கல்யாண வரம் அருளும் நட்டாற்றீஸ்வரர்

ரைபுரண்டோடும் காவிரி. அதன் நடுவே, பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோயில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப் பெயர்களை ஏற்றுத் திகழ்கிறார் சிவபிரான்!

இங்கு வந்து இவரை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி கல்யாணம் நடந்தேறும், தம்பதிகளுக்கு இடை யேயான பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்று பக்தர்களின் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்திருக்கும் சிவக்ஷேத்திரம்!

இப்படியோர் அற்புதத் தலம் எங்கிருக்கிறது என்கிறீர்களா?

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள ஊர் காங்கயம்பாளையம். இங்குதான் காவிரியின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நட்டாற்றீஸ்வரர். கயிலையில் நிகழ்ந்த சிவ-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை தென்புலம் அனுப்பினார் சிவனார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.
அந்த பணிகளில் முதன்மையானதாக, குடகில் வடக்கு நோக்கி பாய்ந்த காவிரியை, விநாயகரின் அருட்துணையோடு தெற்கு நோக்கி பாயச் செய்தார் அகத்தியர். அப்போது வாதாபி, வில்வலன்
ஆகிய அசுரர்கள் இருவர் தந்திரம் செய்து அகத்தியரை அழிக்க முயற்சித்தனர். ஆனால் அகத்தியர் அவர்களை அழித்து விட்டார். அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக காவிரியின் நடுவில் அமைந்திருந்த நாபிக்குன்றம் என்ற இந்த ஸ்வேதமலையின் மீது ஏறி, மண்ணால் லிங்கம் அமைத்து 12 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு விமோசனம் அடைந்தார் அகத்தியர். பணிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது பணியை மதுரையிலும், நான்காவது பணியை திருப்புல்லாணியிலும், ஐந்தாவது பணியை பொதிகையிலும் அகத்தியர் நிறைவேற்றியதாக புராணங்கள் சொல்கின்றன.

பிற்காலத்தில், சுந்தர சோழன் இந்த தலத்தில் ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தியதாகச் சரித்திரத் தகவல்கள் கூறுகின்றன. பாவம் நீக்கும் புண்ணியம்பதியாம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். நீர் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவைப் போன்றே, இங்கும் சிவபெருமான் நீர்சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார். அங்கே சீதை மணலால் லிங்கம் அமைத்தாள். இங்கு அகத்தியர் மண்ணால் லிங்கம் அமைத்தார். வேறொரு சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமச்சாரியாக பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் அருள்வது, வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் என்கிறார்கள்.

இந்தத் தலத்தில் இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் ஆலயத்தில், சிவனார் மேல் தளத்திலும்,  நல்லநாயகி அம்பாள் கீழ் தளத்திலும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கீழ் தளத்தில் இருக்கும் பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு அப்படியே சிவசந்நிதிக்கு வலமாக வந்தால், அந்த பாதை அமைப்பு ‘ஓ’ எனும் வடிவிலும், பிறகு கீழ் தளத்தில் இருக்கும் அம்பாளைத் தரிசித்துவிட்டு முருகன் சந்நிதியை அடைகிறோம் எனில், அந்தப் பாதை அமைப்பானது ‘ம்’ வடிவிலும் அமையும்.ஆக, இத்தலம் பிரணவ வடிவில் திகழ்கிறது என்கிறார்கள்.

நட்டாற்றீஸ்வரர் திருக்கோயிலைச் சுற்றிலும் நான்கு உப கோயில்கள் அமைந்துள்ளன. அவை: சாத்தம்பூர் வள்ளாலீஸ்வரர் கோயில், காலமங்கலம் மத்யபுரீஸ்வரர் கோயில், முலசியில் உள்ள முக்கண்ணீஸ்வரர் கோயில், கொக்கராயன் பேட்டை (ஏமப்பள்ளி) பிரம்மபுரீஸ்வரர் கோயில். இதில் பிரம்மபுரீஸ்வரரை குக்குட நாதேஸ்வரர் எனவும் அழைக்கிறார்கள். நட்டாற்றீஸ்வரரைத் தரிசிக்கவரும் அன்பர்கள் இந்தக் கோயில்களையும் தரிசித்து வரம்பெற்று வரலாம்.

சிவனாருக்கு உகந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இக்கோயிலில் வழிபடுவது விசேஷம். அகத்தியர் இங்கு 12 நாட்கள் வழிபட்டு அருள் பெற்றார் அல்லவா? அவரது வழிபாட்டின் நிறைவு நாள் அதாவது 12-ம் நாள் சித்திரை முதல் நாளாம். எனவே, அந்த தினம் இங்கே வெகுகோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. திருமணம் தடைப்பட்ட அன்பர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து அகத்திய மகரிஷி போலவே 12 நாட்கள் தொடர்ந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி விரைவில் கல்யாண மாலை தோள்சேரும்.
அதேபோல், கணவன் - மனைவிக்கு இடையே யான பிணக்குகள் நீங்கவும் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருக வேண்டிக்கொள் கிறார்கள். இதனால், நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், குறிப்பிட்ட தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னை கள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை.
 


 

Comments