நட்சத்திரம் வேதா முருகன்

வேறு எந்த பௌர்ணமிக்கும் இல்லாத சிறப்பு பங்குனி மாத பௌர்ணமிக்கு உண்டு. ஈசனும் உமையும், முருகனும் தெய்வானையும், சீதையும் ராமனும் மணக்கோலம் கண்டு இல்லறத்தின் சிறப்பினையும் முக்கியத்துவத்தையும் உலகினுக்கு உணர்த்திய நாள் பங்குனி உத்திரம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இணைபிரியாமல் வாழ வேண்டி பல இல்லங்களில் மனைவியர் புது தாலி சரடுகள் அணிந்து இறைவனை வேண்டி வழிபடும் நாள் பங்குனி உத்திரம்.
முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி சுமந்து
சென்று, இறைவனை பல்வேறு திரவியங்களால் குளிர வைத்து, திருமணக்கோலம் கண்டு உள்ளம் குளிரும் நாள். இவ்வாறு விழாக் கோலம் பூணும் முருகன் ஆலயங்களில் தன்னிகரில்லா ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் உள்ள கந்தசாமி முருகன் கோயில்.
இக்கோயிலுக்கு பல சிறப்புகள் உண்டு. பொதுவாக, இறைவன் வீற்றிருக்கும் ஆலயங்களில் மூலவரைச் சுற்றி கோஷ்டங்கள் அமைக்கப்பட்டு அதில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு அல்லது லிங்கோத்பவர் அல்லது அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்கை, சண்டி கேஸ்வரர் முதலிய தெய்வங்கள் காணப்படுவதை நாம் ஈஸ்வரன் ஆலயங்களில் பார்க்கலாம். ஆனால், இவ்வாலயத் திலோ கோஷ்டத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களும் முருகனின் வடிவங்களே.
விநாயகருக்கு பதிலாக நிருத்யஸ்கந்தரும், தக்ஷிணா மூர்த்திக்கு பதிலாக பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணுவுக்கு பதிலாக பாலஸ்கந்தரும், பிரம்மாவுக்கு பதிலாக
சிவகுருநாதனும், துர்கைக்கு பதிலாகவேடன் உருவில் புளிந்தரும் காணப்படுகிறார்கள்.
இதுதான் ஆச்சரியமா என்றால் இல்லை. அழகன் முருகன் கருவறையில் வள்ளி தேவசேனா சமேதராக காட்சி அளிக்க, அவருக்கு நேர் எதிரில் பைரவர் வீற்றிருக்கிறார். ஆலயத்தில் வெளி பிராகாரத்தைச் சுற்றி 27 நட்சத்திரங் களுக்கு உகந்த 27 வேதாளங்கள் காணப்படுகின்றன.
இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண இயலாது. இந்த வேதாளங்கள் சிவகணங்கள் எனவும் பைரவரின் தலைமையில் முருகனின் போர் படையில் அணிவகுத்துச் சென்று சூரனை அழிக்க உதவியதாகவும் இக்கோயில் தல வரலாறு கூறுகின்றது.
இங்கு நடைபெறும் தேபிறை அஷ்டமி பூஜை மிகவும் சிறப்பு. மாலை சுமார் 5 மணி அளவில் விநாயகர் வழி பாடுடன் துவங்கும் இப்பூஜையில் ஒவ்வொரு வேதாளத்துக்கும் உரிய மூல மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு அந்த நட்சத்திரத்தில் பிறந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செயப்படுகிறது. 27 வேதாளங்களும் வழிபடப்பட்ட பின் முருகனுக்கு அபிஷேகம் செயப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செயப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பைர வருக்கு அபிஷேகமும் எட்டு வகை மலர்களால் அர்ச்சனையும் செய்யப்படுகின்றன.
தீபாராதனை, கச்சேரிகள், சோற்பொழிவுகள், அன்னதானம் ஆகிய வற்றுடன் வழிபாடுகள் இரவு ஒன்பது மணி அளவில் முடிகின்றன. இந்தத் தேபிறை அஷ்டமி பூஜைக்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் இக் கோயிலுக்கு வந்து குவிகின்றனர். வேதாளங்களின் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், பைரவர் வழியாக, முருகப்பெருமானை அடைந்து நிறைவேற்றப் படுவதாக ஐதீகம். இது மிகவும் பலன் தருவதால் மக்கள் வேதாளங்களை வழிபட ஆர்வமாக உள்ளனர்.
தெற்கு நோக்கி அமைந்த இக்கோயிலில் இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். முருகனைத் தவிர, இங்கு சோமனாதரும் மீனாக்ஷி அம்மையும் தனி சன்னிதியில் காட்சி அளிக்கிறார்கள். இச்சன்னிதிக்கு துவாரபாலகர்களாக பிரம்மாவும் விஷ்ணுவும் காட்சி அளிப்பது தனி சிறப்பு. மேலும் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், விநாயகர், பெரியாண்டவர் ஆகியோருக்கான சன்னிதிகளைக் காண முடிகிறது.
இக்கோயிலின் தல விருட்சங்கள் வன்னி மற்றும் கருங்காலி. கோயிலின் அஷ்ட திக்கிலும் விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளது மிக சிறப்பு. மேலும், இம்முருகன் அருணகிரிநாதரால் பாடல் பெற்றவர். அருணகிரிநாதருக்கு தனிச் சிலையும் அருகே அவர் பதிகங்களும் காணப்படுகின்றன. கோயிலுக்கு இரண்டு வாசல்கள் உண்டு. தெற்கு வாசல் வழியாக வருவோருக்கு காட்சி அளிக்க ஆறுமுகன் காத்திருக்கிறான்.
பங்குனி உத்திரம், தைப் பூசம், கந்த ஷஷ்டி, ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் போன்ற நாட்கள் இக்கோயிலில் மிக விசேஷம். ஷஷ்டியில் மூன்றாம் நாள் வேல்வழங்கும் விழா பூராட நட்சத் திரத்துக்கு உரிய மகோதர வேதாளத்தின் அருகே கொண்டாடப் படுவதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த பங்குனி உத்திர நாளில் வரம் தரும் கந்த
சாமி முருகனையும், பைரவரையும், வேதாளங்களையும் தரிசிக்க செல்வோம் செய்யூருக்கு!
அமைவிடம்: மதுராந்தகத்தில் இருந்து 29 கி.மீ., கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது செய்யூர்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11 வரை. மாலை 6.30 மணி முதல் 8.30 வரை.
தொடர்புக்கு: 94447 29512.

Comments