நந்தியமர் தட்சிணாமூர்த்தி

கலியுகத்தில் ஞானகுரு ஸ்தலங்களில் மிகவும் சிறப்புப் பெற்றது
மதுரைக்கு அருகே உள்ள
திடியன் மலை கைலாசநாதர்
திருக்கோயில். இக்கோயிலில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட தட்சிணாமூர்த்தி
14 சித்தர்களுடன், நந்தி மீது
அமர்ந்த கோலத்தில்,
சுமார் மூன்றடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். அசேர கலசங்களால் தோற்றுவிக்கப்பட்டு, மூன்று கோண வடிவில் கோயில் அமைந்திருக்கிறது.
ராவண யுத்தத்துக்குப் பின்பு ஸ்ரீராமபிரான் ஆட்சிப் பொறுப் பேற்றதும் அசுவமேதயாகம் செய்தார். யாகக் குதிரை செல்லும் வழியில் எங்கெல்லாம் ஓவு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒரு காசிலிங்கம் பிரதிஷ்டை செயப்பட்டது. அவ்வாறு திடியன்மலை அடிவாரத்தில் உள்ள பொற்றாமரைக் குளக்கரையில் குதிரை ஓவெடுக்க அங்கே ஒரு காசிலிங்கம் பிரதிஷ்டை செயப்பட்டது. நாளடைவில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் இங்கே ஒரு கோயிலை எழுப்பினர்.
பல நூற்றாண்டுகளாக இறப்பின்றி வாழ்ந்த சித்தர்கள் வயது முதிர்வு காரணமாக கட்டைவிரல் அளவுக்குக் குறுகி விட்டதால், ‘கட்டை விரல் சித்தர்கள்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள் இங்கு அதிகளவில் இருந்துள்ளனர். மலையின் மையப்பகுதியில் குறுகிய குகை ஒன்று உள்ளது. இங்கு தினமும் சித்தர்கள் வந்து போவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை, கொல்லிமலை, சித்தர்வாழ் மலை போன்ற தலங்களில் சற்குரு மூலமாகவே காணவல்ல அரிய ஜோதி விருட்சங்கள் உள்ளன. இந்த ஜோதி பிரகாசத்தைக் கொண்டுதான் விண்ணில் இருந்து வரும் தேவாதி தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் நம்முடைய பூமி மண்டலத்தை எளிதில் கண்டறிந்து வருகின்றனர். இவற்றுள் திண்டீர தைல ஜோதி வகையைச் சேர்ந்ததே நெக்கொட்டா மரம். இதுவே இக்கோயில் தல விருட்சம்.
இந்த விருட்சத்தின் கீழ் மணல் பரப்பி, அதன் மீது வலது மோதிர விரலால், ‘தியான பூமி பீடம்’ என்று எழுத வேண்டும். கம்பளி, பா, மெல்லிய பருத்தி துணி, மரப் பலகை இவற்றில் எவையேனும் ஒன்றின் மேல் பத்மாசனம், சுகாசனத்தில் அமர வேண்டும். முதலில் ஸ்ரீகிரிஜாத்மஜ் கணபதியைச் சங்கல்பித்து வேண்டி, நெக் கொட்டாவிருட்ச தேவமூர்த்திக்கு நன்றி செலுத்தி, தியானத்தைத் தொடங்க வேண்டும். இதனால், நமது வேண்டுதல்கள் நிறைவேறி, மனம் அமைதி பெறுகிறது.
திக்குவா உள்ளவர்கள் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, கைலாசநாதரை வணங்கி மலை உச்சியை வலம் வந்தால் நாளடைவில் குணமாகும். பௌர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வந்து வணங்க, வேண்டும் அனைத்தும் நடக்கிறது என்பது அனுபவப் பட்டவர்களின் கூற்று.
வழித்தடம்: மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில், செல்லம்பட்டி நிறுத்தத்தில் இறங்கி அங் கிருந்து கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்.

Comments