவிஷ்ணுவையோ, சிவபெருமானையோதான் குறிக்கும். மற்ற தெய்வங்களுக்கு இது ஓர் உபசார வார்த்தை. முறையாக மருத்துவம் படித்து பட்டம் பெற்ற ஒருவரை நாம் டாக்டர் என்கிறோம். சில தகுதிகளை வைத்து சிலரை டாக்டர் என்கிறோம். இது ஒரு உபசாரத்துக்காக மட்டும்தான் இல்லையா? அதற்காக இரண்டும் ஒன்றாகிவிடுமா என்ன? இவ்வளவு ஏன்... மகரிஷிகளைக் கூட நாம் பகவான் என்று
சொல்வதுண்டு. வசிஷ்ட பகவான், வியாச பகவான், துர்வாச பகவான் என்று. இவை எல்லாம் முழுமையாகப் பொருந்தாது. பகவான் என்றால் அது விஷ்ணு, சிவபெருமானுக்குத்தான் பொருந்தும். மற்றவர்களுக்கு அது ஓர் உபசார வார்த்தை.


துளசி மாடம் என்பது ஒரு காலத்தில் வீட்டின் நடுவில், அதாவது நடு முற்றத்தில்தான் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில்தான் துளசி இருக்கும். துளசியில் இருந்து வெளிப்படும் சாந்நித்யமானது வீடு முழுவதும் பரவும், துர்தேவதைகள் வாசம் செயாது.
இப்போது இருக்கும் வீடுகளில் இது போன்ற அமைப்புகிடையாது. எனவே, வாசல் அல்லது கொல்லைப்புறம் ஆகிய இடங்களில் துளசியை வைக்கிறார்கள். வாசலில் வைத்தால், துர்தேவதைகள் வீட்டுக்குள் வராது. கொல்லைப் புறத்தில் வைத்தால், தீட்டு படாமல் இருக்கும். பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்களிலோ அல்லது வேறு தீட்டு குடும்பத்தில் சேரும் நாட்களிலோ, வாசல் வழியாகச் சென்று வரும் போது துளசி மாடத்தில் பட்டால் அது தோஷம். எனவே, தீட்டுபடாத இடத்தில் வைப்பார்கள். எனவே, வாசலிலும் வைக்கலாம். கொல்லைப் புறத்திலும் வைக்கலாம். இரண்டுக்குமே தனித்தனியாக சில விசேஷங்கள் உண்டு.


வெறுமனே மனத்தைக் குவிப்பதற்கு தியானம் என்று பெயர். ஆக, தியானம் என்பது மனப் பயிற்சிதான். ஆனால், அன்புடன் நினைப்பது என்பது வேறு. அன்புடன் நினைப்பதற்கு பக்தி என்று பெயர். அன்போடு எந்தச் செயலைச் செய்தாலும் அது பக்தியாக சாஸ்திரம் சொல்கிறது. அவ்வாறு தியானத்தில் அன்பு கலக்கும்போது அது சிறப்பாகிறது. அன்புடன் தியானம் செய்வது பக்தி ஆகிறது. ‘ப்ரேம பூர்வம் அனுத்யானம் பக்திரித்யபிதீயதே’ என்கிறது சாஸ்திரம். நினைவு என்பது தியானம். அன்புடன் நினைப்பது என்பது பக்தி.


 

Comments