ஆதிக்கடவூரில்! - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்

குழைக் கொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கடவூரின் மயானத்தார்
பழைய தம் அடியார் செய்தபாவம்
பிழையும் தீர்ப்பார் பெருமான் அடிகளே!

- அப்பர் தேவாரம்

‘நல்லன எல்லாம் தரும்’ என்று அபிராமிபட்டர் அகம் குளிர பாடிப்பரவிய அம்மை அபிராமி கோயில் கொண்டுள்ள திருக்கடையூர் திருத்தலத்தை நாம் எல்லோரும் அறிவோம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், காரைக்கால் சாலையில் அமைந்துள்ளது திருக்கடையூர்.
மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த காலசம்ஹாரமூர்த்தியாகவும், ஆயுள் வரம் அருளும் அமிர்தகடேஸ்வரராகவும் ஈசன் குடியிருக்கும் இந்தக் கோயிலுக்கு கிழக்கு திசையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மற்றுமொரு தலம். ஆதிக்கடவூர் எனும் அந்தத் தலமும், அங்கு அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் பலரும் அறியாதவை என்றே சொல்லலாம்.
திருமெய்ஞானம், கடவூர்மயானம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஆதிக்கடவூர் அமைதியின் உறைவிடம். மூவர் பாடல் பெற்ற சிறப்புக்கு உரிய திருத்தலம். மரச்செறிவும் பறவைக் கூட்டமும் இணைந்து, இறை அதிர்வுகளை எழுப்பியபடியே இருக்கும் ஓர் அற்புத ஞானவனம்!

சைவ சமய ஆலய மரபில் ‘பஞ்ச மயானத் தலங்கள்’ என்று சிறப்பிக்கப்படும் ஐந்து கோயில்கள் புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிக்கவை. அவை: காசி மயானம், கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம்.

இவற்றில் காசி மயானம் காசியிலும், கச்சி மயானம் காஞ்சிபுரத்திலும், காழி மயானம் சீர்காழியிலும், நாலூர் மயானம் குடவாசல் அருகிலும் அமைந்துள்ளன. இந்த ஆதிக்கடவூர் எனும் திருமெய்ஞானமே ஐந்தாம் மயானம் ஆகும். மயானம் என்பது சிவன் குடியிருக்கும் இடம் என்பது சைவ சமய நம்பிக்கை.
ஒருகாலத்தில், நெடிதுயர்ந்த மரங்களும் புதர்களும் அடர்ந்த வனமாகத் திகழ்ந்திருக்கிறது திருமெய்ஞானம். திருஞானசம்பந்தரின் திருக்கடவூர் தேவாரப் பதிகத்தில் ‘பரவு சூழ்காடு’ என இவ்வூர் வர்ணிக்கப்படுகிறது. ‘காடது இடமாய்க் கொண்ட இறைவன்’ என்பது திருநாவுக்கரசரின் வரிகள். சுந்தரரோ ‘பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே’ என்கிறார்.
‘பஞ்ச மயானத் திருத்தலங்கள்’ தோன்றிய புராணக் கதை சுவாரஸ்யமானது.

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஒரு முறை ஆணவமும் தன்முனைப்பும் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துகொண்டன. ‘‘அண்ட சராசரங்களையும் நானே தோற்றுவிக்கிறேன். அனைத்து உயிர்களையும் நானே உருவாக்குகிறேன். பஞ்சபூதங்களின் பேராற்றலை ஆளுபவனும் நானே. அப்படியெனில் என்னை விட உயர்ந்தவன் இங்கே எவன்?” என பிரம்மசபையிலே தேவர்கள் முன்னிலையில் அகந்தையுடன் கொக்கரிக்கிறார் பிரம்மன்.

‘வானானாய் நிலமானாய் காற்றானாய் மழையானாய்’ என சுந்தரர் விளிக்கும் ஆதிசிவனைவிடவும் உயர்ந்தவன், பெரியவன், அடிமுடி காண முடியாத விஸ்வரூபன் இங்கே வேறு யார் இருக்க முடியும்? ஆணவத் திரை கண்களை மறைக்க, தன்முனைப்பில் மிதந்த பிரம்மனை அடக்க சிவபெருமான் வெகுண்டெழுந்தார். ஆணவ ஆட்டம் போட்ட பிரம்மனை சிவன் தன் அனல் விழிகளால் சுட்டெரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திருக்கதையுடன் தொடர்புடைய தலங்களாக காசி, காஞ்சி, சீர்காழி, நாலூர், திருமெய்ஞானம் ஆகிய ஐந்தையும் குறிப்பிடுகின்றன ஞானநூல்கள்.
பிரம்ம தேவனை சிவன் எரித்து சாம்பலாக்கியதால், படைப்புத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து ஈசனின் திருவடிகளைப் பற்றிக் கெஞ்சினர். பிரம்மனின் அறியாமையால் விளைந்த ஆணவத்தை மன்னித்து அவருக்கு சிவஞான போதத்தை உபதேசித்து அருளும்படி கோரிக்கை வைத்தனர்.

அவர்களது வேண்டுதலுக்குச்  செவிசாய்த்த ஈசன், பிரம்மனை உயிர்த்தெழச் செய்து, அவரை மன்னித்து ஞானம் அருளி, ஆணவ மனத்தை அழித்து, படைப்புத் தொழிலைத் தொடரும்படி அருள்செய்த திருத்தலமே திருமெய்ஞானம். ஈசன் பிரம்மனுக்கு ஞானம் வழங்கிய காரணத்தால் ஏற்பட்ட பெயரே திருமெய்ஞானம்.

தெய்வப் புலவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 274. அதில் 48-வது தலம் திருக்கடவூர் மயானம். 274 தலங்களுள் தேவார மூவரும் பாடிய பெருமை பெற்ற திருத்தலங்கள் 44. அவற்றில் ஒன்று கடவூர் மயானம்.

அதுமட்டுமா? காவிரி தென்கரைத் திருத்தலங்களுள் ஒன்று, பிரம்ம தேவனும் மார்க்கண்டேயனும் வழிபட்ட திருத்தலம், தில்லை சிவபிரான் சிவாலய முனிவருக்குக் கூறிய படி, அகத்திய முனிவரால் தொகுக்கப்பெற்ற 25 தலங் களுள் ஒன்று எனப் பல பெருமைகளைக் கொண்டது ஆதிக்கடவூர் எனும் இந்த க்ஷேத்திரம்.

திருக்கடையூர் செல்லும் பலரும் மயானத்தலம் எனப்படுவது ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில்தான் என நினைக்கின்றனர். விஷயம் அறிந்த சிலருக்கே, ஆதிக்கடவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலே
பஞ்ச மயானத் தலங்களில் ஒன்றான திருமெய்ஞானம் என்பது தெரியும். பல கோயில்களிலும் கிரந்த எழுத்துக் கல்வெட்டுகளே காணப்படும். அரிதான சில கோயில்களில்தான் தமிழ்க் கல்வெட்டுகள் உண்டு. அவற்றில் ஒன்று இத்திருக்கோயில்.

திருமெய்ஞானத்தில் இன்னொரு புராணச் சிறப்புப் பெற்ற இடம், அசுபதி தீர்த்தம் எனப்படும் மார்க்கண்டேய தீர்த்தம். கோயில் பிராகாரத்தின் தெற்கு வாசல்வழியே வெளியே சென்றால், இடப்பக்கத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. அங்கிருந்து சற்றுத் தொலைவில் ஒரு மண்டபமும் அதற்குள் ஒரு கிணறும் உண்டு. அதுவே மார்க்கண்டேய தீர்த்தம். காசியில் உள்ள கங்கைக்கு இணையானதாக இந்த புனித தீர்த்தம் சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தத்தின் பெருமையைச் சொல்லும் ஒரு கதை உண்டு.
மிருகண்டு மகரிஷிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. ஆகவே பிள்ளைவரம் வேண்டி சிவனை தியானித்து தவமிருந்தார். தவத்தின் பலனாக சிவனார் காட்சி தந்தார். ‘‘நீண்ட ஆயுளுடன் கூடிய சாமான்ய குழந்தை வேண்டுமா அல்லது 16 வருடங்களே வாழ்ந்தாலும், சிறந்த ஞானமும் பேராற்றலும் மிக்க குழந்தை வேண்டுமா?’’ என்று சிவனார் கேட்க, ‘‘ஞானக் குழந்தையே வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார் முனிவர். அவர் கேட்டபடியே மார்க்கண்டேயன் பிள்ளையாகப் பிறந்தான்.

‘கருவிலே திருவுற்ற’ ஞானக் குழந்தையாக உலகமே ஆச்சர்யப்படும்படி வளர்கிறான் மார்க்கண்டேயன். குழந்தையின் மேதைமையைக் கண்டு வியக்கும் பெற்றோர், அதன் ஆயுள் முடிய இன்னும் சில ஆண்டுகளே உள்ளன என்னும் உண்மையை எண்ணி, மனம் கலங்குகின்றனர்.

பெற்றோரின் மனக்கலக்கத்தை உணரும் மார்க்கண்டேயன் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறான். ‘‘தந்தையே! தாயே! கலங்காதீர். ஈசனிடம் நீங்கள் என் பிறப்பு குறித்து கேட்ட வரத்தில், என் ஆயுள் பாவம் ‘பதினாறு’ என்பதை, என் தவ வலிமையால் ‘என்றும் பதினாறு’ என மாற்றுவேன். கயிலாயம் சென்று, எல்லாம் வல்ல ஈசனின் கருணை மலர்ப்பாதங்களில் சரணாகதி அடைந்து என் ஆயுளை நீட்டித்து வருகிறேன். அதுவரை, நீங்கள் கவலையின்றி அனுதினமும் ஈசனை வழிபட்டு வாருங்கள்!’’ எனக் கூறிவிட்டு உடனடியாகக் கயிலைக்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தான். அதைக் கண்டு மனம்கனிந்த ஈசன், மார்க்கண்டேயனின் ஆயுள் நீடிக்க சிவத் தலங்களை தரிசிக்கும்படிச் சொல்கிறார்.
மார்க்கண்டேயனின் திருத் தல யாத்திரை தொடங்குகிறது. அவனுக்கு பதினாறு வயது பூர்த்தியாகும் தருணத்தில், திருவெண்காட்டுத் திருத்தலத் தில் இருக்கிறான். தன் பதினாறாம் பருவம் நிறைவெய் தும் தருணத்தை ஈசனிடம் நினைவுபடுத்தி ‘‘அய்யனே! என் முதல் தந்தையே! பருவம் பதினாறு எனக்கு நிறைவடையும் தருணம் இது. காலன் வந்து எனை அழைக்கும் முன்னர் என்னை வந்து காப்பாற்ற வேண்டும், பூலோக நாதனே!” எனப் புலம்புகிறான்.

அப்போது ஈசனின் குரல் அசரீரியாக ஒலிக்கிறது. ‘‘மார்க் கண்டேயா! நீ அருகிலிருக்கும் ஆதிக்கடவூர் மயானத்துக்குச் சென்று என்னை கங்கை தீர்த்தம் கொண்டு வழிபடு, உன் ஆயுள் நீடிக்கும்!”
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக மார்க்கண்டேயன் ஆதிக்கடவூர் மயானத்தை அடைகிறான். அங்கு பிரம்மபுரீஸ்வரராக வாடா முலையம்மனுடன் வீற்றிருக்கும் ஈசனை வழிபட்டுப் பாதம் பணிகிறான். அப்போதுதான் ஒரு சந்தேகம் அவனுக்கு எழுகிறது. ‘‘எந்தையே! உன்னை இங்கு கங்கை தீர்த்தத்தால் நீராட்ட நான் எப்படி தினமும் காசிக்குப் போவேன்?’’ எனக் கேட்டான்.
‘‘மார்க்கண்டேயா! பதறாதே! உன் மெய்யன்பின் அளவை நான் அறிவேன். உனக்காக காசி- கங்கை தீர்த்தத்தை கடவூர் மயானத்துக்கே அனுப்பி வைக்கிறேன்!” என்று அருள்பாலித்த சிவனார், ‘பிஞ்சோம்’ எனும் சாதிமுல்லை மலரையும் எலுமிச்சம்பழத்தை யும் காசியில் கரைபுரண்டு ஓடும் கங்கை நதியில் தன் திருக்கரங்களால் போடுகிறார். மறுகணமே, ஆதிக்கடவூர் மயானத்தின் ஆலய தென் திசையில் ஐந்து அழகிய பொய்கைகள் தோன்றுகின்றன.
அந்த ஐந்து குளங்களில் நடுவாந்தரமாக உள்ள அழகிய குளத்தில், கங்கையில் ஈசன் வீசிய சாதிமல்லிப்பூவும் எலுமிச் சம்பழமும் மிதக்கின்றன. ஆனந்தக் கண்ணீருடன் அந்தக் குளத்தின் புனித கங்கை நீரெடுத்து பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டு தீர்க்காயுளை அடைகிறான் மார்க்கண்டேயன்.

அன்று முதல் அந்தத் திருக்குளத்தில் ஆண்டுதோறும் ஒரு புனித நீராடல் நடந்து வருகிறது. அதாவது, ஈசன் மார்க்கண்டேயனுக்கு கங்கை தீர்த்தம் கொண்டு வந்த காலமானது பங்குனி மாதம், அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள்- வளர்பிறை திருதியை, அஸ்வினி நட்சத்திர நேரம்.

ஆண்டுதோறும் இந்த திதி வரும் நாளில், அதிகாலையில் இந்த மார்க்கண்டேய தீர்த்தத்தில் இருந்து ஒரு குடம் நீர் எடுத்து வரப்பட்டு பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் படுகிறது. அதன் பிறகு, பல ஊர்களிலிருந்தும் திரண்டு வரும் பக்தர்கள், கிணற்றில் மாலை வரை புனித நீராடுகின்றனர். மாயவரம் துலாக் காவிரி நீராடல் போன்றே இந்த திருமெய்ஞானம் பங்குனி நீராடல் அந்தப் பகுதியில் புகழ்பெற்றது.

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி, ஸ்ரீஅபிராமி அம்மை ஆகியோருக்கு அபிஷேகிக்க, இந்த திருமெய்ஞானம் மார்க்கண்டேய தீர்த்தத்தில் இருந்தே அனுதினமும் அதிகாலையில் மாட்டு வண்டி மூலம் தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.
தல மூர்த்தி ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்மைக்கு ஸ்ரீவாடாமுலையம்மை, ஸ்ரீமலர்க்குழல் மின்னம்மை ஆகிய திருப்பெயர்கள் வழங்குகின்றன. தலதீர்த்தங்கள்- காசி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம். தலவிருட்சம்- கொன்றை. ஸ்ரீமுருகப்பெருமான் இங்கு சிங்காரவேலன் என்று பெயருடன் வீற்றிருக்கிறார். கையில் வில்லும், வேலுமாக வேட்டுவ கோலத்தில் வள்ளி - தெய்வானை சமேதராகக் காட்சி தருகிறார்.
ஆலய மேற்குப் பிராகாரத்தின் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீபிள்ளைப்பெருமாள் காட்சி தருகிறார். வாடாமுலையம்மன் சந்நிதிக்கு வெளியிலும் நந்தி பகவான் அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று. கி.பி. 557-ஆம் ஆண்டில் ராஜசிம்ம பல்லவனின் மகன் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது இந்த அழகிய திருக்கோயில்.

ஆலயத்தின் விசாலமான செங்கல் பிராகாரத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து கண்மூடி தியானித்தால் மனதில் இனம்புரியாத அமைதியும் ஆனந்தமும் சூழ்ந்துகொள்ளும்.
அபிராமியைத் தரிசிக்க திருக்கடையூர் செல்லும் அன்பர்கள், ஆன்ம லயம் தரும் இந்த அற்புத சிவாலயத்தையும் தரிசித்து, பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டு வரம்பெற்று வரலாம்!

உங்கள் கவனத்துக்கு
திருத்தலம்: ஆதிக்கடவூர் - கடவூர் மயானம்

ஸ்வாமி: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீவாடாமுலையம்மை

தீர்த்தம்: காசி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

தல விருட்சம்: கொன்றை

சிறப்பு: பிரம்மனுக்கு அருளியது, மார்க்கண் டேயனுக்காக இத்தலத்துக்கு கங்கையைக் கொணர்ந்தது.

இருப்பிடம்: திருக்கடையூர் கோயிலுக்கு கிழக்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில்.

எப்படிச் செல்வது?: திருக்கடையூர் வரும் பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தைத் தரிசித்துவிட்டு, அங்கிருந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணித்து, ஆதிக்கடவூர் ஆலயத்தை அடையலாம். பேருந்து வசதிகள் குறைவு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 11 மணி வரை; மாலை 4 முதல் 8:30 மணி வரை.

நாதனை வழிபட்ட நாயன்மார் இருவர்!

திருக்கடையூரில் அவதரித்து அனுதினமும் அந்தத் தலத்தின் இறைவனுக்கு குங்கிலிய தூபமிட்டு ஆராதித்து அருள்பெற்றவர் குங்கிலியகலய நாயனார்.

அதேபோல், திருக்கடவூரில் அவதரித்த மற்றொருவர் காரிநாயனார். கோவை பாடி பொருள் பெற்று சிவத் தொண்டு புரிந்தவர் இவர். இவர்கள் இருவரும் ஆதிக்கடவூர் இறைவனை வழிபட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

சூரிய கோயில்!

கோனார்க் சூரியனார் கோயிலைக் கட்டி முடிக்கப் பதினாறு ஆண்டுகள் ஆயினவாம். இங்குள்ள நவக்கிரகங்களின் சிலைகள் இங்கு வருகை தரும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்! ஏழு குதிரைகளும் ரதமும் அதன் சிற்பங்களும் கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளன.

Comments